வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 19 June 2021

பழைய காயல்

தாமிரவருணி பெருகி வந்த காலத்தில் அதன் ழிமுகத்தில் இருந்தது கொற்கை நகரம். கப்பல்கள் நதிவழியாகவே உள்ளே வந்து மீளும். ஆற்றுநீர் குறைந்தபோது ஓட்டமிழந்து அது நான்கு வழிகளாகப் பிரிந்தது. பெரிய வண்டல்குன்றுகள் உருவாகி நீர் தேங்கி காயலாகியது. இன்று புன்னக்காயல் முதல் காயல்பட்டினம் வரை உள்ள பகுதி அன்று நீர்த்தேக்கமாக இருந்தது. பின்னர் நீர் தேக்கங்கள் நடுவே வண்டல்குன்றுகள் உருவாகி ஊர்களாயின. பழையகாயல் என்ற இடம் இன்று ஒரு ஊர். இன்றும் இப்பகுதி பள்ளமாகவே உள்ளது. வண்டல்படிந்த காயல்பகுதிகள் வளமான அடர்ந்த வாழைத்தோப்புகளாக ஆகியிருக்கின்றன.


தமிழகத்தில் குமரி மாவட்டத்துக்கு வெளியே இத்தனை செழிப்பான வாழைத்தோப்புகளை எங்கும் பார்க்க முடியாது. சில இடங்களில் சதுப்புகள் பல ஏக்கருக்கு விரிந்து கோரையும், ஆகாயத்தாமரையும் நீரூமத்தையும் மண்டிக் பச்சைவெளிகளாகக் கிடந்தன. கொற்கையில் பாண்டியன் வெற்றிவேல்செழியன் கட்டியதாகச் சொல்லப்படும் வெற்றிவேலம்மன் கோயில் உள்ளது. காயல்சதுப்பு நடுவே மேட்டில் தனியாக நிற்கும் கோயிலுக்குச் செல்ல ஒரு மண்பாதை போடப்பட்டிருக்கிறது. பிற்காலத்தில் கட்டப்பட்ட சிறு கற்கோயில். உள்ளே உள்ள சிற்பமும் புதியதே. வெற்றிவேலம்மன் என்ற பெயர் மட்டுமே ஐதீகமாக இருந்து வருகிறது. அது கண்ணகிதான் என்று அங்கே நெடுங்காலம் தொல்லியலாளராக பணியாற்றிய ராமச்சந்திரன் சொல்கிறார்.

சங்க இலக்கியம் காட்டும் கொற்கைத் துறைமுகம்
 
கி.மு. 300 ஆண்டுகளுக்கு முன்பாகவே தாமிரபரணி ஆற்றங்கரையோரம் மக்கள், தங்கம், வெண்கலம், இரும்பு, ஆகிய உலோகத்தினைப் பயன்படுத்தியுள்ளனர். பண்பட்ட நாகரீகத்தின் வெளிப்பாடுகளே இவைகள். தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி நடைபெற்றுள்ளன என்பதற்காதாரமாக உரோம நாணயங்கள் கிடைத்துள்ளன. தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களின் நாகரீகம் ஆற்றங்கரை நாகரீகம் அல்லது நதிக்கரை நாகரீகம் ஆகும். தாமிரபரணி கடலில் கலந்த கொற்கைக் குடாப் பகுதியின் கொற்கை தலைசிறந்த துறைமுகப்பட்டினமாகத் திகழ்ந்து.

சங்ககாலத்தின் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக தலைசிறந்த துறைமுகமாகக் கொற்கைத் துறைமுகப்பட்டினம் விளங்கியது. பாண்டியர்களின் தலைநகரம் மதுரையும், துறைமுகப்பட்டினம் கொற்கை. இதனுடைய துணை துறைமுகங்களாக பழையகாயல். தென்தமிழகம் வருகைதந்த இத்தாலியைச் சேர்ந்த மார்க்கோபோலோ “ காயல் “ துறைமுகத்தில் கப்பலேறியதாகத் தம்முடைய பயணக் குறிப்பேட்டில் பதிவு செய்துள்ளார். அவரது குறிப்பின்படி 12 ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலம் வரை கொற்கைத்துறைமுகம் இருந்துள்ளது.

