வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday 15 August 2018

சர்வம் ஜெகத் சாக்ஷாத் பிரஹ்மம்
எட்டையாபுரத்தில் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 11 ஆம் நாள் பிறந்த மகாகவி பாரதிக்கும் மணப்பாட்டில் 1875 ஆம் ஆண்டு பெப்ரவரி திங்கள் 7ஆம் நாள் பிறந்த வித்வான் ஜே. ஆர்.மிராந்தாவுக்கும் நல்ல பரிச்சயம் இருந்ததென்று பின்னவரின் குறிப்புகளிலிருந்து தெரிகிறது. 'சுதேச கீதங்கள்' என்னும் தலைப்பில் பாரதியின் பாடல் தொகுப்பு முதன்முதலில் 1908ல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு வெளிவந்தவற்றில் பிலஹரி இராகத்தில் அமைந்த ‘விடுதலை’ என்னும் பாடலும் ஒன்று. அதன் முதல் சரணத்தில் 

பறையருக்கும் இங்கு தீயர் 
புலைய ருக்கும் விடுதலை 
பரவ ரோடு குறவ ருக்கும் 
மறவ ருக்கும் விடுதலை

என்று எழுதப்படிருந்த வரிகள் மிகவும் உறுத்தலாகவே இருந்தன. அந்த கால கட்டத்தில் இலங்கையின் வணிகத்துறையில் பரவரின் கொடி வானுயரப் பறந்த காரணத்தால் செல்வா செழிப்பில் தலைநிமிர்ந்து, ஐரோப்பிய நாகரிகத்தை உள்வாங்கிக் கொண்ட ஆடம்பரத்தின் தாக்கம் தூத்துக்குடி, மணப்பாடு, வீரபாண்டியன்பட்டணம், ஆலந்தலை போன்ற ஊர்களின் மாளிகை போன்ற வீடுகளின் பிரமாண்டத்திலும், பரவரின் வாழ்க்கை முறையிலும் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. (Madras District Gazetteers, Tirunelveli-Published in 1917 –by H.R. Pate I.C.S ., Volume I pages 121/122). 

பாரதியின் பாடல் தொகுப்பு வெளியான போது வித்வான் ஜே. ஆர்.மிராந்தா இலங்கையில் கொழும்பு நகர், கண்ணாரத் தெருவில் சொந்தமாக ஓர் அச்சுக்கூடம் நிறுவி ‘திராவிட மித்திரன்’ (வாரமொருமுறை), பரதன் (மாத இதழ்) இரண்டையும் ஆசிரியர் பொறுப்போடு நடத்திக் கொண்டிருந்தார். பாரதியின் பாடல் வரிகளைக் கேள்விப்பட்டவுடன் தூத்துக்குடி சென்று அங்கு வித்வான் எம். அலங்காரம் பீரிஸ் என்பவரையும் கூட்டிக் கொண்டு, அப்போது தூத்துக்குடி கைவல்யசுவாமி மடத்தில் தங்கியிருந்த பாரதியிடம் சென்று ‘ எந்த வகையில் நாங்கள் அடிமைகளானோம்? வர்ணாசிரமத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தவருடன் பரவரையும் சேர்த்துப் பாடியது ஏன்? எதுகை, மோனைக்காகவா? அன்றி எங்களையும் தாழ்த்தப்பட்டவர் என எண்ணி விட்டீரோ? என்று ஆவேசத்தோடு கேட்டிருக்கிறார்கள். அப்போது தன்னை மறந்த நிலையிலிருந்த பாரதி ஒரு கவிதையில் பதிலை விலாசினாராம். 

"குமரி நாட்டின் மக்களாம் பரதர் 
விமரிசை வாழ்வை விளம்புவம் கேண்மிர் 
பரதரில் ஆடவர் பாவையர்க்கடக்கம் 
பாவையர் பாலர்முதற் பலசபைகளி லொடுக்கம் 
சபைகளோ கன்னியர் விரித்துள கண்ணிகள் 
அவர்களோ குருக்களின் ஐந்தாம்படைக் குழுவினர் 
குருக்களோ சர்வம் ஜெகத் சாக்ஷாத் ப்ரஹமம் 
ஆதலிற் பாடினேன் அவர்களுக்கும் விடுதலையே!” 

என்று (நிகழ்வும் பாடலும் 1954 இல் சில மாதங்கள் பாளையங்கோட்டையில் என் பாட்டனார் வித்வான் ஜே.ஆர்.மிராந்தா வீட்டில் தங்கியிருந்த போது அவர் சொல்லக் கேட்டு எழுதிய குறிப்பிலிருந்து எடுக்கப்பட்டது.) 

அந்தக் காலத்தில் ஐரோப்பிய குருக்கள் மீது கடற்கரைக் கிறிஸ்தவர் வைத்திருந்த அதீதமான மதிப்பும், மரியாதையும், பக்தியும், பணிவும் ஒரு வேளை பாரதியின் கண்களுக்கு அடிமைத் தனத்தின் அடையாளமாகக் காட்சி கொடுத்திருக்கலாம். என்றாலும் பரவர் கத்தோலிக்கம் தழுவிய நாள் முதல் 175௦ கள் வரை துவக்க கால போர்த்துக்கேய இயேசு சபைக் குருக்கள் பரவனின் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்திற்கும் படிக்கற்களாக உழைத்தது போல் அல்லாமல் பிற்காலத்தில் 1838 ஆம் ஆண்டிற்குப் பிறகு வந்திறங்கிய தூலுஸ் மிஷன் பிரெஞ்சு இயேசு சபைக் குருக்கள் பரவரின் முன்னேற்றத்திற்கு தடை நின்று சமூக ஒற்றுமைக்கு ஊறு விளைவித்த வரலாற்று உண்மையை புறக்கணித்துவிட முடியாது. அவற்றைக் கிளறிப் பார்ப்பது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. ஆனால் சமூகத்தையும், சமயத்தையும் குழப்பி ஒரே பைக்குள் திணித்துத் திண்டாடும் தவறை மீண்டும் மீண்டும் தலைமுறை தவறாமல் பரவர் செய்து கொண்டிருப்பதன் காரணம் தான் என்னவென்று விளங்கவில்லை. 

இன்னும் கூட பரவரின் சமூக ஏடுகளில் வெளியீடுதோறும் விவிலிய புதிர்களும், விழாக்கள் பற்றியும், வேதவிளக்கக் கட்டுரைகளும் சில பக்கங்களை நிரப்பிகொண்டுதான் வருகின்றன. சமூக முன்னேற்றத்தின் எதிர் நோக்குப் பார்வையோடு கூடிய அறிவார்ந்த கட்டுரைகள் அரிதாகவே வருகின்றன. வரலாற்றுப் பெருமைகளை நினைவு படுத்துவது தவறில்லை. ஆனால் அவை வெறும் நினைவுகளாக மனத்திரையில் நிழலாடி மறைந்துவிடாமல் இழந்த பெருமைகளை மீட்டெடுக்கும் முயற்சி வித்துகளாகப் பரிணமிக்கும் பான்மையில் வெளிவந்தால் நன்மை பயக்கும். 

- ஜெ.எச். செல்வராஜ் மிராந்தா 

காலனியம் | சமயம் | பரவர் நூல்
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com