வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Monday 4 April 2022

கொற்கையம் பெருந்துறை

நீர் போற்றுதும்! நீர் வார்க்கும் ஆறு போற்றுதும்!

தண்பொருநையாற்றின் இரு மருங்கிலும், மனிதக் குடியிருப்புகள் தோன்றி, நாகரிகம் போற்றி, வளமாக வாழ்ந்த வரலாறு காலத்தால் முந்தியது. உலகின் அனைத்து நாகரிகங்களுக்கும் முன்னோடி 'தமிழர் நாகரிகம்' என்று சொன்னால் அதுதான் உண்மை.

மிதவை, தெப்பம், வள்ளம், கட்டுமரம், பரிசல், ஓடம், படகு, தோணி, புணை, அம்பி, வங்கம், வத்தை, நாவாய், கப்பல், திமில், உரு, கலம் எனப் பலபல பெயர்களில் கடல்கலன்கள் கட்டி உலகெங்கும் வாணிகம் செய்தவர்கள் தமிழர்கள்.

தமிழாண்ட மன்னர்கள சேர, சோழ, பாண்டியர் மூவரும் பழங்காலம் தொட்டே திரைகடல் ஓடி வாணிகம் செய்து பொருளீட்டிய தமிழ் மாந்தர்களைப் புரந்தவர்கள். இத்தனை வாணிகமும் சிறப்புற நடந்தேறத் துணை புரிந்தவைதான் தமிழகத் துறைமுகங்கள்.

சங்க இலக்கியங்களில் வங்கக் கடல் துறைமுகங்களாகக் காட்டப்பட்டுள்ளவை நான்கு. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும்போது அவற்றின் வரிசை இவ்வாறு அமையும்.

கொற்கை – பாண்டிநாட்டுத் துறைமுகம்.
புகார் என்னும் காவிரிப்பூம் பட்டினம் – சோழநாட்டுத் துறைமுகம்
எயிற்பட்டினம் (நாகப்பட்டினம்) – ஒய்மா நாட்டுத் துறைமுகம்
நீர்ப்பெயற்று (மரக்காணம்) – தொண்டைநாட்டுத் துறைமுகம்.

மேலும், பண்டைய தமிழ் மன்னர் மூவரும் அரசுக் கட்டிலின் தலைமையிடமாகத் தலைநகரையும், வாணிகப் பொருளாதாரத்திற்கானத் தலைமையிடமாக ஒரு துறைமுகத்தையும் ஏற்படுத்திக் கொண்டனர்.

'சேரருக்கு வஞ்சியும் முசிறியும்
சோழருக்கு உறையூரும் பூம்புகாரும்
பாண்டியருக்கு மதுரையும் கொற்கையும்' எனக் கொண்டனர்.


இலக்கியத்தில் கொற்கை:

"மறப்போர் பாண்டியின் அறத்தின் காக்கும்
கொற்கையம் பெருந்துறை முத்து" - அகநானூறு
உகுவாய் நிலத்த துயர்மணல் மேலேறி
நகுவாய் முத்தீன் றசைந்த சங்கம் – புகுவான்
திரை வரவு பார்த்திருக்கும்
தென் கொற்கைக் கோமான்" - முத்தொள்ளாயிரம்
’சிறப்பின் கொற்கை முன்துறை அவிர்கதிர் முத்தம்’ (அகம் 201. 3-5)
என்றும்,

‘முத்துப்பட பரப்பின் கொற்கை முன்துறை’ (நற்றிணை 23-6)
‘நாரரி நறவின் மகிழ்தொடைக் கூட்டும் பேரிசைக் கொற்கை’(அகம். 296 8-10)
’இருங்கழி சேயிறா வினப்புள் ளாரும்
கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை’ (ஐங்குறு. 188)
’அலங்கிதழ் நெய்தார் கொற்கை முன்றுறை
இலங்குழுத் துறைக்கு மெயிறு கெழு துவர்வாய்’ (ஐங்குறு. 185)

'திரைதந்த ஈர்ங்கதிர் முத்தம்
கவர்நடைப் புரவி கல்வடு தபுக்கும்’
நற்றேர் வழுதி கொற்கை’ (அகம். 130)
’கலிகெழு கொற்கை’ (அகம். 350)
’கொற்கையம் பெருந்துறை முத்தொடு பூண்டு’ (சிலம்பு. 14. 180)

என்றும் கொற்கைப் பெருந்துறை இலக்கியங்களில் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளது.

