பண்பாட்டில் சிறந்த பரதவர்
முத்துக்குளிப்பு
பழைய காயலில் அதிக அளவில் முத்துக்குளிப்பு நடந்ததாக வாஸ்கோடகாமா தனது பயணக் குறிப்புகளில் பதிவிட்டுள்ளார். போர்ச்சுகீசியர் கி.பி.1505 முதல் கி.பி.1508 வரை பழைய காயலில் முத்துக்களை பெருமளவு வாங்கினர். ஆனால் பரதவர்களின் கத்தோலிக்க மதமாற்றத்துக்கு பின் போர்ச்சுகீசியர்கள் முத்துக்குளித்தலை தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். கி.பி.1587 ல் முத்துக்குளித்துறையிலிருந்து 181 குவிண்டால் அளவிலான முத்துக்கள் லிஸ்பனுக்கு அனுப்பப்பட்டன.
பழையகாயலில் ஆண்டுக்கு இரண்டுமுறை மார்ச்-ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட்- செப்டெம்பர் மாதங்களில் முத்துக்குளியல் நடைபெற்றதாகவும், விற்பனை ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களில் நடந்ததாகவும் வரலாற்று குறிப்புகள் உள்ளன. முத்துக் குளிப்பின் போது போர்ச்சுகீசிய படைத்தலைவன் மற்றும் பரதவ இனத் தலைவன் முத்துக்குளித்துறையில் தங்கினர். பிடிக்கப்பட்ட முத்துக்கள் கோவாவிற்கும் அனுப்பப்பட்டன.
கி.பி.1616 ல் 36 பைகளில் 'அல்ஜோபர் ' வகை முத்துக்கள் போர்ச்சுக்கல்லுக்கு அனுப்பப்பட்டன. அப்போது முத்துக்கள் அவுன்ஸ் கணக்கில் அளிக்கப்பட்டன. இவை போர்ச்சுகீசிய சீனாவுக்கும் அனுப்பப்பட்டன. மதுரை நாயக்க மன்னன் தன்னுடைய பங்காக ஒருநாள் முத்துக்குளிப்பு வருமானத்தை பெற்றுக் கொள்ள, பரதவர்கள் சங்கு குளிப்பதிலும் வல்லவர்கள், சவேரியார் கடிதத்திலிருந்து செப்டம்பர் மாதத்தில் சங்கு குளிப்பு நடந்ததாக அறிகின்றோம். சங்குகள் வங்காளம், பீகார், ஒரிசா போன்ற இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. (அருட் சகோதரி. முனைவர்.டெக்லா மேரி)
முதலாம் நூற்றாண்டில் கொற்கையில் சேகரிக்கப்பட்ட முத்துக்கள் வெளிநாட்டு ஏற்றுமதிக்காக நெல்கிண்டாவில் (கோட்டயத்தில்) விற்பனை செய்யப்பட்டதாக பிளினி குறிப்பிடுகிறார். உள்நாட்டுத் தேவைக்கான முத்துக்கள் மதுரைச் சந்தைக்கு கொண்டுவரப்பட்டன. கொற்கையில் சேகரிக்கப்பட்ட முத்துக்கள் தரம் பிரிக்கப்பட்டு பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பப்பட்டன. முத்துக்களை இந்தியப் பெருங்கடலில் இருந்து பிரதானமாக ரோமாபுரிக்கு ஏற்றுமதியானதாக பிளினி கூறுகிறார்.
இப்படி வணிகத்திற்காகச் சென்றவர்கள் முத்துக்களைக் கொடுத்து அழகிய யவனப்பெண்களையும், போர் வீரர்களையும், விலை உயர்ந்த பொருட்களையும் வாங்கிவந்ததற்கான குறிப்புகளும் உள்ளன. பாண்டியர்களின் அந்தப்புரங்களில் யவனப்பெண்கள், பாண்டிய மன்னர்களுக்கு மதுபானங்களை பரிமாறியதான குறிப்புகளும் உள்ளன. இந்த யவனர்கள் கிரேக்கர்கள் எனப்படுகிறார்கள்.
