வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Sunday, 7 July 2024

ஒள் எரி மாடம்

சங்ககால நம் முன்னோர்கள் பொருளீட்டும் முயற்சியில், கடல் வாணிகத்தில் சிறந்து விளங்கினர். அவர்கள் தலைசிறந்த கடலாடிகள் என்பதைச் சங்ககாலப் பதிவுகள் பல எடுத்துரைக்கின்றன. வத்தை, வல்லம், நாவாய், திமில், அம்பி என பலவகைக் கலங்கள் செய்து, காற்றை அடக்கி, திசையறிந்து, கடலை ஆண்டு வணிகம் செய்துள்ளனர் என்பதற்குச் சங்க காலக் புலவர்கள் தம் பாடல்கள்வழி வரலாற்றுச் செய்திகள் பலவற்றைப் பகர்கின்றார்கள்.

மதுரை நாகனார் அகநானூற்று பாடலில் கலங்கரை விளக்கம் பற்றிச் செய்தி பகர்கின்றார்.
 
"உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்
புலவுத்திரைப் பெருங்கடல் நீர் இடைப் போழ
இரவும் எல்லையும் அசைவின்று ஆகி,
விரைசெலல் இயற்கௌ வங்கூழ் ஆட்டக்
கோடு உயர் திணிமணல் அகன்துறை, நீகான்
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய"

விளக்கம்: உலகம் புடைபெயர்ந்தது போன்று அச்சம் விளைவிக்கும் நாவாய்கள், புலால் மணமுடைய அலைகள் கொண்ட பெரிய கடலின் நீரிடையிலே நீரைப் பிளந்து கொண்டுசெல்லும் இரவும், பகலும் தங்கியிருத்தல் ஏதும் இல்லாதபடியாக விரைந்து செல்லும் இயற்கையினதாகிய காற்றானது, அவற்றை அசைந்து செல்லுமாறு செய்ய, நாவாய் ஓட்டுபவன் கரை உயர்ந்த மணல் செறிந்த துறையினிடத்தே இருக்கும் மாடத்து மீதுள்ள ஒளிவிளக்கால் திசையறிந்து அவற்றைச் செலுத்த என்பதாம்.

அன்றைய தமிழகக் கடல் வணிகத்தில் மிகப் பிரமாண்டமான, அச்சம் தரக்கூடிய நாவாய்கள் பயன்பாட்டில் இருந்துள்ளன. அவை நீரைப் பிளந்து கொண்டு செல்லும் பேராற்றல் திறன் படைத்திருந்தன என்பதும் பாடல்வழி அறியும் செய்தியாகும். மேலும், கலங்களுக்குத் திசைகாட்டுவதற்குக் கலங்கரை விளக்கங்கள் கடற்கரைப் பகுதிகளில் ஆங்காங்கே இருந்துள்ளன என்பதும் பாடல்வழி புலப்படும் வரலாற்றுத் தரவாகும்.

- திருச்சி பார்த்தி
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com