இவ்வளவு ஏன்? சிலப்பதிகார வழக்குரை காதையில், கண்ணகி மதுரை அவையில் வீற்றிருந்த பாண்டியன் நெடுஞ்செழியனைப் பார்த்து, ‘நல் திறம் படராக் கொற்கை வேந்தே! என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே’ என பாண்டிய மன்னனைக் கொற்கை வேந்தே என்றுதானே விளிக்கிறாள்.

சங்க இலக்கியம் மற்றும் வரலாற்றில் ‘மதுரோதய நல்லூர், பாண்டிய கபாடம், கொல்கை, கொல்கை குடா’ என்றெல்லாம் கொற்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

"கி.பி. 130 வரை கொற்கை பாண்டியரின் முதன்மைத் தலைநகராக இருந்தது. இதன் பின்னரே ஆட்சித் தலைமை மதுரைக்கு மாற்றப்பட்டது" எனும் அரிய செய்தியைத் தாலமி என்ற அயல்நாட்டுப் பயணியின் குறிப்பிலிருந்து உணரமுடிகிறது. கிபி130 வரை பாண்டியரின் தலைமையிடமாக இருந்தது கொற்கையில் மணலூர் எனும் பகுதி என்பதும், பின்னர் இப்போதைய மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் மணலூர் எனும் பகுதிக்கு மாற்றப்பட்டது என்பதும் அறியத் தக்கது.

கொற்கை, விறற்போர்ப் பாண்டியன், மறப்போர்ப் பாண்டியர், வெற்றிவேல் செழியன் முதலான பாண்டிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த செய்தியை இலக்கியங்களில் காணமுடிகிறது. தற்போதைய தொல்லாய்வுகளும் இதை உறுதிப் படுத்துகின்றன. பிற்காலத்தில், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மதுரையில் இருந்துகொண்டு ஆண்டாலும் கொற்கை மக்களின் எதிர்பார்ப்புகளை யெல்லாம் நிறைவேற்றி வைத்தான்.எனும் செய்தியும் இலக்கியத்தில் உண்டு.

கொற்கை, பண்டைய தமிழகத்தின் பெரும் துறைமுகம். யவனரும் அரபியரும் சீனரும் தமிழரோடு கலந்து பெருமித நடைபோட்ட மண். பொன்னும் மணியும் பவழமும் முத்தோடு உரசி 'கலுங் கலுங்'கென ஓசையிட்டுத் தோளில் இட்ட துணிப்பைகளில் குலுங்கத் தெருவெங்கும் பன்னாட்டுக் கால்கள் நடைபயின்ற மண்.

கொற்கையின் முத்து:

இப்பி யீன்ற இட்ட எறிகதிர் நித்திலம்
கொற்கையே யல்ல படுவது – கொற்கைக்
குருதிவேல் மாறன் குளிர்சாந் தகலம்
கருதியார் கண்ணும் படும்’ (முத்தொள்ளாயிரம். 68)

என கொற்கைக் கரையில் மட்டுமா முத்துக்கள் பிறக்கும்? கொற்கையை ஆளும் பாண்டியனின் மார்பைத் தழுவ எண்ணும் பெண்களது கண்களிலும் பிறக்கும் என்ற பொருளமைந்த பாடல், முத்துக்கள் என்றாலே அது கொற்கைதான் எனச் சுட்டிக் காட்டுகிறது.

