மன்னார் மறைமாவட்டத்தின் 3ஆவது ஆயரின் வரவேற்பும் பணிப்பொறுப்பேற்பும்
மன்னார் மறைமாவட்டத்தின் 3ஆவது ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகையின் வரவேற்பும் பணிப்பொறுப்பேற்பும் 30 டிசெம்;பர் 2017 அன்று கோலாகலமாக நிறைவேறியது. மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை திருப்பலியை ஆரம்பித்த பின்னர் புதிய ஆயரின் நியமனம் தொடர்பான திருத்தந்தையின் ஆணைமடல் திருத்தந்தையின் பிரதிநிதியால் ஆங்கில மொழியில் வாசிக்கப்பட்டது. அதன் தமிழ் மொழிபெயர்ப்பை ஏ.இராயப்பு அடிகளார் வாசித்தார்.
புதிய ஆயரின் நியமனம் தொடர்பான திருத்தந்தையின் ஆணைமடல் வாசிக்கப்பட்டவுடன் இந்தப் புதிய நியமனத்தை வரவேற்பதன் அடையாளமாக அனைவரும் கரவொலி எழுப்பி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து மன்னார் மறைமாவட்டத்தைப் புதிய ஆயருக்குக் கையளிப்பதன் அடையாளமாக அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை பேராலயத் திறப்பை புதிய ஆயருக்குக் கையளித்தார். பேராலய நற்கருணைப் பேழையின் திறப்பை பேராலயப் பங்குத்தந்தை பெப்பி சோசை அடிகளார் புதிய ஆயருக்குக் கையளித்தார்.
