வசவசமுத்திரம்
வசவசமுத்திரம்+சதுரங்கப்பட்டினம்+வாயாலூர். (ECR. PALAR RIVER)
அகழாய்வின் நோக்கம்....
சங்க இலக்கியங்களில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படையில், இங்கு ஒரு துறைமுகம் இருந்து அழிந்துபட்டதாகக் குறிப்பு காணப்படுகிறது. இத்துறைமுகத்துக்கு உரோமானியர்கள் வருகை புரிந்துள்ளனர். சங்க காலத்தில், தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியாக விளங்கிய இதனை, பல்லவர்கள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டிருந்தனர். இவ்வூருக்கு அருகில் சதுரங்கப்பட்டினம் உள்ளது. இதுவும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஊராகும். இங்கும் இயற்கையான துறைமுகம் இருந்துள்ளது.
பல்லவ மன்னன் ராஜசிம்மனின் கல்வெட்டு ஒன்று இவ்வூருக்கு அருகில் உள்ள வயலூரில் காணப்படுகிறது. இந்தக் கல்வெட்டில், பல்லவ மன்னர்களின் பட்டியல்கள் ஆரம்பம் முதல் இராஜசிம்மன் வரை குறிப்பிடப்பட்டுள்ளது. இது, வரலாற்றில் ஒரு தெளிவை ஏற்படுத்துகிற ஒன்றாக விளங்குகிறது. பாலாற்றின் எதிர்க்கரையில், பல்லவ மன்னர்கள் நிர்மாணித்த பரமேஸ்வரமங்களம் அமைந்துள்ளது. எனவே, இப்பகுதி பல்லவர் காலத்திலிருந்தே குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்த பகுதியாக விளங்கிவருவதை அறியமுடிகிறது. இன்றைய வசவசமுத்திரம், பண்டைய காலத்தில் வயலூரின் பகுதியாகவும், பின்னர் விஜய நகர மன்னர்கள் காலத்தில்தான் வசவசமுத்திரம் எனப் பெயர் மாற்றம் பெற்றதாகவும் குறிப்பர். இதனைத் தெளிவு பெறவே, இங்கு அகழாய்வு தேவை என தமிழ் நாடு அரசு முடிவு செய்தது.
அதன்படி மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் -
1. உரோமானிய நாட்டு மதுக்குடுவைகள் மற்றும் கருப்பு - சிவப்பு மட்கலன்கள்.
2. உறை கிணறுகள்.
3. கால்வாய்ப் பகுதி.
4. அரிய கல்மணிகள்
ஆகியவை சேகரிக்கப்பட்டு வெளிக்கொணரப்பட்டும் உள்ளன.
வசவசமுத்திரம் அகழாய்வு வழியாக, கிழக்குக் கடற்கரையில் மேலும் ஒரு வணிக நகரம் இருந்துள்ளது புலப்பட்டுள்ளது. இது, சங்க காலத் துறைமுகமாகச் செயல்பட்டு வந்துள்ளது என்பதும், இப்பகுதி மக்கள் உரோமானியர்களோடு தொடர்பு கொண்டு வணிகம் புரிந்துள்ளனர் என்பதும் வெளிப்பட்டுள்ளன. “ஆடவற்கழகு பொருள்வழிப் பிரிதல்” என்ற கூற்றின்படி, கடல்கடந்து சென்று பொருளீட்டுதல் என்பது சங்க காலம் தொட்டே நிகழ்ந்து வருகின்ற ஒன்று என்பதை இவை எடுத்துக்காட்டுகின்றன.
இங்கு, அகழ்வுக்குழிகள் 4.25 மீட்டர் ஆழம் வரை தோண்டி ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் இருந்து உறை கிணறும், அதன் அருகில் வாய்க்காலும் காணப்படுவதால், இவை நெசவுத் தொழிலுக்காகப் பயன்படுத்தப்பட்ட சாயத் தொட்டிகளாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில், இதேபோன்ற அமைப்பில்தான் அரிக்கமேடு அகழாய்விலும் சாயத்தொட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கு இரண்டு உறை கிணறுகள் காணப்பட்டன.
அவற்றில் ஒன்று 11 உறைகளையும், மற்றொன்று 5 உறைகளையும் கொண்டுள்ளது. இவற்றின் விட்டம், கீழே செல்லச் செல்ல அதிகரிக்கிறது. இவ்வாறு இருந்தால், இது குடிநீர்க் கிணறாகத்தான் இருக்க வேண்டும் என அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
அடுத்து கிடைத்துள்ள தொல்பொருட்களில் ஒன்று, கைப்பிடியுடன் கூடிய ஆம்போரா ஜாடியின் ஒரு பகுதி ஆகும். உரோமானியர்களுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்புக்கு இதுவும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இவற்றை ஒப்புநோக்கும்போது, இப்பகுதி சங்க காலம் தொட்டே உரோமானியர்களுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்த சிறப்பான ஒரு நகரமாகத் திகழ்ந்துள்ளது என்பதை உறுதிசெய்கிறது.
மேலும் இங்கு இன்னும் நுணுக்கமாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்ட்டால், இதற்கு பல தெளிவான பதில் கிடைக்கும்.
நன்றி... Kalpakkam Times