கடலன்
சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர் வட்டத்திலிருக்கும் பூலாங்குறிச்சியில் 1979 ஆம் ஆண்டில் கிடைத்த கல்வெட்டொன்று கடலகப் பெரும்படைத் தலைவன் எங்குமான் என்பான் அக்கல்வெட்டை வெட்டியதாகக் கூறுகிறது. கடலகப் பெரும்படைத்தலைவன் என்பது பாண்டியரின் கடற்படைத் தலைவர்களுக்குத் தரப்பட்டப் பட்டமேயாகும்.
கி.மு. 5ஆம் நூற்றாண்டிற்குரிய
மீனாட்சிபுரம் (மாங்குளம்) கல்வெட்டும் கடலன் வழு(த்)தி என்னும் பாண்டியனைப் பற்றிக் குறிப்பிடுகிறது. கணி நந்தாசிரியன் என்னும் ஆசீவகத் துறவிக்கு தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் அரச அதிகாரியான (பண அன்) கடலன் வழுதி என்பவன் வடித்துத் தந்த கற்படுக்கை என்னும் பொருளில் அந்தக் கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது.
![]() |
10.11.1978 ல் மாங்குளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு |
வெகுண்டெழுந்து வந்த பகைவர்களின் வேற்படையையும், யானைப்படையையும், போர்க்களத்தில் வென்ற மாவண் கடலன் விலங்கில் என்னும் அழகிய ஊரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான் என்று புறநானூற்றுப் புலவர் ஆலம்பேரிச் சாத்தனார் குறிப்பிடுகிறார்.
சேரமான் மாதரஞ்சேரல் இரும்பொறையின் ஆட்சிக்கு உட்பட்டுக் கடலன் என்னும் சிற்றரசன் விலங்கில் எனும் ஊரை ஆண்டு வந்தான். அப்போது அவனுடைய பகைவர்கள் விளங்கிலைப் பிடிக்க எண்ணி, அவ்வூரை முற்றுகையிட்டனர். இந்நிலையில் யானைப்படையுடனும், குதிரைப் படையுடனும் வந்த சேரமான் மாதரஞ்சேரல் இரும்பொறை, அப்பகைவரை முறியடித்து விளங்கிலைக் காப்பாற்றினான். பொருந்தில் இளங்கீரனார் எனும் புலவர் அச்சேரமானின் மீது பாடிய புறநானூற்றுப் பாடல் இச்செய்தி உள்ளது.
மேலே காணும் இரண்டு குறிப்புகளும் மாவண் கடலன் என்பான் சங்ககாலத்தில் அரபிக்கடலின் ஓரத்திலிருந்த விளங்கிலை ஆண்டு வந்ததாகக் கூறுகின்றன.
பாண்டிய நாட்டிலும், சேர நாட்டிலும் கடலன் என்பதும் கடலகப் பெரும்படைத்தலைவன் என்பதும் சங்க காலம் தொட்டுக் கடற்படைத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பதவிகள் என்பது இவற்றால் உறுதிபடுகிறது.
அகநானூற்றுப் புலவர்களில் எருமை வெளியனார் மகனார் கடலானார் எனும் புலவரும் ஒருவராவர். இவரது *89 பாடல் குறிஞ்சித் திணைக்கு உரியது. அவர் கடலன் என்னும் கடற்படைத் தலைவன் பதவியை வகித்தவராவென்பது தெரியவில்லை.
பரதன் என்பாரைப் பற்றிக் குறிப்பிடும் இலங்கையின் பொலன்னறுவைக் கல்வெட்டொன்று அவனை சாகரிக என்னும் பெயராம். கடலன் வழுதி கடல் வாநிபத்திலும் ஈடுபட்டு வந்தான் என்பதைப் பொலன்னறுவை கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ள கப்பல் காட்டுகிறதாம்.
இலங்கையில் கிடைத்த பழைய காசு ஒன்றின் பக்கத்தில் பரத திசக என்று பாகத எழுத்திலும் தமிழி (தமிழ் பிராமி) எழுத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. பரதனாகிய திசனுடையது என்பது அதன் பொருளாம். அக்காசின் மறுபுறத்தில் பாண்டியனின் மீன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த காசில் காணும் பரத என்னும் குறிப்பு, கடலோடிகளான பரதவரைக் குறிக்கும். இருபதுக்கும் மேற்பட்ட இலங்கைக் கல்வெட்டுகளில் பரதன் என்னும் பெயர் காணப்படுவதாகக் கூறுகிறார்கள். கடலன் என்னும் கடற்படை அதிகாரிகளில் பெரும்பாலானோர் பரதவர்களாயிருந்தனர் என்பது இதனால் விளங்குகிறது.
தொன்மையில் பாண்டிய நாட்டிலிருந்தும், சேர நாட்டிலிருந்தும், ஈழத்திலிருந்தும் பொருள்வழிப் பிரிந்து கடல் கடந்து சென்ற தமிழர்களான கடலன்களின் வழிவந்தோர், பின்னர் வடக்கு எசுபானியாவிலுள்ள பைரனீசு மலைத்தொடருக்கு தெற்கே குடியேறியுள்ளனர். இரும்புக் கொல்லுலைகளையும், இரும்பை ஆக்கும் தொழில் நூட்பத்தையும் தமிழகத்திலிருந்து தம்முடன் அவர்கள் கொண்டு சென்றுள்ளனர். கடலன் கொல்லுலைகளை வைத்தே ஐரோப்பாவில் இரும்பு எக்கு தொழில் அரும்பியது. அக்கடலன்கள் தாய்நாட்டுடனான கொப்புள் உறவுகளிக் காலப்போக்கில் இழந்து தனியொரு தேசிய இனமாயினர். தமிழை முற்றிலும் மறந்து உரோமானிய மொழிகளின் தாக்கத்தால் புதியதொரு மொழியை உருவாக்கிக் கொண்டனர்.
- அறிஞர் குணா
தமிழரின் தொன்மை நூலிலிருந்து