தமிழர் கடல்வலிமை – முப்பெரும்புலவர்கள்
சோழன் முதல் கரிகாலன், சேரன் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனை இரண்டாம் வெண்ணிப்பறந்தலைப் போரில் தோற்கடித்தான். அப்போரில் தோற்று, விழுப்புண் பெற்ற சேரலாதன் நாணி வடக்கிருந்து உயிர் துறந்தான். இந்நிகழ்வை, கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த வெண்ணிக்குயத்தியார் ‘தோற்ற சேரலாதன் உன்னை விட நல்லவன்; புகழ் பெற்றவன்’ என வெற்றிபெற்ற கரிகாலனிடமே நேரடியாகப் பாடிய, நேர்மையும், தைரியமும், புலமையும் உடைய, குயத்தி வகுப்பை சேர்ந்த பெண்பாற் புலவர். அவரது பாடல் ‘நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி, வளிதொழில் ஆண்ட உரவோன் மருக” எனத் தொடங்குகிறது(புறம்-66). “பெருங்கடலில் காற்றின் தொழில்நுட்பம் அறிந்து அதனைக் கட்டுப்படுத்தி ஆள்வதன் மூலம் பெரும் மரக்கலங்களைச் செலுத்தி வருகிற மரபில் வந்தவனே” என்பது இதன்பொருள். சோழர்கள் மிக நீண்ட காலமாகவே கடலோடிகளாக இருந்தவர்கள் என்பதையும், சோழ மண்டலத்தை ஒட்டிய கடல்பரப்பையும், இந்தியாவின் கிழக்குக் கடற்பரப்பு முழுவதையும் தங்கள் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டுவந்தவர்கள் என்பதையும் பருவக்காற்று குறித்தும், கடல் நீரோட்டம் குறித்தும் அறிந்து கடலில் பெரும் மரக்கலங்களை செலுத்திய மரபில் வந்தவர்கள் சோழர்கள் என்பதையும் இப்பாடல் உறுதி செய்கிறது.
கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாறோக்கத்து நப்பசலையார் என்கிற இன்னொரு பெண்பாற்புலவர், மலையமான் குறித்த தனது பாடலில் சேரர்களின் கடலாதிக்கம் குறித்து “சினமிகு தானை வானவன் குடகடல் பொலந்தரு நாவாய் ஓட்டிய அவ்வழிப் பிறகலம் செல்கலாது அனையேம்” என்கிறார்(புறம்-126). மேற்குக்கடலில் சேரன் தனது பெருங் கப்பல்களை செலுத்தும் பொழுது வேறு யாரும் அவனது ஆணையை மீறி மேற்குக் கடலில் கப்பல்களைச் செலுத்த இயலாது என்பது இதன் பொருள். சங்ககாலப் பெரும்புலவன் கபிலன், அறிவில் சிறந்தவன், பெரும்புகழ் பெற்றவன், அக்கபிலன் மலையமானைப் பாடிய பிறகு பிறர் யாரும் அந்த அளவு அவனை உயர்த்திப் பாட முடியாது எனச் சொல்ல வந்த புலவர் சேரர்களது அனுமதி இன்றி யாரும் மேற்குக்கடலில் கப்பல்களை செலுத்த முடியாது என்பதுபோல எனச்சான்று காட்டுகிறார். இப்பாடல் மேற்குக் கடலில் சேரர்கள் கடலாதிக்கம் உடையவர்களாக இருந்தனர் என்பதை உறுதி செய்கிறது.

தமிழர்கள் அன்று வணிகத்தைப் பிற நாடுகளில் பெருமளவு மேற்கொண்டிருந்தனர். வணிகத்துக்கேற்ற அதிகப் பொருள் உற்பத்தியும், உயர் தொழில்நுட்ப மேன்மையும், உலகளாவிய வணிக மேலாண்மையும், கடலாதிக்கமும் கொண்டதாக அன்றைய தமிழகம் இருந்தது என்பதை இப்பாடல்கள் சுட்டிக் காட்டுகின்றன. வின்சென்ட் ஆர்தர் சுமித் என்கிற புகழ்பெற்ற வரலாற்றறிஞர், “தமிழ் அரசுகள் வல்லமை மிக்கக் கடற்படைகளை வைத்திருந்தன. கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் வணிகக் கப்பல்கள் தமிழகம் நாடி வந்தன” என்று தனது ‘இந்திய வரலாறு’ என்கிற நூலில் குறிப்பிடுகிற விடயத்தை இப்பாடல்கள் உறுதி செய்கின்றன.
பார்வை: பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன் 2016, பக்: 148-151, 157-159.
- Balan Natchimuthu