வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 7 December 2019

விடிந்தகரை 3.04
கேரளத்து நம்பூதிரிமாரும், மதுரை நாயக்கமாரும், பெர்சிய மூரினத்தானும் - முத்திசையும் தாக்கி; எம் மூச்சடக்கி, அழித்தொழிக்க நினைத்தாலும்….! 
தடையெனும் மலை உடைக்கும் ஆழி பேரலை வம்சமடா
இந்த பரதவர் பாண்டியர் அம்சமடா.
……………………………………

முதியவர் பூபாளன் ஆராச்சார் தன் குரல் திரட்டி ஆணையிட்டார் “ஒரே போடு
தல கொண்டயில போடு” முனியா…….?

குரல் கேட்டதும் முதிர்ந்து பட்டு காய்ந்து போன தாழிப்பனை கொண்டையின் கீழ் தன்னை நாரால் பிணைத்து கொண்டு லாவகமாக ஊசலாடி கொண்டிருந்த முனியன் தன் பலம் திரட்டி கோடரியை பாய்ச்ச ஒரே வீச்சில் தாழிப்பனை கொண்டை முறிந்து பக்கத்து மரக்கிளைகளை முறித்து கொண்டு பெரும் ஒசையோடு தரையில் விழுந்தது. 

பூபாளன் ஆராச்சார் ஆணை தன் மீதான கொலைவெறி தாக்குதல் என முடிவெடுத்த கணத்தில் கங்கன் மின்னும் வாளெடுத்து வீச காத்து நின்றார். கொண்டை விழுந்த ஓசை கேட்டு திரும்பி பார்த்த பூபாளன் ஆராச்சார் வாளோடு விரைத்து நின்ற பரதவர்மனை கண்ட போது குழம்பித்தான் போனார். தரையில் கிடந்த தாழிக் கொண்டையையும் தலைவர் கங்கனார் கொண்டையையும் மாறி மாறி பார்த்தவர். அதுவரை இருந்த கோபம் கணப்பொழுதில் மாறி கலகலவென சிரித்து விட்டார் ஆராச்சார். 

என்ன கங்கனாரே!
முன்பகை எதுவும் தீர்க்க வந்தியளா ?
இல்லை உங்க அரசனுக்காக கொட்டாரத்து தாக்கோல் கேட்டு மிரட்ட வந்தியளா ?
“வாளெடுத்து வீராப்பு காட்டுரியரு மாப்ள"

இது உம்ம எடம் ஓய் வாரும் வந்து உட்காரும் என பரதவ வர்மன் அருகே வந்து
கையை பிடித்து இழுத்து போய் அங்கிருந்த கல் திண்டில் தன்னருகே உட்கார வைத்தார். கங்கனின் பதட்டம் தணிக்க பேச ஆரம்பித்தார்.

மாப்ள!
கேரளத்து நம்பூதிரிமாரும்
மதுரை நாயக்கமாரும்
பெர்சிய மூரினத்தானும்
முத்திசையும் தாக்கி நம் மூச்சடக்கி
அழித்தொழிக்க நினைத்தாலும்
தடையான மலையையும் உடைக்கும்
ஆழி பேரலையின் அம்சம்மடா
நாம இந்த பரதவர் பாண்டியர் வம்சம்மடா

ஏ.. மக்கா..... கங்கனா நீ…
எங்க மனசுல இருக்க வேண்டிய கங்கன் தாத்தாவிடம் தரகனாய் வந்து
அதுவும் பயந்தாங்கொள்ளி வீர ரவிவர்ம குலசேகர பெருமாள் ஆளாக வந்து …….. நினைத்தாலே கோவம் கோவமா வருது மக்கா...

மதுர நாயக்கமாரோ பாண்டிய இனத்தின் கடைசி எச்சம் பரவனை கருவருக்க துடிக்கானுவ, திருவிதாங்கூர் சமஸ்தானத்து நாயர்மாரும், நம்பூதிரிகளும் கறிவேப்பிலையாய் நம்மை 
ஒதுக்கி தூக்கி எரிந்து மதத்தை சொல்லி ஏறி மிதிக்கான் மாப்ளே!

