வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 18 December 2021

நெய்தலில் பூத்த மந்திர மாலை

இராசாதிராச, இராசகுல சிம்ம, வீரபாண்டிய கட்டபொம்மு மகாராசா வருகிறார். பராக்! பராக்!! பராக்!!! என்ற வீரகட்டியம் விண்ணில் முழங்க தாரதப்பட்டை முரசு அதிர கொம்புகள் ஊதப்பட்டது.

ரதகஜ தூரகபதாக்களுடன் படை சூழ, மகாராசா திருச்செந்தூர் வேலவனை பௌர்ணமியில் கண்டு தரிசிக்க திருயாத்திரை புறப்பட்டார் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையிலிருந்து.

கரிசல்காட்டு நரிகள் சலசலப்புக்கு ஒதுங்கின. கரிச்சான் பறவைகள் கூட்டைவிட்டு கிறீச்சீட்டு வானில் பறந்தன. இராமநாதபுரம் சமஸ்தான பெருநாழி ஊர் அருகில் உற்ற காடல்குடியின் கண்மாய் அருகில் படைகள் கூடாரமிட்டன. பதர்வெள்ளையின் வெண்புரவி தீவிரமாக மன்னவனின் கூடாரம் வந்து நின்றது.

இளையவர் ஊமைத்துரையிடம் செய்தி பரிமாறப்பட்டது. பேறுகால வேதனையில் ஊமைத்துரையின் மனைவி அல்லல்படுவதாக மன்னவனிடம் பகரப்பட்டது. கட்டபொம்மு மகராசா மருத்துவச்சிகளிடமும், தேர்ந்த செவிலியரிடமும் உசாவினார். குழந்தை குறுக்காக கிடப்பதால், தாய் சேய்க்கு ஆபத்து என்று பதறினார்.

பதினெட்டு பட்டியிலும் குழந்தைப்பேறு சிகாமணி நெய்தல் நிலத்து சிரோண்மணி மூக்கம்மா என்று அறிந்தனர். அம்மணியை அழைத்து வர வெள்ளையத்தேவன் தான் புரவியுடன் காயம்புதேவன் வழோகாட்ட, உச்சனம் ஊர்வழியாக நெய்தல் நிலத்து வேம்பார் துறை நோக்கி விரைந்தான்.

வேம்பார் துறையில், மாடி வீட்டு முன் நின்றான். வெண்புரவி தான் கால்களைத் தூக்கி வீரியமுடன் கனைத்தது. மாடத்திலிருந்து நெய்தல் நில கன்னிகை வெளிவந்தாள். பருத்தி நூலால் நெய்யப்பட்ட மிருதுவான ஆடை அணிந்திருந்தாள். அடங்கா கார் குழலை தும்பைப் பூ போன்ற சிறுவலை நூலில் நெய்யப்பட்ட குல்லாவில் அடக்கிக் கட்டியிருந்தாள். சொர்ணத்தாலான இருமீன்கள் காதுகளில் கழன்று பாம்பாடி ஜொலித்தது. ஆணி முத்துவாலான மூக்குத்தி சுடரிட, கழுத்தில் முத்துக்களால் சோபிக்கப்பட்ட சிலுவை மாலை, நெஞ்சில் துவண்டிட தோன்றினாள் மூக்கம்மா வென்ற செபமாலையம்மாள்.

அவள் வதனம் தங்க தகடாய் மிளிர்ந்த்து. அச்சம், மடம், நாணம், பயிர்ப்புடன் மற்றுமொறு அழகையும் நெய்தல் நிலத்து கிழத்தியிடம் கண்டான் வெள்ளையத்தேவன்.

அகன்ற கயல்விழிகளில், கூறிய வீர ஒளி கனன்று பாய்ந்து, கேள்வி குறியெழ நயனம் புரிந்த கோலம். அஞ்சா நெஞ்சன் பரதர் வெள்ளையே பரவசம் கொண்டார். தான் பதற்றம் செப்பினார்.

பெரும் சங்கு குவளையில் மோர் அமுது பருக பரிமாறினாள் நெய்தல் நிலத்துக்காரி. தன் வீட்டு வில்வண்டியில் தூரிதகால மைலக்காளைக்களை பூட்டப் பணித்தாள். வேம்பையன் தட்டிக் கொடுக்க, வில்வண்டி வேகமெடுத்தது. புரவிகளின் வேகம் புறமுதுகிட காளைகள் சீறிப் பாய்ந்தன.

உச்சனத்தை அடைந்ததும், பழகாத தூரம் கம்பம் புல் காடு செறிந்திருந்தது. ஆறு அடி உயரம் வளர்ந்து தலை கனத்து செழித்திருந்தது. ஒற்றையடிப் பாதையுள்ள புஞ்சைக் காட்டில், மூன்று பாதை அமைத்துப் புகுந்தன மைலக்காளைகள். வேம்பன் செல்லமாக முதுகில் தடவ, கூச்சமுற்று, துள்ளி குதித்து, மூர்க்கமுடன் வழி உடைத்து, தாவியது தூரிதகால மைலக் காளைகள்.