முத்துக்குளித்தல் (Pearl hunting) அல்லது முத்தெடுத்தல் அல்லது முத்து வேட்டை என்பது கடலின் ஆழமான பகுதிகளில் வசிக்கும் முத்துச் சிப்பி மற்றும் நன்னீர் மட்டிகள் (freshwater pearl mussel) எனப்படும் மெல்லுடலிகளிலிருந்து முறையான மூழ்குதல் பயிற்சி மூலம் முத்தினை எடுத்து கடலின் மேற்பரப்பிற்குக் கொண்டு சேர்க்கும் முறையாகும். முத்துச் சிப்பிகளுக்கு நான்கு வயதாக இருக்கும் போது பெறப்படுவனவற்றிலேயே அதிசிறந்த முத்துக்கள் காணப்படும்.
நல்ல தரமான அரிய வகையான மூன்று அல்லது நான்கு முத்துகளை பெறுவதற்கு கிட்டத்தட்ட ஒரு டன் சிப்பிகள் சேகரிக்கப்பட வேண்டும். பரவர்கள் சிப்பிகளைச் சேரிப்பதற்காக இடுப்பைச் சுற்றி பையொன்றைக் கட்டிக்கொள்வார்கள். நீரில் மூழ்கும் போது சரியான இடம் தென்பட்டதும் பரபரப்பாக முத்துக்களைச் சேகரித்து இடுப்பில் கட்டிச் சென்ற பை போன்ற வலையினுள் போடப்படும். அதேவேளை தோணியில் இருப்பவர் முத்துக் குளிப்பவர்களைக் கண்ணும் கருத்துமாகக் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள்.
மேலே வந்தவர் தோணியில் இருப்பவரிடம் தான் சேகரித்த முத்துச் சிப்பிகளை ஒப்படைத்து விட்டு சிறிது ஓய்வு எடுத்தபின் மீண்டும் முத்துககுளிக்கக் குதித்துவிடுவார். முத்துக்குளிக்கும் பணி முடிவுற்றதும் சிப்பிகளைக் கடற்கரையில் கொட்டி ஏலத்தில் விற்பனை செய்வார்கள். சில நாட்களின் பின்பு சிப்பிகளை ஒவ்வொன்றாகத் திறந்து நன்றாகக் கழுவி முத்துக்களை வெளியில் எடுப்பார்கள். இவ்வாறு சேகரிக்கப்படும் இயற்கை முத்துகள் விலை மதிப்பு மிக்க ஒன்பது இரத்தினங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகிறது.
முத்தின்வகைகள்:
1. ஆணி, 2. கனதாரி, 3. மக்கை, 4. மடக்கு, 5. குறவில், 6. களிப்பு, 7. பீசல், 8. குறல் 9. தூள் 10. ஓட்டு முத்து.
பரவர்கள் மற்றும் அவர்களின் பாரம்பரீய மீனவ மரபினரின் தொழிலை சில வகைகளாக பிரிக்கலாம். அவை, துணி விற்போர், கலம் செலுத்துவோர், முத்துச்சிப்பிகள் குளிப்போர், சங்குகள் குளிப்போர், துணிகள் கட்டுக்கட்டுவோர், ஆமைகளைப் பிடிப்போர், கடற்பன்றிகளைப் பிடிப்போர், சுறா மற்றும் பிறமீன்களைப் பிடிப்போர், பல்லக்குச் சுமப்போர், தலைமைக்காரர்களின் குற்றேவலர், நண்டுகள் பிடிப்போர், என பல தொழில்களையும் கடலை மையமிட்டு செய்து வந்தவர்கள் பாரம்பரீய மீனவர்கள்.
ஆனால் பாரம்பரீய மீன் பிடிச்சமூகங்களின் பிரதான தொழிலாக எக்காலத்திலும் இருந்திருக்கக் கூடிய மீன்பிடி, உப்பு விளைவித்தல் போன்ற தொழிலுக்கு இருந்த முக்கியத்துவத்தை விட, அவர்கள் தொழிலின் ஒரு பகுதியாக இருந்து கடலில் மூழ்கி எடுத்து வந்த முத்துக்கு இருந்த முக்கியத்துவம் வேறு எதற்கும் இல்லை.
