வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 25 February 2023

சிங்கிகுளம் மீன் சந்தை

1912ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் நாங்குநேரி வட்டாரத்தில் இறை பணியில் ஈடுபட்டிருந்தவர் இயேசு சபையைச் சேர்ந்த அருட்தந்தை. தம்பு அவர்கள். உவரி இடிந்தகரை பெரியதாழை புத்தன்தருவை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் வாழ்ந்து வந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பெரும் முயற்சி மேற்கொண்டவர்.

மீன் சார்ந்த தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு இடங்களில் இப் பகுதிகளைச் சேர்ந்த பல மீனவர்களை குடும்பத்துடன் குடியேற செய்து பொருளாதார அடிப்படையில் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட உதவினார்.

அதனடிப்படையில் நாங்குநேரி தாலுகாவில் உள்ள பழமை வாய்ந்த செழுமையான வரலாற்று கிராமமான சிங்கிகுளத்தில் மீனவர்களுக்காகவும் அவ்வூர் மக்கள் நலனுக்காகவும் வாராந்திர மீன் சந்தையை உருவாக்க முனைந்தார்.

அதற்காக அவருக்கு மேல் அதிகாரம் பெற்றவராக வடக்கன்குளம் கிராமத்தில் இருந்த அருட்தந்தை. கௌசானல் அடிகளிடம் அனுமதி பெற்று மீன் சந்தை அமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கினார். அப்போது நாங்குநேரி தாலுகா போர்டிலுள்ள தாசில்தாரிடம் சிங்கி குளத்தில் கடல்மீன் சந்தை அமைக்க இடம் தந்து உதவுமாறு கோரிக்கை விடுத்தார்.

29.7.1912ல் ஒரு கோரிக்கை மனுவையும் நாங்குநேரி தாலுகா போர்டில் அளித்தார். அதனை பரிசீலித்த அப்போதைய தாலுகா நிர்வாகம் சிங்கிகுளம் கிராமத்தில் தாலுகா போர்டுக்கு(அதாவது அரசு க்கு) சொந்தமான பட்டா நிலம் சர்வே எண்: 5ல் உள்ள 12 சென்ட் தரிசு நிலத்தை குத்தகைக்கு வழங்க முன் வந்தது.

அப்போது தாசில்தாராக இருந்த திரு. டி .எஸ். இராமசாமி ஐயர் என்பார் பின்வரும் நிபந்தனைகளுடன் சிங்கிகுளத்தில் மீன் சந்தை அமைக்க அந்த இடத்தை குத்தகை அடிப்படையில் வழங்கினார்.

1 ) மேற்கண்ட குத்தகை நிலத்திற்கு ஆண்டுக்கு ஒரு சென்டடுக்கு 4 அணாக்கள் வீதம் 48அணாக்கள் (சுமார் ₹.3/- ) குத்தகைக் கட்டணமாக தாலுகா போர்டுக்கு செலுத்தவேண்டும்.

2). அந்த நிலம் முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ தேவைப்படும் பட்சத்தில் ஒரு மாத கால அவகாசத்தில் தலைவர் அறிவிப்பு ஆணை வழங்கும் போது எந்தவித நஷ்ட ஈடும் கோராமல் இடத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

3) அந்த இடத்தில் இரண்டு சிறிய ஆலமரங்கள் உள்ளன. அதை அகற்ற நேர்ந்தால் அவற்றின் மதிப்பு ஒரு ரூபாய் எட்டு அணா செலுத்த வேண்டும்.

4 . தாலுகா போர்டு நிர்ணயித்துள்ள தொகையை தேவைப்பட்டால் மாற்றி அமைக்கும் உரிமை தாலுகா போர்டுக்கு உள்ளது .
சந்தை அமைக்க உள்ள இடத்தில பூமிக்கு அடியில் காணப்படும் கனிம வளங்கள் மற்றும் புதையல்கள் அல்லது பொக்கிஷங்கள் அவை அனைத்தும் தாலுகா போர்டுக்கு சொந்தமானதாகும் .

இந்த குத்தகையானது மீன்பரவர்களின் பொது பெயரிலேயே இருக்கும் .

இப்படிக்கு

ராமசாமி ஐயர்
தாசில்தார்
4 .09.2013 .

என கையெழுத்திட்டு அருள்தந்தை கௌசானல் அடிகளுக்கு அனுமதி கடிதம் அனுபியுள்ளனர். அதன்பின்னரே சிங்கிகுளம் ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் பரதர் குல ஐக்கிய மீன் சந்தைக்கு புதிய கட்டுமானப் பணிகள் துவங்கின.

மீனவர்கள் ஓய்வெடுப்பதற்கும் தங்களது பொருட்களை வைப்பதற்கும் வசதியாக முழுவதும் கற்களால் கட்டப்பட்ட ஓய்வறைக் கட்டிடமும் செங்கல் சுண்ணாம்பு கொண்டு கட்டப்பட்ட 5 விற்பனைக்கூட கட்டிடங்களும் மீனவர்களின் வழிபாட்டுக்கு பழைய சந்தை அருகே ஒரு தேவாலயமும் கட்டப்பட்டன. அருட்தந்தை கௌசானல் அடிகளாரால் 28.04.1918ல் சிங்கிகுளத்தில் வாரத்தில் சனிக்கிழமை தோறும் பரதர் குல ஐக்கிய மீன்சந்தை செயல்படும் வகையில் துவக்கி வைக்கப்பட்டது. அதிலிருந்து 1983 ஆம் ஆண்டுவரை கிட்டதட்ட 65 ஆண்டுகள் தொடர்ந்து இப்பகுதி மக்களுக்கு கடற்கரையிலிருந்து சுவையான ஆரோக்கியமான மீன் மற்றும் கருவாடுகளை வழங்கி வந்தது. பின்னாளில் இந்த சந்தையில் ஒரு பகுதி சிங்கிகுளம் பரதர் குல ஐக்கிய மீனவர் சங்கம் என்ற பெயரில் வள்ளியூருக்கு இடம்பெயர்ந்து அங்கு செயல்பட்டது. இதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரமும் உயர்ந்தது.

சிங்கிகுளம் கிராமத்திற்கு சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் வந்து வாரம்தோறும் ருசியான கடல் மீன்கள் மற்றும் கருவாடுகளை வாங்கி சென்றனர். இது சிங்கிகுளம் கிராமத்திற்கு ஓரளவு வருமானத்தையும் கொடுத்தது. தற்போது மீண்டும் அந்த சந்தை மீன்களோடு உழவர் சந்தை ஆகவும் உயிர் பெற வேண்டும் என்பது அரசின் கவனத்திற்கு உட்படுத்தப்படுகிறது. சிங்கி குளத்தில் மீண்டும் வாரச்சந்தை அமைய வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சு.வானமாமலை. M.A.MHIL. BEd .
(சிங்கிகுளம்) நாங்குநேரி.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com