திண்தோள் மறவர்கள்
பரதவர் பண்பாடு - ஆண் அழகர்கள்
உப்புக் கடலில் மேனி படப் பட, அந்த உடலில் ஒரு பளபளப்பு... மினுமினுப்பு! அடலேறு போன்ற ஆடவர்கள். நெடுதுயர்ந்த உயரம். பரந்து விரிந்த நெஞ்சு... திண் தோள்.....
வலைகளைப் படகுகளில் நிரப்பிக் கொண்டு, இடியெனப் பேரலைகள் முழங்கி மோதும் கடலின் ஊடே அப்படகினை செலுத்துவர். பரதவர்கள் படகின் இரு மடங்கிலும் இருந்து கொண்டு, கரையிநின்ரும் கடலுக்குள் படகை வலிவுடன் தள்ளிச் செலுத்துவது,
மதமிகு களிற்றினைப் பாகர்கள் பக்கத்தே நின்று தள்ளிச் செல்லவதை நிகர்க்கும் என்று நற்றிணை 75 : 2-3 வியந்து பாராட்டுகிறது.
கடலில் காணும் மீன் திரட்சியைப் பரதவர் மாப்பு எ
ன்றும், அம்மீன் கும்பல் கடலில் நகர்ந்து கொண்டிருப்பத்தை மாய்ப்பு சாய்கிறது என்றும் கூறுவர்.
ன்றும், அம்மீன் கும்பல் கடலில் நகர்ந்து கொண்டிருப்பத்தை மாய்ப்பு சாய்கிறது என்றும் கூறுவர்.

கொல்வினைப் பொலிந்த கூர்வாய் எரியுளி
முகம்பட மடுத்த முளிவேதிர் நோன்காழ்
தாங்கு அகு நீர்ச் சுரத்து எறிந்து வாங்குவிசைக்
கொடுந்திமிற் பரதவர் கோட்டுமீன் எரிய
- குறுந்தொகை 304 : 1-4 விவரிக்கிறது.
கட்டுமரங்களையும், வள்ளங்களையும் பரதவர் அடிக்கடி தூய்மை செய்து நறுமணங்களும், தூபமும் காட்டித் தொழுவர். அப்படி செய்வதால் படகுகளுக்கு எத்தகைய தீமையும், குறைபாடுகளும், தெய்வக் குற்றங்களும், பைசாசத் தொல்லைகளும் ஏற்படா. நலமுடன் இயங்கி வளமடைய செய்யும் என்பது அவர்களின் நம்பிக்கை. பரதவர் மொழியில் காற்றுக் கருப்பு அண்டாது காப்பாற்றப்படும் என்று கூறுவர்.... என்று சங்க இலக்கியங்கள் மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. மனித வாழ்கையில் பல்வேறு தொழில்களில் ஈடுபடுகிறோம். ஆனால் சங்க இலக்கியங்களில் நெய்தல் நிலம் - பரதவர் தொழில் - கலாச்சாரம் போல் வேறு எந்த தொழிலையும் சிறப்பித்துப் பாடவில்லை எனலாம்.
திண்தோள் மறவர்கள் :
பண்டைய நாளில் கடலில் கலம் செலுத்துவோர் காற்றையே நம்பித் தொழில் செய்தனர். காற்றுக் கடல் அமைதியாகி விட்டால் தண்டு வலிப்பர்கள். அதற்கென முதிர்ந்த மூங்கில்களை நீளவாக்கில் இரண்டாகப் பிளந்து பயன்படுத்துவர். இதனைத் துளவை என்பார்கள். கடல் தொழில் செய்பவர்கள் கட்டாயம் தண்டு வலிக்கும் திறன் பெற்றேயாக வேண்டும். இப்படித் தண்டு வலிப்பதானாலே யே, கடல் தொழிலாளியின் புஜங்கள் உருண்டு திரண்டு சதைப் பிடிப்புடன் வலுவாயிருக்கும்.
மீன் குஞ்சுகளுக்கு நீந்தக் கற்றுத் தர வேண்டுமோ! ஏழெட்டு வயது சிறுவர்களே கடல் அலைகளை எதிர்த்து நீச்சலடிக்கக் கற்றுக் கொள்வார்கள். கொஞ்ச நாளில் மூச்சையடக்கி முத்துக் குளிப்பார்கள். திடீரென்று வாலிப முறுக்குடன் கம்பீரமாக நிற்பான்.... அவன் வயதுள்ள கடல் தொழில் செய்யாத இளைஞனோடு ஒப்பு நோக்கினால், அவன் நோஞ்சானைப் போல இருப்பான். கடல் உப்பும், கடல் அலைகளும், கடுமையான உழைப்பும் கடலோடிகளை ஆண் அழகர்களாக மாற்றிவிடுகிறது.
