வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Friday 7 July 2017

எகிப்தில் கோலோச்சிய தமிழ் பரதவர் - 4

தமிழர்களின் முக்கிய மாதங்களான தை, மாசி போன்றே எகிப்தியர்களின் மாதங்களான தைபிர், மெசிர் என்ற இரு மாதங்களும் அமைந்துள்ளன. இவ்விரு மாதங்களும் மிக நெருங்கிய தொடர்புள்ளவை. குறிப்பாக இவற்றின் பருவ காலங்களும் ஒரே காலத்தவையாகும். இவ்விரு மாதங்களும் தமிழர் மற்றும் எகிப்தியரிடையே காணப்படும் பன்னெடும் உறவிற்கு சான்றாக அமைந்துள்ளன.

தமிழ் பரதவர்கள் தை மாதத்தில் வரும் ஆரூத்ரா தரிசனம் நிகழ்ந்த பின்னர் தங்கள் கப்பல்களை அயல்நாடுகளுக்கு பயணம் செய்ய செலுத்துவர். ஏனெனில் இம்மாதங்களில் கடல் பரப்பில் ஏற்படும் காற்று கப்பல்களை எளிதில் செலுத்த வழி செய்யும். கீழை நாடுகளை நோக்கி பாய்மரக்கப்பல்கள் பயணம் செய்ய இவ்விரு மாதங்களும் பெரிதும் உதவும். குறிப்பாக எகிப்தியருடன் வணிகம் செய்ய இவ்விரு மாதங்கள் மட்டுமின்றி இக்காலத்தில் வீசும் காற்றும் உதவின. பரதவரின் கடல் வணிகத்தை அடிப்படையாகக் கொண்டே ‘தை பிறந்தால் வளி பிறக்கும்’ என்ற சொல்லாடல் உருவானது.

ஆனால் 'திரை கடலோடி திரவியம் தேடு' என்ற வணிகத்தினை அடிப்படையான காலம் மாறி உற்பத்தியை மையப்படுத்திய காலம் உருவான போது இச்சொல்லாடலே உருமாறி 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்றானது. இக்கருத்தை திரு.நரசய்யா அவர்களும் வலியுறுத்துகிறார்.

பரதவர்கள் தை மாதத்தில் தங்கள் கப்பல்களை அயல்நாடுகளுக்கு பயணம் செய்ய செலுத்துவர் என்பதை பிளினியும் பின்வருமாறு கூறுகிறார். Pliny says,"—Travellers set sail from India on their return to Europe, at the beginning of the Egyptian month of Tybia, which is our December, or at all events before the sixth day of the Egyptian month Mechir, the same as our January; if they do this they can go and return in the same year."

எகிப்துடனான தமிழ் பரதவர்களின் வர்த்தகத்திற்கு மேலும் சான்றாக பின்வரும் கருத்துகள் மேலும் வலு சேர்க்கின்றன......

கி. மு 1200 முதல், கி. பி 586 வரையிலான காலகட்டத்தைத்தான் எகிப்தில் இரும்புக்காலம் என்று தொல்லியலாளர் குறிப்பிடுகின்றனர். ஆனால் எகிப்திலுள்ள 'கெஃப்ரான் பெருமீடி'ல் கிடைத்த இரும்புத்தட்டைக் கரிய காலக்கணிப்பிற்கு ஆளாக்கியபோது, அது கி. மு 3800இலிருந்து கி. மு 2800க்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்ததென்று தெரியவந்தது. அதாவது, எகிப்தில் இரும்புக்காலம் தொடங்காத காலத்தைச் சேர்ந்த அவ்விரும்புத்தட்டு, தேனிரும்பையும் சிறுங்கரிய இரும்பையும் மென்தகடுகளாகத் தட்டித்தட்டிப் பல்லடுக்குகளாக்கி, பின்பு வெப்பமூட்டிச் சம்மட்டியால் அடித்தடித்து ஒன்றிணைக்கும் முறையால் செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்தது. இம்முறை, பண்டைத் தமிழகத்து முறையாகும்.

மேலும் குரங்குக்கும் யானைத் தந்தத்துக்கும் அவர்கள் மொழியில் வழங்கிய பெயர்கள் இன்றும் தமிழில் காணப்படுவன. அவை கவு, எவு என்பன. இவை கவி, இபம் என்னும் தமிழ்ச் சொற்களின் திரிபுகள். தமிழர்களிடையும் பழைய எகிப்தியரிடையும் காணப்பட்ட பழக்கவழக்கங்கள் பெரும் பாலும் ஒரே வகையின. அவர்கள் எழுதுவதற்கு ஓவியங்களைப் பயன்படுத்தினர். ஓவியங்களே தமிழ் மக்களின் எழுத்துக்களாக ஒருகாலத்தில் இருந்தன. எகிப்தியரின் மரக்கலங்கள் இன்றும் இந்திய நாட்டில் காணப்படுவன போன்றவை.

தேடல் தொடரும் 

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com