வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 25 July 2017

பாண்டியன் தீவில் குடியேறிய வேம்பாற்றுவாசிகள்
தூத்துக்குடிக்கு எதிரே தற்போது மக்களால் பாண்டியன் தீவு அல்லது முயல் தீவு (HARE ISLAND) என்று அழைக்கப்படும் கலங்கரை விளக்கம் அமைந்துள்ள தீவு போர்த்துகீசியர் காலத்தில் "ராஜதீவு"  (ISLE DES RESIS) என்று அழைக்கப்பட்டது.  அக்காலத்தில் இத்தீவு முற்றிலும் கடலால் சூழப்பட்டிருந்தது. இன்றிருக்கும் தரைவழி அன்று இல்லை. போர்த்துகீசிய வியாபாரக் கப்பல்கள் ஏற்றி வரும் சரக்குகள் இத்தீவில் இருந்த பெரிய வணிகக் கூடங்களில் சேமிக்கப்பட்டு வந்தன. 

1603 ஆம் ஆண்டு மதுரையை ஆண்டு வந்த முத்து கிருஷ்ணப்ப நாயக்கன், முத்துக்குளித்துறை பரத மக்கள் மீது 6000 பணம் என்னும் தொகையை வரியாக விதித்தான். அவ்வாண்டில் முத்துக்குளிப்பு மிகவும் மோசமாக இருந்ததினால், பரத மக்களால் அவ்வரியைச் செலுத்த முடியவில்லை. எனவே, மதுரை நாயக்கன், கயத்தாறு குறுநில மன்னனோடு சேர்ந்து, ஒரு பெரும் படையுடன் வந்து தூத்துக்குடியை முற்றுகையிட்டுத் தாக்கி, மக்களின் வீடுகளைச் சூறையாடினான். அவனது படை வீரர்கள், இயேசு சபைத் தலைமை இல்லத்தை இடித்துத் தகர்த்தனர். அதோடு இணைந்திருந்த பனிமய மாதா ஆலயத்தையும், குருமடத்தையும், புனித இராயப்பர் கோவிலையும் நெருப்பு வைத்து அழித்தனர். பதினெட்டு நாட்களாக இருந்த முற்றுகைக்குப்பின் இயேசு சபை பொருளாளராக இருந்த சுவாமி கஸ்பார் தப்ரோ (Gaspar De Abreu) வை பிணைக் கைதியாகக் கொண்டு சென்றனர். 

அடுத்தடுத்து மதுரை நாயக்கன் தூத்துக்குடி மக்களுக்கும், பனிமய அன்னை ஆலயத்திற்கும் செய்த கொடுமைகளுக்கு ஒரு முடிவு காண,  பரதகுல சாதித் தலைவனும், எழுகடற்றுறை பட்டங்கட்டிகளும், புன்னைக்காயலில் கூடி வரிப்பிரச்சனை பற்றி கலந்துரையாடினர். இறுதியில் சிவந்தி நாத பிள்ளை என்னும் அதிகாரியை பரதகுல மக்களுக்காக பரிந்து பேசி வரியைக் குறைக்க கயத்தாறு மன்னனிடம் அனுப்பி வைத்தனர். அதற்கு கயத்தாறு மன்னன் இணங்க மறுத்ததால் மீண்டும் பரதகுல சாதித் தலைவனும், எழுகடற்றுறை பட்டங்கட்டிகளும், இன்னுமுள்ள முத்துக்குளித்துறையின் முக்கிய பிரதிநிதிகள் அனைவரும் மீண்டும் புன்னைக்காயலில் கூடினர்.

பேரவையின் இறுதியில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தூத்துக்குடி, வைப்பாறு, வேம்பாறு ஆகிய ஊர்களைச் சார்ந்த பரத மக்களும், பாதுகாப்பு தேடும் பிற சமய மக்களும் இக்கொடுமைகளிலிருந்து நிரந்திரமாகத் தப்பிக்க பரதகுல சாதித் தலைவருக்குச் சொந்தமான இராஜதீவில் குடியேறுவது என்றும், இனி தாங்கள் அனைவரும் இக்கொடிய மன்னர்களின் குடிமக்கள் இல்லை என்றும், அவர்களுக்கு தங்கள் மேல் எவ்வித அதிகாரமும் இல்லை என்றும் அறிக்கையிட்டனர்.

