வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Monday 22 August 2022

தமிழர்கள் என்றால் அலறும் கிரேக்கர்கள்
தமிழ்ப் புத்தாண்டு தமிழகத்தில் மட்டுமில்லாமல் கம்போடியா, வியட்நாம் வரை இன்றும் கொண்டாடப்படுகிறது. அதாவது நம் முன்னோர்கள் சுமார் 5000 கிலோமீட்டர் தொலைவையும் தாண்டிக் கிழக்காசிய நாடுகளில் நம் நம்பிக்கையை மற்றும் கலாச்சாரத்தைக் கொண்டு சென்றுள்ளார்கள்.

சோழ மன்னர்கள் கிழக்காசிய நாடான பர்மா, லாவோஸ், கம்போடியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் வரை தம் ஆட்சியை விரிவுபடுத்தினார்கள். இந்தக் கிழக்காசிய நாடுகளில் நம் கோயில்கள் நிறையக் காணப்படுகின்றது. அங்கே உள்ளக் கோயில்களிலும் சிவன், பிரம்மா, விஷ்ணு போன்ற சிலைகள் நிறைந்து காணப்படுகின்றன. கம்போடியாவில் உள்ள கோன்கெர் (Konh Ker) ஊரில் ஒரு பிரமிடு உள்ளது. இது நாலாவது ஜெயவர்மனால் கட்டப்பட்டது. இந்தப் பிரமிடு எகிப்தில் உள்ளப் பிரமிடுகளை ஒத்துள்ளது. ஆனால் உயரம் குறைவுதான்.

இந்தப் பிரமிடின் மையப் பகுதியில் ஒரு லிங்கம் இருந்தது என்கிறனர். லிங்கம் சிவனின் வடிவமாகக் கருதப்படுகிறது என்பதை ஊரறியும். இந்த லிங்கம் ஒளி ஊடுருவும் படிகத்தால் செய்யப்பட்டது என நம்பப்படுகிறது. இந்தப் பிரமிடிலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் புகழ் பெற்ற அன்கோ வாட் திருக்கோயில் உள்ளது. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய கோயிலாகும். இந்தக் கோயிலும் நம் சோழர்களின் உதவியுடன் கட்டப்பட்டதுதான். கம்போடியாவிற்கும் தமிழ் நாட்டிற்கும் வான்வழி தொலைவு சுமார் 3000 கிலோமீட்டர் ஆகும். தரைவழி தொலைவு சுமார் 5000 கிலோமீட்டர் ஆகும். கம்போடியாவில் உள்ள கோன்கெர் (Konh Ker) ஊரில் ஒரு பிரமிடும் சோழர்களால் 1200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த நாட்டில் தாய்லாந்து எல்லையில் இன்னொரு பிரமிடும் உள்ளது. இவை இரண்டும் ஒரே மாதிரியான அமைப்பைக் கொண்டுள்ளது.

இது மாதிரி பல கோயில்கள் கம்போடியாவைச் சுற்றி உள்ள நாடுகளில் உள்ளது. மேலும் தமிழ்ப் புத்தாண்டு தமிழகத்தில் மட்டுமில்லாமல் கம்போடியா, வியட்நாம் வரை இன்றும் கொண்டாடப்படுகிறது. அதாவது நம் முன்னோர்கள் சுமார் 5000 கிலோமீட்டர் தொலைவையும் தாண்டிக் கிழக்காசிய நாடுகளில் நம் நம்பிக்கையை மற்றும் கலாச்சாரத்தைக் கொண்டு சென்றுள்ளார்கள். அலெக்சாண்டரும் சுமார் 4000 கிலோமீட்டர் தூரம் கடந்து இந்திய எல்லைவரை வெற்றி வாகைசூடி வந்தார். ஆனால் இந்திய எல்லைவரை வந்தவர் திரும்பிச் சென்றார். இது பெரிய சாதனையாக நம்பப்படுகிறது.

அவர் இந்தியா வரை வந்து சென்ற அடையாளங்கள் பெரியதாக எதுவும் இல்லை. ஆனால் சோழர்கள் கட்டிய கட்டிய கோயில்கள் நிறையத் தெற்காசியாவில் இன்றும் உள்ளது. மாறாக அலெக்சாண்டரின் பெயர் உலகமெங்கும் மக்களின் மனதில் பதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சோழர்களை பற்றி தமிழ்நாட்டில் கூட மக்களுக்கு அதிகம் தெரியவில்லை என்பது வருத்தமான உண்மை. தமிழ் நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பள்ளிகளில் சோழர்களின் பெருமையை உணர்வுப்பூர்வமாக சொல்லித்தர வேண்டும். உலகமெங்கும் சோழர்கள் புகழ் பரப்பப்பட்ட வேண்டும்.