முத்துக்களின் சிறப்பு:

‘பல்லரண் கடந்த பசும்பூப் பாண்டின்
மல்குநீர் வரைப்பிற்கொற்கை முன்றுறை
ஊதை யீட்டிய வுயர் மண லடைகரை
ஒத வெண்டிரை யுதைத்த முத்தம்’ (தொல். களவு. நூ. 11. நச். உரை மேற்கோள்)

‘பொரையன் செழியன் பூந்தார் வளவன்
கொல்லி கொற்கை நல்லிசைக் குடந்தை
பாவை முத்தம் ஆயிதழ் குவளை’ (யா.வி.சூ. 15 மேற்கோள்)

என இலக்கியங்கள் கொற்கையின் முத்தைச் சிறப்பித்துள்ளன. மேலும், கொற்கையின் முத்துக்கள் மரக்கலமேறி கடல் கடந்து சென்று பிற நாட்டு மன்னர்கள் முடியிலும், மாதர்கள் அணியிலும் இடம்பெற்றன என்பதைப் பல நூலாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கொற்கையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் பற்றிய குறிப்புகள்:

‘கொற்கைக் கோமான் தென்புலம்’ (சிறுபாணாற்றுப்படை. 62-63)
’நற்றேர் வழுதி கொற்கை’ (அகநானூறு. 130)
”விறல் போர்ப் பாண்டியன், புகழ்மலி
சிறப்பின் கொற்கை” (அகநானூறு 201; 3-5)
”பொற்றேர்ச் செழியன் கொற்கையம் பேரூர்” (மணிமேகலை 13;84)
‘பொற்றேர் செழியன் மதுரை மாநகர்க்கு
உற்றதும் எல்லாம் ஒழிவின்றி உணர்ந்து’ (சிலம்பு. 27; 83-84)
‘கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன்’ (சிலம்பு. 27; 127)

என்று கொற்கைப் பதியில் பாண்டியர்கள் ஆட்சி செய்தமை பற்றி பெருமைப்பட இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன.

வெளிநாட்டுத் தொடர்புகள்:

இடைச்சங்கத்தைத் தொடங்கி தமிழை வளர்த்த கொற்கை, தலைநகராக, துறைமுகமாக விளங்கி தமிழகத்தின் வளம்கொழிக்கும் பூமியாக இருந்திருக்கிறது. பல நாட்டோடு வாணிபத் தொடர்புகொண்டு இருந்திருக்கிறது.

கிளாடியசு, நீரோ (கி.பி. 54-68) போன்றவர்களோடும், பிற மன்னர்களோடும் அரச தூதுவர்களைப் பரிமாறிக்கொண்டு வணிகம் செய்து வந்திருக்கிறது.

“கொற்கையை ஆண்ட பாண்டிய மன்னர்கள், ரோம் நாட்டின் அகஸ்டஸ் மன்னனின் அரசவைக்கு கொற்கை முத்துக்களை பரிசாக அளித்தார்கள்” என்று குறிப்பிடுகிறார் வரலாற்று அறிஞர் ஸ்டிராபோ.

பாண்டிய மன்னர்களின் குதிரைப்படைகளுக் காக ஆண்டுதோறும் கொற்கைத் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான பாய் மரக் கப்பல்களில் 16,000 அரேபியக் குதிரைகள் வந்திறங்கின என்று குறிப்பிடுகிறார் வரலாற்று ஆசிரியர் வாசப்.

"முத்துக்களும் பல வகை ஆடைகளும் மேனாடுகளுக்கு அனுப்பப்பெற்றன. மேனாடுகளிலிருந்து குதிரைகளும் கண்ணாடிச் சாமான்களும் கொற்கை பெருந்துறையில் வந்திறங்கின” என மதுரைக் காஞ்சியும் புறநானூரும் குறிப்பிடுகின்றன.

- நெல்லை க.சித்திக்

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com