நாப்பது நாப்பத்தைந்து வருடத்துக்கு முன்பு எங்கைய்யா மும்மணி ஆராச்சார் எடுத்த முடிவுதான் இது மாப்ளே!

அம்மச்சாவை பகவதியாக்க கேரளத்தான் பலகதைகளை சொன்ன போதும்
எங்கய்யா மும்மணி மறுதலித்தார். கோயில்ல நம்ம அரசர் வில்லவராயர் காலத்து கல்வெட்டுகளை உடைத்தபோதும், வட்டக்கோட்டை பாண்டி பரணசாலையில் மீனை பரதவ அடையாளத்தை உடைத்த போதும், உரக்க உரக்க எதிர்த்தோம் மக்கா. 

இன்னொரு புரத்தில் நாயக்க வடுக படை படையெடுப்பு ஆராச்சார்கள் பலரை கொன்று பழி தீர்த்து கொண்டது. உயிர் பிழைக்கத்தானே கோவிலை விட்டு ஆத்தாளை விட்டு இங்கே விளைகாட்டுக்குள் வந்து விட்டோம் ஆராச்சுமார். கோவிலும் இல்லை, கூடாரம் இல்லை புதிய புராணம் புரளியாய் மாற மாறி விட்டோம் மக்கா!

பிரச்சனை ஆரம்பத்தை சொல்லுறேன் கேள் மாப்பிள்ளை!

ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவே முத்துக் குளித்து....  சங்கு பறித்து.... மீன்பிடித்து....  பாய்மரங்கட்டி மேல்திசை கீழ்திசை நாடலாம் சுத்தி வந்து பணத்தோடும் பவுசோடும் வாழ்ந்து வந்தவன் பரவன். நம்ம அடிமையாக்க குமரிக்கும் மன்னாருக்கும் லங்கைக்கும் இடையேயான நம்ம பரதவரின் பாரம்பரிய தாய் கடலை அந்த கடல் உரிமையை தடுத்தான் நாயக்க அரசன். கோழிக்கோடு சமாரியன் ஏற்பாட்டுல நாயக்கன் கிட்ட இருந்து பெர்சிய மூரினத்தானுவ பரதவமார்க் கடலை குத்தகைக்கு எடுத்தானுவ! 

பாதிக்கப்பட்ட பரவமாறு கடலையே அடைத்தான் பரவமாறு 
முத்துக் குளிக்கல! முத்துக்குளிக்க எவனையும் விடல!!
பரவமாறு மீன்பிடிக்கல! மீன்பிடிக்க கடலுக்குள் இறங்க எவனையும் விடல!!

நீண்ட சண்டை சச்சரவுக்கு பின்பு வேறு வழியில்லாமல் முத்துக்குளி வருமானத்தை அரசனுக்கு, மூரினத்தானுக்கு, பரவமாறுக்கு, என மூன்று பங்காகப் பிரித்தெடுத்துக் கொண்டனர். ஆனாலும் 4,5 வருடமாகவே மூருக்கும் பரவனுக்கும் உள்ளுக்குள்ள இருந்த காய்மாரம் கொஞ்ச நாள்லே [1532ல்] தூத்துக்குடியில் பெரும் கலவரமாய் மாறிச்சி அதுதான் பாம்பட கலவரம். 

நாயக்கனும் மூரும் சேந்து கொண்டு ஒரு பரவர் தலைக்கு நான்கு பணம் என கொட்டடிச்சி அறிவிச்சி...  பரவர்களை கொன்னு கொன்னு குவிச்சானுவ... இந்த கலவரத்தில் பரதவரினத்தின் கால் பங்கு காவு கொடுக்கப்பட்டது மாப்ளே!

