வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Monday 26 June 2017

பரதவர்களின் பதவி பெயர்கள்
பரதவர்களின் பழங்காலப் பதவி பெயர்கள் - 1

பட்டங்கட்டி

முத்துக்குளித்துறைப் பரதவரின் நீண்ட வரலாற்றுச் சுழற்சியில் அவர்கள் கிறிஸ்தவம் தழுவிய நிகழ்விற்கு முற்பட்ட தொல்பழங்காலத்திலே அவர்களிடம் ஒரு வலிமை மிக்க கட்டுக் கோப்பான சமூகத் தன்னாட்சி அமைப்பு முறையும் (An Autonomous body and Rule) இருந்ததற்கான தடய எச்சங்களாக பட்டங்கட்டி, அடப்பன், ஞாயம் போன்ற பதவி பெயர்கள் தங்கிய குடும்பங்கள் இன்றும் கடலோரக் கிராமங்கள் சிலவற்றில் வாழ்ந்து கொண்டிருப்பதைக் காணும் போது அவை பற்றி ஆய்ந்தரியத் தூண்டும் எண்ணங்கள் எழுவது இயல்பு தானே. 
Tombstone in Udappu, Srilanka

இலங்கைக் கடல் தீரத்தில் வாழும் சிங்கள தமிழின மக்களிடமும் இதே பதவிப் பெயர்கள் இருந்ததற்கான பழைய வரலாற்றுப் பதிவுகளைப் பார்க்கும் போது இவ்விரு நாட்டுக் கடற்கரை வாழ் சமுதாயங்களும் ஒரே இனத்தவரோ என்ற கருத்தோட்டம் புறந்தள்ளத்தக்கதல்ல.

ஜேம்ஸ் ஹோர்னல் என்பார் “கல்வெட்டு” என்ற யாழ்ப்பாண புராதன நூல் ஒன்றை மேற்கோள் காட்டி தமது மதராஸ் மீன் வளத்துறை அறிக்கையில் கிறிஸ்து பிறப்பிற்கு முன்பே அறுநூறாம் (கி.மு.600) ஆண்டு தொடங்கி ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு மேலாக பரதவர் இலங்கையில் மன்னார் தீவு, சிலாவத்துறை, சிலாவம், கதிரமலை போன்ற கடலோரப்பகுதிகளில் நிரந்தரமாகக் குடியமர்ந்து முத்துக்குளித்து வந்ததாகக் குறிப்பிடுகிறார். (The Madras Fisheries Bulletin Vol XVI Page 10 by James Hornell). 

பட்டங்கட்டி:

இலங்கையில் கொழும்பு நகர் முதல் நீர்கொழும்பு வரையிலான கடல் தீரத்தில் கி.பி. 1556 ம் ஆண்டு எழுபதினாயிரம் கரவா இன மக்கள் தங்கள் பட்டங்கட்டி தலைமையில் கிறிஸ்தவம் தழுவியதாக அருட்திரு. பிரான்சிஸ்கோ தசாவேஸ் என்ற பிரான்சிஸ்கன் துறவற சபைத் தலைவர் அன்றைய போர்த்துகல் மன்னர் மூன்றாம் தொம் யோவானுக்கு எழுதிய மடலில் குறிப்பிட்டிருப்பதாக இலங்கையில் திருமறை வரலாறு என்ற நூலில் அருட்திரு. எஸ். ஞானப்பிரகாசர் OMI என்பவர் பதிவு செய்துள்ளார். ( The History of Catholic Church in Ceylon – A spring tide of Conversions – by Rev. Fr. S. Gnanapragasar OMI – Chapter XII page 114 para 1 – Published in 1924)

மேற்சொன்ன நூலின் அடிக்குறிப்பு 3 ல் Vergel (I.C) என்று கீழ்கண்டவாறு மேற்கோள் காட்டுகிறார். பட்டங்கட்டிம் (Patangatim) என்ற சொல் பட்டங்கட்டி என்ற தமிழ் சொல்லிலிருந்து தான் வந்தது. சிங்கள சொல்லான பட்ட பெண்டி ஆராய்ச்சி என்பதிலுள்ள பட்டபெண்டி என்ற சொல்லோடு இது தொடர்புடையது. பட்டங்கட்டின் ( Pattangatyn) பணிகளில் மீன் விற்கும் சந்தையின் வாடகைப் பணம் பிரிப்பதும் ஒன்றாகும். இதே பெயரில் முத்துக்குளித்துறை சுதேசிகளின் அதிகாரிகளும் அழைக்கப்படுகின்றார்கள். (Notes to Memoins of Hendrick Becker 1716, Colombo 1914 – Page 48, “ The Paddankaddi Mor or Chief among Paddankaddis seems to have enjoyed great Judicial powers. See Delgado; Glassario 11, 188)

இன்று லசால் பள்ளிக்கூட வளாகத்தில் 1808 ஆம் ஆண்டு கல்லறைக் கல்வெட்டில் போர்த்துகீசிய மொழியில் Pattangatti Mor என்று எழுதப்பட்டிருப்பதை காண்கிறோம். Mor என்ற போர்த்துகீசிய சொல்லின் பொருள் தலைவன் (அல்லது தலைமை) என்பதாகும். எனவே பட்டங்கட்டிமோர் என்ற போர்த்துகீசிய சொல்லுக்கு தலைமைப் பட்டங்கட்டி என்று பொருள். ஆனால் மற்றைய பாண்டியாபதி ஆவணங்களில் ஜாதித்தலைவமோர் என்று காணப்படுகிறது. எனவே அது தலைமை ஜாதித்தலைவன் என்றே பொருள் தரும். பட்டங்கட்டிமோர் என்பது தலைமை ஜாதித்தலைவன் என்றால் பட்டங்கட்டிகள் ஜாதித்தலைவர்கள் என்று தானே தர்க்க ரீதியாகப் பொருள்படும்.

ஏழூர் பட்டங்கட்டி என்பது ஏழூர் ஜாதித்தலைவன் என்றும், ஆளூர் பட்டங்கட்டி என்பது உள்ளூர் ஜாதித்தலைவன் என்றும், உள்ளூர் பட்டங்கட்டி என்பது உள்ளூர் ஜாதித்தலைவன் என்றும், பொருள் தந்தால் இவர்களுக்கெல்லாம் தலைவனாக தலைமை ஜாதித்தலைவன் இருந்திருக்க வேண்டும் எனப் பொருள் கொள்ள இடமிருக்கிறது.

- தொடரும் -

- செல்வராஜ் மிராண்டா
நன்றி : பரவர் மலர் 2017
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com