வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Monday 26 March 2018

இலங்கையில் புழங்கிய முத்துக்குளிப்புச் சொற்கள்

இலங்கையில் புழங்கிய முத்துக்குளிப்புச் சொற்கள் என்னும் இக்கட்டுரை, மிகப் பழைய காலம் முதல் ஏறத்தாழ 19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இலங்கையின் முத்துக்குளிப்புத் துறையில் பயின்று வந்த சொற்கள் தொடர்பானது. இலங்கையின் முத்துக்குளிப்புப் பகுதி இலங்கைத் தீவின் வட மேற்கில் உள்ள நீர்கொழும்பு முதல் மன்னார் வரையிலான கரையோரப் பகுதியை அண்டிய மன்னார்க் குடாப் பகுதியாகும். இப்பகுதி நீண்டகாலமாகத் தமிழ் அரசான யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. அத்துடன், இலங்கையின் முத்துக்குளிப்புத் தொழிலில் இலங்கையின் வடபகுதியைச் சேர்ந்த கரையோரப் பகுதி மக்களுடன் பெருமளவிலான தமிழ்நாட்டுக் கரையோரப் பகுதி மக்களும் ஈடுபட்டிருந்தனர். தமிழகத்தின் பாண்டிநாட்டுக் கரையோரப் பகுதிகள் பண்டைக்காலம் தொட்டே முத்துக்குளிப்புக்குப் பெயர் போனவை. இதனால், தென் தமிழ்நாடு, இலங்கையின் வடபகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய முத்துக்குளிப்புப் பிரதேசத்தில் இத்தொழில் சார்ந்த பல தமிழ்ச் சொற்கள் உருவாகிப் பயன்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

முத்துக்குளிப்புச் சொற்கள்

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெளிநாட்டவர்கள் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளில் கூட புழக்கத்தில் இருந்த சொற்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதையும் காண முடிகிறது. முத்துச் சிப்பிகள் விளையும் இடங்கள், முத்துகுளிக்கும் முறை, முத்துக் குளிப்போரும் படகோட்டிகளும் வேலை செய்யும் முறையும் அவர்களது பழக்கவழக்கங்களும், முத்துக்களின் தர அளவீடு போன்ற பல்வேறு துறைகளில் தமிழ்ச் சொற்கள் பயன்பட்டுள்ளன

முத்து விளையும் இடங்கள்

பார் - கடலுக்கு அடியில் முத்துச் சிப்பிகள் விளையும் இடம் "பார்" எனப்பட்டது. இலங்கையின் முத்துக்குளிப்புப் பகுதியில் 19 பார்கள் வரை இருந்ததாகத் தெரிகிறது. அவை அவற்றுக்கு அண்மையில் உள்ள இடங்களின் பெயர்களால் அழைக்கப்பட்டன. அவற்றுட்சில பின்வருமாறு:[1]

கொண்டச்சிப் பார்
சிலாபம் பார்
காரைதீவுப் பார்
பெரிய காரைப் பார்
செவ்வல் பார்
மோதரகம் பார்
அரிப்புப் பார்

துணைப் பொருட்கள்

வள்ளம் - வள்ளம் என்பது மரக்கலம், தோணி போன்ற பொதுப் பொருளிலேயே பயன்படுத்தப்பட்டு வந்தாலும், முத்துக்குளிப்பில் இதற்குச் சிறப்புப் பொருள் இருந்ததாகத் தெரிகிறது. முத்துக்குளிப்பு நடத்துவதற்கு வாய்ப்பான நிலைமைகள் உள்ளனவா என அறிவதற்கு அக்கால அரசாங்கம் 10,000 தொடக்கம் 20,000 வரையான முத்துச் சிப்பி மாதிரிகளை எடுத்து விளைச்சல் அளவை மதிப்பிடுவது வழக்கம். இதற்குப் பயன்பட்ட மரக்கல வகை வள்ளம் எனப்பட்டது. இவற்றில் சேகரிக்கப்படும் சிப்பிகள் இடுக்குகளுக்குள் மறைந்து விடாதபடி, துருத்திக்கொண்டு இருக்கக்கூடிய வளைகள் எதுவும் இல்லாமல் இதன் உட்புறம் மட்டமாக இருக்கும்.[2]

பருமன் வகைப்பாடு

பெட்டி - முத்துக்களை மதிப்பிடுவதில் அவற்றின் பருமனும் முக்கியமானது. முத்துக்களை அளவின் அடிப்படையில் பிரிப்பதற்குப் 10 வேறுபட்ட அளவுகளைக் கொண்ட சல்லடைகள் பயன்பட்டன. இது பெட்டி எனப்பட்டது. சல்லடைகள் 3 அங்குல விட்டமும் ஒரு அங்குல ஆழமும் கொண்டவையாகப் பித்தளையினால் செய்யப்பட்டிருந்தன. அடிப் பக்கத்தில் சம அளவுள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான துளைகள் இடப்பட்டிருக்கும். இவை மொத்தப் பரப்பில் நெருக்கமாக அமைந்திருக்கும். மிகப்பெரிய துளைகளைக் கொண்ட சல்லடை 20 துளைகளைக் கொண்டிருந்தது. அடுத்து, 30, 50, 80, 100, 200, 400, 600, 800, 1000 ஆகிய எண்ணிக்கையான துளைகளைக் கொண்ட சல்லடைகள் இருந்தன. இவற்றுள் 1000 துளைகளைக் கொண்ட சல்லடை மிகச் சிறைய துளைகளைக் கொண்டது. 1000 துளைகளைக் கொண்ட சல்லடையில் தொடங்கி 20 துளைகளைக் கொண்ட சல்லடை வரை ஒன்றன்பின் ஒன்றாகப் பயன்படுத்தி அரித்து முத்துக்களைப் 10 வகையாகப் பிரிக்க முடியும். இச்சல்லடைகள் மூன்று வகைளாகப் பிரிக்கப்பட்டுப் பெயரிடப்பட்டிருந்தன.[3]

