வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Friday 9 April 2021

கச்சை தீவு


 இத்தீவின் பெயர் சங்க இலக்கிய காலம் முதல் உள்ள ஒரு பெயரின் திரிபு. இத்தீவு தொழில் பெயரினால் அழைக்கப்படுகின்றது. கை சால், கைச்சால் என்பதே இத்தீவின் உண்மை பெயர். இத்தீவுதான் மருவி கச்சால் தீவு என்றும் இன்று இறுதியில் கச்சா, கச்சை தீவு என்று அழைக்கப்படுகின்றது.

கச்சால் என்றால் மீன்பிடிக்கும் ஒருவகை கை வலை கூண்டு, சால் என்பது வலை கை + சால் என்பதே கைச்சால். அதுவே கச்சால் என்று சொல்லப்படும். இன்றும் திருகோணாமலை பகுதி மீனவர்கள் கோலா என்னும் பறக்கும் மீன்களை அள்ளும் வலையை கைச்சால் என்று அழைப்பார்கள். ஆக இத்தீவை தமிழர் நாம் சரியா கைசால் தீவு என்றுதான் சொல்லவேண்டும். வலைகளை உலரவைத்து மீன்பிடிக்கும் தளமாக, முத்துக்குளிக்கும் கடலாக அழகிய நிலமாக இத்தீவு இருந்துள்ளது.

ஆரம்பத்தில் இங்கு "டார்குயின்" என்னும் பச்சை ஆமைகள் இருந்த காரணத்தினால் பச்சை தீவு என அழைக்கப்பட்டது. இது பின்னர் மருவி கச்சை தீவு என அழைக்கப்படலாயிற்று. சித்த மருத்துவத்துக்கு தேவையான அனேக மூலிகைச் செடிகளை இங்கு பெற்றுக்கொள்ளலாம். இதில் "உமிரி" என்னும் மூலிகை நோய்களுக்கு சிறந்த நிவாரணி. உமிரி கீரை நீர் பிடிப்பான தாவரம். கடல் நீரில் இருக்கும் உப்பை நீக்கி தன்னுள் நன்னீரை பிடித்து வைத்திருக்கும் அற்புத தாவரம். சஞ்சீவி மலையின் ஒரு பக்கம் என்றும் இதை சொல்வாருண்டு.

கச்சை தீவை சுற்றியுள்ள கடலில் சங்கு குளிப்பர். இதனால் இத்தீவுக்கு சங்கு புட்டித் தீவு, சங்கு புட்டித் தீடை என்ற புனைப் பெயர்களும் உண்டு. இதற்கு கண்ணகி அம்மன் பள்ளுப் பாட்டுகள் சான்றாக உள்ளது. மேலும் கச்சைத் தீவுக் கடலில் விலையுயர்ந்த இறால் வகைகள் கிடைக்கும். சுருங்கக் கூறின் கச்சை தீவு சூழ் கடல் ஒரு மீன் அரங்கம். மீன் உற்பத்தி ஆகும் தமிழரின் மிக பெரிய கண்டல் மேட்டில் இத்தீவு அமைந்துள்ளது.

தமிழரின் மிகப்பெரிய குமரி கண்டத்தில் பல ஆயிரம் தீவுகளுடன் எழு மண்டல நாடுகளாக ஐம்பத்து ஆறு நாடுகள் இருந்தன. அவற்றில் இன்று எம்மிடம் இருக்கும் தமிழகம், ஈழம் ஆகிய இரண்டு நாடுகளும், தீவுகளும், கடல் வளங்களும் ஆக்கிரமிப்பாளரின் கைகளில் சிக்கி கிடக்கின்றன. மிக வளமான சரித்திர புகழ் மிக்க தீவாகிய எங்கள் கைச்சால் தீவும் ஈழமும் சிங்களவன் ஆக்கிரமிப்புள் சிக்கி கிடக்கின்றன.

ஆதித்தமிழன் வாழ்ந்த இடம் லெமுரியாக் கண்டம். கடற்கோள் காரணமாக லெமுரியாக் கண்டத்தின் பல பகுதிகள் கடலில் மூழ்கின. அதில் எஞ்சிய பன்னிராயிரம் தீவுகளில் ஒன்றே இன்று கச்சை தீவு என்று சொல்லப்படும் கைச்சால் தீவு. இத்தீவை அண்மித்து நெடுந்தீவு, வேலணை, காரைதீவு, பருத்திதீவு, ஊறி தீவு, கண்ட்மேடு என்று பல நூறு தீவுகளும் மணல் திட்டுகளும் உள்ளன.

