சமயத்தில் சங்கமித்த சமூகம் - 2
பரதவர் தெய்வ நம்பிக்கை அதிகம் உள்ளவர்கள், தங்கள் வாழிடங்களிலுள்ள பனை மற்றும் புன்னை மரங்களில் வாழும் பழம்பெரும் தெய்வத்தை வழிபட்டனர் என்பதை
‘தொன்முது கடவுள் சேர்ந்த பராரை
மன்ற பெண் ணை – (அகம் 304 :3-4)
கடவுள் மரத்த முன்மிடை குடம்பை – (அகம் 270: 12)
என்ற வரிகள் எடுத்தியம்புகின்றன.

தெண் டிரைப் பெருங்கடற் பரப்பில் அமர்ந்துறை யணங்கோ
இருங்கழி மருங்கின் நிலை பெற்றனையோ ( நற்றி 150 : 5-7)
என்ற வரிகளில் ‘பெரிய கடலகத்தே விரும்பியுறையும் கடல் தெய்வமோ, கரிய கழிக்கரையின் கண் நிலை பெற்றிருக்கும் தெய்வமகளோ’ எனப் பொருள் கொள்ளத்தக்கதாகும்.

வீசும் காற்றினை காத்தவராயன் எனவும், ஞாயிற்றுக் கடவுளையும் வழிபடுவர் என்பதை
‘ஓங் குதிரை முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி
ஏமுற விளங்கிய சுடர்’ (நற் 286: 6 -8)
என்ற வரிகள் விளக்குகின்றன. இவ்வாறு மரங்கள், கடல், காற்று, சூரியன், என இயற்கையை தெய்வமாக வழிபாடும் தன்மையை இயல்பிலே கொண்டிருந்தனர். மேலும் துஷ்ட தேவதைகள் எனப்படும் சிறு தெய்வங்களால் துன்பம் உண்டாகும் என அறிந்திருந்தனர் என்பதை
‘ உருகெழு தெய்வமும் சுரந்துறையின்றே
வரிகதிர் ஞாயிறும் குடக்கு வாங்குமே’ (நற் 398 :1-2)
என்ற வரிகள் புலப்படுத்துகின்றன. பரதவரின் தெய்வ வழிபாட்டில் பெண் தெய்வ வழிபாடு முக்கியமாகத் திகழ்கிறது. ஊர் தேவதைகளான கன்னியம்மன், முத்தாலம்மன், மாரியம்மன், படைவேட்டம்மன், எல்லையம்மன் போன்ற தெய்வங்களுடன் சப்த கன்னியர்களை வழிபடும் வழக்கமும், அவர்களுக்கு ஊர் தோறும் கோவில் அமைக்கும் வழக்கமும் இருந்தன.
பெண்தெய்வ வழிபாட்டில் உச்சகட்டமாக திருஉத்திரகோசமங்கை மங்களநாயகியையும், மதுரை மீனாட்சி அம்மனையும், கன்னியாகுமரி பகவதி அம்மனையும், முருகனின் மனைவி தெய்வானையும், கொற்கை, தூத்துக்குடியில் சந்தனமாரியையும், பறக்கையில் ருக்குமணியையும், கோட்டாறில் முத்தாரம்மன்னையும், அதிவீராம்பட்டினத்தில் செங்கழுநீர் அம்மனையும், பூம்புகார் கண்ணகியையும் வழிபட்டனர்.

- தொடரும் -
- நி. தேவ் ஆனந்த்