விமானத்தில் இந்தியாவிலிருந்து அமெரிக்க நகரமான லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லச் சுமார் 22 மணிநேரம் ஆகும். குடும்பத்தோடு பயணித்தால் நேரம் போவது தெரியாது. தனியாகப் பயணித்தால் நிலைமை மோசம்தான். திரை விரும்பிகள் படம் பார்க்கலாம். அப்படியும் எத்தனை படம் பார்த்துவிடப் போகின்றீர்கள். பக்கத்தில் இருப்பவரிடம் பேச ஆரம்பித்தால் பொழுது போகும். அப்படி ஒருமுறை தனியாகப் பயணிக்கும்போது அந்த விமானத்தில் டாக்டர் பொன்ராஜ் அவர்களைச் சந்தித்தேன். அவர் இந்த விமானத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பயணிக்கிறார் என்ற தகவலைத் தெரிவித்தார். என்னை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். பின் கலாம் விமானத்தில் பயணிக்கும் செய்தி பரவ, அனைவரும் பார்க்க விரும்பினர். குடும்பம் குடும்பமாக அனைவரும் கலாமுடன் படம் எடுத்துக் கொண்டனர். அந்த விமானத்தில் சுமார் 350 பயணிகள் இருந்தனர்!! கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் நீண்ட வரிசையில் நின்று பயணிகள் அனைவரும் கலாம் அவர்களைப் பார்த்தனர்.

என் அருகில் உள்ள இருக்கையில் சுமார் அறுபது வயதான கிரேக்கர் தன் மனைவியுடன் பயணித்தார். அவர் மனைவிக்குச் சன்னல் ஓர இருக்கை.. அந்த வரிசையில் கடைசியில் நான் அமர்ந்திருந்தேன். அவர் எங்கள் இருவருக்கும் இடையே நடுவில் அமர்ந்திருந்தார். அவர்கள் ஜெர்மனி தலைநகருக்குப் பயணித்தனர். எல்லோரும் யாரைப் பார்க்க இப்படி நீண்ட வரிசையில் நிற்கின்றனர் எனக் கேட்டார்.

நான் இந்திய ஜனாதிபதி இந்த விமானத்தில் பயணிக்கிறார் அவரைப் பார்க்கத்தான் என்றேன்.. அவரை ஏன் பார்க்க வேண்டும்? அவர் ஜனாதிபதியாகப் பணியாற்றுகிறார். நாம் நம் வேலைப் பார்க்கிறோம். ஜனாதிபதியென்றால் என்ன இப்படிக் கால் கடுக்க நின்று பார்க்க வேண்டுமா என்றார். மக்களுக்கு அவரைப் பிடித்திருக்கிறது எனவே பார்த்துப் படம் எடுத்துக் கொள்கின்றனர் என்றேன். அவர் விடுவதாக இல்லை. பதவிக்கு வருவதற்கு முன் அவர் திரைப் பட நடிகரா எனக் கேட்டார். நான் இல்லை. அவர் ஒரு விஞ்ஞானி என்றேன். அப்படியா? ஆச்சரியமாக உள்ளதே என்று என்னைக் கூர்ந்து பார்த்தார். என் பதிலில் அவருக்குத் திருப்தி இல்லை. பதவிக்கு வருவதற்கு முன் கலாம் என்னவாக இருந்தாரென வரிசையில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் கேட்டார். அவரும் கலாம் ஒரு விஞ்ஞானி என்றார். பின்னர் என்னிடம் சிரித்தவரே மன்னிப்பு கேட்டுக் கொண்டார். எனக்குச் சற்று வித்தியாசமாக இருந்தது. என்னைச் சமாதானப்படுத்த நீ என்ன வேலை பார்க்கிறாயென அந்தக் கிரேக்கர் கேட்டார்.

நானும் ஓர் ஆராய்ச்சியாளன்தான் என்றேன். அப்படியே பேச்சில் பல தகவல்கள் பரிமாறிக் கொண்டோம். பின்னர் இந்தியாவில் எந்த இடத்திற்குப் போகிறாய் என்றார்.

நான் இந்த விமானம் டெல்லி செல்கின்றது. நான் அங்கிருந்து 5000 கிலோமீட்டர் தெற்கு நோக்கிப் பயணிக்க வேண்டும் என்றேன். ஓ.. நீண்டதூரப் பயணம் என்றார். நான் ஆமா எனத் தலையசைத்தேன். உனக்கு எந்த ஊர் என்றார். என்ன இந்த ஆளுக்குத் தெரியப்போகிறது என நினைத்துத் தமிழ்நாட்டிற்கு போகிறேன் என்றேன். அடுத்த வினாடி என் இருக்கைக்கு எதிர் திசையில் தன் உடலை நகட்டிக் கொண்டார். என்னை விரோதமாக பார்க்க ஆரம்பித்தார். அவர் முகத்தில் வியப்பு மண்டிக்கிடந்தது.

