பாண்டியரும் பரதவரும்
தலையாலங்கானத்து போரின் நாயகர்களான பாண்டியரும் பரதவரும்:
கூடல் என்று அழைக்கப்பட்ட இன்றைய மதுரை மாநகர் கிமு நான்காம் நூற்றாண்டில் அகுதை என்பவன் ஆட்சியின் கீழ் இருந்த சமயத்தில் கொற்கை பரதவர்களின் அரசனாக இருந்த பாண்டிய நெடுந்தேர் செழியன் என்பவன் நான் மேற்கூறிய அகுதையை போரில் வென்று கூடல் வரை தனது அரசை விரிவாக்கி அக்கூடல் மாநகரிலேயே தங்கியிருந்து ஆட்சி செய்ய தொடங்கினான்.
இந்த நெடுந்தேர் செழியனின் ஏழாவது தலைமுறையில் தோன்றியவனே புகழ்பெற்ற தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன். மதுரையில் பாண்டிய வேந்தன் மறைந்த பிறகு பரதவர்களின் கொற்கை மாநகரிலே இளவரசனாக இருப்பவனே மதுரைக்கு சென்று ஆட்சி பொறுப்பு ஏற்பது வழக்கம்.
நெடுஞ்செழியன் சிறுவனாக இருக்கும்போதே மதுரையில் ஆட்சி பொறுப்பில் இருந்த அவன் தந்தை இறந்து விட்டார். பரதவர்களின் கொற்கையில் இளவரசனாக இருந்த சிறுவன் நெடுஞ்செழியன் மதுரைக்கு சென்று ஆட்சி பொறுப்பு ஏற்றான்.
தொடக்கத்தில் கொற்கை பரதவர்களின் அரசர்களாக மட்டுமே இருந்த பாண்டியர்கள் தங்களது அரசை உள்நாட்டில் பெரிய அளவில் விரிவாக்கி பேரரசை உருவாக்கியிருந்ததை பொறுத்து கொள்ள முடியாத அவர்களுடைய பகைவர்கள் அவர்களை வீழ்த்தி பாண்டிய நாட்டை தங்களுக்குள் பங்கு போட்டு கொள்ள சமயம் பார்த்து காத்திருந்தனர்.
சிறுவனாக இருந்த நெடுஞ்செழியனை எளிதில் வீழ்த்தி விடலாம் என்று எண்ணி சோழனுடன், சேரனும், வேளிர் ஐவரும் அச்சிறுவனுக்கு எதிராக அணி சேர்ந்தனர். தலையாலங்கானம் என்னும் இடத்தில் சோழன் தனது படையுடன் வந்திருந்தான். சோழனுக்கு ஆதரவாக சேரனும், வேளிர்களான திதியன், எழினி, எருமையூரன், இளங்கோ வேண்மான், பொருநன் ஆகிய ஐவரும் அவரவர் படைகளுடன் தலையாலங்கானத்துக்கு வந்திருந்தனர்.
தனக்கெதிராக சோழன் ஆறு பகையரசர்களுடன் தலையாலங்கானத்தில் ஒன்று கூடியிருப்பதை கேள்வியுற்ற சிறுவன் நெடுஞ்செழியன் எதிரி தன்னை தாக்குவதற்கு இடம்கொடாமல் அப்பகைவர் அஞ்சும்படி அவர் நாட்டுக்குள் முன்னேறி சென்று தலையாலங்கானத்தில் வைத்து சோழனையும் அவனுடன் கூட்டு சேர்ந்த ஆறு பகையரசர்களையும் போரிட்டு வென்றான்.
தலையாலங்கானம் என்ற இடத்தில் வைத்து ஏழு பகையரசர்களை வென்றமையால் இப்பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் எனப்பட்டான்.
(குறிப்பு: இப்போர் நடைபெற்ற இடமான தலையாலங்கானம் சோழ நாட்டில் தற்கால திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் சிமிழி ஊராட்சியிலுள்ள ஒரு கிராமமாகும். பிற்காலத்தில் இது தலையாலங்காடு என்று வழங்கிற்று.)
தலையாலங்கானத்து போரில் பாண்டிய நெடுஞ்செழியன் பெற்ற வெற்றி சிறப்பினை குறித்து மாங்குடி மருதனார் தனது மதுரைகாஞ்சியில் இவ்வாறு பாடுகிறார்.....
அஞ்சு வரத் தட்கும் அணங்குடைத் துப்பின்,
கோழ் ஊஉன் குறைக் கொழு வல்சி,
புலவு வில், பொலி கூவை,
ஒன்று மொழி, ஒலி இருப்பின்,
தென் பரதவர் போர் ஏறே!
தென் பரதவர் போர் ஏறே!
விளக்கம்:
சினம் கொண்ட பகைவர் அஞ்சும்படி அவர் நாட்டுக்குள் முன்னேறி சென்று போரிட்டு அவர்களைத் தடுத்து நிறுத்தியவர்களும். அப்பகைவரைக் குத்திய அம்போடு கூடிய வில்லைத் தம் குடிசையில் சார்த்தியிருப்பவர்களும், கொழுத்த இறைச்சியையுடைய சோற்றினையும் கூவைக்கிழங்கினையும் உண்டு, வஞ்சினம் கூறி ஒலித்துக் கொண்டிருப்பவர்களுமான அத்தென்பரதவருள் போரிடும் காளையாக/ சிங்கமாக விளங்கியவனே" என்று பாண்டிய நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடுகிறார்.
இப்படி பாண்டிய நெடுஞ்செழியனின் தலையாலங்கானத்து போர் வெற்றி சிறப்பினை பற்றி அவர் மீது பாடப்பட்ட பாடலில் அவருடன் பகைவரின் நாட்டுக்குள் முன்னேறி சென்று அவர்களை போரிட்டு வீழ்த்திய தென்பரதவரை பற்றி ஏற்றி பாடி, பிறகு அவ்வீரமிக்க தென்பரதவருள் முதல்வனாக அப்பாண்டிய நெடுஞ்செழியனை பாடி முடிக்கிறார் மாங்குடி மருதனார்.
- UNI