இத்தீர்மானத்தை நிறைவேற்றிய தலைவர்கள் பின்வருமாறு:

தொன் ஜான் டி பீரிஸ் - (முத்துக்குளித்துறை முழுவதுக்குமான சாதித் தலைவன்)

பிரான்சிஸ் டி மெல்லா - (தூத்துக்குடிக்கு மட்டுமான சாதித் தலைவன் அல்லது உள்ளூர் தலைவன்.)

ஜான்  டி குருஸ் - (முத்துக்குளித்துறை முழுவதற்குமான பொருளாளர்)

அந்தோணி டி குருஸ் - (கொம்புத்துறைப் பட்டங்கட்டி)

ஜான் டி குருஸ் - (பரதகுலாதித்தன், தூத்துக்குடி)

ஜான் பெர்னாண்டஸ் கொரைரா - (தூத்துக்குடி)

தொம் பேதுரு காகு -  (முத்துக்குளித்துறை முழுவதற்குமான தலைமைக் கணக்குப்பிள்ளை)

பவுல் மச்சாது - (புன்னைக்காயல்)

தொம்மை டி குருஸ் - (வைப்பாறு)

தொம்மை டெனிஸ் - (மணப்பாடு)

தொம்மை வாஸ் டி லீமா - (வேம்பாறு)

தொம்மை பீரிஸ் - (வைப்பாறு)

பேதுரு வாஸ் - (தூத்துக்குடி)

தொம்மை டி குருஸ் வீர நாராயணத் தேவர்

மத்தேயு தல்மெய்தா வல்நாசியார்

மனுவேல் டி குருஸ் - தூத்துக்குடி

தாமஸ் குருஸ் - (வீரபாண்டியன் பட்டணம்)

மனுவேல் டி மேஸ்கித்தா - (வேம்பாறு)

ஜான் டி மிராண்டா  - (வேம்பாறு)

தொம்மை டி குருஸ் ஆரிய பெருமாள் - ( மணப்பாடு)

மத்தேயு டி மொறாய்ஸ் - (பழையகாயல்)

ஜான் டி குருஸ் - (தூத்துக்குடி)

தொம்மை பர்னாந்து குத்திப்பெரிலார் - (ஒவிதோர், தூத்துக்குடி)

பெர்த்தொலமே விக்டோரியா - (ஒவிதோர், தூத்துக்குடி)


ஆகிய தலைவர்கள் எடுத்த தீர்மானத்தைத் தொடர்ந்து தூத்துக்குடி, வைப்பாறு, வேம்பாறு ஆகிய ஊர்களைச் சார்ந்த பரத மக்களும், பாதுகாப்பு தேடும் பிற சமய மக்களும் சிலரும் 1604 ஆம் ஆண்டில், தூத்துக்குடிக்கு எதிரேயுள்ள  இராஜ தீவில் (பாண்டியன் தீவில்) குடியேறினர். 

இப்புதிய குடியேற்றத்தை  இயேசு சபைக் குருக்களும், கோவாவிலிருந்த போர்த்துகிசிய ஆளுநர் ஐரஸ்  டி சூசாவும் முன்னின்று செயல்படுத்தினர். ஏறக்குறைய பத்தாயிரம் மக்கள் முயல் தீவில் குடியேறினர். அங்கு தங்களுக்கென்று தனித்தனி இல்லங்கள் அமைத்து வாழ்ந்தனர். அனைவருக்கும் குடிநீர் வழங்க பெரிய நீர்த்தேக்கங்களும் கட்டப்பட்டன. மேலும் தீவைச் சுற்றி பாதுகாப்பிற்காக ஒரு மதிற்சுவரும் அமைக்கப்பட்டது.

இயேசு சபையினரும் தூத்துக்குடியிலிருந்த தங்களின் தலைமை இல்லத்தை முயல் தீவுக்கு மாற்றினர். மொத்தம் பதினாறு அறைகளைக் கொண்ட புதிய தலைமை இல்லம் ஒன்றை அங்கு கட்டி எழுப்பினர். அதைச் சுற்றி மூன்று அரண்களும் அமைக்கப்பட்டன.

