வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Friday 9 April 2021

மூச்சுவிடும் பெருங்கடல்கள்


கடல் மூச்சுவிடுவது தெரியுமா உங்களுக்கு? ஆடு, மாடு மனிதர்கள் மூச்சு விடுவதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மரங்கள்கூட மூச்சுவிடுகின்றன என்றுப் படித்திருப்பீர்கள். ஆனால் யாராவது கடல் மூச்சுவிடுவதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.

இப்புவியின் பெரும் காடுகளில் உள்ளக் மரங்களில் இருந்து நமக்கு பிராணவாயுவான ஆக்சிஜன் கிடைக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அது பாதிதான் உண்மை. மீதி உண்மை என்னவென்று சொல்லட்டுமா? இவ்வுலகின் மொத்த ஆக்சிஜன் அளவில் வெறும் முப்பது விழுக்காடு மட்டுமே நமக்குக் காடுகளில் இருந்து கிடைக்கிறது. எழுபது விழுக்காடு கடலில் இருந்து கிடைக்கிறது.

என்ன கடலிலிருந்து ஆக்சிஜனா, ஆச்சரியமாக இருக்கிறதா?

ஆம் உண்மைதான், நம் பூமியின் பரப்பில் ஒரு சிறுபகுதியான (29%) நிலப்பரப்பில் வெறும் முப்பொத்தொன்று விழுக்காடு மட்டுமே காடுகள் உள்ளன. அதாவது மொத்தக் உலகப் பரப்பளவோடு ஒப்பிடும்போது காடுகளின் பரப்பளவோ மிக மிகக் குறைவு. ஆதேநேரத்தில் உலகின் எழுபத்தொன்று விழுக்காடு பரப்பை ஆக்கிரமித்துள்ள கடலில் இருக்கும் கடற்தாவரங்களின் பரப்பளவோ மிக மிக அதிகம். இந்தக் கடற்தாவரங்கள் தம் ஒளிச்சேர்க்கையின்போது வெளியிடும் ஆக்சிஜனே பூமியின் ஆக்சிஜன் தேவையின் எழுபது விழுக்காடைப் பூர்த்தி செய்கிறது.

கடலில் பலவிதமானத் தாவரங்கள் காணப்படுகின்றன. ஒரு செல் தாவரங்கள் முதல் அடர்ந்த மரங்கள் போன்ற பல செல் தாவரங்கள்வரை கடலின் ஆழம், சூரிய ஒளி, வெப்பம் இவற்றைப் பொறுத்து பலவிதமான தாவரங்கள் கடலில் உள்ளன. ஆல்காக்கள், பிளாங்க்டன்கள் எனப்படும் தாவர மிதவை உயிரிகள், கடற்புற்கள், கெல்ப் எனப்படும் கடற்தாவரங்கள், பவழப்பாறைகள் போன்றவை கடலின் முக்கியத் தாவரங்களாகும். தரைவாழ் தாவரங்கள் போன்றே இந்தக் கடற்தாவரங்களில் பல ஊட்டச்சத்துமிக்கத் தாவரங்களிலிருந்து கடும் விஷம் கொண்டத் தாவரங்கள்வரை காணப்படுகின்றன. கெல்ப் எனப்படும் கடற்தாவரங்கள் பிரம்மாண்ட மழைக்காடுகள் போன்று 250 அடிகள் உயரம்வரைகூட வளரக்கூடியவை. இந்த தாவர வளமிக்கக் கடல்களில் இருந்துதான் நாம் மூச்சுவிடும் காற்றின் பெரும்பகுதியை நாம் பெறுகின்றோம்.

ஆனால் இங்கு கவலைதரக்கூடிய செய்தி என்னவென்றால் நிலத்தின் காடுகள் பெருமளவில் வேகமாய் அழிக்கப்படுவது போலவே கடல்களின் தாவரங்களும் மனித நடவடிக்கைகளால் வேகமாய் அழிக்கப்பட்டு வருகின்றன. ஆறுகள் மூலம் கடலில் கலக்கும் இரசாயனங்கள், கடலின் தரைப்பரப்பை நாசம் செய்யும் மீன்பிடிக்கருவிகள், உலக வெப்பமயமாதலால் உயரும் கடல்களின் வெப்பநிலை போன்றவை கடல்வாழ் தாவரங்களைப் பெரும் அழிவுக்குத் தள்ளியிருக்கின்றன.

மரங்களை மட்டுமல்ல மனிதர்களுக்காய் மூச்சுவிடும் கடல்களையும் கொண்டாடுவோம்!
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com