கொற்கைப் பொழிவிழந்து மண்மேடான பின்பு பழையகாயல் இயற்கையான துறைமுக அமைப்பைக் கொண்டிருப்பதால் "துறைமுகம்" என்ற உயர்நிலையைப் பெற்றது. கடல்கோளினால் பழையகாயல் துறைமுகம் தூர்ந்து போயிற்று. தாமிரபரணி ஆற்றின் கரையோரமிருந்த இரண்டாவது துறைமுகம் மறைந்துபோனது. கி.பி.1580 இல் போர்ச்சுக்கீசியர்களால் தூத்துக்குடி துறைமுகம் தொடங்கப்பெற்றது . 

கிமு 6 ம் நூற்றாண்டு முதல் இரண்டாயிரம் ஆண்டுகள் பாண்டிய, சேர, சேழ மன்னர்கள் தமிழகத்தை ஆண்டுவந்தனர். இந்த மூவருமே சகோதரர்கள் எனவும் பாண்டியன் மூத்தவன் எனவும் வரலாறு கூறுகின்றது. ஆரம்ப காலத்தில் கொற்கை தலைநகராக இருந்தது. பின் அது பாண்டிய நாட்டின் தலைநகராக மாறியது. பாண்டியனின் துறைமுகமும் கொற்கைதான்.

பழம் பெருமை வாய்ந்த பழையகாயல்

பாண்டியர்கள் முதலில் ஆட்சி செய்த இடம் கொற்கை. லெமூரியா கண்டத்தின் நடுவே பழம் பாண்டியர்களின் கொற்கை அமைந்திருந்தது. அவர்களின் வாழ்விற்கும், செழிப்புக்கும் காரணமாக கொற்கை துறைமுகம் இருந்தது. கடல் வாணிபத்தால் இத்துறைமுகம் புகழ் பெற்றது. கடல் தங்களை வாழவைக்கும் கடவுளாக பாண்டியர்கள் கருதியதால், சின்னமாக மீனை வைத்துக் கொண்டனர். இரண்டு மீன்களின் இருபுறமும் உள்ள கண்கள் தெரிய வேண்டுமென்பதற்காக செங்குத்தாக நிற்பது போல் அமைத்தனர். எதிலும் தாங்கள் உறுதியாக நிற்பவர்கள் என்பதை காட்ட இச்சின்னத்தை தேர்ந்தெடுத்தனர். கொற்கை துறைமுகம் கடல்கோளால் சீரழிய, பழைய காயலுக்கு துறைமுகம் இடம்பெயர்ந்தது. இங்கும் கடல்கோளால் 4 கி.மீ., தூரத்தை கடல்கொண்டது. இப்படி அடிக்கடி ஏற்பட்ட கடல் கோள்களில் இருந்து தப்பிக்க, பாண்டியர் தலைநகரை மதுரைக்கு மாற்றினர்.
 
கொற்கையை ஆண்ட கடைசி மன்னர் முடத்திருமாறன். மதுரையை பாண்டியர்கள் ஆண்டாலும், கொற்கையை அவர்களது வாரிசுகள் ஆண்டனர். கொற்கை, பழைய காயலில் இருந்து பாண்டியர் தலைநகரம் மதுரைக்கு இடமாறியதை பிளினி போன்ற பேராசிரியர்கள் தங்கள் நூலில் குறிப்பிட்டுள்ளனர். பாண்டியர்களின் கொற்கை தாமிரபரணி ஆற்றின் வண்டல் மண்ணால் நிலமாக மாறியதால் பின்னர் பழைய காயல் பாண்டியர்களின் புதிய துறைமுகம் ஆனது. கி.பி.1213ஆம்நூற்றாண்டுகளில் பாண்டிய நாட்டின் சிறந்த துறைமுகமாக விளங்கிய காயல் துறைமுகம் இன்று பழைய காயல் என்ற பெயரில் கடலிலிருந்து 3 கி.மீ. தொலைவில் ஒரு சிற்றூராக உள்ளது.
 