சில மணி துளிகளில் காடல்குடியில் வந்திறங்கினாள் மூக்கம்மாள் வென்ற செபமாலையம்மாள். எங்கும் ஆரவாரம் விண்ணைத் தொட்டது. பசுமை கம்பங்கதிர்களை கொட்டி, தண்ணீர் காட்டினர் காளைகளுக்கு. ஊமைத்துரையின் மனைவி மாளவொன்னா வேதனையில் துடித்தாள். குழந்தை குறுக்கில் சுகமாகப் படுத்துக்கிடந்ததே உச்ச வேதனை.

பதற்றமின்றி வந்தாள் மூக்கம்மா, பெண்ணைப் பார்த்துப் புன்னகைத்தாள்.. சிறு புட்டியிலிருந்து, வேப்பெண்ணையை எடுத்து அடிவயிற்றில் பூப்போலத் தடவினாள். தன் கழுத்திலிருந்த முத்து செபமாலையைக் கழற்றி, பெண்ணின் அடிவயிற்றில் பதித்து, சில கணம் கண்மூடி முணுமுணுத்தாள். உடைந்தது தண்ணீர் குடம் . குழந்தை திரும்பியது. குலவை சத்தம் கும்பிட மீனாட்சி நழுவி வந்தாள் பூமிக்கு. ஆனந்த கரக்கோசம் விண்ணைத் தொட்டது.

மந்திரம் கால, மதி முக்கால் என்று முணுமுணுத்தாள். செவிலி செவிட்டம்மா. தொப்புள் கொடி அறுத்த மூக்கம்மா வதனத்தில் சூரிய பிரகாசம் மங்கியது?

கட்டபொம்மு மாகராசா பெரும் கரிசனத்துடன் மூக்கம்மாவை அணுகினார். எல்லோரும் ஆனந்தமாக இருக்க, தாய்மட்டும் வருந்துவது ஏனோ? வென்று வினாவி மூக்கம்மாவை உற்று நோக்கினார். ராஜாக்களுக்கு மட்டுமே உரித்தான ஆணி முத்து மூக்கில் ஒளிரிட, கழுத்தில் முத்துக்களால் சோபித்த சிலுவை மாலையைக் கண்டு manthira மாலையோ? வென்று வினவினார்.

பரிசாக என்ன வேண்டும் தாயே? என்று தயாளமுடன் உருகினார். பரிசுபெற மறுத்தாள் மூக்கம்மா! குழந்தை மாலை சுற்றி பிறந்ததால், அது குலத்துக்கு ஆகாது என்று நிமித்திகம் கூறினாள் மூக்கம்மா வென்ற செபமாலையம்மா.

மன்னவரோ, ஒரு கணம் திகைத்தார். மூக்கம்மா, கவலை கொள்ளாதே, எம் குல சக்கம்மா, எமை காப்பாள் என்று பொருமினார். பல ஏக்கர் புஞ்சை நிலங்களை பரிசாக கொடுத்தான் மன்னவன். ஊமைத்துரை நன்றியுடன் தாயை நோக்கினான்.

திருச்செந்தூர் முருகனை தரிசிக்காமல், திரும்பினார் படை பரிவாரங்களுடன், பாஞ்சாலங்குறிச்சி சக்கம்மாவை தரிசிக்க!

கோவில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் என்பதால், வானளாவிய வேப்பமரம் குடை பிடிக்க, புனித மேரி ஜெபமாலையாம்மாளின் குழந்தை ஏசுவை கையில் தூக்கி நினைத்ததை நிகழ்த்தும் அற்புதன் புனித அந்தோணியார், காடல்குடி கோவிலில் குடியமர்ந்தார்.

நெய்தல் வணிகர் திரு. மிக்கேல் பாக்கியம் கர்வாலோ காடல்குடி நிலக்கிழாராக இருந்து, புனிதரின் கோவிலை புண்ணியப்படுத்தினார்.

மணல்பாடும் மணவையம்பதியின் தூய வளனார் உயர்நிலைப் பள்ளி மற்றும் விடுதியின் காப்பாளராக இருந்து நெய்தல் நில இளம் பயிர்களுக்கு உரமூட்டி பண்படுத்திய ஆலந்தலை மண்ணின் ஆணி முத்து, எம் குல ஐயன் வணக்கத்திற்குரிய சற்குருபிரசாதி சுவக்கின் சாமிகளுக்கு மணவை மாணவனின் நெய்தல் நில, மந்திர மாலையினை ஜெபித்து சமர்ப்பிக்கிறேன்.


- A. பிரசாதராஜன் விக்டோரியா

Source: Paravar  Malar 
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com