வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 29 February 2020

கொற்கை

கங்குலில், கார் மணற் பவ்வத்துள் கரை தேடி நின்று தவித்தது பரங்கியர் நாவாயொன்று. குணதிசை கதிரோன் தொடுவானில் உதிக்க, குடதிசையில் மங்கி தெரிந்தது கறுப்பு. கறுப்பிலிருந்து பிரிந்த வெண் கொக்கு கூட்டங்கள் வானில் பூ மாலைகளாய் பறந்து விரிந்தன. 

மிதமாய் வீசியது வாடைக்கொண்டல்........

நாவாயின் அணியத்திலிருந்து கடலிலிரங்கிய நங்கூரக் கயிற்றைச் சுற்றியபடி போக்குக் காட்டிய கெழித்தி மீன் கூட்டம் காலைக் கதிரோனொளியில் தகதகவென மின்னியது........

சிறகடித்துப் பறந்து நாவாயைக் கடந்தது கடற்புறாக் கூட்டம்.......

அவைகளிலொன்று நாவாயின் தன்மரத்திலமர்ந்து அலகு நீட்டி அழகு காட்ட, மற்றவை கடல் மேற்பரப்பில் இரைதேடி மிதந்தசைந்தன.........

காத்திருந்த வெள்ளைத்துரை மிதவையை கடலிறக்கிக் கரை நோக்கி நகரும் அலையோடே கரையேகினான்....... 

தூரத்தே தொடுவானை உரசினாற்போல் மஞ்சு கொஞ்சும் பொதிகை மலைச் சிகரங்கள்........

வெள்ளிக் கீறலாய் மலையருவிகள், காடு, மேடு, நஞ்சை, புஞ்சையெல்லாம் கடந்து வரும் பொருனையின் காயல்....... 

குச்சு குச்சாய் பனைமரங்கள், உடங்காடுகள். நுரை பூத்துக் கிடந்தது வடதுறை.திட்டுத் திட்டாய் உமணரின் உப்பு வயல்கள்........ 

பாத்திகளில் விளைந்த உப்புப் படிமங்கள் மேல் கதிரவனின் வர்ணஜாலம்...... 

வெண்கன்றுகளாய் உப்புக் குவியல்கள்........ 

குவியலூடே பொதி சுமந்து ஊரும் இரட்டை மாட்டு வண்டிகள்......

குண திசையில் பவ்வத்துள் திரும்பிய நில நீட்சி, விட்டு வெளி வாங்கிப் பச்சை பசேலெனப் பாண்டியன் தீவு......... 

இயற்கையின் அரண், குடாக்கடல், காட்டு முயற் கூட்டம்........

அலைவாய்க்கரையில் ஓடிப் பதுங்கும் கருவாலி நண்டுகள், அவற்றை கவர வானில் வட்டமிடும் ஆலாக்கள்.........

தென் புறத்தே பரந்து விரிந்த வெள்ளை மணற்பரப்பு........ 

காணலம் பெருந்துறை....... 

புன்னையும் பூவரசும் தாழையும் ஞாழலும் வேம்பும் வாராசியும் பூத்துக் குலுங்கிய பன்னீர்ப் பூச்சொரியும் நெய்தலின் பூஞ்சோலை. பாடும் குயில்கள், ஆடும் மயில்கள்....... 

சுனையில் குடமேந்தி நீர் மொள்ளும் புனையிழையர்.......

கடற்புரத்தே வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவரின் பனையோலைக் குச்சிகள்..........

உணக்கும் தட்டுமடிகள், கட்டு மரங்கள்.......

கரையேற்றிய தம் திமில்களை மீளவும் கடுவிசையோடு அலையூடே தள்ளும் கட்டிளம் காளையர், அவர் கட்டுடல் கண்டு நாணிக் களிக்கும் கயல் விழி மங்கையர்........

காற்றில் மிதந்து வரும் திருமந்திர கானம். ஆர்ப்பரிக்கும் அலையூடே பரதவரின் அம்பா ஓசை...... 

களியலும் கழியாட்டமும், கூத்தும், பாட்டும் ......

வீட்டு முற்றத்தில் உலர்மீனைக் கவர வரும் காக்கைகளைச் சங்கெடுத்து வீசி விரட்டும் பாம்படப் பெண்டிர்...... 

மாநாய்கர் மாசாத்துவர் மேன்மாடங்கள்...... 

மாடங்களின் சாளரங்களைத் தழுவிக் கிடக்கும் பட்டுச் சீலைகளை நகர்த்திக் காலைக் கதிரோனை வரவேற்கும் முத்துவளைக்கரங்கள்....

விரிந்த வீதிகளில் கல்விச்சாலைகள், அன்னச் சத்திரங்கள், நாளங்காடிகள், நாணயச் சாலைகள், நவதானியக் கிடங்குகள்......

சாலைகளில் மூடுரதங்கள் வில்வண்டிகள், குதிரை லாயங்கள்.......

பல்வினைக் கலைஞர் உறையும் சத்திரங்கள்.......

சோனகர், சீனர், யவனரென மொய்க்கும் வணிகர் கூட்டம்..... 

கூலப் பரிமாற்றம். வியந்தே நடந்தான் வெள்ளைத்துரை.....

கடலுள்ளே நீண்டு கிடக்கும் பாறை மேல் மோதிச்சிதறும் அலையூடே தெரிந்தது வானவில்...... 

மறுபுறத்தே அலையற்ற தளும்பலாய்த் தென்கரை......

நெடிந்துயர்ந்த் கலங்கரை விளக்கம்.....

ஆடி நிற்கும் பன்னாட்டு நாவாய்கள்.....

காயலில் பொதி சுமந்து ஊறும் குறு நாவாய்க் கூட்டம்.....

துறைத் தளத்தில் சிற்றெரும்புச் சுறுசுறுப்பாய் மீகாமர். சுங்கச்சாவடி முன் பொதி பொதியாய் சம்பையும், பஞ்சும், பனைவெல்லமும், மிளகும்......

தூரத்தே தெங்கின் நிழலில் மரக்கலத்துப் பணிமனைகள்......

கதிரோனொளியில் பளபளக்கும் ஓடாவியர் கூருளிகள்.......

தேரியில் புகையும் சுண்ணாம்புக் காளவாய்கள்........

சரிவில் சங்குமால்கள்........

மேற்புறத்தே, மீன்கொடி பறக்கும் பாண்டியபதி மாளிகை.

அரியாசனம், அரசசபை, ஆடல் மகளிர், கட்டியம் கூறும் காவலர்கள், மந்திரி பிரதானிகள், சங்கம் அமைத்துக் கவி பாடும் புலவர் பெருமக்கள்........

பன்னாட்டுத் தூதுவர்கள், பல்லக்கு, பரிவாரம்.......

தங்கக் கிரீடம் தலைமேல் தரித்து, முத்துக் கிரீடம் முகமேல் பதித்துத் தனியரசாளும் சந்திரகுலாதிபதி, திருமந்திர மாநகர் தனசேகரன் பாண்டியன், உத்தரகோசமங்கையில் கல்தேர் ஓட்டி வைத்த தீரன், முழங்கு கடல் பணியும் கொற்கைக் கோமான் பரதவர்கோன் பாண்டியபதி அறத்திற் காக்கும் கொற்கையம் பெருந்துறை.

- ஜோ டிகுரூஸ்
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com