மேலைநாடுகளில் ஆலயங்களில், அரசருக்கு தனி மரியாதை செய்து வருவதைப் போலவே, முத்துக்குளித்துறையில் பரத குல ஜாதிதலைவமோருக்கு போர்த்துக்கீசியர் தொடங்கி அவர்களுக்குப்பின் ஞான மேய்ப்பர்களால் அங்கிகரிக்கப்பட்ட கௌரவ உரிமைகள் வழங்கப்பட்டது. முத்துக்குளித்துறையின் அனைத்து ஆலயங்களிலும், குறிப்பாக பரிசுத்த பனிமய மாதா ஆலயத்தில் ஜாதித்தலைவமோர் அவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்ட கௌரவ உரிமைகள் பின்வருமாறு....
1) ஆலயத்தில் பலிபீடத்தை அடுத்துள்ள இடம் பரத ஜாதிதலைவமோருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும், அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடம் தற்போதுவரை தூத்துக்குடி பரிசுத்த பனிமய மாதா பேராலயத்தில் காணலாம். அந்த இடத்தில் ஜாதித்தலைவமோர் அவர்களுக்கு தனி இருக்கையில் அமர உரிமை.
2) ஜாதித்தலைவமோர், தன் பரிவாரத்துடன் ஆலயத்தில் நுழையும் போது பலிபீடத்தின் பின் புறத்திலிருக்கும் வெண்கல மணி ஒலிக்கப்படும். (ஜாதித்தலைவர் மணி என்று பெயர் சூட்டப்பட்ட இந்த மணி இந்நாள் வரை பலிபீடத்தின் பின்புறம் இருந்து வருகிறது.)
3) ஞாயிறு, மற்றும் கடன் திருநாட்களில் விசேஷ பிரார்தனையாக சிங்ஙோர் சிங்ஙோர் தொன் (ஜாதித்தலைவமோர் பெயர்) ஏழுதுறை ஜாதித்தலைவமோர் அவர்களின் ஆத்ம, சரீர நன்மைகளுக்காகவும், அவர்கள் கேட்கிற நன்மையான காரியங்கள் அனுகூலமாகத்தக்கதாகவும், பரத ஜாதியாரின் முன்னேற்றத்திற்காகவும்......... என ஜெபித்தல்.
4) திவ்விய நற்கருணை, குருத்து ஓலை, விபூதி சாம்பல் வழங்கும் போது பலிபீடத்திற்குள் நுழைந்து பெற்றுக்கொள்ளும் முன்னுரிமை.
5) ஆலயத்தின் தர்மகர்த்தாவாக பரிசுத்த பனிமய மாதாவின் ஆபரணங்கள் இருக்கும் கருவூலப் பெட்டியின் திறவு கோல்களை வைத்து இருக்கும் உரிமை.
6) பெரிய வியாழன் அன்று, 12 அப்போஸ்தலர்களாக வருபவர்களின் கால் கழுவும் சடங்கில் கால்களை குருவானவருடன் இணைந்து முத்திசெய்யும் உரிமை.
7) ஜாதித்தலைவமோர் குடும்பத்தில் நடைபெறும் திருமணம், புது நன்மை பெறுதல், யூபிலி, பதவி ஏற்பு போன்ற மங்கள நிகழ்ச்சிகளில், பரிசுத்த பனிமய மாதாவிற்கு பொன், வைர மற்றும் முத்து நகைகள் அணிவித்தல்.
8) தங்கத்தேர் உற்சவத்தில், பரிசுத்த பனிமய மாதாவின் திருச்சுரூபத்தை தேரில் வைப்பதற்காக முத்துப்பல்லக்கில் வைத்து எடுத்து வரும் போது, முத்துப்பல்லக்கில் உள்ளே அமர்ந்து மாதாவை பிடித்துக்கொள்ளும் பாக்கியம்.
9) பரிசுத்த பனிமய மாதாவின் தங்கத் தேரின் வடத்தை முதன் முதலாக தொட்டுக்கொடுத்து, மரியே மாதாவே எனும் குரலெழுப்பி தங்கத் தேரினை இழுத்து வைக்கும் உரிமை.
10) ஜாதித்தலைவமோர் மரணம் சம்பவிக்கும் போது, முத்துக்குளித்துறையின் அனைத்து ஆலயங்களிலும் துக்கமணி ஒலிக்கப்படுவதுடன், கொடிமரத்தில் கருப்புக்கொடி ஏற்றிவைத்தல்.
11) ஜாதித்தலைவமோர், பரதகுல கொடிகளும், விருதுகளும் கோவில் காம்பவுண்டுக்குள் எடுத்துச் செல்லும் சுதந்திரம்.
12) ஜாதித்தலைவமோரின் பதவி ஏற்பு நிகழ்ச்சிகளை வந்திக்கத்தக்க மேற்றிராணியார் அவர்களே முன்நின்று நடத்தி வைத்தல்.
தகவல்: கேப்டன் பெர்க்மான்ஸ் மோத்தா
பாண்டியபதி கோப்புகள்
முத்துக்கள் (Pearls) வாழும் உயிரனமான முத்துச் சிப்பிகளிலிருந்து பெறப்படும் மணிக்கற்களாகும் (Gemstone). முத்து எப்போது யாரால் எப்போது கண்டறியப்பட்டது என்று தெரியவில்லை. இக்கற்களை, ஆதி மனிதன் (Pre Historic Man) கண்டறிந்து உலகுக்கு அளித்த, இயற்கையான கொடையாகக் கருதலாம். உணவுக்காக ஆதிமனிதன் கடல் மற்றும் ஏரிகளிலிருந்து சிப்பிகளைச் சேகரிக்கும்போது நிகழ்ந்த கண்டுபிடிப்பு இதுவாகும்.
இயற்கை, முத்தைத் தயாரித்து முடிக்கப்பட்ட பொருளாகவே (Finished Product) நமக்கு அளிக்கிறது. இதற்கு மேல் முத்தைப் பட்டை தீட்டவோ (Cutting) பளபளப்பாக்கவோ (Polishing) தேவையில்லை. பளபளப்பு (Lustre), ஒளிர்வு (Brilliance) போன்ற தன்மைகள் இயற்கையிலேயே அமையப்பெற்ற நன்முத்துக்கள், கனிமங்களிலிருந்து பெறப்பட்டு, மனிதனால் பட்டை தீட்டிப் பளபளப்பாக்கப்பட்ட மணிக்கற்களை விடச் சிறந்தவை ஆகும்.
மேல்தொனி (Overtone) கீழைப் பண்பு (Topographic Orientation) போன்ற தனித்தன்மையுடன் கூடிய ஒளியியல் பண்புகள் (Unique Optical Properties) கொண்ட முத்துக் கூட்டில் (Nacre) ஒளிவிலக்கம் பெற்ற ஒளி பல்லடுக்குகளிலும் பாய்கின்றன. இதனால் முத்துக்கள் தனித்தன்மையுடன் கூடிய பலநிறக் கலவைகளைத் (Unique Color Combinations) பெறுகின்றன. இது போன்ற பண்புகளை வைரம் போன்ற கனிம மணிக்கற்களில் கூடக் காணமுடியவில்லை.
முத்து. தூய்மை (Purity), புனிதம் (Sanctity), முழுமை (Perfection) போன்ற தன்மைகளின் சின்னங்களாகவும் (symbols), நல்லொழுக்கம் (Virtue), அன்பு (Love), ஞானம் (Wisdom), நீதி (Justice), ஆன்மீகம் (spirituality) மற்றும் நியாயமுடைமை (righteousness) போன்ற மனிதப் பண்புகளைப் பிரதிநிதிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
முத்துக்கள் பிறக்கும் இடங்கள் இருபது
திருவேங்கடையர் தொகுத்துப் பதிப்பித்த உவமான சங்கிரகம் என்னும் நூலில் முத்துக்கள் பிறக்கும் இடங்கள் இருபது என்று குறிக்கும் தனிப்பாடல் இது:
தந்தி வராக மருப்பிப்பி பூகந்தழை கதலி
நந்து சலஞ்சலம் மீன்றலை கொக்கு நளினமின்னார்
கந்தரஞ்சாலி கழைகன்ன லாவின் பல்கட்செவிக்கார்
இந்துவுடும்புகரா முத்தமீனுமிருபதுமே
(உவமான சங்கிரகம், இரத்தினச் சுருக்கம்)
யானைக் (தந்தி) கொம்பு, பன்றிக் (வராகக்) கொம்பு, முத்துச்சிப்பி, (பூகம்) பாக்குமரம், (கதலி) வாழைமரம், (நந்து) நத்தை, சலஞ்சலம் (வலம்புரிச் சங்கு), மீன் தலை, கொக்குத் தலை, தாமரை (நளினம்), பெண்கள் கழுத்து (மின்னார் கந்தரம்), நெல் (சாலி), மூங்கில் (கழை), கரும்பு (கன்னல்), மாட்டுப் பல் (ஆவின் பல்), பாம்பு (கட்செவி), முகில் (கார்), கற்பூரம், முடலை, உடும்பின் தலை ஆகிய இருபது இடங்களில் முத்து பிறக்கும் என்பது இதன் பொருள்.
