வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Monday 13 March 2017

வேம்பாற்றுத்துறையும் முத்தரிப்புத்துறையும்
பண்டைய வேம்பாற்றில் நியாயக்காரர் என அழைக்கப்பட்டவரும் பரத குலத்தின் அடப்பனார் பதவியை வகித்தவருமான பெரிய அடப்பனார் சந்தியாகு மாதவடியான் பர்னாந்து அவர்களின் புதல்வி நீக்கிலம்மாள் பர்னாந்து அவர்களைத் திருமணம் செய்தவர் தொம்மை முறாயிஸ் கோமஸ் ஆவார். பெரிய அடப்பனாரின் மகளைக் கட்டிய சில காலங்களில் இவர் கோமஸ் அடப்பனார் என அழைக்கப்பட்டார்.



The Pearl fleet at Mannar
[Johann Wolffgang Heydt] ~ 1735

கோமஸ் அடப்பனாருக்கு ஏராளமான படகுகளும், தோணிகளும் இருந்தன. வேம்பார் பகுதியில் மட்டுமில்லாமல் இலங்கையின் மன்னார் பிரதேசத்தில் நடைபெற்ற முத்துக்குளித்தலிலும் இவரது படகுகளும் அதிகம் ஈடுபடும். இவர் தமது உறவினர்களான நெய்தல் நில மக்களாகிய பரதர்களையும், திமில்வாணர்கள் என அழைக்கப்படும் திமிலர்களையும் கொண்டு கடல் தொழிலும், கடல் வணிகமும் செய்து வந்தார். முத்தெடுப்பதற்காக இவர் தமது தொழிலாளர் கூட்டத்துடன் மன்னாரின் முத்தரிப்புத்துறை என அழைக்கப்படும் இடத்தில் குடியேறினார். தொழிலாளர்களுக்காக தனது வீட்டருகே ஒரு குளம் வெட்டினார். அக்குளம் திமிலர் குளம் என்றும், அவர் தங்கி இருந்த இடம் அடப்பன் தோட்டம் என்றும், அவரின் தோணிகளை கட்டிய இடம் கோமிசன் முட்டு (கோமசின் முட்டு) என்றும், அவரின் தோணிகளை காவல் காத்த சுவானி குருஸ் இருந்த ஓடைப் பகுதி சுவான் ஓடை என்றும் இன்று வரை அழைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பெரும் வேம்பாற்றுக் கூட்டமே முத்தரிப்புத்துறையில் குடியறியது. மன்னார் வளைகுடாவில் வேம்பாற்றிக்கு நேரெதிரே முத்தரிப்புத்துறை அமைந்திருப்பதால் இக்குடியேற்றம் அமைய சாத்தியமானது.

பொதுவாகவே வேம்பாற்றுவாசிகள் முத்துசல்லாபத்திற்காக மன்னார் செல்வதும் முத்துசல்லாபம் முடிந்த பின் வேம்பாற்றிக்கு திரும்பி வருவதும் வாடிக்கையாக இருந்தது. அவ்வாறு செல்லும் போது முத்து சல்லாபம் சிறப்பாக நடைபெற வேண்டி தங்களது பாதுகாவலியான வேம்பாத்து பரிசுத்த ஆவி கோவிலில் தற்போது நடுநாயகமாக வீற்றிருக்கும் பரிசுத்த செங்கோல் நாயகியை தம்முடன் எடுத்து செல்வதும், திரும்ப வரும் போது எடுத்து வருவதும் வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். அவ்வாறு முத்தரிப்புத்துறையில் பரிசுத்த செங்கோல் நாயகிக்கு ஆலயமும் வேம்பாற்றுவாசிகள் எழுப்பினர். முத்தரிப்புத்துறையில் கோமஸ் அடப்பனார் பரிசுத்த செங்கோல் நாயகிக்கு பெருநாள் எடுத்துக் கொண்டாடினார். பின்னர் வேம்பாத்துக்கு திரும்பும் போது பரிசுத்த செங்கோல் நாயகியை மீண்டுமாக பரிசுத்த ஆவி ஆலயத்தில் கொலுவேற்றினார். 

சுருபம் கைமாறப்பட்டதால் முத்தரிப்புத்துறையில் செங்கோல் மாதா ஆலயத்தில் வேறொரு செங்கோல் மாதா சுருபத்தை வைத்து வழிபடலாயினர்.  தற்போது வரையிலும் செங்கோல் மாதா ஆலயத்தில் காணிக்கை மாதா திருவிழாவே பரதர்களால் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் உற்று நோக்கும் போது வேம்பாற்று பரிசுத்த ஆவி ஆலயத்தில் காணிக்கை மாதா திருவிழாவை தற்போதும் கோமஸ் அடப்பனாரின் குடும்பத்தினரே கொண்டாடி வருவதும் குறிப்பிடத்தகுந்தது. முத்தரிப்புத்துறையில் தற்போது அமைந்துள்ள ஆலயம் 17.05.1936ல் கட்டப்பட்டது.

