சமயத்தில் சங்கமித்த சமூகம் - 1
பெரும் புகழ் வாய்ந்த தமிழ் சமூகத்தின் தொல்பழங்குடி சமூகமாய் சங்கம் தழுவிய காலம் தொட்டு இன்று வரை சூரியன், சந்திரன், வானம், விண்மீன், மேகம், கடல், என இயற்கையோடு இயற்கையாகப் பிறந்து, வாழ்ந்து, இயற்கையையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் தென்பாண்டி பரதவ குலம், தான் பயணப்பட்ட காலங்களில் சந்தித்த சமயங்களின் மதிப்பீடுகளை உள்வாங்கி தற்காலத்திலும் வெளிப்படுத்தி நிற்பதை இக்கட்டுரை சுட்டி நிற்கிறது.
“சங்கு விளையும் பாண்டிக்கடலிலே முத்துக் குளித்து முகிழ்ந்த பண்டிதர் மிகுதி” என்பது ஆன்றோர் வாக்கு. “பண்டிதம்” என்பதன் பொருளாக ஞானம் உடையவர்கள் (Profound)என்பது அமையும். அவ்வாறே பாண்டை / பண்டு மற்றும் பண்டிதன் என்ற சொற்கள், பண்டித என்ற சொல்லின் வேர் சொல்லாகும். பண்டை என்பது பழைய என்று பொருள் படும்.
அதாவது பழமையான மட்டுமல்லாது, பழமை மாறாத நிலை என்பதாகவும் நீட்சி பெறும். அப்படிப்பட்டவர்களை பாண்டை என்பதும் வழக்கு. இதிலிருந்தே பாண்டி என்பது பாண்டியர் என்பதாக விரிவடையும் சொல்லாகும்.
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர் மணலிலும் பலவே
என்ற புறநானூற்று வரிகளில் பாண்டியரின் பழமையை அறியலாம். பாண்டியர் மீன் கொடியைக் கொண்டு ஆண்டதாலும், பாண்டியன், தென்னவன், மீனவன், மாறன், கடலன் வழுதி, பரதவன், முத்தரையன் எனப்பல பெயர்களாலும் அழைக்கப்பட்டதால் பரதவ இனத்தவரே பாண்டியர் என்பது கண்கூடாகும். அப்படியெனில் பாண்டியர் தொல் பழங்குடியினர் எனில் பரதவரும் தொல் பழங்குடியினரே.

‘வருணன் மேய பெருமணல் உலகம்’
என்கிறது. இதன் பொருளாக நெய்தல் நில மக்களாகிய பரதவர்களின் தெய்வம் வருணன் எனக் கொள்ளலாம். இதனை தொல்காப்பியர் தனது பொருளதிகார சூத்திரத்தில் கடலும் கடலைச் சார்ந்த நிலமும் ஆன நெய்தல் நில மக்களின் கடவுள் வருணன் என்று சொல்லுவார். நச்சினார்க்கினியர் நெய்தல் நிலத்தில் நுளையர்க்கு வலை வலிந்த பின் அம்மகளீர் கிளையுடன் குழிஇச் சுறவுக் கோடு நட்டுப் பரவு கடன் கொடுத்தலின் ஆண்டு வருணன் வெளிப்படும் என்கிறார்.
அவ்வாறே
வெண்கூதாளத்துத் தண்பூங்கோதையர்
சினைச் சுறவின் கோடு நட்டு
மனைச் சேர்த்திய வல்லணங்கினான்
மடற்றாழை மலர்மலிந்தும்
பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும்
புன்றலை இரும் பரதவர்
பனிதழை மா மகளிரொடு
பாயிரும் பனிக்கடல் வேடஞ் செல்லா
துவவுமடிந்துண்டாடியும்’’ (பட்டினப்பாலை 85-93)
என்ற அடிகளில் பவுர்ணமி நாட்களில் பரதவர்கள் சுறாமீனின் கோட்டினை கடற்கரை மணலில் நட்டு மலர் மாலை சார்த்தி வணங்கினர். அதில் தெய்வம் ஏறியதாக நம்பினர். பனங்கள்ளையும் நெற்கள்ளையும் அருந்துவர். மீனையும் இறைச்சியையும் கடவுளுக்குப் படைப்பர். (வருணனின் வாகனம் சுறா, முதலை, மகரமீன் என திருநெல்வேலி கழகத் தமிழ் அகராதி கூறுகிறது.)
தொடரும்
- நி. தேவ் ஆனந்த்