வேறு பெயர்கள்
முத்திற்கு தமிழில் நித்திலம் (எ.கா: நித்திலப் பைம்பூண் நிலாத்திகழ் அவிரொளி (சிலப்பதிகாரம்.), தூமணி (எ.கா: துங்கக் கரிமுகத்துத் தூமணியே – (நல்வழி) என்று சில பெயர்கள் உண்டு. வடமொழியில் முக்த (Muktha) என்று பெயர். வட்டம், அனுவட்டம், ஒப்பு, குறு, சப்பாத்தி, இரட்டை, கரடு என பல முத்து வகைகள் இருந்ததாகச் சோழநாட்டுக் கல்வெட்டுகள் பதிவுசெய்துள்ளன.
உயர்தரமான அல்லது முதல்தரமான முத்தினை ஆணிமுத்து என்று குறிப்பிடுவர்.
(எ.கா.)
கண்டேனே முத்துறையும் நாடும்கண்டேன் கருவான ஆணிமுத்து தானுங்கண்டேன்
கொண்டேனே வெகுதூரங் குளிகைகொண்டு கொப்பெனவே முத்துறையும் பதியுங்கண்டேன்
விண்டிட்ட குளிகையது பலத்தினாலே வீரான ஆழிவரை சுத்திகண்டேன்
உண்டதொரு குண்ணளவு முத்துகண்டேன் வுகமையுள்ள சிப்பிமுத்து கண்டேன்பாரே
(போகரின் சப்த காண்டம் 4109)
இயற்பியல் மற்றும் வேதியல் பண்புகள் (Physical and Chemical Properties)
முத்து ஒரு கனிப்பொருள் (Mineral) அல்ல. இந்த முத்து அரகோனைட் மற்றும் கால்சைட் ஆகிய இரு கால்சியம் கார்பனேட் கனிமங்களால் உருவாகிறது. இந்தக் இரண்டு கனிமங்களும், படிகமாகும் (crystallization) தன்மையில் வேறுபடுகின்றன. கால்சைட் என்ற பொதுவான கனிமம் முக்கோணப் படிகங்களால் (trigonal crystals) உருவாகிறது. அரகோனைட் செஞ்சாய்சதுரப் படிகங்களால் (Orthorhombic Crystals). உருவாகிறது. அரகோனைட் என்னும் கனிப்பொருளும் காஞ்சீலின் (ஒரு புரதம்) (Conchiolin (a Protein) என்ற பிணைப்புப் பொருளும் (Binding Materials) கலந்து முத்து உருவாகிறது.
இந்தச் சேர்க்கையை முத்துக்கூடு (Nacre) அல்லது தாய் முத்து (Mother-of-Pearl) என்று அழைக்கிறார்கள். சில குறிப்பிட்ட வகைகளில் கால்சைட் என்னும் கனிமக் கலவை (கால்சியம் கார்பனேட்டால் உருவாகிய மற்றொரு கனிமம்) காணப்படுகிறது. முத்துச் சிப்பி மற்றும் கருநீலச் சிப்பிகளுடைய ஓட்டின் உட்புறப் பூச்சில் முத்துக்கூடு (Nacre) உருவாகிறது. ஒரு சிறந்த முத்து உருண்டை வடிவில் இருக்கும். எனினும் வேறு சில வடிவங்களும் பொதுவாகக் காணப்படும்.
- வகை: கார்பனேட் கனிமம்
- வேதியல் வாய்ப்பாடு: CaCO3
- கலவை: கால்சியம் கார்பனேட் சில சமயங்களில் ஸ்ட்ரான்ஷியம் (Strontium), ஈயம் (Lead) மற்றும் துத்தநாகம் (Zinc)
- மாற்று வாய்ப்பாடு: (Ca,Sr,Pb,Zn)CO3
- நிறம்: நிறமற்றது (Colorless), வெண்மை (white), பழுப்பு (brown), சாம்பல் நிறம் (gray), மஞ்சள் (yellow), சிவப்பு (red), இளஞ்சிவப்பு (pink), ஊதா (purple), ஆரஞ்சு (orange), நீலம் (blue), பச்சை (green)
- கீற்றுவண்ணம் (Streaks): வெள்ளைக் கீற்றுகள்
- வலிமை (Hardness) மோவின் அளவு கோல்: 3.5 – 4
- படிக அமைப்பு: செஞ்சாய்சதுர படிகங்கள் (Orthorhombic Crystals)
- ஒளி ஊடுருவும் தன்மை (Transparency): ஒளிபுகும் தன்மை (Transparent) முதல் ஒளிபுகாத் தன்மை வரை
- ஒப்படர்த்தி (Specific Gravity): 2.9 – 3.0
- மிளிர்வு (Lustre): கண்ணாடிதன்மை (Vitreous), மந்தமான (Dull) மிளிர்வு
- பிளவு (Cleavage): 3,1 – பட்டகம் (prismatic) ; தெளிவாகத் தெரியாத (indiscernible),2
- முறிவு (Fracture): Subconchoidal
- விகுவுத்தன்மை (Tenacity): நொறுங்கத்தக்கது (Brittle)
சான்று: அரகோனைட்டு, விக்கிபீடியா
நுரையற்ற பாலில் முத்தைப் போட்டால் அது மிதக்கும். முத்தை ஊறவைத்த நீரைப் பருகினால் வயிற்றில் அமில சக்தியைப் போக்கி குடல் நோய் வராமல் பாதுகாக்கும். முத்து கல்லீரல் இயக்கத்தைச் சீராகப் பாதுகாக்கும். இது சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும் பண்பு கொண்டது. புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து நிறைந்த முத்தினை அணிந்தால் அஃது உடலில் உரசி உரசிக் கரையும். அப்போது உடல் சூடு தணியும். முத்து நீண்ட ஆயுளைத் தரவல்லது என்று மருத்துவ நூல்கள் கூறுகின்றன. முத்தினை மூலிகைச் சாற்றுடன் புடம் போட்டுப் பஸ்பம் செய்யும் வழிமுறை சித்த மருத்துவ நூல்களில் இடம்பெற்றுள்ளது.
சந்திரனின் இராசியில் பிறந்த கடக (ரோஹிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களில் பிறந்த) ராசிக்காரர்கள்; சந்திரதிசை நடப்பில் உள்ள ஜாதகர்கள்; எண் கணிதபடி 2,11,20,20 தேதிகளில் பிறந்தவர்களிலும், 7,16, 25 தேதிகளிலும் பிறந்தவர்கள், ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள்; இசை,கணிதம் போன்ற துறைகளில் பணிபுரிபவர்கள்; ஆகியோர் முத்தினை அணியலாம் என்று இராசிக்கல் வல்லுனர்கள் பரிந்துரை செய்கிறார்கள். இது செல்வ விருத்தியைக் கொடுக்கும். அமைதியையும், மகிழ்ச்சியையும் தரக்கூடியது.
வரலாறு
முத்துக்கள் மனித வரலாற்றுடன் நெருக்கமாக இணைந்துள்ளது. இவை உலகின் மிகப் பழமையான மணிக்கற்களாக வரலாற்றுக் காலத்திற்கு முன்பிலிருந்தே மதிக்கப்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாகவே முத்துக்களின் கண்டுபிடிப்பிற்கு ஒரு நபரை மட்டும் பொறுப்பாக்க இயலாது. கடற்கரை ஓரங்களில் ஆதிமனிதன் உணவைத் தேடி அலைந்த போது முத்துக்கள் கண்டறியப்பட்டதாக நம்பப்படுகிறது.
கி.மு.2300 ஆம் ஆண்டுக்கு முன்பே முத்து சீன அரச குடும்பத்தினருக்கு பரிசாக வழங்கப்பட்டது. முத்துக்கள் பற்றிய மிகவும் பழமையான குறிப்புப் பழங்காலச் சீனாவில் இருந்து கிடைக்கிறது. சீனாவில் கி.மு. 2,350 ஆம் ஆண்டளவில் வெளியிடப்பட்ட மிகப் பழமையான புத்தகங்களில் ஒன்றான ஷோ கிங் (சூங் சூ) (Sho King (Chuang Tzu) என்ற நூலில் ஹூவாய் ஆற்றில் கிடைத்த முத்து பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூல், வரி ஆவணங்கங்களிலும், இறப்பிற்குப் பின் அளிக்கப்படும் முத்து வெகுமதி வரிசையிலும் முத்து பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. கி.மு. 1000 ஆம் ஆண்டு வெளிவந்த பண்டைய சீன அகராதியான the Nh’ya இல் ஷென்-சை பிரதேசத்தில் கிடைத்த முத்தை விலைமதிப்பற்ற நகை என்று பொருள் கூறுகிறது. கி.பி. 1000 ஆம் ஆண்டில் சின்னஞ்சிறிய ஈய புத்தர் சிலைகளை (Tiny Lead Buddha Statue) முத்துச் சிப்பிக்குள் செலுத்தி முதன்முதலாக வளர்ப்பு முத்துக்களைத் தயாரித்த (Production Cultured Pearls) பெருமையையும் சீனமே பெறுகிறது. யூத மதத்தின் புனித நூலான டால்மூதில் (Talmud) அசாதாரண அழகான மற்றும் மிக விலையுயர்ந்த முத்துக்களைக் குறித்துப் பல குறிப்புகள் உள்ளன.
