வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 24 July 2021

வடக்கே போதல்

'வடக்கே போதல்' - எதனால் இந்த சடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது ?

"மனமெனுந் தோணிபற்றி மதியெனுங் கோலையூன்றிச்
சினமெனுஞ் சரக்கையேற்றிச் செறுகட லோடும்போது"
(திருநாவுக்கரசர்-திருவொற்றியூர்ப் பதிகம்-455)

அந்நாளைய கடல் பயணம் ஆபத்து மிக்கது. எதிர்நோக்கும் பேராபத்துகளை எளிதில் கடக்க, இறைவன் துணை நாடுவது மனித குணம். அதுவே யாத்திரை சிறப்பாக அமைய வகைசெய்வோனாக, குறிப்பிட்டவொரு இறைவனொ இறைவியோ பாரம்பரியமாக அமைவது சமூகநம்பிக்கை.

கப்பல் சாத்திரம் (கிபி 1698), நாவாய் சாத்திரம் (கிபி 1741), தஞ்சை மோடி ஆவணம் (கிபி 1838), பெப்ரிசியஸ் அகராதி (கிபி 1897) போன்ற பழைய நூல்களில் 'நல்ல பயணம்' என்ற பொருளில் 'சிந்தா யாத்திரை' என்ற சொல் பயன்படுத்தப் பெற்றுள்ளது. பாலெம்பாங்கு, ஜகார்த்தா முதலிய அருங்காட்சியகங்களிலுள்ள கடற்துறைக் கற்கள், இந்தோனேசிய 5 கல்வெட்டுக்கள் முதலியவற்றில் காணப்படும் 'ஸ்ரீஜய-ஸித்-த-யாத்ரா' என்ற சம்ஸ்கிருத சொற்றொடர், அஃதொரு 'வெற்றிக்கான மந்திரச் சொல்'லாய்ப் பயன்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவைத் தருகின்றன.

"பரதவர் தந்த பல்வேறு கூல.." என பரதவர்களின் வாணிகத்தைக் சிறப்பிக்கும் மணிமேகலை, 'சிந்தாதேவி' என்ற தெய்வத்தையும் குறிப்பிடுகிறது. அந்நாளிலேயே 'சிந்தா' என்ற அடைமொழியுடன் கூடிய இத்தெய்வம் வணிகர்களான பரதவர் வழிபட்ட இறைவியாக இருந்திருக்கலாம். தரங்கம்பாடி தபால் அலுவலகத் தெருவிலுள்ள சைவ ஆலயத்திலுள்ள 'சிந்தாத்திரி விநாயகரை', தரங்கம்பாடி துறைமுகநகராக விளங்கிய அந்நாட்களில் கடல் பயணம் மேற்கொள்ளும் முன்னர் தொழுது செல்லும் வழக்கம் இருந்துள்ளது.

கடைப்பயணங்களில் 'Our lady of good voyage' என்ற பெயருடன் மரியன்னையின் திருவுருவத்தை கப்பல்களில் எடுத்துச்செல்வது போர்த்துக்கீசர்களின் பழக்கம். 'சிந்தாத்திரை மாதா நாடகம்' என்ற பெயரில் இலங்கை மன்னார் பகுதியில் கத்தோலிக்கரின் கூத்து நூல் ஒன்று இருந்துள்ளது. 

பரதவரிடையே கடற்பயணங்களுக்கு முன்னதாக 'சிந்தா யாத்திரை' என்ற முன்னொட்டோடு கூடிய தெய்வத்தை வணங்கிச் செல்வது மரபாகவும், அதுவே அவர்களின் மதமாற்றத்துக்குப் பின்னர் 'தாயகமாக்கலால்' மருவி, வலது கரத்தில் பாய்மரக் கப்பலுடன் காட்சிதரும் 'மேரிமாதா' வடிவு கொண்டதாக நிறைவுற்றிருக்க வேண்டும்.

தூத்துக்குடி நகரின் 'வடபகுதி'யில், வடபகுதி காவல் நிலையம் அருகில் கடலோரமாக காணப்படும் சிற்றாலயம் 'தூய சிந்தாயாத்திரை மாதா திருத்தலம்'. முத்து / சங்குகுளி கடலோடிகள் - தோணித்தொழிலாளர் - மீன்பிடித் தொழிலாளர் தம் பயணத்தின்முன்னர், தங்களின் படகுகளைச் சிந்தாத்திரை மாதா ஆலயத்திற்கு பின்கடலில் நிறுத்தி, அன்னையிடம் வேண்டுதல் மற்றும் பொருத்தனைகள் செய்வது வழிமரபு. (இலங்கையில் கப்பலேந்தி மாதா என அழைக்கப்படுவது வழக்கம்.) இன்றும் தூத்துக்குடியில் புதுமணத் தம்பதிகள், திருமணத்திற்கு மறுநாளோ அல்லது வாரக்கடைசியிலோ இவ்விறைவியை சேவித்து விட்டு அடுத்துள்ள கடற்கரை நீரில்தம் கால்களை கடலலைகளில் நனைப்பது 'வடக்கே போதல்' சம்பிரதாயச் சடங்கின் தொடர்ச்சியே.

இந்த இனவழிமரபை ஏனைய பெரும்பாலான பரதவ ஊர்களிலும் இன்றுவரை கடைப் பிடிக்கின்றனர். ஆனால் 'சிந்தாயாத்திரை மாதா சிற்றாலய'த்துக்குப் பதிலாக அவரவர் வட்டாரத்தின் வடதிசை தேவாலயத்துக்குச் சென்றுவருகின்றனர். எடுத்துக்காட்டாக வீரபாண்டியன்பட்டினத்து பரதர்கள் அவர்களுக்கு வடக்கேயுள்ள காயல்பட்டன சார்பு கொம்புத்துறையிலுள்ள 'சந்த எஸ்தேவு குருசடி' என்று வழங்கும் புனித.முடியப்பர் ஆலயத்துக்கு புத்தாண்டு, கல்யாணம், இழவு போன்ற சுகதுக்க நிகழ்வுகளை அடுத்து குடும்பத்தோடு சென்று வருவர்.


ஆக பாதுகாப்பான கடல் பயணத்துக்கென தோன்றிய ஒரு மரபு இன்றும் இந்த இனக்குழு மக்களிடையே சங்கிலித் தொடராகக் கடைபிடிக்கப் படுவது வியப்பளிக்கிறது.
- எல்சி மைந்தன்


புன்னக்காயலில் வடக்கேயுள்ள  அர்ச். தோமையார் ஆலயத்திற்கும், ஆலந்தலையில் புதுமணத் தம்பதியா் வடக்கேயுள்ள அமலிநகா் அமலி மாதா ஆலயத்திற்கும், ஜீவா நகர் புனித அன்னம்மாள் சிற்றாலயத்திற்கும், வேம்பாறில் வடக்கேயுள்ள புனித சவேரியார் தங்கிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சிற்றாலயத்திற்கு புதுமண தம்பதிகள் வடக்கே போதல் என்ற மரபினை நினைவுபடுத்த சென்று வருவது தற்போது வரை வழக்கத்தில் உள்ளது
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com