உலகின் பழமையான மொழிகளில் உள்ள இலக்கியங்களிலும், தொன்மைக் கதைகள் பலவற்றிலும், கடல் கோள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. விரிக்கின் மிகும். நாம் இரட்டைக் காப்பியங்கள் எனக் கொண்டாடும் சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் கடல்கோள் பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக மணிமேகலை காப்பியத்தில் கடல்கோள் பற்றிய குறிப்புகள் பல்வேறு காதைகளில் பரவிக் கிடக்கின்றன. நூலின் ஆசிரியர் சீத்தலை சாத்தனார், பல்வேறு கதாபாத்திரங்கள் வாயிலாக காவிரிப்பூம்பட்டினம் கடலால் அழிந்த செய்தியை நமக்குத் தெரிவிக்கிறார். நாம் கடந்த சில நாட்களாகப் பேசிவரும் கடல்கோளும், சாத்தனார் காட்டும் கடல்கோளும் ஒன்றா....
பூம்புகார் நகரின் கடற்கரையில் உப்பளத்தின் அருகே மணற்குன்று ஒன்றில் வருந்திக் கொண்டிருந்த மன்னன் கிள்ளிவளவனைப் பார்த்து, சாரணர் ஒருவர், “-----உன் மாநகர் கடல் வயிறு புகூஉம்” (24: 62-63) என்று எச்சரித்ததாக மணிமேகலையின் பாட்டி சித்திராபதி, இராசமாதேவியிடம் கூறுகிறார். இந்தக் குறிப்பு ‘ஆபுத்திரன் நாடு அடைந்த காதை’ யில் காணப்படுகிறது.
தொடந்து, மணிபல்லவத்தீவிற்கு ஆபுத்திரனோடு சென்ற மணிமேகலையிடம், அத்தீவிலிருந்த புத்தபீடிகையை காத்துவந்த தீவதிலகை, “பலர் தொழு பாத்திரம் கையில் ஏந்திய மடவரல் நல்லாய்-நிந்தன் மாநகர் கடல் வயிறு புக்கது”(25: 174-176) என்றும், “வானவன் விழாக்கோள் மாநகர் ஒழிந்தது” (25:197) என்றும், “விரிதிரை வந்து வியன் நகர் விழுங்க, ஒருதனிப் போயினன் உலக மன்னவன்; அருந்தவன் தன்னுடன், ஆய் இழைத் தாயரும் வருந்தாது ஏகி , வஞ்சியுள் புக்கனர்” ( 25: 203-206) என்றும், கூறுகிறாள். இவை ‘ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை’ யில் வருகின்றன.
இதனை அடுத்து, வஞ்சி மாநகர் சென்று அங்கே தவ வாழ்க்கை மேற்கொண்டிருக்கும் தன் தாத்தா மாசாத்துவானை பார்க்கும் மணிமேகலை, “-------மாநகர் கடல் கொள, அறவண அடிகளும் தாயாரும் ஆங்கு விட்டு, இறவாது இப்பதி புகுந்தது கேட்டு -----“, தான் இங்கு வந்துள்ளதாகக் கூறுகிறாள்.(28:79-82). இதற்கு பதிலலிக்கும் மாசாத்துவான் “காவரிப்பூம்பட்டிணம் கடல் கொள்ளும்” (28: 135) என அறிந்தே தான் அங்கே செல்லாமல் வஞ்சியிலே தங்கிவிட்டதாக கூறுகிறார். இக்காட்சிகள் ‘கச்சி மாநகர் புக்க காதையில்’ காணக் கிடைக்கின்றன.
இதனைத் தொடர்ந்து வரும் ‘தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை’யில், வஞ்சி நகர் வந்து தன்னை வணங்கிய மணிமேகலையிடம், அறவண அடிகள் “-----நகர் கடல் கொள்ள , நின் தாயரும் யானும் –இப்பதி படர்ந்தனம்” .(29: 35-36) என்று கூறுவதாக, சாத்தனார் சுட்டிக் காட்டுகிறார்.
இதுகாறும் எடுத்துக்காட்டிய மேற்கோள்களிலிருந்து, சீத்தலை சாத்தனார் வாழ்ந்த காலத்திலோ அல்லது அதற்கு சற்று முன்போ, காவேரிபூம்பட்டினத்தைக் கடல் கொண்டது என்று எண்ணத் தோன்றுகிறது..மணிமேகலையின் கதையை அல்லது வரலாற்றை கூற வந்த சாத்தனார் அந்தக் கடல்கோள் நிகழ்வினை கதையோடு இணைத்து காப்பியத்தை பாடிஇருக்கிறார். கதை நிகழ்ந்த காலகட்டத்தில் நிலவி வந்த நம்பிக்கைகளுக்கேற்ப , இந்திரன் இட்ட சாபத்தின் காரணமாக கடல் கோள் நிகழ்ந்தது என்று காப்பியத்தின் பல பாகங்களில் சொல்லப் பட்டிருக்கிறது.