இயேசு சபையினரின் தலைமை இல்லத்திற்கு அருகே கற்களால் ஒரு பெரிய ஆலயம் கட்டப்பட்டது. இப்புதிய ஆலயத்திற்கு, இயேசு சபையின் கொச்சி மாநிலத் தலைவர் ஆல்பர்ட் லெர்சியோ, 1604 ஆம் ஆண்டு ஜூலை  2 ஆம் தேதி தேவ தாய் எலிசபெத்தம்மாளைச் சந்தித்த திருநாளில், அடிக்கல் நாட்டினர். இவ்வாலயம் தேவதாய் மரியாளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஆலயத்தை உருவாக்க மக்கள் 1000 தங்க நாணயங்களைக் காணிக்கையாகக் கொடுத்தனர். 

புதிய ஆலயத்தின் கட்டிட வேலைகள் 1606 ஆம் ஆண்டில் முற்றுப் பெற்றது. அதன் அகலமும் அழகும் மிக்க ஆலயம். ஆலயத்தினுள்ளே ஒன்பது பீடங்கள் இருந்தன. ஆலயத் திறப்பு விழாவிற்குப் பின் பாண்டியன் தீவு ஒரு தனிப் பங்காகவே இயங்கியது. இயேசு சபைக் குரு ஒருவர், இப்பங்கைக் கண்காணித்து வந்தார். அது 'தேவ மாதா பங்கு' (MADRE DE DEOS) என்று வழங்கலாயிற்று. அன்னையின் ஆலயம் நீங்கலாக மேலும் மூன்று சிற்றாலயங்களும் கட்டப்பட்டிருந்தன. தீவின் ஒரு கோடி முனையில் உயர்ந்ததோர் மரச் சிலுவையும் நடப்படிருந்த்து. (தகவல்: உரோமை இயேசு சபை பழங்சுவடி நிலையம் (ARSJ) Goa 55. 163-164)

பரத மக்கள், தூத்துக்குடியிலிருந்து பனிமய அன்னையின் அற்புத சுரூபத்தை பத்திரப்படுத்தி, அதனைத் தங்களோடு பாண்டியன் தீவுக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு உருவாகியிருந்த புதிய ஆலயத்தில் அன்னையின் சொரூபத்தை ஆடம்பரமாய் நிறுவி வணங்கி வந்தனர். முன்னர் தூத்துக்குடியில் பனிமய தாயின் சுரூபத்தைப் பக்தி பரவசத்தோடு வணங்கி, அதனால் அன்னையின் அற்புதக் காட்சிகளைக் காணும் பேரறு பெற்றிருந்த, இயேசு சபை சகோதரர் வணக்கத்திற்குரிய பேதுரு பாஸ்து என்பவர், பாண்டியன் தீவிலும் தங்கி, பனிமய அன்னைக்கு வழக்கம் போல் தனது பக்தி வணக்கத்தைச் செலுத்தி வந்தார். 

அக்காலத்தில் முத்துக்குளித்துரைக் கிறிஸ்தவ மக்கள், இயேசு சபைக் குருக்களின் நேரடிக் கண்காணிப்பில் இருந்தாலும், முத்துக்குளித்துறை முயல் தீவு, மன்னார் தீவு அனைத்தும் கொச்சி மறைமாவட்டத்திற்கு உட்பட்டிருந்ததினால், அவை கொச்சி ஆயரின் ஞான அதிகாரத்தின் கீழ் இருந்தது. முயல் தீவு குடியேற்றத்தின் போது, கொச்சி ஆயராக இருந்தவர் அந்திரேயாஸ் என்பவர். அவர் பிரான்சிஸ்கன் சபையை சார்ந்தவர். அவர் இலங்கை சென்றிருந்த நேரத்தில் அவருக்குத் தெரியாமலேயே பாண்டியன் தீவுக் குடியேற்றம் நடந்து முடிந்தது. இதனால் ஆயர் அந்திரேயாஸ் மனம் நொந்தார். பாண்டியன் தீவு கிறிஸ்தவக் குடியேற்றத்தைத் தனது ஞான அதிகாரத்திலிருந்து விடுபட, இயேசு சபையினர் செய்த சூழ்ச்சி என்று தவறுதலாகப் புரிந்து கொண்டார்!

