கடல் என்னும் சொல்

கடப்பதற்கு மிகவும் அரிதாக இருப்பதால் அது கடல் அதாவது (கட+அல்=கடக்க அல்லாதது) என்று பொருளில் கடல் என்றானது.
ஆழமாக இருப்பதால் ஆழி, ஆழம், பௌவம் என்ற பெயர்கள் ஏற்பட்டன. பௌவம் என்னும் சொல் ஆழத்தைக் குறிக்கும்.
கடலில் எப்போதும் நீர் பெருகி இருப்பதால் பெருநீர் என்றும் கடலைக் குறிப்பிடுவதுண்டு.
கடலில் எப்போதும் வெள்ளம் மிகுந்திருப்பதால் வெள்ளம் என்ற பெயர்.
கடலிலிருந்து உப்பு கிடைப்பதால் உப்பின் உவர்ப்புச்சுவையை ஒட்டி கடலுக்கு உவர் என்ற பெயரும் உண்டு.
கடல் மிகப்பெரியதாக பரவலாக உலகைசுற்றி இருப்பதால் பரவை என்கின்றனர்.
கடலில் அலை அடித்துக்கொண்டே இருப்பதால் அலை என்றும், ஆறுகள் யாவும் கடலுடன் புணர்வதால் புணரி என்றும் பெயர்கள் வருகின்றன.
மேகம் நீரை மொண்டு கொள்ளும் இடமாகக் கடல் இருப்பதால் கார்கோள் என்று பெயர்பெற்றது.
கடலில் எப்போதும் இரைச்சல் இருப்பதால் அது ஆர்கலி., நரலை ஓதவனம் (ஓதம்=ஈரம்) என்றும் சக்கரம் வட்டமாக இருப்பது போல கடலும் ஏறக்குறைய நிலத்தைச் சுற்றி வட்டமாக இருப்பதால் சக்கரம், நேமி ஆகிய பெயர்கள் ஏற்பட்டன.
மீன்களுக்கு உறைவிடம் கடல் ஆகவே மகராலயம் (மகரம்=மீன் ஆலயம்=இருப்பிடம்) என்றானது.
கடலில் தண்ணீர் பெரியநிதியைப் போல இருப்பதால் அதற்கு சலநிதி (சலம்=தண்ணீர் நிதி=பெருக்கு)என்று ஒருபெயர்.
முத்து பவழம் போன்ற பொருட்களை வாரி வாரித் தருவதால் வாரி, வாரிதி.
கடல் நீரின் உறைவிடம், ஆகவே அதற்குப் பெயர் சலதி.
கடலின் நிறம் கருநீலம்,சுவையோ உவர்ப்பு. இரண்டையும் கருதி கடலுக்கு கார்மலி உவரி என்றும் சொல்கின்றனர்.
கடலை குறிக்க பொருட்செறிவுடன் கூடிய இத்தனை சொற்கள் தமிழில் இருக்கின்றன என்பதை அறியும் போது பெருமையாக இருக்கிறது.