விவிலியம் குரான் போன்ற புனித நூல்களில் முத்து இடம்பெற்றுள்ளது. முத்துக்களின் தோற்றம் புராணக்கதைகள் மற்றும் பிரபஞ்சவியல் சொல்லாட்சிகளின் (Mythological and Cosmological Terms) மூலம் அடிக்கடி விவரிக்கப்பட்டுள்ளது.
விவிலியம் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகிய இரு தொகுப்புகளிலும் முத்துக்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. புதிய ஏற்பாட்டில் எட்டு இடங்களில் முத்துக்கள் பற்றி குறிப்பிடப்படுகிறது: மாத்யூ 2 குறிப்புகள்; உயிர்த்தெழுதல் (Revelation) 4 குறிப்புகள்; திமோதி 2 குறிப்புகள்
ரோம் நாட்டில் முத்தில் செய்யப்பட்ட நகைகள் அந்தஸ்தின் சின்னமாகக் கருதப்பட்டன. கி.மு. முதலாம் நூற்றண்டிலேயே உருள் முத்துக்கள் அரிதான மணிகளாக மதிக்கப்பட்டன. ஜூலியஸ் சீசர் காலத்தில் அரச குடும்பத்தினர் குறைவாக முத்து ஆபரணங்களைப் பயன்படுத்த அறிவுறுத்தி ஆணை பிறப்பிக்கப்பட்டது..
பாரிஸ் நகரில் லூவர் அருங்காட்சியகத்தில், பெர்சிய இளவரசியின், கி.மு. 420 ஆம் ஆண்டு எனக் காலவரையறை செய்யப்பட்ட பழங்காலக் கல் சவப்பெட்டி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இளவரசியின் உடலில் உடைந்த முத்து நகைத் துண்டு கண்டறியப்பட்டுள்ளது. இதன் வாயிலாக முத்து கி.மு. 420 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே அணிகலனாகப் பயன்படுத்தியது தெளிவாகியுள்ளது. எகிப்தில் முத்துச் சிப்பிகளை கி.மு.நான்காம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே அலங்காரப் பொருட்களாகப் பயன்படுத்தியுள்ளனர். மாவீரன் அலெக்சாண்டரின் (கி.மு. 4 ஆம் நூற்றாண்டு) ஆட்சிக் காலத்தில் முத்து வணிகமும், வணிகப் போக்குவரத்தும் மேலைநாடுகளுக்குப் பரவியது. செங்கடலும் மத்திய கிழக்கு பகுதியும் முத்து வணிகத்தின் இன்றியமையாத மையங்களாக விளங்கின.
பெர்சிய வளைகுடாவின் கடற்கரைப் பரப்பில் முத்துச் சிப்பிகள் அதிக அளவில் காணப்பட்டது அரபியக் கலாசாரத்தின் மதிப்பை உயர்த்தியது. செயற்கை முத்துக்கள் கண்டறியப்பட்டதற்கு முன்பே பெர்சியா முத்து வணிகத்தின் மையமாக விளங்கியது. வளைகுடா நாடுகளில் பெட்ரோலிய எண்ணெய்க் கிணறுகள் கண்டறியப்பட்டதற்கு வெகுகாலத்திற்கு முன்பிருந்தே முத்து பெர்சிய வளைகுடா நாடுகளின் செல்வத்திற்கான ஆதாரமாகத் திகழ்ந்துள்ளது.
இவ்வளவு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட முத்து நாளடைவில் புராணக் கதைகளிலும் கட்டுக்கதைகளிலும் (Legends and Myths) கலந்துவிட்டதில் வியப்பேதுமில்லை. பண்டைய சீனத்தில், முத்து நகைகள் அதனை அணிபவருக்குத் தூய்மையைத் தரவல்லது என்று நம்பப்பட்டது. இருண்ட காலத்தில் (Dark Ages) போர்வீரர்கள் முத்து நகைகளை அணிந்து கொண்டால் பாதுகாப்பு என்று கருதினர். புராணக்கதைகளின்படி உலக அழகி கிளியோபாத்ரா முத்தை நொறுக்கி மதுபானத்தில் கலந்து மார்க் அந்தோணிக்கு இரவு விருந்தாக அளித்ததுதான் உலக வரலாற்றிலேயே விலை உயர்ந்த இரவு உணவாகக் கருதப்படுகிறது.
வேதம், இதிகாசங்களில் முத்து
வேதத்தில் முத்து பற்றிய குறிப்புகள் உள்ளன. ரிக் வேதத்தில் (கி.மு. 1,700-1,100) க்ரிசனா (Krisana) என்ற சொல் பல ஸ்லோகங்களில் இடம்பெற்றுள்ளது. இவற்றின் பொருள் முத்தைக் குறிக்கின்றனவாம். அதர்வண வேதத்தில் (கி.மு. 1,200-1,000) முத்துப் பதித்த மோதிரம் பற்றிக் குறிப்பு இடம்பெற்றுள்ளது.
இராமாயணம், கிஷ்கிந்தா காண்டத்தில் (4-41-18), சீதையை தென்திசை நோக்கித் தேடிச்சேல்லும் வானரப்படைப்பிரிவிடம் சுக்ரீவன் கூறியது:
ततो हेममयम् दिव्यम् मुक्ता मणि विभूषितम् || ४-४१-१८
युक्तम् कवाटम् पाण्ड्यानाम् गता द्रक्ष्यथ वानराः |
கவாடம் பாண்ட்யானாம் என்ற சொற்றொடர் பாண்டியனின் கோட்டைக் கதவு என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கவாடம் என்பதைக் கோட்டை மதில் எனக் கொள்ளாமல் கவாடபுரம் என்ற இடைச்சங்கத்துப் பாண்டியர் தலைநகராகவும் கொள்ளலாம். அல்லது பாண்டியரின் கொற்கை போன்ற கடற்கரைப் பட்டினமாகவும் கொள்ளலாம். பாண்டியரின் இரண்டாம் தலைநகரமாக இது இருந்திருக்கக்கூடும்.
கௌடில்யர் தாம் எழுதிய அர்த்தசாஸ்திரம் என்னும் நூலில் தாமிரபரணி, பாண்டிய கவாடம் ஆகிய இடங்களில் கிடைத்த முத்துக்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
சங்க இலக்கியத்தில் முத்து
சங்க இலக்கியத்தில் முத்துக்கள் பற்றி பல செய்திகள் இடம் பெற்றுள்ளன. சங்க காலத்தில் முத்துச்சலாபம் (முத்துக்குளித்தல்) பாண்டிய நாட்டில் மிகுதியாக நடந்தது. பாண்டிய நாட்டில் விளைந்த முத்துக்கள் உலகப் புகழ்பெற்று விளங்கின.
வேழம் உடைத்து மலைநாடு; மேதக்க
சோழ வளநாடு சோறுடைத்து – பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்து; தெண்ணிர் வயற்றொண்டை
நன்னாடு சான்றோர் உடைத்து.
(அவ்வையார் – தனிப்பாடல் )
என்ற தனிப்பாடலில் அவ்வையார் பாடியது போல பாண்டியனின் தென்னாடு முத்திற்குப் புகழ் பெற்றிருந்தது.
கொற்கை
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமே கொற்கை (பின் கோடு 628801) ஆகும். அமைவிடம் 8°38′0″N அட்சரேகை 78°4′0″E தீர்க்கரேகை ஆகும். ஆத்தூரிலிருந்து ஏரல் செல்லும் வழியில் அமைந்துள்ள இவ்வூர் இன்றைய வங்கக் கடற்கரையிலிருந்து 6 கி.மீ. தொலைவிலும், தாமிரபரணி ஆற்றங்கரையிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து 4 கி.மீ. தொலைவிலும், தூத்துக்குடியிலிருந்து 24 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள இவ்வூரின் மக்கள்தொகை 3986 (ஆண்கள் 1969 பெண்கள் 2017 மொத்த வீடுகள் 1074) ஆகும்.
கொற்கையின் தொன்மையைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதற்காகத் தொல்பொருள் ஆய்வுத்துறையினர் பல அகழ்வாய்வுகளை இப்பகுதியில் மேற்கொண்டனர். கொற்கை அகழ்வாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்பொருட்கள் கொற்கையில் அகழ்வாய்வுக் காப்பகம் ஒன்றில் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது. இந்த அகழவாய்வுக் காப்பகம் தற்போது திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டு அங்கு செயல்படுகிறது.
