தமிழர் வாணிகம்

சாலமன் அரசனுடைய காலத்திற் பினீசிய நாட்டுக் கரசனாகத் தையர் என்னும் பட்டினத்தில் இருந்தோன் ஹிராம். பினீசியர் மாலுமித் தொழிலிற் சிறந்தவர்கள். இவர்களைத் துணைக்கொண்டு சாலமன் அரசனுடைய கப்பல்கள் கிழக்குத் தேசங்களுக்குச் சென்று ஓபீர் (உவரி) என்னுந் துறைமுகத்திற்றங்கிப் பொன், வெள்ளி, யானைத்தந்தம், மயிலிறகு, முத்து, குரங்கு, நவமணி முதலியவற்றை ஏற்றிக்கொண்டு திரும்பின. எபிரேய அரசனான சாலமன் கி.மு. 1000 வரையிற் சீவித்தவன். தமிழ்நாட்டினின்றும் சென்ற ஒவ்வொரு பண்டங்களும் எபிரேய நாட்டில் தமிழ்ப் பெயர்களாலேயே அறியப்பட்டன. தமிழ் அகில், எபிரேயமொழி அஹல், தமிழ் தோகை (மயில்), எபிரேய மொழி துகிம், தமிழ் கவி (குரங்கு), எபிரேயமொழி கொவ். கிரேக்கமொழியில் ஒரிசா என்பது அரிசி என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபு. பெப்பரி என்பது திப்பிலி என்பதன் திரிபு. கிரேக்கரும் தமிழ் நாட்டிலிருந்து அரிசி மிளகு முதலிய பொருட்களை வாங்கிச் சென்றனர்.
கி.பி. முதல் நூற்றாண்டில் விளங்கிய பிளினி என்னும் உரோம ஆசிரியர் இந்தியாவிலிருந்து உரோமராச்சியத்துக்கு ஏற்றுமதியாகுஞ் சரக்குகள் ஆண்டொன்றிற்கு 55,000,000 செஸ்டேர்ஷிகள் (987,000 தங்கநாணயம்) பெறுமதியானவை என்று கணக்கிட்டிருக்கின்றார். இன்னும் அகஸ்துசீசர் முதல் சேனோ ஈறாகவுள்ள ஒவ்வொரு உரோம அரசரின் நாணயங்களும் தென்னிந்தியாவிற் பலவிடங்களிற் கண்டெடுக்கப்பட்டிருப்பதனால் உரோம நாட்டாருக்கும் தமிழ்நாட்டாருக்கும் கி.பி. 5 ஆம் நூற்றாண்டுவரையும் இடைவிடாத தொடர்பிருந்தமை ஒரு தலையாகும். அரேபியநாட்டுக் குதிரைகளும் தமிழ்நாட்டுத் துறைமுகங்களில் இறக்குமதியாயின. இக் குதிரை வியாபாரங் காரணமாகவும், பின்னர்க் கப்பல் மீகாமன் தொழில் காரணமாகவும், அரேபியர் தென்னிந்தியா இலங்கைக் கரையோரங்களில் சில பாகங்களைத் தங்குமிடமாக்கி நாளடைவில் அங்குக் குடிபதிகளாய் விட்டனர்.
பாபிலோனில் சுமேரிய அரசரின் தலைநகரமாகிய `ஊரின்ழு இடிபாடுகளில் மலையாளக் கரைகளில் மாத்திரம் வளருகின்ற தேக்கமரத் துண்டொன்று கண்டெடுக்கப்பட்டது. இதனால் 5000 ஆண்டுகளுக்கு முன் சுமேரியர் தமிழகத்தோடு வியாபாரப் போக்குவரத்துடையவர்களாயிருந்தார்களெனப் புலனாகின்றது.
கி.மு. 1462 இல் பதினெட்டாவது தலைமுறையாக முடிவெய்திய எகிப்திய அரசரின் "மம்மீஸ்" என்னும் பிரேதங்கள் இந்திய மசிலின் துணிகளால் மூடப்பட்டிருந்தன. எகிப்தியர் இந்தியாவில் கிடைக்கும் அவுரியிலிருந்து எடுக்கப்படும் நீலத்தினால் ஆடைகளுக்குச் சாய மூட்டினார்கள். இந்தியாவினின்றும் பிறநாடுகளுக்குச் சென்ற வியாபாரப் பொருட்களுள் பட்டு, மசிலின் முதலியன சிறந்தவை.
தமிழர் சுமத்திரா, சாவா, மலாயா முதலிய நாடுகளோடும் வியாபாரம் நடத்திவந்தார்கள். இதற்குச் சான்று மணிமேகலையி லுள்ளது.
அக்காலத்துக் காலினுங் கலத்தினும் வந்திறங்கய பண்டங்கள் வருமாறு,
"நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடன் முத்தும் குணகடற் றுகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத் துணவும் காழகத் தாக்கமும்
அரியவும் பெரியவும் நெளிய வீண்டி"
(பட்டினப்பாலை)
வியாபாரிகள் தாம் கொடுக்கல் வாங்கல் செய்யும் பண்டப் பொதிகளில், அவற்றின் நிறை, அளவு, எண், இவற்றை எழுதிச் சாலைகளில் அடுக்கிவைத்துப் பின்பு எடுத்துச் செல்வர். இவ்வுண்மை,
"வம்பமாக்கள் தம்பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி
கடைமுக வாயிலும் கருந்தாழ்க் காவலும்"
என்னும் சிலப்பதிகார வடிகளால் விளங்கும்.
வட இந்திய வியாபாரத்திலும் தென்னிந்திய வியாபாரம் முக்கிய முடையதெனக் கௌட்லியர் கருதினார்.1 தெற்கிலிருந்து மிக அரிய பண்டங்கள் கிடைத்தன. வடநாடு கம்பளி, தோல், குதிரை என்பவைகளை மாத்திரம் அளித்தது. பொன், வயிரம், முத்து மற்றை இரத்தினக்கற்கள் சங்கு முதலியன தெற்கிலிருந்து கிடைப்பனவாகக் குறிப்பிட்டுள்ளன.