பரவமார் உயிர்பிழைக்க பரவமாரோட 20 குட்டி தீவுகளில் குடும்பங்களோடு ஓடி ஒளிஞ்சிகிட்டாங்க ... சில வருடங்கள் கரை பக்கமே திரும்ப முடியவில்லை.  வேறு வழியில்லாமல் சமுதாயத்தை காப்பாத்த சாதித்தலைவர் குமரித் துறையில் முட்டத்தில் உங்க ஐயாவோடு தங்கியிருந்த குதிரை வியாபாரி டாம் குரூஸ் செட்டியை சந்திச்சி அவன் வழியா கொச்சிக்குப் போய் மதம் மாறி போர்த்துக்கீசியரோடு சேர்ந்து நம்ம கடலை, நம்ம கடல் உரிமையை திரும்ப எடுத்தோம். அந்த.. இனத்தையே நீரோடி வரை அடிச்சி விரட்டுனோம்.

பொறவு படை திரட்டி வந்து கடக்கரை முழுசா தீ வைச்சி பரவமாரை வேட்டையாடுனானுவ பட்டிமரைகாயரும், குஞ்சாலி மரைகாயரும் அவனுவளையும் பின்னாலே போய் வேதாளயில வெட்டி புதைச்சோம். அப்புறம் வந்தான் பாரு, இரப்பாளின்னு ஒரு கடல் கொள்ளைக்காரன், புன்னக்காயலை புடிச்சி வச்சிட்டு பரவமாரை துலுக்கனா மாறுன்னு கொடுமை படுத்தினா...  ஒரே ராத்திரியில கடக்கரை பட்டங்கட்டிமார் புன்னக்காயல் கோட்டைய பிடிச்சி, அவன கூர் கூரா வெட்டி
தொங்க வுட்டோம்....

பாரம்பரியமா நம்ம ஆத்தாமாரு, நம்ம உடப்புறந்தாமாரு, பாண்டி பரத்திமார் உடம்ப மறச்சி, கச்சைகட்டித்தான் வந்தோம். நாயக்கனா இருந்தாலும், நம்பூதிரியரா இருந்தாலும் எவனுமே இதில் தலையிட்டது இல்லை. ஆனால் பட்டங்கட்டி வீட்டு வேலைக்கார பொம்பளயளும் கச்சை கட்டியது ராச துரோக ம்னு சொல்லி வர்க கட்டுப்பாட்டை கடக்கரை பட்டங்கட்டி மார் கெடுக்கானுவன்னு நினைச்சானுவ உங்க அரசனும் நம்பூதிரிமாரும்,  அப்போ ஒரு நாராசாக்கமங்கலம் கொட்டாரத்துக்கு பட்டினபிரவேசம் வந்த நம்பூதிரிமார் முலையை மறைச்சி முண்டு போட்ட பட்டங்கட்டி நாஞ்சிப்பிள்ளை தோப்பு பார்வைக்காரி முலையை அறுத்து உயிரோடு எரிச்சானுவ, பட்டங்கட்டி மார் கரைகாட்டு வேலக்காரனுவளை சிறபுடுச்சானுவ,  தலைவனார் மருமவன் பட்டங்கட்டி நாஞ்சிப்பிள்ளை மதுர நாயக்க அரசனுக்கு ஆளனுப்பி படை கூட்டி வந்து நம்பூதிரிகளை கொன்னே போட்டாரு ….. ஆனா

நாயக்க படை போன பொறவு சாமிமாரை புது மதத்துக்காரன் கொன்னு போட்டான்னு பெரிய கலவரம் வந்தது. நாயன்மாரும், நம்பூதிரிமாரும் சேர்ந்து நாஞ்சிப்பிள்ளை தோப்ப அழிச்சி, வூட்டுக்கு தீ வைச்சதுல, நாஞ்சிப்பிள்ளை பொஞ்சாதி பிள்ளய குடும்பமே எறிஞ்சி போச்சி, நாஞ்சிப்பிள்ளைக்கு கண்ணும் போச்சி. 

