சிந்து வெளி தமிழனின் கப்பல் கலை
சிந்து வெளி நாகரிகம் செந்தமிழர் நாகரிகம் என்பதைக் கீழடி அகழ்வாராய்ச்சி நிலை நாட்டி வருகிறது. பழந்தமிழர் ஆழ்கடல் கப்பல் செலுத்தும் உலகச் சுற்றுக் கடலோடிகளாக விளங்கினர். கட்டுமரம் முதல் மிகப் பெரிய நாவாய்வரை இருநூற்றுக்கும் மேற்பட்ட நீர்வழிச் செல்லும் மரக் கலங்களையும், கப்பல் தளங்களையும் வணிகத் துறைமுகங்களையும் உலகின் பல இடங்களில் நிறுவி இருந்தனர். பல துறைமுகங்களைச் சொந்தமாகக் கொண்ட பாண்டியன், பல் சாலை முதுகுடுமி பெருவழுதி என அழைக்கப்பட்டான்.
பல்சாலை என்பது பல துறைமுகங்கள். குஜராத்தில் துவாரகை, லோத்தல், வங்காளத்தில் தமிழுக் நகர், ஒரிசாவில் பித்துண்டா எனப்படும் பெருந் தொண்டி, ஆகிய இடங்களில் தமிழ் வேந்தர்களின் துறைமுகங்கள் இருந்தன. சிந்து வெளி நாகரிகக் காலத்தில், காளண்ணன் என்பவன் கராச்சித் துறைமுகத்தை அடுத்த கூனயத்தம் என்னும் இடத்தில் ஒரு கப்பல் கட்டும் தளம் வைத்திருந்தான் என்னும் அரிய செய்தி அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவன் ஒரு கப்பல் கட்டும் தளம் வைத்திருந்தான். அவன் கட்டிய கப்பல்களில் ஒன்று, கடலில் மூழ்கி விட்டது. அதிலிருந்து நக்கணியன் என்பவன் மட்டும் உயிர் பிழைத்துக் கரையேறினான். அவனைப் பாராட்டும் வகையில் உகணன் என்பவன் அந்தச் செப்புப் பட்டயத்தை எழுதினான். கூனயத்தம் என்னும் இடத்திலிருந்த காளண்ணனின் கப்பல் கட்டும் தளம் இன்றைய கராச்சி அருகில் இருந்திருக்கலாம். மேற்கண்ட செப்புப் பட்டயத்தின் புகைப்படம் சிந்து வெளி தமிழர் நாகரீகம் என்னும் ஆங்கில நூலில் இடம் பெற்றுள்ளது. அக்காலத்தில் தமிழ் நாட்டில் இருந்து புறப்பட்ட கப்பல்கள் மேற்கில் எகிப்து, மத்திய தரைக் கடல் நாடுகள் கிரேக்கம் வரையிலும், கிழக்கில் மலேசியா, தென் சீனம், கொரியா, ஈஸ்டர் தீவு, தென் அமெரிக்க பெரு வரையிலும் சென்றுள்ளன. இவற்றுக்குத் தலைமையிடமான தமிழகம் மிகப் பெரிய கடல் வாணிக மையமாக விளங்கியது.
மொரிசியசில் நடந்த ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுரை படித்த பிரெஞ்சு நாட்டு அறிஞர் ஒருவர் மாலுமி கணக்கன் என்னும் தமிழன் துணையால், வாஸ்கோடகாமா சேரநாட்டுத் துறைமுகத்துக்கு வந்தான் என்றும் பல மேற்காசிய துறைமுகங்களில் தமிழ் நாட்டுக் கப்பலோடிகளும் கப்பல்களைப் பழுது பார்ப்பவர்களும் இருந்தனர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஒற்றைப் பாய்மரக் கப்பலை மீன் பிடிக்க மட்டும் பயன்படுத்தினர். கூடை போலிருந்த சிறிய கப்பல் கடல் துறைமுகத்திலிருந்து ஆற்று வழியாக உள் நாட்டுப் படகுத் துறைகளுக்குச் சென்றது. காற்று வீசும் திசையையும் எதிர்த்துப் போகும் பல பாய் மரங்களைக் கொண்ட பெரிய கப்பலை வடிவமைத்துத் தந்த சோழ மன்னனை வளி தொழில் ஆண்ட உரவோன் என்று குறிப்பிட்டனர்.
தமிழ் நாட்டு கீழ்வாலை பாறை ஒவியத்தில் தோணியில் நான்கு பேர் நிற்கும் ஓவியத்தின் கீழ் நாவாய்த் தேவன் என்று சிந்து வெளி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. ஒரு சிந்து வெளி முத்திரையில் வங்கன் நத்தத்தன் என்னும் பெயரும், ஏழு கன்னிப் பெண்களின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. தரை வழி செல்லும் வணிகச் சாத்துக்குத் துணையாகச் செல்பவனும் சாத்தன் எனப்பட்டான். அதேபோல், கடல் வாணிகர்க்குத் துணையாகச் செல்பவன் கடலன் எனப்பட்டான். அவன் பெயரில் அமைந்த கடலனூர் என்பதுதான் கடலூர் ஆயிற்று. பழந் தமிழரின் கடலோடும் கலைக்கு அடிப்படையான கப்பல் கட்டும் தளம் மிகப் பழங்காலத்தில் எங்கெங்கு இருந்தன என்னும் ஆய்வை ஒரு தனித்த ஆய்வாகவே தொல்பொருள் ஆய்வுத் துறை மேற்கொள்வது நல்லது.
-பேராசிரியர் இரா.மதிவாணன்