இத்தீவானது நெடுந்தீவிலிருந்தும் இராமேஸ்வரத்திலிருந்து 10 மைல் தொலைவில் தமிழகத்துக்கும், ஈழத்துக்கும் சரி பங்கு சொந்தமான எல்லை நடுவில் உள்ளது. இத்தீவின் பரப்பளவு 285 ஏக்கர் நில பரப்பை கொண்டுள்ளது. தமிழக மக்களின் ஈழ மக்களின் தாய் பூமி, தமிழகம், ஈழம் பன்நெடும் காலமாக தமிழரின் தொடுகை உறவு முறை தாய் வீடாக இருந்துவந்த நிலம். நாடுகள் என பிரிந்த சோகத்தில் இன்று தமிழனின் நிலம் காணாது அவன் முகம் காணமுடியாதபடி, ஆக்கிரமிப்பாளனின் காலடியில் கிடக்கின்றது. இத் தீவானது, 79° 31’ நெடுங்கோட்டிலும், 9° 23’ வடக்கு அகலக்கோட்டிலும் அமைந்துள்ளது.

1974 காலத்துக்கு முன் தமிழக மீனவரின் சொர்க்கமாக இருந்த இந்த தீவை காங்கிரசு அரசு தமிழன் அனுமதி இன்றி சிங்களவனிடம் கொடுத்தது. தமிழக மீனவரின் பாவனைக்கும், வலை காயவிடுதல், வாடி அமைத்தல் என்பவற்றிற்கும் உரிமை உடையவர்களாக தமிழக மீனவர்கள் இருந்தார்கள். தமிழர்கள் வந்து செல்லும் ஒரு தளம் என்றும் கூறப்பட்டது.

இத்தீவின் மேற்கே உயர்ந்த பாறைகள் தெரியும். உட்பகுதியில் வெண்மணல் திட்டுக்களும், ஆங்காங்கே குழிகளும் காணப்படும். பசும் புல் தரைகளும் உண்டு. நடுப்பகுதி கல்லுமலை என அழைக்கப்படும். இது கடல்மட்டத்திலிருந்து 20 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதன் அருகே ஆழ்கிணறு ஒன்று உள்ளது. அதன் நீர் குடிப்பதற்கு நன்று.

சோழர் ஆட்சியில் கச்சை தீவு

சோழர் ஆட்சிக் காலத்தில் கீழ் கடலும், குமரிக் கடலும் சோழர்களுக்கே சொந்தம். அக்கடற்பரப்பிலிருந்த அனைத்து தீவுகளும் சோழரின் ஆட்சியின் கீழே இருந்தது. சோழ மன்னர்களே முதன் முதல் உலகில் கடற்படை அமைத்தவர்கள். சோழ குல வேந்தனான இராசராச சோழன் உலகம் வியக்கும் அளவுக்கு கடற்பேரரசை நிறுவி கடற்போரை நிகழ்த்தினான். பத்தாம் நூற்றாண்டில் உலகக் கடலின் காற்பகுதியில் சோழர்களின் மரக்கலங்களே மிதந்தது. இவற்றில் பொருத்தப்பட்ட ஒளிப்பெருக்காடி மூலம் கடலின் நெடுந்தொலைவை கண்டறிந்தனர். இவ்வாறாக சோழ அரசு தென் கடல் தீவுகளை எல்லாம் கைப்பற்றி ஆட்சி செய்தது.

1480 ஆம் ஆண்டு சோழ மன்னர்கள் யாழ்ப்பாணம் சென்றனர். இடையில் கச்சை தீவை அடைந்தனர். அங்கு பாண்டிய மன்னர்கள் தங்கள் நாட்டு விளைபொருட்களான மிளகு, திப்பிலி, இலவங்கம், சந்தனம், யானையின் தந்தம், விலையுயர்ந்த முத்துக்கள் முதலிய பொருட்களை கச்சை தீவுக்கு ஏற்றுமதி செய்தனர்.

இருநாட்டு மன்னர்களும் கச்ச தீவு கடலில் முத்துக்குளித்தல், சங்கு குளித்தல், மீன் பிடித்தல் ஆகிய தொழில்களை நடத்தினர். இது குறித்து அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, சிலப்பதிகாரம் முதலிய சங்க இலக்கியங்களில் பேசப்படுகின்றது. மேலும் எகிப்திய சுற்றுலாப்பயணியான தாஸ்மோஸ் இண்டிக்கோ யூலுயெஸ்டஸ், ஆறாம் நூற்றாண்டில் தான் எழுதிய வரலாற்றுக் குறிப்பில் கூறியுள்ளார்.

11 ஆம் நூற்றாண்டில் இராசராச சோழன் பாண்டிய இராச்சியத்தை வென்றதோடு, இலங்கைத் தீவினையும் வென்றான். அன்று இராமேஸ்வரம் கடற்பாதையை கண்காணிப்பதற்கு சோழ மறவர்களை அமர்த்தினான். 16 ஆம் நூற்றாண்டில் சோழர் ஆட்சி நலிவுற்றது. பாண்டியரது ஆட்சி மறைந்தது. இராசராச சோழனால் அமர்த்தப்பட்ட தளபதிகள் தனி ஆட்சி நிறுவினர்.

15 ம் நூற்றாண்டில் வந்த ஐரோப்பியர்கள் இத்தீவை தமது உல்லாச நிலமாக அமைத்து மகிழ்ந்தனர். இன்றும் அங்கு ஒன்றுகூடும் மக்கள் மகிழ்ந்து வருவார்கள்.


நன்றி : ஏகாம்பரம் மணிவண்ணன்
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com