இந்தக் கொற்கையே கி.பி. 130 ஆம் ஆண்டுவரை பாண்டியர்களின் முதன்மை தலைநகரமாகத் திழ்ந்துள்ளது என்று தாலமியின் பயணக் குறிப்புகள் மூலம் தெரியவருகிறது. பெரிபுளூஸ், பிளினி போன்ற மேலைநாட்டு பயணிகளும் கொற்கைத் துறைமுகத்தையும் இங்கு விரிவாக நடைபெற்ற முத்து வணிகம் பற்றியும் வியந்து குறிப்பிட்டுள்ளனர். கி.பி. 130 ஆம் ஆண்டிற்குப் பின்பு இவ்வூர் பாண்டியர்களின் துறைமுகப் பட்டணமாகவும் இரண்டாம் தலைநகராகவும் திகழ்ந்துள்ளது. விறற்போர்ப் பாண்டியன், மறப்போர்ப் பாண்டியர், வெற்றிவேல் செழியன் ஆகிய பாண்டிய மன்னர்கள் கொற்கையை ஆண்டுவந்த செய்தியினைச் சங்க இலக்கியங்கள் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த காலத்தில் கொற்கை மக்களின் எதிர்பார்ப்புகளை எல்லாம் செவ்வனே நிறைவேற்றினான் என்பதும் சங்க இலக்கியச் செய்திதான். இவ்வூர் சங்க இலக்கியம் மற்றும் வரலாற்றில் ‘மதுரோதய நல்லூர், பாண்டிய கபாடம், கொல்கை (Colchi), கொல்கை குடா’ என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மறப் போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும்
கொற்கை அம் பெருந்துறை முத்தின் அன்ன
(அகநானூறு 27: 8 – 9, மதுரைக் கணக்காயனார்)
பல போர்களில் வீரத்துடன் போரிட்டுக் காத்து வந்த பாண்டியர்களின் கொற்கையின் பெரிய துறையின் முத்தைப் போலப் புன்னகை பூக்கும் ஒளிபொருந்திய பற்களும் பவளம் போன்று சிவந்த வாயும் கொண்ட தலைவி.
கொற்கை முத்துக்கள் சிறந்தனவாக மதிக்கப்பட்டன என்பதை நற்றிணையும் ஐந்குறுநூறும் சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றன.
… … … … …. … … ஈண்டு நீர்
முத்துப்படு பரப்பின் கொற்கை முன் துறை
(நற்றிணை 23: 5 – 6, கணக்காயனார்
கொற்கைத் துறையின் கடல் நீரில் முத்துக்கள் விளையும்
அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன் துறை
இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர் வாய்
(ஐங்குறுநூறு 185; 1 – 2, அம்மூவனார்)
அல்லிப் பூக்கள் தள்ளாடி அசையும் கொற்கைத் துறையின் நுழைவாயிலில் சிதறிக் கிடக்கும் முத்தைப்போல ஒளிரும் பற்களையும் சிவந்த வாயினையும் உடைய இளம்பெண்.
புகழ் மலி சிறப்பின் கொற்கை முன் துறை
அவிர் கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து
(அகநானூறு 201; 4 – 5, மாமூலனார்)
ஒளிர்விடும் பொன்னால் செய்த நெற்றிப்பட்டம் அணிந்த வெற்றிக் களிறுகளை உடைய பாண்டிய மன்னனின் கொற்கைத் துறையில் ஒளிர்விடும் முத்துக்களும் வலம்புரிச் சங்கும் சிதறிக் கிடக்கிறது.
இவர் திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்
கவர் நடைப் புரவிக் கால் வடுத் தபுக்கும் 10
நற்தேர் வழுதி கொற்கை முன் துறை
(அகநானூறு 130; 9 – 11, வெண்கண்ணனார்)
கொற்கைத் துறையில் கடல் அலை கரையில் முத்துக்களைக் குவிக்கின்றன. கடற்கரையில் சிதறிக் கிடக்கும் இந்த முத்துக்கள் செல்வந்தர் ஏறிவரும் குதிரையின் காலடிக் குளம்புக்குள் மாட்டி அவற்றிற்கு இடையூறாக அமைகிறது. இந்த அளவிற்கு முத்துக்கள் கொட்டிக்கிடக்கின்றனவாம்.
சீர் உடைய விழு சிறப்பின்
விளைந்து முதிர்ந்த விழு முத்தின்
இலங்கு வளை இரும் சேரி
கள் கொண்டி குடி பாக்கத்து
நல் கொற்கையோர் நசை பொருந
(மதுரைக்காஞ்சி 134 – 138)
மதுரைக் காஞ்சி வரிகளில் கொற்கைத் துறைமுகத்தின் சிறப்பு வியந்து போற்றப்படுகிறது.
’கொற்கையம் பெருந்துறை முத்தொடு பூண்டு’ (சிலப்பதிகாரம். 14. 180)
கொற்கையின் பெருந்துறை முத்துக்களை பெற்றுள்ளது என்று சிலப்பதிகாரம் விவரிக்கிறது.
மேலே குறிப்பிட்ட சங்க இலக்கியப் பாடல்களில் “கொற்கை முன்துறை” என்று கொற்கை குறிக்கப்படுகிறது. “கொற்கைப் பெருந்துறை” என்றும் ஒரு குறிப்பு காணப்படுகிறது. இதற்கான விளக்கத்தை விக்கிபீடியாவில் முன்துறைமுகம் என்ற தலைப்பில் காணலாம் இந்த விளக்கத்தின் அடிப்படையில் கொற்கை தாமிரபரணி நதியின் கழிமுகப் பகுதியில் இருந்த துறைமுகப்பட்டணம் ஆகும்.
பாண்டியர்களின் பெரும் துறைமுக நகரமாகத் திகழ்ந்த கொற்கையில் அயல் நாட்டு வணிகர்களான அரபியர், யவனர், சீனர் முதலானோர் வந்து தங்கி வணிகம் புரிந்துள்ளனர். இவர்கள் மூலம் முத்து வணிகம் மேலோங்கியது. முத்தும் பல்வகை ஆடைகளும் மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
முழங்கு கடல் தந்த விளங்கு கதிர் முத்தம்
மரம் போழ்ந்து அறுத்த கண்ணேர்? இலங்கு வளை
பரதர் தந்த பல் வேறு கூலம்
இரும் கழி செறுவில் தீம் புளி வெள் உப்பு
பரந்து ஓங்கு வரைப்பின் வன் கை திமிலர்
கொழு மீன் குறைஇய துடி கண் துணியல்
விழுமிய நாவாய் பெரு நீர் ஓச்சுநர்
நன தலை தேஎத்து நல் கலம் உய்ம்மார்
புணர்ந்துடன் கொணர்ந்த புரவியொடு அனைத்தும்
வைகல் தொறும் வழி வழி சிறப்ப
(மதுரைக்காஞ்சி 316 – 325)
கடல் வணிகர்கள் கடலில் உண்டான முத்துக்களையும், சங்குகளை அறுத்துச் செய்த வளையல்களையும், நவதானியங்கள், மீன்களை உப்பிட்டு உலரவைத்த கருவாடு ஆகியவற்றை நாவாய்களில் ஏற்றிச் சென்று அயல்நாடுகளில் விற்ற செய்தியினை மதுரைக் காஞ்சி விவரிக்கிறது.
கொற்கைத் துறைமுகத்தின் வழியாக 16,000 அரேபியக் குதிரைகள் பாய்மரக் கலங்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்டுப் பாண்டிய நாட்டுக் குதிரைப் படையுடன் இணைத்த செய்தியை வாசப் என்ற வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். “நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும்” என்ற சங்க இலக்கியத் தொடர் மூலம் குதிரை இறக்குமதியான செய்தி பற்றி அறிந்துகொள்ளலாம்.
கிளாடியஸ், நீரோ (கி.பி. 54-68) போன்ற ரோமானிய மன்னர்களின் ஆட்சியின்போது அரச தூதர்களைப் பரிமாறிக் கொண்டு பாண்டிய நாட்டுடன் வணிகம் மேற்கொண்டுள்ளனர். அகஸ்டஸ் என்னும் ரோமானிய மன்னனின் ஆட்சியில் பாண்டிய வேந்தர்கள் ரோமானியர்களின் அரசவைக்கு கொற்கை முத்துக்களைப் பரிசாக அனுப்பிய செய்தியை வரலாற்று அறிஞர் ஸ்டிராபோ குறிப்பிடுகிறார். ரோமப் பேரரசி கிளியோபட்ரா முத்துக்கள் மீது மிகுந்த ஆசை கொண்டிருந்தார். ரோமநாட்டின் பெண்கள் தமிழகத்து முத்துக்களையும் மணிகளையும் வாங்கி ரோமானியக் கருவூலத்தைக் காலிசெய்ய அனுமதிக்கக் கூடாது என்று ரோமானிய செனட்டில் தாலமி பேசியதாக ஒரு செய்தி உண்டு. கொற்கை முத்தைப் பெரிதும் விரும்பி வாங்கியதால் ரோமானியப் பொருளாதாரமே நலிவுற்றதாக மற்றொரு ரோம நாட்டு மன்னன் இந்த செனட்டில் தெரிவித்துள்ளான்.