எனவே, பாண்டியன் தீவில் குடியேறிய கிறிஸ்தவ மக்களை, மீண்டும் நிலப்பகுதிக்கே திரும்புமாறு ஆயர் வற்புறுத்தினார். ஆனால் நிலப்பகுதி தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தினால், மக்கள் ஆயரின் ஆணைக்குப் பணிய மறுத்தனர். ஆயர் அந்திரேயாஸ் தீவில் குடியறியவர்களை திருச்சபையிலிருந்து விலக்கம் செய்ததுடன், மதுரை நாயக்கன், கயத்தாறு மன்னனுடன் போர் ஒப்பந்தம் செய்து கொண்டார். பின் கொச்சி மற்றும் கோவாவிலிருந்து ஒரு போர்த்துக்கீசியப் படையைத் திரட்டி வந்து, பாண்டியன் தீவை முற்றுகையிடும்படி செய்தார். 

இந்த முற்றுகை 22 நாட்கள் நீடித்தது. போதிய உணவும், குடிநீருமின்றி மக்கள் தவித்தனர். எனினும் ஆயரின் படைக்கு எதிராக இயேசு சபைக் குரு ஜான் போர்கஸ் என்பவர் தலைமையில் பரதர்கள் சண்டையிட்டனர். இறுதியில் போர்த்துகீசிய வீரர்கள், இராஜ தீவுக்குள் புகுந்து, அங்கிருந்த இயேசு சபை தலைமை இல்லத்தையும் தாக்கி அழித்தனர். மாதாவின் ஆலயமும், மக்களின் வீடுகளும் சேதமடைந்தன. இதனால் வேறு வழியின்றி மக்கள் அனைவரும் தங்களின் சொந்த ஊர் திரும்பினர். இயேசு சபையினரும் மன்னார் தீவில் தஞ்சம் புகுந்தனர். ஆறு ஆண்டுகளாக நீடித்த பாண்டியன் தீவுக் குடியேற்றம் இவ்வாறு முடிவுக்கு வந்தது. ( தகவல் : AGSJ: Goa 56 (Malabarica) f. 178: Goa 55, ff 176 -178)

அனைவரும் சொந்த ஊருக்குத் திரும்பியதும் கொச்சி ஆயர் அந்திரேயாஸ் தூத்துக்குடி, வேம்பாறு, வைப்பாறு, புன்னைக்காயல், வீரபாண்டியன் பட்டணம் ஆகிய ஊர்களைக் கண்காணித்து வந்த இயேசு சபைக் குருக்களை நீக்கிவிட்டு கத்தனார்கள் எனப்படும் சிரியன் ரீதிக் குருக்களை நியமித்தார். இதனால் இந்த பங்குகளில் லத்தீன் வழிப்பாட்டு முறைகள் நீக்கப்பட்டு, சிரியன் ரீதியான வழிப்பாட்டு முறைகள் புகுத்தப்பட்டன.

போர்த்துகல் மன்னன் 3 -ஆம் பிலிப்பு முத்துக்குளித்துறையில் நிகழ்ந்த குறிப்பாக இராஜ தீவில் நிகழ்ந்த நிகழ்வுகளை அறிந்து வேதனையுற்று மீண்டும் இயேசு சபையினரிடம் முத்துக்குளித்துறையை ஒப்படைக்குமாறு கொச்சி ஆயருக்கும், கோவாவிலிருந்த போர்த்துகீசிய ஆளுநருக்கும் 1614 ஆண்டில் ஆணை பிறப்பித்தார். அதனை பல ஆண்டுகளாக செயல்படுத்தப்படவில்லை. எனவே மீண்டும் கோவா ஆளுநருக்கு கண்டிப்பான கட்டளையிட்டு கடிதம் அனுப்பினார். இதனைத் தொடர்ந்து 1621 ஆம் ஆண்டு இயேசு சபையினர் பரத குலத்தோரின் மிகுந்த வரவேற்பிற்கிடையே மீண்டும் முத்துக்குளித்துறைக்குத் திரும்பினர். இதனால் அதிர்ச்சியுற்ற கொச்சி ஆயர் தனது பதவியை உடனடியாக இராஜினாமா செய்தார்.

 - நி. தேவ் ஆனந்த் 
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com