செவ்வுப் பெட்டி - 20, 30, 50, 80 துளைகளைக் கொண்ட சல்லடைகள்வடிவுப் பெட்டி - 100, 200, 400 துளைகளைக் கொண்ட சல்லடைகள்தூள் பெட்டி - 600, 800, 1000 துளைகளைக் கொண்ட சல்லடைகள்

செவ்வியத் தன்மை

முத்துக்களின் தரத்துக்கான இன்னொரு அளவீடு அவற்றின் செவ்வியத் தன்மை. இது இரண்டு தன்மைகளில் தங்கியுள்ளது. ஒன்று வடிவம். முத்துக்களைப் பொறுத்தவரை இது அவற்றின் கோளத் தன்மை ஆகும். அடுத்தது, வெள்ளி போன்ற மினுக்கம். இந்த இயல்புகளை அடிப்படையாகக் கொண்டு முத்துக்கள் வகைகளாகப் பிரிக்கப்பட்டன. அவற்றின் பெயர்களும், விளக்கமும் வருமாறு:[4]

ஆணி - வடிவம், மினுக்கம் ஆகிய இரு தன்மைகளிலும் நிறைவாக இருப்பது.

அனதாரி - வடிவம், மினுக்கம் ஆகிய தன்மைகளில் ஏதாவது ஒன்றில் ஓரளவு குறையைக் கொண்டிருப்பது.

மாசங்கு (அல்லது சமதயம்) - வடிவம், மினுக்கம் ஆகிய இரண்டு தன்மைகளிலும் ஓரளவு குறைகளைக் கொண்டிருப்பது.

கலிப்பு (அல்லது கையேறல்) - வடிவம், மினுக்கம் ஆகிய இரண்டு தன்மைகளிலும் கூடிய குறைகளைக் கொண்டிருப்பது.

குறுவல் (அல்லது குறள்) - இரட்டை முத்து. சில வேளைகளில் இரண்டு ஆணிகள் ஒட்டியிருப்பது.

பீசல் - ஒழுங்கற்ற வடிவத்துடன் இரண்டுக்கு மேற்பட்ட முத்துக்கள் இணைந்திருப்பது. 

மடங்கு - மடிந்த அல்லது வளைந்த முத்துக்கள்.

வடிவு - பல்வேறு அளவுகளையும், வகைகளையும் கொண்ட அழகிய தொகுதி. 

தூள் - பொடி போன்ற மிகச் சிறிய முத்துக்கள்.

மாசுதூள் (அல்லது மாசிற்றூள்) - பத்தாவது சல்லடையூடாகச் செல்லக்கூடிய தூள் முத்துக்கள், கறைகளுடன் கூடியவை.

ஒட்டுமுத்து - சிப்பியின் ஓட்டுடன் ஒட்டி இருக்கக்கூடிய முத்துக்கள். இவை அரித்துப் பிரிக்கப்படுவது இல்லை. அவற்றின் அளவுகளைக் கருத்தில் எடுக்காமல் இன்னொரு வகையாகக் கொள்ளப்படுகின்றன.

எடை அலகுகள்

முத்துக்களின் பெறுமதியை அறிவதற்கு அவற்றில் எடையை அளப்பது முக்கியமானது. இலங்கையில் முத்துக்கள் பின்வரும் அலகுகளில் அளக்கப்பட்டன:[5]

கழஞ்சு - இது 7.75 ஆங்கில "கிரெய்ன்" (ஏறத்தாழ 502.19 மில்லிகிராம்) ஒரு பித்தளை எடைக்குச் சமமானது.

மஞ்சாடி - மஞ்சாடி ஒரு மரத்தின் விதை. முழுமையாக முதிர்ந்த விதைகள் ஏறத்தாழ ஒரே எடை கொண்டவை. 20 மஞ்சாடிகள் ஒரு கழஞ்சு எடைக்குச் சமம்.

குண்டுமணி - இதுவும் ஒரு விதையே. அளவில் சிறிய இது அரை மஞ்சாடிக்குச் சமம்.

செவ்வு எடை - தரம் குறைந்த வகை முத்துக்களின் பண மதிப்பை அறிவதற்கு, அவற்றின் மஞ்சாடி எடையை நேரடியாக அவற்றின் சந்தை விலையால் பெருக்கி அறிந்தனர். ஆனால் தரம் கூடிய முத்துக்களின் பண மதிப்பை அறிவதற்கு முத்துக்களின் மஞ்சாடி எடையின் இருபடியின் முக்காற் பங்கைச் சந்தை விலையால் பெருக்குவது வழக்கம். இந்த "மஞ்சாடி எடையின் இருபடியின் முக்காற் பங்கு" செவ்வு எடை எனப்பட்டது.
செவ்வு எடை = (மஞ்சாடி எடை)2 x 3/4

குறிப்புகள்

Vane, G., Perl Fisheries in Ceylon, Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society Volum X No. 34, 1887. p. 16.
Vane, G., Perl Fisheries in Ceylon, 1887. p. 19.
Vane, G., Perl Fisheries in Ceylon, Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society Volum X No. 34, 1887. p. 39.
Vane, G., Perl Fisheries in Ceylon, 1887. p. 21, 22, 33, 34.
Vane, G., Perl Fisheries in Ceylon, 1887. p. 16.

இவற்றையும் பார்க்கவும்


.
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com