நான் எதுவும் தப்பா சொல்லிவிட்டோமா? அல்லது இந்த மனிதன் எதாவது தப்பா புரிந்து கொண்டாரா என யோசிக்க ஆரம்பித்தேன். அவர் பேச ஆரம்பித்தார்.

அலெக்சாண்டரைக் கொன்றது யார் தெரியுமா ? என்ற ஒரு கேள்வியை முன்வைத்தார். வரலாறு பத்தாம் வகுப்பில் படித்தது. ஒன்றும் ஞாபகத்தில் இல்லை. தெரியாது என அசடு வழியப் பதில் சொன்னேன். அவர் முகத்தில் வியப்பு சற்றும் தணிந்தபாடில்லை.. ஆச்சரியமாக உள்ளது.. உனக்கு உண்மையிலேயே தெரியாதா என்றார். தெரியாது என்றேன்.

உடனே அவர் தொடர்ந்து பேச ஆரம்பித்தார். அலெக்சாண்டரைக் கொன்றது புருஷோத்தமன் (Porus) என்ற தமிழன் என்றார். (மன்னன் புருஷோத்தமன் சிந்து பகுதியைச் சேர்ந்தவர் என்று நாம் அறிவோம்.. ஆனால் அவரை தமிழன் என்றே கிரேக்கர்கள் கூறுகின்றனர்.)
நான் அலெக்சாண்டர் நோயுற்று இறந்ததாகப் படித்த ஞாபகம் என்றேன். அவர் சிரித்தவாறே.. ஐரோப்பிய வரலாற்று ஆசிரியர்களுக்கு அலெக்சாண்டர் ஒரு தமிழனால் கொல்லப்பட்டாரென ஒத்துக்கொள்ள மனமில்லை. அதனால் இப்படி நோயுற்று இறந்ததாக எழுதிவைத்துள்ளனர் என்றார்.

உண்மையில் புருஷோத்தமன் விஷம் தடவிய அம்பால் அலெக்சாண்டரைத் துளைத்தார். அந்தப் புண் ஆறாமல் அலெக்சாண்டர் இறந்தார் என்றார். எனக்குத் தலைச் சுற்ற ஆரம்பித்து. வியப்பாகவும் இருந்தது. அவர் முகத்தில் வியப்பு சற்றும் தணியவில்லை.

முகம் சற்று கோபமாக இருப்பது போலவும் எனக்குத் தோன்றியது. உனக்கு ஒரு மாவீரனை, பல ஆயிரம் கிலோ மீட்டர் பரப்பளவைக் கைப்பற்றியவனை, உன் மண்ணில் பிறந்தவன் எளிதாகக் கொன்ற வரலாறு தெரிந்திருக்கும் என நினைத்தேன் என்றார்.

எனக்கு அந்த நேரம் சற்று அவமான உணர்வு வந்தது உண்மைதான். அந்தக் கிரேக்கர் மேலும் பேச ஆரம்பித்தார். சிரித்துக்கொண்டே அலெக்சாண்டரைக் கொன்றதால் எனக்குத் தமிழர்கள் என்றால் பிடிக்காது என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். உடனே அதற்கு நான் என்ன செய்வேன் என்றேன்.. சும்மா விளையாட்டுக்குத்தான் இப்படிக் கூறினேன் என்றார்.

தூங்கிக் கொண்டிருந்த அவரின் மனைவி அந்த நேரம் கண்விழிக்க, பணிப் பெண்ணிடம் ஒய்ன் வாங்கி சாப்பிட்டார். ஒயின் சாப்பிட்ட சில நிமிடங்களில் அந்தப் பெண்மணிக்கு ஒவ்வாமை ஏற்பட்டது. கண்ணின் கருவிழி மேல் நோக்கி இழுக்க அந்த அம்மணியின் உடல் கட்டையாக மாறியது. இவர் உதவி கேட்டு அலறப் பணிப் பெண்கள் உடனடியாக வந்து சிகிச்சை அளித்தனர். சில நிமிடங்களில் அந்தப் பெண்மணி உடல் நிலையில் முன்னேற்றம் வந்தது. சுமார் ஆறு மணிநேரம் பேசியே கழித்தோம். இறுதியாக அவர் தமிழ் நாட்டுக்காரங்களுக்கும் கிரேக்கர்களும் ஒட்டாதுபோல... இப்ப பாரு நீ எங்கள் அருகில் இருக்கிறாய் என் மனைவிக்கு இப்படி ஆகிவிட்டது என்றார்.. எனக்குத் தலைச் சுற்ற ஆரம்பித்தது!

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com