மன்னார் தீவில் வருடாவருடம் சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் முத்துக் குளித்தல் நடைபெற்றுள்ளது. எனவே இதற்கான ஆயத்தங்கள் பெப்ரவரி மாதம் முதல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் முத்துக்குளித்தல் செழுமை பெற காணிக்கை மாதா திருவிழா அன்று (பெப்ரவரி மாதம் 2 ஆம் தேதி) பரிசுத்த செங்கோல் மாதாவிற்கு பெருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

கூடுதல் தகவலாக வேம்பாற்றின் பாதுகாவலரான சந்த செபஸ்தியாரின் பெருவிழா முத்தரிப்புத்துறையில் வாழும் திமிலர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு தற்போது பரத இளைஞர்களால் வெகு விமரிசையாகக்  கொண்டாடப்பட்டு வருவதும் கவனத்திற்குரியது. கோமஸ் அடப்பனாரால் குடியேற்றப்பட்ட வேம்பாற்றை சேர்ந்த பரதர்களும், திமிலர்களும் வேம்பாற்றில் தங்களால் கொண்டாப்பட்ட இவ்விரு திருவிழாக்களை ஆளுக்கொன்றாகப் பிரித்துக் கொண்டனர்.

வேம்பாற்றுவாசிகளைப் போல முத்தரிப்புத்துறை பரதர்களும் சந்த செபஸ்தியாரை 'ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரன்' என அழைத்து வருகின்றனர். அவ்வாறே ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனுக்கு வேம்பாற்றில் கூறப்படும் ஜெபங்களையே முத்தரிப்புதுறையிலும் கூறப்படுவது குடியேற்றத்தை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. இச்செபங்கள் இங்கிருந்தே மன்னார் தீவு முழுமைக்கும் பின் பண்டைய யாழ்ப்பாணம் மறைமாவட்டம் முழுதும் பரவி இன்று இலங்கை தீவு முழுவதும் அனைவராலும் செபிக்கப்பட்டு வருகிறது.

நினைத்த நேரத்தில் வேம்பாற்றிக்கும் மன்னாருக்கும் சென்று வரும் அளவு மந்திர தந்திரத்தில் கோமஸ் அடப்பனாருக்கு அதிக ஈடுபாடு இருந்தது. கோமஸ் அடப்பனாரும் சில காலம் முத்தரிப்புத்துறையிலே வாழ்ந்து மரிக்க, அவரை அங்கேயே அடக்கி கல்லறை எழுப்பப்பட்டது. அதன் மேல் ஸ்தூபியும் எழுப்பப்பட்டது. இலங்கையில்  நடைபெற்ற விடுதலைப் போரில் இலங்கை இராணுவத்தின் குண்டு வீச்சில் கோமஸ் அடப்பனாரின் நினைவு ஸ்தூபியும் சிதைந்து போனது. 

பிற்காலத்தில் இங்கிருந்து வடகரையோரமாக வள்ளங்களைக் கொண்டு சென்ற பரதவர்கள் வங்காலை தொட்டு மன்னார் கரைகளிலும், தெற்கே சென்றவர்கள் முள்ளிகுளத்தில் அடப்பன்குளம் என்னும் குளத்தை வெட்டி விவசாயமும், கடல் தொழிலோடு, வேட்டையாடித் தேன் எடுப்பதிலும் தங்கிவிட்டனர். தரை மார்க்கமாக பரதவர்கள் பறப்பாங்கண்டல், சிறுகுளம், ஊற்றுப்பிட்டி, மூர்க்கரசன்குளம் ஆகிய இடங்களிலும், திமிலர் பாலப்பெருமாள்கட்டு, மணமோட்டைப் பகுதியிலும் தங்கினர்.

வேம்பாற்றுவாசிகளைப் போலவே இவர்களும் கத்தோலிக்கத்தில் விசுவாச வாழ்வு வாழ்கிறார்கள். வேம்பாற்றிலிருந்து இலங்கையின் மன்னார் மறைமாவட்டத்திற்கென ஒரு ஆயரும், 16 குருக்களும், 36 கன்னியர்களும் சென்றிருப்பதைப் போல 7 குருக்களும், 16 க்கும் அதிகமான கன்னியர்களும் முத்தரிப்புத்துறையிலிருந்தும் சென்றுள்ளனர். மேலும் வேம்பாற்றில் காணப்படும் 1602 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்லறைக்கல் குறிப்பிடும் கூஞ்ஞ குடும்பத்தினர் வேம்பாற்றில் ஒருவர் கூட இல்லாத நிலையில் முத்தரிப்புத்துறையில்  பலரும் வாழ்வதும் கவனத்திற்குரியது. 

கோமஸ் அடப்பனாரால் முத்தரிப்புத்துறையில் குடியேறிய மக்களுக்கும் வேம்பாற்றுவாசிகளுக்குமான தொடர்பு பிற்காலத்தில் முற்றிலும் அற்றுப்போனது. இன்று எள்ளளவும் தொடர்பில்லாத நிலையிலே இரண்டு ஊர் பரதர்களும் உள்ளனர். தற்காலத்தில் ஏறத்தாழ 700 குடும்பங்கள் இங்கு வாழ்கின்றனர். போரினால் இடம் பெயர்ந்த குடும்பங்கள் பல. 

மேற்கண்ட பல்வேறு தகவல்களை இலங்கை அரசின் கலாபூஷன் விருதினைப் பெற்றவரும், முத்தூர் சிப்பியன் என அனைவராலும் அழைக்கப்பட்டவரும் முத்தரிப்புத்துறையினை சேர்ந்தவருமான அலோசியஸ் பர்னாந்து,  தமது சிப்பிக்குள்முத்து என்னும் முத்தரிப்புத்துறையின் வரலாற்று நூலில் பதிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தகுந்தது.

- நி. தேவ் ஆனந்த் 

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com