முசிறி
சேரநாட்டின் துறைமுகமான முசிறி சுள்ளி என்னும் பேரியாறு (தற்போது பெரியார்) கடலோடு கலக்கும் இடத்தில் வடகரைமேல் கடற்கரைப் பக்கத்தில் அமைந்திருந்தது. கிரேக்க யவனர் இந்தத் துறைமுகப் பட்டினத்தை முசிறிஸ் என்றும், வடமொழியாளர்கள் மரீசிபட்டணம் என்றும் கூறினார்கள். தற்போது பரவூருக்கு அருகில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பட்டணம் (Malayalam: പട്ടണം) (அமைவிடம் 10.15654°N அட்சரேகை 76.208982°E தீர்க்கரேகை) என்னும் கிராமமே அன்றைய முசிறி துறைமுகப் பட்டணம் என்பதை 2007, 2008 மற்றும் 2015 ஆண்டுகளில் முசிறி மரபுத் திட்டத்தின் (Muziris Heritage Project) கீழ் இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் உறுதி செய்துள்ளன.
பந்தர்
சேரநாட்டுத் துறைமுகப் பட்டணமாகிய முசிறியில் முத்துக்கள் கிடைத்தன. இந்த முத்துக்கள் பந்தர் என்னும் ஊரில் விற்கப்பட்டன. பெரிபுளூஸ் பந்தர் துறைமுகத்தை Balita என்று குறிப்பிட்டுள்ளார். ‘பந்தர்” என்ற அரபுச் சொல்லுக்குத் துறைமுகம் என்று பொருள். அரபிக் கடலோரத் துறைமுகங்களான கொடுமணம், பந்தர் ஆகிய இரண்டும் பத்துப்பாட்டில் இணையாகவே குறிப்பிடப்படுகின்றன.
“கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு
பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்க்
கடனறி மரபில் கைவல் பாண!
தெண்கடல் முத்தமொடு நன்கலம் பெறுகுவை”
பதிற்றுப்பத்து 7-ஆம் பத்து 7-ஆம் செய்யுள்
“கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்
பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்”
பதிற்றுப்பத்து 8-ஆம் பத்து 4-ஆம் செய்யுள்
சங்க இலக்கியத்தில் முத்துக் குளித்தல்
சங்ககாலத்தில் முத்துக்குளித்தல் தொழில் புகழ்பெற்றிருந்தது. சங்க இலக்கியங்களில் கூறப்படும் செய்திகளிலிருந்து பரதவர் முத்துக்குளித்தல், மீன் பிடித்தல், கடலில் பெருமீன் வேட்டையாடுதல் போன்ற தீரமிக்கச் செயல்களாலும், கடல் கடந்த வணிகங்களிலும் சிறந்தோங்கினார் என்பது தெளிவாகிறது.
‘முழங்கு கடல் தந்த விளங்குகதிர் முத்தம்
அரம் போழ்ந் தறுத்த கண்ணேர் இலங்குவளை
பரதர் தந்த பல்வேறு கூலம்
இருங்கழிச் செறுவிற் றீம்புளி வெள்ளுப்புப்
பரந்தோங்கு வரைப்பின் வன்கைத் திமிலர்
கொழுமீன் குறை இய துடிக்கட் டுணியல்
விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்
நனந்தலைத் தேஎத்து நன்கலன் உய்ம்மார்
புணர்ந்துடன் கொணர்ந்த புரவியோடனைத்தும்
வைகல் தோறும் வழிவழிச் சிறப்ப’
(மதுரைக் காஞ்சி 315-324)
மதுரைக் காஞ்சி நெய்தல் நில இயல்பை விவரித்துக் கூறுகிறது. முழங்குகின்ற கடல் தந்த முத்து, அரம் கொண்டு அறுக்கப்பட்ட சங்கு வளையல், பரதவர் தரும் பொருட்கள், தீம்புளி, வெண்மையான உப்பு, கானல், நாவாய் ஆகிய பொருட்களும் கடல் வணிகம், முத்துக்குளித்தல் சங்கு அறுத்து வளையல் செய்தல், மீன் பிடித்தல், மீன்விற்றல், உப்புக் காய்ச்சுதல், மேலைநாட்டின் குதிரைகள் துறைமுகங்களில் இறக்குமதி செய்து விற்றல் உள்நாட்டு அணிகலன்களைப் பிற நாடுகளுக்குக் கொண்டுசென்று விற்றல், முத்து, சங்கு மற்றும் கூலம் ஏற்றிய மறக்கலங்களைச் செலுத்துதல் ஆகிய தொழில்கள் நெய்தல் நிலத்தே நடந்தன.
கடலுள் முத்து விளையும் இடங்கள் சலாபம் எனப்பட்டன. முத்துக்குளிப்பு (Pearl Fishery) முத்துச் சலாபம் என்றும் அழைக்கப்பட்டது. சலாபம் என்றாலே முத்துக்குளித்தல் என்று பொருள். சிலர் சிலாபம் என்றும் கூறுவார். இதுபோலப் பவளக்குளிப்பு (Coral Fishery) பவளச் சலாபம் என்றும் அழைக்கப்பட்டது.
முத்துக் குளிப்போர் கடலுக்குள் படகில் சென்று முத்துக்குளிப்பர். படகின் உரிமையாளருக்கு ‘சம்மாட்டி’ என்று பெயர். இவர்கள் குழுவாகவே செயல்படுவர். முக்குளித்து முத்துச் சிப்பி, சங்குகளை எடுப்பவர்கள் ‘குளியாளிகள்’ என்று அழைக்கப்பட்டனர். முறையான நீர் மூழ்குதல் (Diving) பயிற்சி பெற்ற பரதவக் குளியலாளிகள் தங்கள் இடுப்பில் வலையைக் கட்டிகொண்டு, கடலுக்குள் மூழ்குவர். வலையை விரித்து, அங்குள்ள முத்து சிப்பிகளைச் சேகரித்து, மேலே வந்து படகுகளில் அவற்றைக் கொட்டி, சிறிது நேரம் ஓய்வெடுப்பர். பின், மீண்டும் நீரில் மூழ்கி, சிப்பி எடுப்பர். இவ்வாறு, காலை முதல் மாலை வரை, முத்துக்குளிப்பு நடைபெறும். மாலையில், படகுகளில் தாம் குவித்துள்ள சிப்பிகளையும், கிளிஞ்சல்களையும் கடற்கரைக்குக் கொண்டு வந்து, மணலில் பரப்பி, ஓடுகளை உடைத்து, உள்ளிருக்கும் முத்துகளை எடுப்பர்.
ஆழமான கடற்பகுதிகளில் அதிகமாக வாழும் முத்துச் சிப்பி மற்றும் நன்னீர் மட்டிகள் (freshwater pearl mussel) ஆகிய மெல்லுடலிகள் (Mussel) வாழும் படுகைகளைக் கண்டறிந்து, அவற்றைச் சேகரித்து வருவதற்குப் பயிற்சியும் தனித் திறன்களும் வேண்டும்.
முத்துக் குளிக்கும் பரதவர்கள் சுறா மீன்களால் அடிக்கடி தாக்கப்பட்டிருக்க வேண்டும். சுறா மீன்களால் ஏற்படும் இந்த இடரைத் தடுத்து சுறாமீன்களிடமிருந்து காப்பற்றுவதற்கு “சுறா வசியம்” என்னும் மந்திரம் ஓதியுள்ளார்கள்.
இலங்கிரும் பரப்பின் எறிசுறா நீக்கி
வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர்
ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லெனக்
கலிகெழு கொற்கை
(அகநானூறு – 350)
முத்துச்சிப்பிக்களையும் சங்குகளையும் முத்துக்குளித்த பரதவர்கள் கடலிலிருந்து அள்ளிக்கொண்டு வந்து விற்றனர் .
பன்மீன் கொள்பவர் முகந்த இப்பி
நாரரி நறவின் மகிழ்தொடைக் கூட்டும்
பேரிசைக் கொற்கை
(அகநானூறு – 296)
இலங்கை – தமிழகத்துக்கு இடையே உள்ள கடல், அதிக ஆழமில்லாதவை ஆகும். பரதவர்கள் முத்துக்குளிக்கும் திறமையையும் உரிமையையும் பெற்றிருந்தனர். பாண்டியர்கள் இவர்களை ஆதரித்தனர். பாண்டியர்கள் வலிமை பெற்றிருந்த காலங்களில் பரதவர்களுக்குப் பொது வரிவிதிப்பிலிருந்து விலக்களித்தது மட்டுமின்றிப் பாதுகாப்பும் அளித்துக் காத்தனர். பரதவர்கள் யாருக்கும் கட்டுப்படாத தனிச் சலுகைகள் பெற்றுத் தொழில் செய்தனர். முத்துக் குளிக்கும் பரதவர்கள் குளியாளிகள் என்று அறியப்பட்டனர். இவர்கள் தொழில்முறையில் முத்துக் குளிப்பவர்கள் ஆவர். முத்துக்குளியளிலும் சங்குக் குளியளிலும் இவர்கள் ஈடுபடுவர்.
உலகப் புகழ்பெற்ற இத்தாலிய நாட்டுப் பயணியான மார்கோ போலோ எழுதிய Travels of Marco Polo என்ற நூலில் தமிழகத்தின் தூத்துக்குடியில் கடலில் இறங்கி முத்தெடுக்கும் நிகழ்வான ‘முத்துக் குளித்தல்’ குறித்துப் பதிவுசெய்திருக்கிறார்.