பாண்டிய மன்னன்

முதலாம் மாறவர்மன் குலசேகரன் (1268-1310) ஆட்சிக் காலத்தில் மார்கோ போலோ என்ற வெனிஸ் நகரப் பயணி பாண்டிய நாட்டிற்கு வருகை தந்தார். இவர் காயல்துறை முகத்தைப் பார்வையிட்டு (கி.பி. 1292) அக்காலத்தில் காயல்
சிறந்த துறைமுகமாக விளங்கியது என்றும் காயலில் நடைபெற்ற முத்துக்குளித்தல் பற்றியும் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டது பற்றியும் இவர் பல குறிப்புகள் எழுதியுள்ளார். பழைய காயல் சென்ற மார்க்கோ போலோ, காயல் என்ற பெயரில் அதைக் குறிப்பிட்டுள்ளார். ‘மாபரின் (தமிழகம்) மிக முக்கியமான துறைமுக, வணிக நகரம் இது. ஏடன், அரேபிய நாடுகளிலிருந்து இங்கே வரும் கப்பல்கள் மூலமாக குதிரைகளும் பிற பொருள்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன. வெளி தேசங்களிலிருந்து இந்தியாவுக்கு வரும் கப்பல்கள் அனைத்துமே காயலுக்கு வராமல் சென்றதில்லை.’

(மார்க்கோ போலோவின் பயணக் குறிப்புகளில் இருந்து)

மேற்குத் திசையிலிருந்து வந்த எல்லாக் கப்பல்களும் பழைய காயலுக்கு வந்தன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வாசப் என்ற அரேபிய அறிஞரும் பழைய காயல் துறைமுகத்தின் வாணிபம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.  ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தூத்துக்குடித் துறைமுகம் சிறப்பெய்தியதால் பழைய காயல் துறைமுகம் செயல்படுவது நிறுத்தப்பட்டது. தமிழ்மொழிக்குத் தொண்டாற்றிய மேலை நாட்டறிஞர் கால்டுவெல் இப்பகுதியை ஆய்ந்து பல பழம் பொருள்களைக் கண்டார்.

பழைய காயல் – சுற்றுலாத்தலம்

பழைய காயல் பகுதியில் வங்க கடலில் தாமிரபரணி சங்கமிக்கும் முகத்துவாரப் பகுதியில் படகுத்துறை அமைத்து சுற்றுலா தலமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருகிறது. தென் தமிழ் நாட்டின் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி நதி பொதிகை மலையில் உற்பத்தியாகி பழையகாயல் அருகே கடலில் சங்கமம் ஆகிறது. தாமிரபரணி நதியின் பெருமைகளை பற்றி கூறும் நூல் தாமிரபரணி மகாத்மியம்.

தாமிரபரணி முகத்துவாரம்: தமிழகத்தில் வற்றாத ஜீவ நதியாகவும், தமிழகத்தில் உருவாகி தமிழகத்தில் கடலில் கலக்கும் நதியாகவும் தாமிரபரணி ஆறு உள்ளது. இந்த ஆறு துாத்துக்குடி மாவட்டம் பழையகாயல் புன்னக்காயல் ஆகிய பகுதிகளில் மூன்று பிரிவுகளாக பிரிந்து கடலில் கலக்கிறது. 

