வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 16 April 2019

ராக்கிப்பொடவு கல்வெட்டு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் அமைந்துள்ளது விக்கிரமங்கலம் என்னும் அழகான சிற்றூர். கிபி பதினோராம் நூற்றாண்டில் மதுரையை ஆட்சி செய்த விக்கிரம சோழ பாண்டியன் பெயரால் விக்கிரம சோழ புரம் என பெயர் பெற்று பின்னாளில் விக்கிரமங்கலம் என பெயர் உருவானதாகக் கூறுவர் இவ்வூர் பெரியோர். 

பாண்டியநாட்டிற்கும், சேரநாட்டிற்கும் சென்ற பழமையான பாதை தற்போதைய மதுரை தேனி நெடுஞ்சாலையில் உசிலம்பட்டி செல்லும் போது செக்காணூரணிலிருந்து வலது பக்கம் திரும்பி விக்கிரமங்கலம் வழியாகவே சென்றது. இவ்வூர் அக்காலத்தில் பழமையான வணிகத்தலமாக விளங்கியது. இந்த பாதையில் அதிகமாக நீர் ஊற்றுகள் இருந்ததே அதற்கு முக்கிய காரணமாகும். 

இந்த பாதையின் முக்கிய திருப்பமாக இருக்கும் இடம் நடுமுதலைகுளம். இது விக்கிரமங்கலத்திற்கு சற்று முன்னதாக உள்ளது. விக்கிரமங்கலத்திற்கு  கொஞ்சம் முன்பே உண்டாக்கல் என்னும் மலை உள்ளது. இங்கு இரு குன்றுகளாக மலை அமைந்துள்ளது. இதில் சிறியதாக உள்ள குன்றை சின்ன உண்டாக்கல் என்று அழைக்கின்றார்கள். இது நடு முதலைக்குளம் எல்லைக்குள் அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள பெரிய குன்று விக்கிரமங்கலம் ஊரோடு இணைந்துள்ளது.

நடுமுதலைக்குளத்தில் அமைந்துள்ள உண்டாங்கல் மலையில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும், குகைத்தளத்தில் கற்படுகைகளும் உள்ளன. இது 1923 ஆம் ஆண்டிற்கு பிறகே கண்டுபிடிக்கப்பட்டது. சின்ன உண்டாக்கல் மலையில் இயற்கையாகவே இரண்டு குகைகள் அமைந்துள்ளன. ஒரு ஆள் உயரத்திற்கு மேல் இருக்கும் இக்குகையின் பெயர் "ராக்கிப்பொடவு". இதன் முகப்பில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேரந்த தமிழ் பிராமி கல்வெட்டு உள்ளது. 

அக்கல்வெட்டில் பின்வருமாறு ''வேம் பிற் ஊர் பேர் அய் அம் சேதவர்'' என எழுதப்பட்டுள்ளது. இக்குகையில் ஒரு ஆள் படுக்கும் அளவுடன் கூடிய கற்படுக்கை ஒன்றும் வெட்டப்பட்டுள்ளது.



''வேம் பிற் ஊர் பேர் அய் அம் சேதவர்'' 


இதில் குறிப்பிடப்படும் வேம் பிற் என்பதை வேம் பாற் என குறிப்பதாகக் கொண்டால் இது தற்போது வேம்பார் என அழைக்கப்படும் பண்டைய துறைமுக நகரமாகிய இது வேம்பாறைக் குறிக்கிறது எனக் கொள்ள முடியும். பேராயம் என்றால் நகரசபை அதாவது கல்வியில் சிறந்தவர்கள் நிறைந்த சபை என்று கூறலாம், சேதவர் என்பதை செய்தவர் என பொருள் கொள்ளலாம். வேம்பாறை சேர்ந்த கல்வியில் சிறந்த அவையினர் செய்து கொடுத்த கற்படுக்கை என்ற செய்தியை கூறுகிறது இக்கல்வெட்டு. 

அதே போல பெரிய உண்டாங்கல் மலையில் 16 சமணர் படுக்கைகள் உள்ளன. இங்கு படுக்கைகள் இருக்கின்றன. இங்குதான் சமணர்களும், இதன் வழியாக சென்ற வணிகர்கள், மற்றும் பொதுமக்களும் தங்கிச்சென்றதாக கர்ணப் பரம்பரைப் பேச்சு நிலவுகிறது. 

இந்த நடுமுதலைக்குளம் உண்டாங்கல் மலையில் இன்னும் கண்டறியப்படாத கல்வெட்டுகள் நிறைய இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த மலையில் இருந்துதான் இப்பழம்பெரும் பாதை தொடங்கி விக்கிரமங்கலம், கம்பம் வழியாக கேரளத்தில் உள்ள இடிக்கி வரை செல்கிறது. 
நி. தேவ் ஆனந்த் 
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com