அதுவும் அந்தக் காலத்துக் கடலோடிகள் அழகான கொண்டை முடிந்திருப்பர். காதுகளில் கடுக்கன் பளிச்சிடும்! பரத பாண்டியர்களில் ஒரு சில ஆண்கள் பூணூல் அணிந்திருந்தார்கள். சிப்பிகுளத்தில் திருவாளர் தம்பியா லியோன் அவர்கள் இறுதி காலம் வரை பூணூல் அணிந்திருந்தார். கேலியாக அவரிடம் நீங்கள் எப்படி பூணூல் அணிந்திருக்கிறீர்கள்? பரவருக்கு இது உரியதா? என வினவினால் பூணூல் அணிவது நமது பாரம்பரிய உரிமைதான் என்பார். இந்தத் தகவல் திரு. தி. சொர்ணராஜன் விக்டோரியா எழுதியுள்ள பரதவர் குலப் பெருமை - பாகம் 2 ல் பக்கம் 205 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருமணமான ஆண்களில் பெரும்பாலோர் முறுக்கிய கிருதா மீசையுடன் தோன்றுவர். இளவட்டங்கள் கத்தி மீசையுடன் கம்பீரமாகக் காணப்படுவார்கள். வாலிபர்களுக்குள் போட்டி வந்தால் இரண்டு புஜங்களுக்குள் இரண்டு பேரைத் தூக்கி பிடித்துச் சுழற்றி விளையாடுவார்கள்.
சிலம்ப கம்பைக் கையிலெடுத்து சுழற்றுவதே கண்கொள்ளாக் காட்சியாயிருக்கும். இரண்டு கைகளிலும் இரண்டு சிலம்பங்கள்... தரையிலிருந்து உயரத்தில் தாவிக் குதித்து, எதிரியை திணறடித்து விடுவார்கள். சிலம்பத்தைத் தொட்டுக் கொடுக்கும் ஆசானுக்கு முதல் மரியாதையாக அவர்கள் செலுத்தும் சலாம் வரிசையைப் பார்ப்பதற்கே அழகாயிருக்கும்.
சிப்பிகுளத்தைச் சேர்ந்த திரு. சலோமை சந்தியாகு பர்னாந்து என்ற ஆசான் மிக திறமைசாலி, சகலகலா வல்லவர். மருத்துவம் பார்பார், சிலம்பம் கற்றுத்தருவார். மேஜிக் விளையாட்டுகளை செய்வார். அறிவியல் கண்ணோட்டத்தில் ஆழ்ந்த கருத்துகளை தூய தமிழில் எடுத்துரைப்பார். தனது மகன் ஆசையா பர்னாந்துவை தரையில் கிடத்தி, அவனின் நெஞ்சில் இரண்டங்குல ஒட்டாஞ்ச்சல்லியை வைப்பார். அதன் மீது ஒரு வாழைக்காயை வைத்துவிட்டு நீண்ட வாள் எடுத்து சாகசங்கள் செய்து வீசுவார். கடைசியில் வாழைக்காயை ஒரே வெட்டில் இரு துண்டாக்குவார்.
அந்த மகனை உட்கார வைத்து அவன் தலை மீது ஒரு போத்தலில் (பாட்டில்) தேங்காயை நிறுத்துவார். கழுந்து உலக்கைப்போல ஒரு குறுந்தடியை சுழற்றி விளையாடுவார். எதிர்பாராத நேரத்தில் தேங்காயில் ஓர் அடி போட்டு, அதை இரண்டாகப் பிளப்பார். அவர் மகனும் வீரதீர விளையாட்டுகளில் சலித்தவர் அல்ல. பனைமரம் ஏறுவதில் வல்லவர். ஒருமுறை நண்பர்களில் சவாலை ஏற்று தலைகீழாக பனை மரம் இறங்கும் போது பாதி தூரத்தில் கீழே விழுந்தார். அவரை அவர் தகப்பனரே எண்ணெய் ஊற்றி, ஆறு மாதங்களில் குணப்படுத்தினார்.
ஒருமுறை கீழவைப்பாறை சேர்ந்த திரு. சவியேர் பர்னாந்து அவர்களின் தகப்பனார் கல்லாத்துப் பகுதியில் ஒரு புலியை எதிர்கொள்ள நேரிட்டது. கையில் ஆயுதம் ஏதும் இல்லை. அருகில் கிடந்த பனை மட்டையை வைத்துக் கொண்டு புலியுடன் போராடி உயிர் பிழைத்தார். அன்றிலிருந்து அவருக்குக் கல்லாத்துப் புலி என்று சிறப்புப் பெயர். இன்றளவும் அவரது வம்சாவழியினரை கல்லாத்துப் புலி என்ற அடைமொழியுடன் அழைக்கிறார்கள்.
இப்படி வீர தீரச் செயல்களாற்றும் முதியோரும், இளைஞரும் எல்லாக் கடற்கரை கிராமங்களிலும் இருக்கிறார்கள். அவர்களை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டத்தான் ஆளில்லை!
- கலாபன் வாஸ்
நன்றி: பரவர் மலர் 2016