வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Sunday 26 August 2018

தொல்புகழ் படைத்த, தொண்டித் துறைமுகம்..!
பல்வேறு வகை கடல்கள் உள்ளன. அவை மாக்கடல், வளைகுடா, விரிகுடா, நீரிணை (ஜலசந்தி) என பல்வேறு பெயர்களைப் பெற்றுள்ளன. தமிழகக் கடல்களில் இவை நான்கும் உள்ளன. தெற்கெல்லையில் கிடக்கும் இந்துமாக்கடல் மிகப் பெரும் நீர்பரப்பு. அதற்கு வடக்கில் கிடக்கும் மன்னார் வளைகுடா வளைவான குடாக்கடல். குடாக்கடலைத் தாண்டி ஆழமின்றி ஆர்ப்பரிப்பு இல்லாமல் படுத்துக்கிடப்பது பாக் ஜலசந்தி, ஜலசந்தியைத் தாண்டி வடக்கில் ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுப்பாடி அலையெழுப்பிக் கொண்டிருப்பது வங்காள விரிகுடா, இது சோழமண்டலக் கடற்கரை எனவும் கூறப்படுகிறது.

இந்த நான்கு கடல் சகோதரிகளின் கரையிலிருக்கும் முக்கியபட்டினங்கள் பழம்பெரும் வரலாறுகளைப் பேசாமல் பேசிக்கொண்டிருக்கின்றன. பல்லவர்களின் கோநகரான மாமல்லபுரம், சோழர்களின் முக்கிய பட்டினமான காவிரிப்பூம்பட்டினம், பாண்டியர்களின் பழம்பெரும் துறைமுகமான தொண்டிமாநகர், கொற்கை, காயல், சேரர்களின் கடற்கரைப் பட்டினங்களாகன குளச்சல், தேங்காய்ப்பட்டினம் எனத் தமிழகக் கடலோரங்கள் பல்லாயிரமாண்டுகளின் கதைகளைச் சுமந்து நிற்பவை.

இவற்றில் நாம் இப்போது தொண்டித் துறைமுகத்தைப் பற்றி அறிந்து கொள்ளவிருக்கிறோம். அது நம் கருத்தில் பதியவைக்கும் சங்கதிகளைப் பற்றி புரிந்துகொள்ள விருக்கிறோம். இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை வட்டத்திலுள்ள துறைமுகப் பட்டினமாகும் இது.

தொண்டி என்பதற்கு துறை, துவாரம் என்று பொருள். ஐம்பதாண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட துளையுள்ள காலணா நாணயத்தை வடமாவட்டங்களில் தொண்டிக் காலணா என்றனர். கடலுக்கு துவாரம் போல துறைமுகம் அமைந்ததால் அதை தொண்டி என்றனர். எனவே கடல் துறையை முகத்துவாரம் எனவும் அழைத்தனர்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கீர்த்தியோடு விளங்கிய கிழக்குக் கரையோரப்பட்டினங்களின் ராணி நகர் இது. கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் இங்கு சமண மதம் சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தது. இலவோன் எனும் சமண மன்னன் தொண்டியைத் தலைநகராக்கி ஆண்டபோது மதுரையிலுள்ள மலைக்குகைகளில் சமணத் துறவிகளுக்கு படுக்கைகள் அமைத்துக் கொடுத்துள்ளான். இதைப் பற்றிய கல்வெட்டுகள் மதுரை கீழவளவு குகைப் பகுதியில் உள்ளன.

1800 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில் தொண்டியைப் பற்றிய பதிவுகள் உள்ளன. அதிலுள்ள ஊர்காண் காதையில் காவிரிப்பூம்பட்டினத்தில் நடந்த இந்திர விழாவிற்கு தொண்டியை ஆண்ட அரசரால் அகிற்கட்டைகளும் துணிமணிகளும் வாசனைப் பொருட்களும் மரக்கலங்களில் அனுப்பப்பட்ட சங்கதி பாடலாக பதிவாகியுள்ளது. ‘வங்க வீட்டத்து தொண்டியோரிட்ட அகிலும் துகிலும் ஆரமும் வாசமும்’ என்ற சொற்றொடர் தொண்டியின் பழம்பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

வரலாற்று ஏடுகளிலும் இலக்கிய ஏடுகளிலும் பதிவாகியுள்ள மிகப்பழமையான துறைமுகப்பட்டினமான தொண்டிமாநகர் ஒரு நல்ல பெண்ணின் இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாக கூறப்பட்டுள்ளது. எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையின் கீழ்க்கண்ட பாடலைப் பாருங்கள்.