முத்துக் குளிப்போருக்கு, முத்தெடுக்கும் போது, கடல் வாழ் உயிரினங்களால், தீங்கு ஏற்படாமல் தடுக்க, கரையில் அமர்ந்து, மந்திரம் ஜெபிப்பர் அந்தணர்கள். சுறா மற்றும் திமிங்கலம் போன்ற கடல் வாழ் உயிரினங்களின் வாயை தனது மந்திர சக்தியால் கட்டி வைத்துவிடுவர். மாலையில் முத்தெடுப்பு முடிந்ததும், மாற்று மந்திரங்களைச் சொல்லி, மந்திரக் கட்டை அவிழ்த்து விடுவர்.
அரசனின் அனுமதி பெற்ற பின்பே, கடலில் முத்தெடுக்க வேண்டும். திரட்டப்படும் முத்துகளில் பத்தில் ஒரு பங்கு, மன்னனுக்கும், இருபதில் ஒரு பங்கு, மந்திரம் ஓதும் பிராமணருக்கும் கொடுத்து விட வேண்டும். இது தவிர, மிகச் சிறந்த, மதிப்பு வாய்ந்த முத்துக்கள் கிடைத்தால், அதை, வணிகர்களிடம், விலை கொடுத்து, மன்னன் வாங்கிக் கொள்வதுண்டு.
கொற்கைத் துறைமுகம் கடற்கோளால் தூர்ந்துபோன பின்பு காயல் என்னும் ஊர் சிறந்த துறைமுகப் பட்டணமாக உருவெடுத்தது. காயல் என்பது இவ்வூரின் பழைய பெயர் ஆகும். இன்று இவ்வூர் பழையகாயல், புன்னைக்காயல், காயல்பட்டினம் ஆகிய மூன்று பகுதிகளாக உள்ளது. இந்த ஊரைப்பற்றிய சங்க இலக்கியக் குறிப்புகள் எதுவுமில்லை. காரணம் சங்ககாலத்தில் கொற்கை மட்டுமே மிகுந்த புகழ்பெற்ற துறைமுகம் ஆகும். காயல்பட்டிணம் கொற்கைக்குத் தெற்கிலும் கயல்பட்டிணத்திற்குத் தெற்கில் வீரபாண்டிய பட்டணமும் அமைந்துள்ளது. இந்தத் துறைமுகத்திற்கு அரேபியா மற்றும் சீனத்திலிருந்து கப்பல்கள் வந்து சென்ற செய்தியை கால்டுவெல் என்ற மேல்நாட்டு அறிஞர் தனது நூலில் பதிவு செய்திருக்கிறார். இதே நூலில் காயல் துறைமுகத்தில் பரதவர் முத்துக்குளித்த செய்தியும் விரிவாக இடம்பெற்றுள்ளது.
வெளிநாட்டுப் பயணியரின் பயணக் குறிப்புகள் :
எரித்திரியக் கடலின் பெரிப்ளூஸ் (Periplus of the Erythraean Sea) என்ற கையெழுத்து ஆவணம் (manuscript document) பண்டைய ரோமின் கடல் சார்ந்த வர்த்தகம் (Maritime Trade) (அதாவது, செங்கடல், ஏடன் வளைகுடா மற்றும் மேற்கு இந்தியப் பெருங்கடல்) குறித்த மிகவும் இன்றியமையாத ஒற்றைத் தகவல் மூலமாகும் (single most important source of information). இந்த ஆவணம் கிழக்கு ஆப்பிரிக்கா (eastern Africa), தென் அரேபியா (southern Arabia) மற்றும் இந்தியாவின் மேற்குக் கடற்கரையோரங்களில் பல்வேறு துறைமுகங்களில் வாங்குவதற்கும் விற்பதற்குமான ரோம எகிப்தின் (Roman Egypt) செங்கடல் துறைமுகத்திலிருந்து வந்தவர்களுக்கான ஒரு சிறிய கையேடு எனலாம்.
மன்னார் வளைகுடா வழியாகக் கிழக்குக் கடற்கரைக்குச் செல்லும் பாதையில், இந்திய – இலங்கைக் கடற்கரைப் பகுதிகளில் இருந்த எபிடோரஸ் (Epidorus) (இலங்கையை ஒட்டி அமைந்திருந்த மன்னார் வளைகுடாவில்?) முத்துக் குளித்தல் நடைபெற்றது பற்றிப் பெரிபுளூஸ் விரிவாக விவரித்துள்ளார். பெரிபுளூஸ் எழுதிய கடல் வழிகளில் பெர்சியன் வளைகுடா பற்றி விரிவாகக் குறிப்பிடவில்லை. என்றாலும் இந்த வளைகுடாவின் முத்துக்குளித்தல் பற்றி மேலோட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். “கொற்கையில் (Colechi) முத்துக்குளித்தல் நடைபற்றது. கொற்கை பாண்டிய அரசிற்குச் சொந்தமானது. இவர்கள் முதுக்குளித்தலை தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளைக் (Condemned Criminals) கொண்டு நடத்தினார்கள்” என்று பெரிபுளூஸ் பதிவு செய்துள்ளார். இவர் மொத்த மன்னார் வளைகுடாவையும் கொல்கை வளைகுடா (Colchic Gulf) என்று பதிவு செய்துள்ளார்.
புவியியலாளரும், வானியலாளரும், சோதிடருமான தாலமி (Ptolemy) என்னும் குளோடியஸ் தொலெமாயெஸ் (Claudius Ptolemaeus) “Geographia” என்னும் தன் நூலில் பெர்சிய வளைகுடாவின் (Persian Gulf) டைலோஸ் தீவில் (பஹ்ரைன்) (Island of Tylos (Bahrain) நினைவிற்கு எட்டாத காலந்தொட்டு (from time immemorial) விறுவிறுப்பாக நடைபெற்ற முத்துக் குளித்தல் (Pearl Fishery) பற்றி விவரித்துள்ளார். தாலமி கொற்கையை Kolkhoi என்று அழைத்துள்ளார். இந்தப் பட்டணத்தைப் பேரங்காடி (Emporium) என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கி.பி. 1838 ஆம் ஆண்டு கொற்கை கால்டுவெல்லால் மீண்டும் அடையாளம் காணப்பட்டது. இவர் தாமிரபரபரணிக் கழிமுகத்தில் அமைந்திருந்த இப்பகுதியை அகழ்வாய்வு செய்தார். ஏரல் என்னும் ஊரின் அருகே அழிவின் விளிம்பில் அமைந்திருந்த இந்தத் தளமே (Site) கொற்கை என்று கண்டறிந்தார். இராமாயணம் குறிப்பிடும் பாண்டிய கவாடமும் கலித்தொகை குறிப்பிடும் கபாடபுரமும் இதுவென்று கூறுவார் சிலர்.
கொற்கையில் முனைவர்.நாகசாமி மேற்கொண்ட அகழ்வாய்வில் பல தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. கொற்கை கிராமத்தில் அக்கசாலை விநாயகர் கோவில் என்று பொதுமக்களால் அழைக்கப்படும் ஒரு இடத்தில் அக்கசாலை என்னும் நாணயம் தயாரிக்கும் தொழிற்கூடம் செயல்பட்டதாக நம்புகிறார்கள். இதற்குச் சான்றாக அக்கசாலை ஈஸ்வரமுடையார் என்று கல்வெட்டுகள் குறிப்பிடுவதால் இக்கோவில் சிவன் கோவிலாக இருந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. இன்று விநாயகர் இக்கோவிலின் மூலவராகத் திகழ்கிறார். இக்கோவிலின் அடிக்கட்டுமானம் கருங்கல்லாலும் மேற்கட்டுமானம் மற்றும் நாகர விமானம் சுதையாலும் ஆனது. இங்கு கண்டறியப்பட்டுள்ள முதலாம் குலோத்துங்கன் கல்வெட்டில் இவ்வூர் கொற்கை என்றும் மதுராந்தக நல்லூர் என்றும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஸ்ரீவல்லபன், வீரபாண்டியன் ஆகிய பாண்டியர் கல்வெட்டுகளும் இங்கு கண்டறியப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகளில் இவ்வூர் குடநாட்டுக் கொற்கை, கொற்கையாகிய மதுரோதைய நல்லூர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுகள் மூலம் இத்தளத்தை பாண்டியர்களின் துறைமுகமாகிய கொற்கை என்று உறுதி செய்யலாம்.
இவ்வூரில் உள்ள குளத்தினுள் உள்ள கருங்கற்கோவிலில் வெற்றிவேல்நங்கை (துர்கையின் வடிவில்) அம்மன் அருள்பாலிக்கிறாள். வெற்றிவேல் செழியன் கண்ணகிக்காகக் கட்டிய கோவில் என்று கருதப்படுவதால் இதற்குக் கண்ணகி கோவில் என்ற பெயருமுண்டு. செழியன் இங்கு ஆயிரம் பொற்கொல்லர்களைக். கழுவேற்றிக் கொன்றான் என்றும் நம்பிக்கை நிலவுகிறது. இங்கு சாய்ந்த நிலையில் நிற்கும் வன்னி மரம் 2000 ஆண்டுகள் பழமையனது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கருதுகிறது.