இயற்கை அழகு: பழையகாயல் பகுதியில் தாமிரபரணி ஆறு கலக்கும் டெல்டா பகுதியில் ஆறு கிமீ. துாரம் மாங்குரோவ் காடுகளுடன், இயற்கை எழில் கொஞ்சும் இடமாக திகழ்கிறது. ஆற்றின் மூன்று பிரிவுகளுக்கும் இடையே தீவு போன்ற திட்டுக்களும் காணப்படுகிறது. இந்தப்பகுதியில் புதிய படகுத்துறை அமைக்கப்படவுள்ளது. இங்கிருந்து படகில் பொது மக்கள் படகு சவாரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பழைய காயல்பகுதியில் மீன் ஏலக்கூடம், வலை பின்னும் கூடம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் துவங்கவுள்ளன. சுற்றுலாத்துறை சார்பில் பழைய காயல் பகுதி மேம்படுத்தப்படவுள்ளது. இங்கு புதியதாக படகுத்துறை அமைக்கப்படவுள்ளது.இங்கிருந்து சுற்றுலா பயணிகள் படகு மூலம் தாமிரபரணி கடலில் கலக்கும் முகத்துவாரம் வரை அழைத்து செல்லப்படுவார்கள். பழைய காயல்பகுதியை சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
.
பழைய காயல் சதுப்புநில காடுகள்:
தூத்துக்குடி மாவட்ட பழைய காயல் பகுதியில் 14 எக்டேர் பரப்பில் சதுப்பு நில காடு உள்ளது. மன்னார் வளைகுடாவில் உள்ள சதுப்பு நிலக் காடுகளில் சட்ட விரோதமாக உப்பளம் அமைக்கும் பணியில் சிலர் ஈடுபட்டதை வனத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த காடுகளை பாதுகாக்கும் வகையில் மொத்த பரப்பளவை மறு ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட பழைய காயல் பகுதியில் 14 எக்டேர் பரப்பில் சதுப்பு நில காடு உள்ளது.

சதுப்பு நில காடுகளை பாதுகாக்கும் வகையில் அதன் மொத்த அளவையும் மறு ஆய்வு செய்யும் பணியை வனத்துறை தொடங்கியுள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது "சதுப்புநில காடுகள், இயற்கை அளித்த கொடை, கடற்கோள் வந்த போது மாங்குரோவ் காடுகள் கொண்ட கிராமங்கள் தப்பின. அலைகளை தடுக்கும் சக்தி இந்த காடுகளுக்கு உள்ளது. இந்த காடுகளை பாதுகாக்க மொத்த பரப்பளவை மறு ஆய்வு செய்யும் பணிதய தொடங்கியுள்ளோம்" என்றார். 

சதுப்பு நில காடுகள், ஆறும், கடலும் சேரும் முகத்துவாரங்களில் காணப்படும் இவை கடல், அலைகளின் வேகத்தை குறைப்பதால் அலையாத்தி காடுகள் என்ற பெயரும் உண்டு. கடல் நீரும், நன்னீரும் சேருவதாலும் அலை வேகம் தணிந்திருப்பதாலும் இப்பகுதிகளில் மீன் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக இறால் மீன்கள் அதிகமாக கிடைக்கும். இந்தியாவில் சதுப்பு நில காடுகள் மேற்கு வங்கத்தில் அதிகமாக காணப்படுகின்றன. தமிழகத்தில் பிச்சாவரம், முத்துப்பேட்டை, மன்னார் வளைகுடா பகுதியான பழைய காயல் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.

பழையகாயல் சிர்க்கோனியம் திட்டம்.

சிர்க்கோனியம் திட்டம் (Zirconium Project), பழையகாயல்:  சிர்க்கோனியம் எனும் வேதியல் பொருள் சிர்க்கோன் எனும் அரியவகை மணலிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அணுமின் நிலையங்களுக்குத் தேவைப்படும் சிர்க்கோனியம் ஆக்ஸைட் மற்றும் சிர்க்கோனியம் உறிஞ்சி (sponge) போன்றவைகளை தயாரிப்பதற்காக அணுசக்தி எரிபொருள் நிலையம் (Nuclear Fuel Complex) நடத்துகிற தொழிற்சாலைதான் தூத்துக்குடி மாவட்டம்,  பழையகாயல் கிராமத்திலுள்ள சிர்க்கோனியம் திட்டம். இது 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் துவக்கி வைக்கப்பட்டது. ஆண்டு தோறும் சுமார் 500 டன் சிர்க்கோனியம் ஆக்ஸைட் மற்றும் 250 டன் சிர்க்கோனியம் உறிஞ்சியை (sponge) அணுமின் நிலையங்களுக்காக இந்த ஆலை உற்பத்தி செய்யும்.

