வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 11 February 2017

மிக.வந். இம்மானுவேல் பர்னாந்து ஆண்டகை அவர்களுக்கு வாழ்த்துப்பா

நிம்பநகர் உவந்தளித்த மிக. வந். பிதேலிஸ் லயோனல் இம்மானுவேல்
பர்னாந்து ஆண்டகை அவர்கள் கொழும்பு உயர் மறைமாவட்டத்தின்
துணை மேற்றாணியாராக அபிஷேகம் செய்யப்பட்டபின் முதன்முறையாக
தம் தாய்பதியாம் வேம்பாற்றுக்கு விஜயம் மேற்கொண்ட போது
நிம்பை உதய தாரகை சங்கத்தினர் வாசித்தளித்த 

வாழ்த்துப்பா 

எம் பெரிய குருவே !

நீர், சத்திய திருமறை மெச்சும் விதமாய் உத்தம நல் மேய்ப்பனாக இலங்கை தேசத்தின் கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் முதல் தமிழ் ஆயராக அபிஷேகிக்கப்பட்டதை கண்டு உம் உடன்பிறப்புகளாம் நிம்பவாசிகள் அனைவரும் சொல்லிலடங்கா உவகை அடைகிறோம். திருமறை தழுவிய 475 ஆம் வருட நிறைவில், திருமறைக்கு நம்பதி அளித்த முதல் ஆயனைக் கண்டு எம்முள்ளம் பூரிக்கின்றது, அக்களிக்கின்றது, அகமகிழ்கின்றது, ஆனந்தத்தால் ஆர்ப்பரிக்கிறது.

மதிகுல பரதவர் மகிழ்பதியாம் வேம்பாற்றிக்கு பெரும் புகழினைத் தேடித் தந்த உம்மை எமக்கு அளித்த உம் குடும்பத்தினரை யாம் நன்றியுடன் நினைவு கூறுகிறோம். சிறப்பாக உம் பெற்றோர் காலம் சென்ற திரு. சேவியர் பஸ்டியன் பர்னாந்து, திருமதி. ஞான சொரூபி பர்னாந்து அவர்கள் இருவருக்கும் எம் நெஞ்சம் நிறை வணக்கமும், நன்றியும், பாராட்டும், என்றென்றும்!

“சீர் பெறும் கலைஞர், சித்திர கவிஞர், பக்த குருமார் ஈன்ற பழநாடு” எனப் புகழப்படும் நமதூர் இன்று உம்மால் “உத்தம நல்லாயன் ஈன்ற பழநாடு” என புகழப்படுகிறது. நமதூரின் முதல் பொறியியளாரான உம் தந்தை நம் உதயதாரகைச் சங்கத்தின் தலைவராக 1931 ஆம் வருடத்தில் சிறப்புடன் செயல்பட்டு அரும் பணிகள் ஆற்றினார். தந்தை வழிநின்று நமதூருக்கு பெரும் பெருமை சேர்க்கும் தமையரான உம்மை வேம்பாற்று வம்சம் என்றும் மறவாது.  

எழுகடற்றுரையின் முதற்றுரையாம் வேம்பாற்றின் எட்டாம் குருவாம் தாங்கள் பாப்பரசர் ஆறாம் பவுல் அவர்களால் 1973 ஆம் வருடம் ஜனவரி  6 ஆம் திகதியன்று குருவாக திருநிலைப் பெறும் பேற்றினைப் பெற்றீர்கள். நீவீர் கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் ஏழாம் ஆயர் மட்டுமல்ல, மாறாக நம் பரத குலத்தின் ஏழாவது ஆயரும் நீரே! என்பதில்; எமக்குப் பெரும் மகிழ்ச்சியே!

தண்டமிழ் நாட்டில் செந்தமிழ் விளங்கும் இவ்வூரில் பிறந்த தாங்கள் இலங்கை தேசத்தில் தமிழ் ஆயராக பணி செய்வதன் மூலம் தமிழன்னைக்கு நிம்பவாசிகள் சூட்டிய மணி மகுடத்தில் நீரும் ஓரு நித்திலமாக திகழ்கிறீர் என்பதில் சிறு மணியளவிலும் ஐயப்பாடில்லை.

எம் ஞான மேய்ப்பரே! நீவீர் கொழும்பு மாநகரில் பணிசெய்தாலும்; நமதூரையும், வேம்பாற்று உறவுகளையும் என்றும் மறந்ததில்லை என்பதை யாம் அறிவோம். எனினும் நமதூரையும், நம்பதியையும், நம்மக்களையும் இறைவன் அரவணைத்துக் காத்திட உம் அன்றாட செபத்தில் எமக்காக என்றும் இறைஞ்சுவீர்.

                                             இவண்:

தங்களின் திருக்கர ஆசீர் பெற ஆசிக்கும்,

                       நிம்பை உதயதாரகை சங்கத்தினர்,
                 வேம்பாறு, தமிழ்நாடு, இந்தியா

27.5.2012 
     
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com