பரதவர்கள் தொல்குடிகள்தான். சங்க இலக்கியங்கள்ல அவர்களுக்கு ஒரு தனி அரசு இருந்ததா குறிப்பு இருக்கு. 'தென்பரதவர் மிடல்சாய வடவடுகர் வாளோட்டினார்' (புறம் 378) அப்படின்னு ஒரு சங்கப்பாடல் இருக்கு. இன்னமும் தூத்துக்குடில அதோட எச்சப் பாடல்லாம் இருக்கு. அவங்களுக்குள்ள ‘கடலரசன்'னு ஒருத்தர் இருக்கார். சாதிப் பஞ்சாயத்துத் தலைவர ‘கடலரசன்’னு சொல்றாங்க. அவங்ககிட்ட தொல்குடிச் சடங்குகள் நிறைய இருக்கு. தாய்மொழி சார்ந்த பிரியமும் ரொம்ப அதிகம்.
பரதவர் வைணவம் சார்ந்து இருந்திருக்கிறார்களா ?
திருக்கண்ணபுரம் சவுரி ராஜபெருமாளை மாப்பிள்ளேன்னு சொல்லக் இங்கில்ல. வட மாவட்டத்துல திருக்கண்ணபுரத்துல பார்த்தேன். கூடியவங்க மீனவர்கள்தான். தென்பகுதி முழுக்க நூற்றுக்கு நூறு மீனவர்கள் கிறிஸ்துவர்கள்தான். கிழக்கே தூத்துக்குடியில இருந்து வேம்பாறு வரைக்கும். தமிழ்நாட்டினுடைய முதல் கிறித்துவக் குடிகள் அவங்கதான்.
1530-கள்ல பிரான்சிஸ் சேவியர் காலத்துல மாறுனவங்க. இன்னும் அவங்க தொல் தமிழ்ச் சடங்குகளை எல்லாம் வச்சுருக்காங்க. 'வாசல் பதித்தல்' என்னும் சடங்கு மாதிரி பல சடங்குகளை வச்சிருக்காங்க. இன்னும் அவங்க மூதாதையர்களை பற்றிச் சொல்லும்போது ‘பரவர் புராணம்'னு ஒன்னு வச்சுருக்காங்க. சிவபெருமான் வலைவீசி மீன்பிடித்த திருவிளையாடலோடு தங்களைத் தொடர்புபடுத்துகிறார்கள் பரதவர்கள். 'பரதவர் பாண்டிய வம்சத்தினரே'னு ஒரு புத்தகத்தை நான் பார்த்திருக்கேன். படிச்சதுல்ல, அவங்க தமிழ் Identity—க்குத்தான் முயற்சி பண்றாங்க.
கிறித்துவர்களா அவங்க மாறுவதற்கு முன்பு வழிபாட்டு முறை எப்படி இருந்தது?
அவர்கள் ஒரு சுறாக்கொம்பை நட்டு வழிபட்டுக் கொண்டிருந் தார்கள்னு சங்க இலக்கியத்துல 'சினைச் சுறாவின்கோடுநட்டு, மனச்சேர்த்திய வல்லணங்கினான்' அப்படின்னு பட்டினப்பாலையிலேயே சுறாவின் கொம்பை நட்டு வழிபட்டதைச் சொல்றாங்க. தொடக்க கிறித்துவ மிஷனரிகள் இதை எழுதும்போது அவர்கள் ஒரு சுறாக் கொம்பை நட்டு வழிபட்டார்கள்னு எழுதுனாங்க. அதுதான் அவங்க வழிபாடு.
- மானுட வாசிப்பு நூலில் தொ.பரமசிவம்.