குறிப்புநூற்பட்டியல்:
- அரகோனைட்டு, விக்கிபீடியா
- கிரேக்கத்தில் மின்னிய மதுரை முத்து நித்தியா பாண்டியன் 30 Aug 2017 https://roar.media/tamil/main/history/pearl-trade-madurai/
- கொற்கை, விக்கிபீடியா
- கொற்கை தமிழனின் அடையாளம் https://thavasimuthumaran.blogspot.com/2017/02/blog-post_20.html
- தாமிரபரணி: நதிக்குள் புதையுண்ட ரகசியங்கள் அழிவின் சாட்சியாய் நிலைத்த ‘கொற்கை’ இந்து தமிழ் திசை 22 Aug 2015
- பழம் பாண்டியர்களின் தலைநகராக விளங்கிய கொற்கை https://kallarperavai.weebly.com/296530182993302129653016.html
- பாண்டியர்களின் தலைநகராக விளங்கிய கொற்கை, http://thirumuruganpalani.blogspot.com/2016/09/blog-post.html
- மல்லல் மூதூர் மதுரை – 3. ப. பாண்டியராஜா புராண இதிகாசங்களில் மதுரை
- முத்து பிறக்கும் இடங்கள் இருபது (Post No.3524) Tamil and Vedas 8 January 2017
- History of the Discovery and Appreciation of Pearls – the Organic Gem Perfected by Nature – Page 1
https://www.internetstones.com/history-discovery-appreciation-of-pearls-organic-gem-perfected-by-nature-1.html - PEARL, a composite of Aragonite and Conchiolin http://www.galleries.com/minerals/gemstone/pearl/pearl.htm
- The history of pearls: one of nature’s greatest miracles http://www.thejewelleryeditor.com/jewellery/article/history-of-pearls-pearl-jewellery-rings-earrings-necklaces/
- முத்துசாமி.இரா
Thanks: www.agharam.wordpress.com
இலக்கியத்தில் கொற்கை முத்து
Dev Anandh Fernando
07:48

2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்
கிரேக்கம், அரேபியா என உலக நாடுகளுடன் வணிகத் தொடர்பில் சிறந்த விளங்கிய கடற்கரை நகரம். முத்துகுளியலுக்கு பெயர் போன நகரம். சங்க இலக்கியங்களிலும், வெளிநாட்டுப் பயணிகள் எழுதிய குறிப்புகளிலும் சிறந்த இடத்தைப் பெற்ற நகரம். பாண்டியர்களின் தலைநகரமாகவும் வருவாய் ஈட்டித் தருவதில் முக்கிய துறைமுகமாகவும் விளக்கிய நகரம். இப்படி பல சிறப்புகளை பெற்ற சங்ககால துறைமுக நகரம் தான் கொற்கை.
கொற்கையை பாண்டிய மன்னர்களான விறற்போர்ப் பாண்டியன், மறப்போர்ப் பாண்டியன், வெற்றிவேல் செழியன் ஆகிய மன்னர்கள் ஆண்டது பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது.
கொற்கையை ஆட்சி புரிந்த மன்னர்கள் பற்றி சங்க இலக்கியங்கள்:
விறற்போர்ப் பாண்டியன் பற்றி குறிப்பிடும் அகநானூறு பாடல்,
“வினைநவில் யானை விறற்போர்ப் பாண்டியன்
புகழ்மலி சிறப்பிற் கொற்கை முன்றுறை
அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து”
– (அகம். 201:3-5)
என்று குறிப்பிட்டுள்ளது.
“மறப்போர்ப் பாண்டியர் அறத்திற் காக்கும்
கொற்கையம் பெருந்துறை முத்தின் அன்ன”
– (அகம். 27:8-9)
என்று மறப்போர் பாண்டியனின் சிறப்பினைத் தெரிவிக்கிறது அகநானூறு.
மதுரையில் ஆண்ட பாண்டிய நெடுஞ்செழியன் பொற்கொல்லன் ஒருவரின் தவறான குற்றச்சாட்டை நம்பி வழங்கிய தீர்ப்பு கோவலனின் உயிரை பறித்தது. தவறான தீர்ப்பு வழங்கியதை எண்ணி நெடுஞ்செழியனும் அவரது மனைவியும் உயிரை விடுகின்றனர். இதில் ஆவேசம் கொண்ட கண்ணகி மதுரையை எரித்து சாம்பலாக்குகின்றாள்.
இச்சம்பவம் நிகழும்போது கொற்கையை ஆட்சி செய்து கொண்டிருந்த இளவரசன் வெற்றிவேற் செழியன், பொற்கொல்லர்கள் மீது கோபம் கொண்டு கொற்கையில் வசித்த ஆயிரம் பொற்கொல்லர்களைக் கொன்றான் என்கிறது சிலப்பதிகாரம்.
“அன்று தொட்டு பாண்டியனாடு மழை வறங்
கூர்ந்து வறுமையெய்தி வெப்பு நோயும் குருவும்
தொடரக் கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன்
நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக்
கொன்று களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய
நாடு மலிய மழைபெய்து நோயும் துன்பமும் நீங்கியது.”
இப்படி பாண்டிய மன்னர்கள் கொற்கையை ஆட்சி புரிந்த செய்திகளை சங்க இலக்கியங்கள் மூலமாக அறிந்துகொள்ள முடிகிறது.
சங்க இலக்கியங்களில் கொற்கையின் சிறப்புகள்:
கொற்கையின் சிறப்புகளும் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது.
”அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன் துறை
இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர் வாய்”
– (ஐங்குறுநூறு 185; 1 – 2, அம்மூவனார்)
என்று அல்லிப் பூக்கள் தள்ளாடி அசையும் கொற்கைத் துறைமுகத்தின் நுழைவாயிலில் சிதறிக் கிடக்கும் முத்தைப்போல, ஒளிரும் பற்களையும் சிவந்த வாயினையும் உடைய இளம்பெண் என்று ஐங்குறுநூறு, கொற்கையின் பெண்கள் வர்ணிக்கப்படுவதை குறிப்பிடுகிறது.
”புகழ் மலி சிறப்பின் கொற்கை முன் துறை
அவிர் கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து”
– (அகநானூறு 201; 4 – 5, மாமூலனார்)
மன்னனின் பெருமையை கூறும் விதமாக, பொன்னால் செய்த நெற்றிப்பட்டம் அணிந்து பல வெற்றிகளைப் பெற்றவன் பாண்டிய மன்னன். அவன் ஆளும் கொற்கைத் துறைமுகத்தில் ஒளிர்விடும் முத்துக்களும் வலம்புரிச் சங்கும் சிதறிக் கிடக்கிறது என்ற பெருமிதத்தை தெரிவிக்கிறது அகநானூறு.
”இவர் திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்
கவர் நடைப் புரவிக் கால் வடுத் தபுக்கும்
நற்தேர் வழுதி கொற்கை முன் துறை”
– (அகநானூறு 130; 9 – 11, வெண்கண்ணனார்)
கடல் அலைகள் கரையில் முத்துக்களைக் குவிக்கின்றன. இப்படி கொற்கை கடற்கரையில் சிதறிக் கிடக்கும் முத்துக்களால், செல்வந்தர் ஏறிவரும் குதிரையின் காலடிக் குளம்புக்குள் முத்துக்கள் மாட்டிக் கொள்கிறது. அந்த அளவிற்கு முத்துக்கள் கொட்டிக்கிடக்கின்றனவாம் கொற்கை துறைமுகத்தில்.
கொற்கை துறைமுகம் குறித்த அயல்நாட்டு பயணிகளின் குறிப்புகள்
சங்க இலக்கியக்கியங்கள் மட்டுமல்ல. வெளிநாட்டுப் பயணிகளும் பாண்டியர்களைப் பற்றியும், கொற்கை குறித்தும் பதிவு செய்துள்ளனர்.
எரித்திரியக் கடலின் பெரிப்ளூஸ் (Periplus of the Erythraean Sea) என்ற ஆவணம் பண்டைய ரோமானியர்ளின் கடல் சார்ந்த வர்த்தகத்தின் மிக முக்கிய ஆவணமாக விளங்கியது. இதில் பாண்டிய மன்னனைப் பற்றியும், கொற்கை பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளது.