சங்க காலத்திலும், பின் இந்த இரட்டைக்காப்பியம் எழுந்த காலத்திலும் சிறந்த துறைமுக நகரமாகவும், மிகச் சிறந்த வணிகப் பெருநகரமாகவும் திகழ்ந்த காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு பற்றிய குறிப்புகள், அதன் பின் தோன்றிய இலக்கியங்களில் அவ்வளவாக இல்லை. ஆதலின் மணிமேகலை காப்பிய காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் கடலுக்கு இரையானது என எண்ண இடம் உள்ளது. அந்தப் பட்டினம் துறைமுக நகரமாக இருந்தது என்பதற்குத் தற்போது கிடைக்கும் தொல்லியல் ஆய்வுத் தடயங்கள் சான்று பகர்கின்றன.
சரி, காவிரிப்பூம்பட்டிணம் மறைந்ததக்குக் காரணம்: ஓத ஏற்றங்களா, புயல் அலைகளா, சுனாமி அலைகளா அன்றி ஹோலோசீன் கடல் மட்ட உயர்வா?.....
சாத்தனார் சொல்லும் கடல்கோள் திடீரென வந்து காவிரிப்பூம்பட்டிணத்தை விழுங்கியுள்ளது. ஆதலின், உலகளாவிய ஹோலோசீன் கடல்மட்ட உயர்வால் இது நடந்திருக்க இடமில்லை. ஓத ஏற்றங்களால் விரிதிரை எழும்பாது; ஆக அதுவுமில்லை. புயல் காற்றில் எழும்பிய அலைகளோ அல்லது சுனாமி அலைகளோ பட்டினத்தை அழித்தன என்று நினைக்க வேண்டியிருக்கிறது. புயற் காற்றோ அல்லது சூறாவளியோ வீசியிருந்தால் அது பற்றிய குறிப்பு நிச்சயமாக காப்பியத்தில் இடம் பெற்றிருக்கும். மணிமேகலை ஆசிரியர் சீத்தலை சாத்தனார் இயற்கை வருணனையில் மிக வல்லவர். காப்பியத்தின் பல்வேறு காதைகளில் அவர் படம் பிடித்துக் காட்டும் இயற்கை வனப்புகள் கற்போர் மனதை சொக்க வைப்பன. காப்பியத்தில் புயற்காற்று பற்றிய குறிப்பு சிறப்பாக ஒன்றும் இல்லையாதலின் காவிரிபூம்பட்டினத்தின் அழிவு சுனாமியால் ஏற்பட்டதோ என எண்ண இடம் உண்டு. ( இது ஒரு ஊகம்தான். Palaeo tsunami ஆய்வுகள் மேற்கொண்டால்தான் இதை நிறுவ முடியும்).
இந்த இடத்தில் நாம் கலித்தொகை வரிகளை மணிமேகலை வரிகளுடன் ஒப்பு நோக்குவோம்.
கலித்தொகையில் “மலிதிரை ஊர்ந்து மண் வௌவியது “
மேகலையில் “ விரிதிரை வந்து வியன் நகர் விழுங்கியது.”
இனி மேகலையில் ,
“-------மாநகர் கடல் கொள, அறவண அடிகளும் தாயாரும் ஆங்கு விட்டு, இறவாது இப்பதி புகுந்தது கேட்டு -----“, என மணிமேகலை சொல்வதன மூலம் , நகரை விரிதிரை விழுங்கியபோது, சில உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கலாம் என ஊகிக்க முடிகிறது. கலித்தொகையில் உயிரிழப்பு பற்றிய குறிப்பு ஒன்றும் இல்லை.
சுனாமிக்கு ஆதரவாக மணிமேகலையில் வேறு சான்றுகள் ஏதும் உள்ளனவா? என்னைப் பொறுத்தவரை நிறையவே உள்ளன.
வடக்கே தமிழக - ஆந்திர எல்லையிலுள்ள புலிக்காட் ஏரியில் துவங்கி, சென்னை, கடலூர், சிதம்பரம், சீர்காழி, புகார், திருப்புனவாசல், மண்டபம், உத்திரகோசமங்கை, கொற்கை வழியே குமரிக்கு வந்து விட்டோம்.
சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த கடல் கோளின் போது , புலிக்காட் ஏரிப்பகுதியில் கடல் சுமார் 18கி.மீ தூரமும், சென்னை நகர்ப் பகுதியில், 7 – 8 கி.மீ. தூரமும், கடலூருக்கும், பூம்புகாருக்கும் இடைப்பட்ட பகுதியில் 2௦ கி.மீ. தூரமும், கோடியக்கரை- திருத்துறைப்பூண்டி பகுதியில் 36 கி.மீ.தூரமும், உத்திரகோசமங்கை பகுதியில் 8 – 10 கி.மீ. தூரமும், கொற்கைப் பகுதியில் 12 கி.மீ. தூரமும் கடல் முன்னேறிச் சென்றுள்ளது என்பதை, புவியியல், தொல் மகரந்தவியல், தொல்லுயிரியல், தொலையுணர்வு தொழில் நுட்பவியல் போன்றவற்றின் துணை கொண்டு விளக்கினோம்.
அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, இந்தக் கடல்கோளின் போது, பல நூறு சதுர கி.மீ. பரப்பளவுள்ள நிலப் பகுதி கடலுக்குள் மூழ்கியது என்பதை அறிய முடிகிறது. இந்த நிகழ்வு இலக்கியங்கள் தோன்றிய காலத்திற்கு முன்னரே நடந்ததால், இது பற்றிய குறிப்பு, இலக்கியங்களில் அதிகம் காணக் கிடைக்கவில்லை.
புறநானூற்றில்,
“கடல் கொளப் படாஅ துடலுந ரூக்கார்
கழல்புனை திருந்தடிக் காரிநின் னாடே...............” (122) என வரும் தொடரும்,
கலித்தொகையில்
“மலிதிரை ஊர்ந்து தன் மண் கடல் வெளவலின்
மெலிவு இன்றி மேற்சென்று மேவார் நாடு இடம்பட
புலியோடு வில் நீக்கி புகழ் பொறித்த கிளர் கெண்டை
வலியினான் வணக்கிய வாடா சீர் தென்னவன்.” (முல்லைகலி- 104),
என வரும் பாடலும் இந்தக் கடல்கோள் குறித்தே என எண்ண இடமுண்டு.
இதே அளவில் சிந்திக்கும்போது, சிலப்பதிகாரத்தில் வரும்,
“பஃறுளியாறும் பன்மலையடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” (மதுரை- காடுகாண் 19-20 )
எனும் தொடரில் காட்டப்படும் கடல்கோளும், ஹோலோசீன் காலத்து கடல்மட்ட உயர்வின் இறுதிக் கட்டத்தைக் காட்டுவதாகவே இருக்க வேண்டும்.
உலகின் மூத்த மொழிகளில் காணப்படும் புராணங்களிலும். தொன்மைக்கதைகளிலும் பேசப்படும் கடல்கோள் (DELUGE) , ஹோலோசீன் காலத்தின் இறுதிப் பகுதியில், அதாவது, சுமார் 5000 அல்லது 6000ஆண்டுகளுக்கு முன், நிகழ்ந்த கடல்மட்ட உயர்வையே குறிப்பதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
சரி, சிலப்பதிகாரத்திற்குள் சற்று நுழைந்து வருவோம். குமரியும் கடல்கோளும் ஒரே தொடரில் வருவது எந்த இலக்கியத்திலும் இல்லை சிலப்பதிகாரத்தைத் தவிர,
“அடியிற்றன்னளவு அரசர்க்கு உணத்தி
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளியாரும் பன்மலையடுக்கத்து
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசை கங்கையும் இமயுமும் கொண்டு
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி..”
மதுரைக் காண்டத்தில், காடுகாண் காதையில் வரும் இந்தப் பாடலின் மூன்று மற்றும் நாலாவது அடிகள் மிக முக்கியமானவை. இந்த அடிகளுக்கு உரையாசிரியர் அடியார்க்குநல்லார் தரும் விளக்கம்தான், குமரிக் கண்ட கருதுகோளுக்கு அடிப்படையாக அமைந்தது எனில் அது மிகையாகாது.
சிலப்பதிகாரம் காட்டும் கடல்கோள்
Dev Anandh Fernando
21:26

VEMBAR CATHOLIC MISSION
Dev Anandh Fernando
06:53