செல்வாக்குமிக்கோரின் கழுத்துக்களை அலங்கரிக்கும் அணிகலனாக மட்டுமல்லாமல் கிரேக்கர்களையும், உரோமானியர்களையும், அராபியர்களையும், போர்ச்சுக்கீசியரையும், பின்னர் டச்சுக்காரர்களையும் இறுதியாக வெள்ளையர்களையும் என அவர்களின் ஏக போக சுரண்டல் சந்தையில் முத்து ஒரு பிரதான பொருளாக இருந்ததாலுமே முத்து பேசப்பட்டது.
தென்னிந்தியாவைத் தவிற இந்தியக் கடலோரங்களில் வேறு எங்கும் இயற்கை கடல் முத்து எடுக்கப்படவில்லை. இந்தியக் கடலோரங்களில் பரவலாக சங்குக்குளித்தல் நடைபெற்றதே தவிற முத்துகுளித்தல் நடைபெறவில்லை. முத்து வளம் இந்திய தீபகற்பத்தின் வேறெந்த கடல் பகுதிகளிலும் இருந்தமைக்கான சான்றுகளும் இல்லை. முத்துக்குளித்தல் நடைபெற்ற ஒரே இடம் தமிழக கடலோரங்களிலும், இலங்கையின் மன்னார் கடலோரத்திலும்தான் என்பது அறியக்கூடிய செய்தி.
பெர்ஷியா, இந்தோனேஷியா, ஜப்பான், போன்ற இடங்களில் முத்துக்குளிப்பு நடந்திருந்தாலும் இவைகளுக்கு பன்னெடுங்காலத்திற்கு முன்பே தமிழகத்தின் கொற்கை கடலோரத்திலும் சிறிலங்காவின் மன்னார் குடாவிலும் முத்தெடுத்ததற்கான சான்றுகள் உள்ளன. தமிழக முத்துக்கள் ஆதிகாலம் தொட்டே எடுக்கப்பட்டு வருவதாக கால்டுவெல் மற்றும் அருணாச்சலம் என்ற மூத்த ஆய்வாளரும் கணிக்கிறார்கள்
பெரிப்ளூஸ் என்கிற நூலில் கொற்கையில் முத்துக்குளித்தலில் பாண்டியர்களுக்காக அவரின் கைதிகள் ஈடுபட்டதாக குறிப்பிடுகிறார். சந்திரகுப்த மௌரியரின் அரசவையில் கிரேக்க தூதுவராக இருந்த மெகஸ்தனிஸ் இலங்கையில் முத்துக்குளித்தல் நடந்ததையும் இந்தியாவைக் காட்டிலும் தங்கம், முத்துக்களை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடாக இலங்கை இருந்ததையும் குறிப்பிடுகிறார்.
பெர்ஷியன் கடல்பகுதிகளில் நடந்த முத்துக்குளித்தல் தொடர்பான குறிப்புகளும் உள்ளன. பெர்ஷியன் கடல் பகுதியில் கிடைத்த முத்துக்கள் ஆர்ம்ஸ் (Ormus) என்றும் தமிழக, மன்னாரிலும் கிடைத்த முத்துக்கள் ‘’கீழை முத்துக்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த கீழை முத்துக்கள் பெர்ஷிய முத்துக்களை விட கிரேக்கத்திலும், ரோமாபுரியிலும் புகழ்பெற்றிருந்ததாகவும் தெரிகிறது.
மன்னார் வளைகுடாவினது முத்துப்படுக்கைகள் (முத்துச்சிப்பிக்கள் காணப்படுகின்ற இடங்கள்) தொடர்பாக கி.பி. 6ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலுள்;ள வரலாற்றுப் பதிவுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.
தொடர்ந்து கதைப்போம்...