வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 29 October 2020

சிலப்பதிகாரம் காட்டும் கடல்கோள்
வடக்கே தமிழக - ஆந்திர எல்லையிலுள்ள புலிக்காட் ஏரியில் துவங்கி, சென்னை, கடலூர், சிதம்பரம், சீர்காழி, புகார், திருப்புனவாசல், மண்டபம், உத்திரகோசமங்கை, கொற்கை வழியே குமரிக்கு வந்து விட்டோம்.

சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த கடல் கோளின் போது , புலிக்காட் ஏரிப்பகுதியில் கடல் சுமார் 18கி.மீ தூரமும், சென்னை நகர்ப் பகுதியில், 7 – 8 கி.மீ. தூரமும், கடலூருக்கும், பூம்புகாருக்கும் இடைப்பட்ட பகுதியில் 2௦ கி.மீ. தூரமும், கோடியக்கரை- திருத்துறைப்பூண்டி பகுதியில் 36 கி.மீ.தூரமும், உத்திரகோசமங்கை பகுதியில் 8 – 10 கி.மீ. தூரமும், கொற்கைப் பகுதியில் 12 கி.மீ. தூரமும் கடல் முன்னேறிச் சென்றுள்ளது என்பதை, புவியியல், தொல் மகரந்தவியல், தொல்லுயிரியல், தொலையுணர்வு தொழில் நுட்பவியல் போன்றவற்றின் துணை கொண்டு விளக்கினோம்.

அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, இந்தக் கடல்கோளின் போது, பல நூறு சதுர கி.மீ. பரப்பளவுள்ள நிலப் பகுதி கடலுக்குள் மூழ்கியது என்பதை அறிய முடிகிறது. இந்த நிகழ்வு இலக்கியங்கள் தோன்றிய காலத்திற்கு முன்னரே நடந்ததால், இது பற்றிய குறிப்பு, இலக்கியங்களில் அதிகம் காணக் கிடைக்கவில்லை.

புறநானூற்றில்,

“கடல் கொளப் படாஅ துடலுந ரூக்கார்
கழல்புனை திருந்தடிக் காரிநின் னாடே...............” (122) என வரும் தொடரும்,

கலித்தொகையில்

“மலிதிரை ஊர்ந்து தன் மண் கடல் வெளவலின்
மெலிவு இன்றி மேற்சென்று மேவார் நாடு இடம்பட
புலியோடு வில் நீக்கி புகழ் பொறித்த கிளர் கெண்டை
வலியினான் வணக்கிய வாடா சீர் தென்னவன்.” (முல்லைகலி- 104),
என வரும் பாடலும் இந்தக் கடல்கோள் குறித்தே என எண்ண இடமுண்டு.

இதே அளவில் சிந்திக்கும்போது, சிலப்பதிகாரத்தில் வரும்,

“பஃறுளியாறும் பன்மலையடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” (மதுரை- காடுகாண் 19-20 )

எனும் தொடரில் காட்டப்படும் கடல்கோளும், ஹோலோசீன் காலத்து கடல்மட்ட உயர்வின் இறுதிக் கட்டத்தைக் காட்டுவதாகவே இருக்க வேண்டும்.

உலகின் மூத்த மொழிகளில் காணப்படும் புராணங்களிலும். தொன்மைக்கதைகளிலும் பேசப்படும் கடல்கோள் (DELUGE) , ஹோலோசீன் காலத்தின் இறுதிப் பகுதியில், அதாவது, சுமார் 5000 அல்லது 6000ஆண்டுகளுக்கு முன், நிகழ்ந்த கடல்மட்ட உயர்வையே குறிப்பதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

சரி, சிலப்பதிகாரத்திற்குள் சற்று நுழைந்து வருவோம். குமரியும் கடல்கோளும் ஒரே தொடரில் வருவது எந்த இலக்கியத்திலும் இல்லை சிலப்பதிகாரத்தைத் தவிர,

“அடியிற்றன்னளவு அரசர்க்கு உணத்தி
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளியாரும் பன்மலையடுக்கத்து
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசை கங்கையும் இமயுமும் கொண்டு
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி..”

மதுரைக் காண்டத்தில், காடுகாண் காதையில் வரும் இந்தப் பாடலின் மூன்று மற்றும் நாலாவது அடிகள் மிக முக்கியமானவை. இந்த அடிகளுக்கு உரையாசிரியர் அடியார்க்குநல்லார் தரும் விளக்கம்தான், குமரிக் கண்ட கருதுகோளுக்கு அடிப்படையாக அமைந்தது எனில் அது மிகையாகாது.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com