பழைய காயலில் கப்பல் கட்டும் தளம்:

தமிழக அரசு சார்பில் கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும் என அறிவித்த முதல்வர் ஜெயலலிதா, தென் தமிழகத்தில் துறைமுகம் அமைந்துள்ள தூத்துக்குடியில் தளம் அமையும் என அறிவித்திருந்தார். தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளத்தை எங்கு அமைப்பது என்று ஆய்வு செய்த மாவட்ட நிர்வாகம், மூன்று இடங்களை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. கப்பல் கட்டும் தளத்திற்கு 1000 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. எந்த இடத்தில் தளம் அமையும் என அரசு ஒப்புதல் அளித்த பின், நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்து பரிந்துரை செய்துள்ள மூன்று இடங்கள், பழைய காயல், வைப்பாறு, காயல்பட்டினம், ஆகியவைதான். இவற்றில் அரசு தேர்வு செய்யும் பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படவுள்ளது.

சங்குமுகம்
 
பழையகாயல் அருகில் தாமிரபரணி கடலில் கலக்கும் சங்குமுகத்தில் பக்தர்கள் புனித நீராடினர். பழையகாயல் அருகில் சங்குமுகத்தில் தை அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் புனித நீராடினர். தாமிரபரணி ஆறு பழையகாயல் அருகில் மூன்றாக பிரிந்து வங்கக்கடலில் கலக்கிறது பழைய காயல் அருகே வங்கக் கடலுடன் தாமிரபரணி ஆறு கலக்கும் பகுதி மூணாற்று முக்கு என்றும் சங்குமுகம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை தினங்களில் பக்தர்கள் திரளாக வந்திருந்து புனித நீராடுவதை புனிதமாக கருதுகின்றனர்.  மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உளள பல்வேறு கோவில்களில் நடைபெறும் விழாக்களுக்கு இங்கிருந்துதான் புனித நீர் எடுத்து வரப்படுகிறது. இந்த இடத்திற்கு பழையகாயலிலிருந்து சுமார் 8 கிமீ நடந்துதான் செல்ல வேண்டும் அல்லது படகில் செல்ல வேண்டும்.  ஆடி மற்றும் தை அமாவாசை தினங்களில் பொதுமக்கள் இங்கு வந்து தங்கள் மூதாதையர்களை நினைத்து புனித நீராடுவது ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. ஆடி அமாவாசையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இருந்து சங்குமுகத்துக்கு வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் மூதாதையரை நினைத்து புனித நீராடி, அங்குள்ள விநாயகரை தரிசித்தனர். இந்த இடத்துக்கு சுமார் பத்து கிலோ மீட்டர் நடந்து ஆற்றைக் கடந்து செல்வதால் பக்தர்கள் இதை புனிதப் பயணமாக கருதுகின்றனர்.
 
பொருநையாறு க‌ட‌லோடு க‌ல‌க்குமிட‌ம் ச‌ங்க‌முக‌ம். காய‌ல் என்ப‌து க‌ழிமுக‌ம். க‌ட‌லைவிட்டுக் க‌ழிந்து ம‌ண‌லால் த‌டையுண்ட‌ நீர்த்தேக்க‌ம் காய‌ல் என‌ப்ப‌டும். க‌ட‌ல் பின் த‌ள்ளிப் போய்விட்ட‌தால் இத‌ன் முத‌ன்மை குறைந்து போயிற்று. பழைய‌ காய‌ல் மிக்க‌ சிற‌ப்புட‌ன் இருந்த‌போது ச‌ங்க‌முகேச‌ர் ஆல‌ய‌மும் மிக‌ச் சிற‌ப்பாக‌ இருந்திருக்க வேண்டும் என்கிறார் இ.மு. சுப்பிர‌ம‌ணிய‌.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com