அந்த ஆவணத்தின் 59-ம் அத்தியாயத்தில் பாண்டிய மன்னனின் ஆட்சி உட்பட்ட குமரியானது கொற்கை வரை நீண்டு உள்ளது என்றும், இங்கு முத்துக்குளிப்போர் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர் பெரிப்ளூஸ் கொற்கையை கொல்சி‘ (Colchi) என்றே குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்தியாவில் பாண்டியோன் என்ற ஓரு அரசனிடம் இருந்து அகஸ்தஸ் சீசரைக் காண்பதற்கு தூதுவன் ஒருவன் வந்தான் என்றும், பரிசுப் பொருட்களை வழங்கியதாகவும் வரலாற்று அறிஞர் ஸ்டிராபோ குறிப்பிடுகிறார். அந்த தூதுவன் வழங்கிய பரிசுப் பொருள் கொற்கையின் முத்துதான் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
முத்துகள் மீது தீவிர ஆசை கொண்ட ரோமப் பேரரசி கிளியோபட்ரா, கொற்கை முத்துகளை மிகவும் விரும்பி அணிந்தாள் என்ற செய்தியும் உண்டு. அந்த நாட்டு பெண்களும் முத்துகளையும் மணிகளையும் வாங்கி ரோமானியக் கருவூலத்தைக் காலிசெய்ய அனுமதிக்கக் கூடாது என்று ரோமானிய செனட்டில் தாலமி பேசியதாகவும், கொற்கை முத்தைப் பெரிதும் விரும்பி வாங்கியதால் ரோமானியப் பொருளாதாரமே நலிவுற்றதாக மற்றொரு ரோம நாட்டு மன்னன் திபேரிசு செனட்டில் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாண்டிய மன்னர்கள் வலிமையான குதிரைப்படையைக் கொண்டிருந்தனர். அரேபியாவில் இருந்து பாய் மரக் கப்பலில் வந்த குதிரைகள் கொற்கை துறைமுகத்தில் வந்து இறங்கியதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு, கொற்கை துறைமுகத்தின் வணிகச் சிறப்பையும், முத்து குறித்தும் தாலமி, பெரிப்ள்ஸ், பிளினி போன்ற அயல்நாட்டு அறிஞர்களின் பயணக் குறிப்பிலும், சங்க இலக்கியங்கள், கோயில் கல்வெட்டுக்கள், செப்பேடுகளிலும், பழங்கால நாணயங்களிலும் அறிய முடிகிறது.
கொற்கையின் அகழாய்வு:
மார்க்கபோலோ மற்றும் கிரேக்கர்களின் பயணக் குறிப்புகளிலிருந்து தான் கால்டுவெல் கொற்கையில் 1876-ம் ஆண்டில் அகழாய்வு செய்து 1877-ம் ஆண்டு ஆய்வறிக்கையை வெளியிடுகிறார். இதில் முக்கியமாக 11 அடி உயரமுள்ள தாழி மற்றும் மனித எலும்புகள் கிடைத்தாக கால்டுவெல் தெரிவிக்கிறார்.
இதன் பின்பு தமிழக தொல்லியல் துறை 1968-69 ஆம் ஆண்டுகளில் அகழாய்வு செய்தது. இந்த அகழாய்வில் 75 செ.மீ. ஆழத்தில் ஆறு வரிசையில் இருக்கும் ஒன்பது அடுக்குடன் கூடிய செங்கற் கட்டடப் பகுதியும், கட்டடப் பகுதிக்கு கீழே மூன்று பெரிய சுடுமண் வளையங்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் கட்டமைப்பும் கண்டுபிடிக்கப்பட்டது.
பானை ஓடுகளில் திரிசூலம், சூரியன், நட்சத்திரம், அம்பு பொறிப்புகளை காணமுடிகிறது. சங்கு வளையல்கள் ஆபரணங்களும் கிடைத்ததுள்ளது. சங்கு ஆபரணங்கள் செய்யும் தொழிற்சாலை, நாணயம் தயாரிப்பதற்கான அக்கசாலையும் கொற்கையில் இருந்துள்ளதை தொல்லியல் ஆய்வு உறுதி செய்கிறது.
தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடுகளும், அடுப்பு கரித் துண்டுகளும் கண்டெடுக்கப்பட்டன. இந்த கரித் துண்டுகள் மும்பை டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலத்தை அறியும் பொருட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதில் கரித்துண்டின் காலம் கி.மு.785 என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல் தமிழி எழுத்தின் காலம் கிமு 3-ம் நூற்றாண்டில் இருந்து கிபி 2-ம் நூற்றாண்டு என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள். சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரமாக கொற்கை இருந்திருப்பதை இதன் மூலமாக அறிய முடிகிறது.
இன்றைய கொற்கை:
பாண்டிர்களின் துறைமுக நகரமான கொற்கையில் இப்போது கடல் இல்லை. சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது கடல். கொற்கை இப்போது ஒரு சிற்றூர் மட்டுமே. இங்கு சாய்ந்த நிலையில் உள்ள வன்னிமரம் இரண்டாயிரம் ஆண்டுகளாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஊரில் எங்கு தோண்டினாலும் சங்குகளும், சிற்பிகளும், கிளிஞ்சலுகளும் இன்னும் கிடைத்து கொண்டுதான் இருக்கிறது. கொற்கையில் விரிவான தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ளப்படவில்லை. அவ்வாறு விரிவான அகழாய்வு செய்தால் புதைந்து கிடக்கும் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சங்க கால கொற்கை துறைமுகம் கிடைக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
– மகிழன்பு, வரலாற்று ஆய்வாளர்
Thanks: www.madrasreview.com
கொற்கை துறைமுகத்தின் முத்து வணிகம்
Dev Anandh Fernando
07:42

தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் நடைபெற்று வரும் அகழாய்வில் சுமார் 2800 ஆண்டுகள் பழமையான செங்கல் கட்டுமானம் மற்றும் சங்கு அறுக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழக தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய மூன்று இடங்களில் அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கொற்கையில் கடந்த 1968 மற்றும் 1969-ம் ஆண்டுகளில் ஏற்கெனவே தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுள்ளது.
அந்த அகழாய்வு பணி தான் தமிழக தொல்லியல் துறை உருவான பின்னர் செய்த முதல் அகழாய்வுப் பணியாகும். அந்த அகழாய்வின்போது 2800 பழமையானது கொற்கை நகரம் என்பது உறுதியானது. இங்கு துறைமுகம் இருந்தாகவும், இங்கிருந்து கடல்வழி ஏற்றுமதி, இறக்குமதி நடந்தாகவும், பாண்டிய மன்னரின் தலைநகராக இவ்விடம் விளங்கியது எனவும் அறிவிக்கப்பட்டது.
பண்டைய துறைமுக நகரமான கொற்கையில் 52 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தமிழக தொல்லியல் துறை சார்பாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. அகழாய்வு இயக்குநர் தங்கதுரை தலைமையில், அகழாய்வாளர்கள் ஆசைத்தம்பி, காளிஸ்வரன் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பணியாளர்களை இங்கு பணியாற்றி வருகின்றனர். இந்த அகழாய்வு பணிக்காக கொற்கை பகுதியில் 11 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கொற்கையில் நடைபெறும் அகழாய்வில் 2800 ஆண்டுகள் பழமையான செங்கல் கட்டுமானம் ஒன்று கிடைத்துள்ளது. இந்த செங்கல் கட்டுமானத்தில் உள்ள செங்கல்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் உள்ளன.
அதேபோல் 2800 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பகுதியில் சங்கறுக்கும் தொழில் நடந்துள்ளதை உறுதிப்படுத்தும் விதமான ஒரு குழியில் சங்குகள் முழுமையாகவும், அறுத்த நிலையிலும் காணப்படுகின்றன.
மேலும் அதே குழியில் சங்குகள் அறுத்த பின்னர் தீட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கற்கள் பல வடிவங்களில் கிடைத்துள்ளன. மேலும் இந்த அகழாய்வு குழிகளில் சங்குகள், சங்கு வளையல் துண்டுகள், இரும்பு உருக்கு துண்டுகள், கறுப்பு, சிவப்பு பானை ஓடுகள், கீறல்கள் மற்றும் குறீயிடுகள் என ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த அகழாய்வு பணியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கொற்கை துறைமுகம் மிகப்பெரிய வியாபார தலமாக இருந்துள்ளது. முன்பு நடந்த ஆய்வில் கிடைத்த பொருள்களை தென்காசி மாவட்டம் குற்றாலம் வைப்பறையில் காட்சிக்கு வைத்தனர். தற்போது இங்கு கிடைக்கும் பொருள்களை சேகரித்து, பழைய பொருள்களையும் கொண்டு வந்து இந்த பகுதியிலேயே அருங்காட்சியகம் அமைத்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெளிநாட்டு தமிழ் அறிஞர் கால்டுவெல் இந்த பகுதியில் அகழாய்வு செய்தபோது தெரு முழுவதும் சங்குகளும், வெளிநாட்டு நாணயங்களும் நடந்து செல்லும் இடங்களில் எல்லாம் கிடைத்தன என எழுதியுள்ளார். தற்போதும் அகழாய்வின் போது நிறைய சங்குகள் ஆங்காங்கே கிடைக்கின்றன. கொற்கையின் முழுமையான அகழாய்வு முடிவு வெளியாகும் போது, உலகமே தமிழனின் பெருமையை சிறப்பாக பேசும் காலம் வரும். எனவே, கொற்கை அகழாய்வை தொல்லியல் ஆர்வலர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இதுபோல் கொற்கை துறைமுகம் இருந்த இடத்தில் மாதிரி துறைமுகம் அமைத்து மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது இதற்கான ஏற்பாடுகளை செய்தார். அதன்பின் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. மீண்டும் கொற்கை பகுதியை சிறப்பாக காட்சிப்படுத்த வேண்டும் என்றார் அவர்.
கொற்கையில் சங்கு அறுக்கும் இடம்
Dev Anandh Fernando
07:10