கண்களில் கண்ணீர் முட்ட,  துக்கத்தில் தொண்டை அடைக்க, ஆராச்சார் விசும்பிச் சொன்னார். அனாதையா நின்னவர அவரு மருமவன் உவரி சந்தானம் பட்டங்கட்டி கூட்டிட்டு போய்ட்டாரு. ஆராச்சார் ஏதோ சொல்ல வாய் திறந்தாலும் ஓசை எழாமல் மெளனமானார். 

தலையை தூக்கி ஆகாயத்தையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த முதியவரின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. பரத வர்மனுக்கு இப்பொதுதான் புரிந்தது. நாஞ்சிப் பிள்ளையின் வீரம், விவேகம், தியாகம்.  அதுவும் தனது குருகுல தோழன் முத்தையா வாசின் தாத்தா என்று. 

அழுது கொண்டிருந்த ஆராச்சாரை தேற்றும் விதமாக ஆறுதலாக முதியவரின் கையை பற்றி கொள்ள நினைவு திரும்பியவராய் தன் முண்டை எடுத்து வழிந்த கண்ணீரை துடைத்தவர், மீண்டும் ஆவேசமானார் சொல்லு மாப்ளே…..?

நம்மள அழிக்க இந்த மதத்தை கையில ஆயுதமா உங்க அரசாங்கம் எடுத்தா
அதே போல இன்னொரு மதத்தை கேடயமா நாங்களும் எடுப்போம்ல..!

இதெல்லாம் உமக்கும் தெரிஞ்சிருக்கலாம். அப்படி உங்க அய்யா சொல்லித் தராமயிருந்தா நான் சொல்லி தான் ஆகணும்.  பாம்பட கலவரத்துக்கு பொறவு கொஞ்சங் கொஞ்சமாகங்கனார், ஆச்சாரியார், மற்றும் ஒரு சில தரவாடுகள் தவிர ஒட்டு மொத்த பரத இனமும் [1537] மதம் மாறினது தெரியும் தானே.

அப்போ கிருத்தவம் னா என்னன்னு ஒருத்தனுக்கும் தெரியாது. அப்புறம் அஞ்சாறு வருசத்துக்கு பொறவு கடக்கரைகளில் கிருத்துவத்துக்கு மாறியிருந்த புதிய கிருத்துவ பரதவருக்கு உபதேசம் சொல்லி வழி நடத்த போத்துகீசிய அரசரால் இங்கே அனுப்பபட்டவர் தான் வீர சவேரியார். ஆர்வம் தாளாமல் பூபாளன் ஆராச்சாரின் பேச்சை இடைமறித்து சொன்னான் தெரியும் எனக்கு. 

எங்க ஐயாவோட சாமி! ஆட்டுத்தோல் சாமி!!
கோட்டியாத்து கரையிலே ஒத்தையில நாயக்க படையை மிரட்டி விரட்டிய சாமி!!!

பரதவ வர்மனை கூர்ந்து கவனித்தார் பூபாளன் ஆராச்சார், இதுவரைக்கும் தன்னிடம் பதில் சொல்லாமல் இருந்ததால் தன்னிடம் பேரன் கங்கனார் பிணங்கி இருப்பதாக எண்ணிய பெரியவருக்கு இப்போது மகிழ்ச்சி சிறிதாக புன்முறுவலோடு சொன்னார். 

தெரியாதே பின்னே! உங்க ஐயாதானய்யா அவருக்கு எல்லாமே!!
ஊடல் மறந்து கூடலாய் உரையாடும் அவர்களது உரையாடல் வீர சவேரியாரின் பக்கம் திரும்பியது.
யார் இந்த வீர சவேரியார்....?
தொடர்வோம்.....

அன்புடன் உங்கள்
….கடல் புரத்தான்….
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com