வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Sunday 19 May 2019

இந்தியாவில் அச்சிடப்பட்ட முதல் மொழி தமிழ்
தொன்மை வாய்ந்த செம்மொழி தமிழ் மொழி. ஆனாலும் தமிழ் மொழி ஓலைச்சுவடி, செப்பேடு மற்றும் கல்வெட்டு ஆகியவற்றில் மட்டுமே எழுத்து வடிவில் இருந்தது.

ஆனால், முதல் தமிழ்ப் புத்தகம் 1554ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் திகதி லிசுபனில் வெளியானது. அதை வெளியிட்டோர் வின்சென்ட் தெ நாசரெத், ஹோர்கே கார்வாலோ மற்றும் தோமா த குருசு ஆகியோர் ஆவர்.

இம்மூவரும் தமிழ் அறிந்த இந்தியர்கள் என்றும் அவர்களுடைய கிறித்தவப் பெயர்களே நமக்குத் தெரிந்துள்ளன என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர்.

கார்த்தீயா ஏங் லிங்குவா தமுல் எ போர்த்துகேஸ் (Cartilha lingoa Tamul e Portugues) தமிழில்: தமிழ் மொழியிலும் போர்த்துக்கீசியத்திலும் அமைந்த ‘திருமறைச் சிற்றேடு’ என்னும் தலைப்பில் வெளியான அந்நூலில் தமிழ்ச் சொற்கள் லத்தீன் எழுத்துக்களில் அச்சிடப்பட்டிருந்தன. (Purchase)

இந்த நூல்தான் வரலாற்றிலேயே முதலில் அச்சிடப்பட்ட தமிழ்நூல். ஐரோப்பிய மொழியிலிருந்து முதலில் மொழிபெயர்ப்பான தொடர் பாடம்.

இந்திய மொழியொன்றிலிருந்து ஐரோப்பிய மொழிக்கு எழுத்துமாற்றம் செய்யப்பட்ட முதல்நூல் என்று தமிழறிஞர் கமில் சுவலெபில் குறிப்பிட்டிருந்தபோதும் அச்சிட்ட பெருமை போர்ச்சுக்கல் நாட்டின் எவோரா மாவட்டத்தில் விகோசா கிராமத்தில் பிறந்த ஹென்றி என்றிகஸ் அடிகளார் அல்லது ஹென்றி ஹென்றிக்கஸ் அடிகளார் என அழைக்கப்பட்ட கத்தோலிக்கப் பாதிரியாரையே சாரும்.

பிரான்சிஸ்கன் சபைக் குருக்களால் முத்துக்குளித்துறை மீனவ மக்கள் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதால் சிறப்பாகப் பணியாற்ற ஹென்றி ஹென்றிக்கஸ் அடிகளார் தமிழ் கற்க ஆரம்பித்தார்.

இவர் வேம்பார் பரிசுத்த ஆவி ஆலயப் பங்குத் தந்தையாகப் பணிபுரிந்தபோதுதான் தமிழ் கற்றார். இதனை அவரே தன் கைப்பட 31.10.1558-ல் ரோம் நகருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வேம்பாரில் முதன்முதலில் பரிசுத்த ஆவி ஆலயம் எழுப்பிய ஹென்றி ஹென்றிக்கஸ் அடிகளார்தான் தமிழில் முதன்முதலில் நூல் அச்சிட்டவர் என்றும் சொல்லப்படுகிறது.

தமிழ் மொழி அச்சு எழுத்துகள் முதன் முதலில் கோவாவில் தான் கி.பி 1577 ல் உருவாக்கப்பட்டன.

ஆனால், அந்த எழுத்துகளால் என்ன அச்சிடப்பட்டது என்பது பற்றிய தகவல் இல்லை. ஆனால் அதன்பின் 1578-ல் கொல்லத்தில் உலோகத்தினாலான தமிழ் அச்சு எழுத்துகள் வார்க்கப்பட்டன.

இவற்றைக்கொண்டு ஹென்றி ஹென்றிக்கஸ் அடிகளார் 16 பக்கங்கள் கொண்ட ‘தம்பிரான் வணக்கம்’ என்ற கிறிஸ்தவ மறை வழிபாடு தொடர்பான நூலை 20.10.1578 இல் அச்சிட்டு வெளியிட்டார்.

இந்நூல்தான் இந்திய மொழிகளிலேயே முதன்முதலில் அச்சிடப்பட்ட பெருமைக்குரியது. இந்த ‘தம்பிரான் வணக்கம்’ நூலின் முகப்பில் ‘கொம்பஞ்ஞிய தெ சேசு வகையில் அண்ரிக்கப் பாதிரியார் பிரித்தெழுதின தம்பிரான் வணக்கம்’ என்று பழந்தமிழில் தலைப்பு காணப்படுகிறது.

இதை ‘இயேசு சபை பாதிரியார் ஹென்றிக்கஸ் மொழிபெயர்த்த நூலான தம்பிரான் வணக்கம்’ எனக் கொள்ள வேண்டுமெனக் கூறுகிறார்கள்.

கிறிஸ்தவப் போதகர்களுக்கு உபயோகப்படும் விதத்தில் கிறிஸ்தவ திருமண ஜெபங்கள் வழிபாட்டு முறைகள் என 18 பிரிவுகளாகத் தமிழிலும் ஆங்காங்கே போர்த்துக்கீசிய மொழி விளக்கச் சொற்களுடனும் கூடிய இந்நூலின் ஒரே பிரதி இப்போது அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழக நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com