“வான்கடல் பரப்பில் தூவதற்கு எதிரிய
மீன்கண் டன்ன மெல்லரும்பு ஊழ்த்த முடவுமுதிர் 
புன்னை தடவுநிலை மாச்சினைப்
புள்ளிறை கூரும் மெல்லம் புலம்ப
நெய்தல் உன்கண் பைதல் கலுழப்
பிரிதல் எண்ணினை யாயின் நன்றும்
அரிது துற்றனையால் பெரும் உரிதினில்
கொண்டாங்குப் பெயர்தல் கொண்டலொடு
குரூ உத்திரைப் புணரி உடைதரும் எக்கர்ப்
பழந்திமில் கொன்ற புதுவலைப் பரதவர்
மோட்டுமணல் அடைகரைக் கோட்டுமீன் கொண்டி
மணங்கமழ் பாக்கத்துப் பகுக்கும்
வளங்கெழு தொண்டி யன்ன இவள் நலனே!”
(குறு, நெய்தல் – பா10)

புலவர் அம்மூவனார் கூறுகையில், அழகான உவமையைக் கையாண்டுள்ளார். அதாவது, தலைவியின் அழகுக்கு சிறுசிறு உவமைகள் கூறாமல், தொண்டி என்னும் ஊரின் மொத்த அழகையும் உவமிக்கிறார். இதன்மூலம் தலைவியின் அன்பு யாராலும் அளவிட முடியாத அளவு மிகப் பரந்துபட்டது என்பதை நுட்பமாகவும் மிக அழகாகவும் கூறியுள்ளார் (தினமணி). இது போன்ற உவமைகள் சங்கப் பாடல்களுக்கே உரிய சிறப்புகளாகும்.

பாடியவர் யாரெனத் தெரியாத நற்றினைப் பாடல் சொல்லும் தொண்டியின் சீர்த்தியைக் கேளுங்கள்.

‘கல்லென் புள்ளின் கானல்அம் தொண்டி
நெல்அரி தொழுவர் கூர்வாள் உற்றென
பல்இதழ் தயங்கிய கூம்பா நெய்தல்’

’கல்’ என ஒலிக்கும் பறவைக் கூட்டத்தையுடைய கடற்கரைச் சோலையாற் சூழ்ந்தது தொண்டு எனும் ஊர். அவ்வூர் வயலிலே நெற்கதிர் அறுக்கும் உழவரின் கூர்மையான அரிவாளால் நெய்தல் மலரும் அறுபடும். இலக்கியங்களிலும் வரலாற்று நூல்களிலும் ஆங்காங்கு காணப்படும் சங்கதிகள் தொண்டிமாநகரை முதன்மையான பட்டினமாக நமக்குக் காட்டுகின்றன.

கிரேக்கர், ரோமர், யவனர் என மேலைநாட்டினரும் சீனர், சாவகர், சிங்களர் என கீழை நாட்டினரும் கால்பதித்த துறைமுகப்பட்டினம் தொண்டிமாநகர். இதன் கடற்கரைத் தெருவுக்குப் பெயர் ‘பன்னாட்டார் தெரு’ என்பதாகும். பல நாட்டவரும் வந்து தங்கி வணிகம் செய்த தெரு. வாசனைப் பொருட்களும் துணிமணிகளும் ஏற்றுமதியான தொண்டிச் சீமையில்தான் கீழைத்தேச பொருட்களும் தேக்கு மரங்களும் அரபுக் குதிரைகளும் வந்திறங்கியதாக வரலாறு கூறுகின்றது. ஆண்டொன்றுக்கு 25,000 குதிரைகள் வந்திறங்கியதாக ஆவணங்கள் கூறுகின்றன.

மிடுக்காக நடைபயிலும் பெண்ணை இன்றும் தஞ்சைப் பகுதியில் தொண்டிக் குதிரை போல் நடக்கிறாள் எனக் கூறும் பழக்கம் உண்டு. இங்கு வந்து கரையேறிய பர்மாவின் தேக்கு மரங்கள்தான் செட்டிநாட்டு பங்களாக்களை அரண்மனையாக்கியுள்ளன. தொண்டியிலிருந்து புறப்பட்ட மரக்கலங்கள் கிழக்கையும் மேற்கையும் இணைத்தன. 1940 – களில் இங்கிருந்து கப்பலில் இலங்கை செல்ல வெறும் இரண்டு ரூபாய் தான் கட்டணம். விடுதலை பெற்றபின் கள்ளத் தோணியில் பயணம் செய்ய இருபத்தைந்து ரூபாய்தான் கட்டணம். இலங்கையில் கள்ளத்தோணியருக்கு ‘மரக்கல மினுசு’ எனப் பெயர்.

தொண்டிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே முப்பது கல் தொலைவே உள்ளது. இவ்வூர் மக்கள் முற்காலத்தில் பாய்மரக்கப்பலேறி வைகறையில் சென்று வாணிபம் செய்து விட்டு மாலையில் ஊர் திரும்பி விடுவாராம். பயணக் கட்டணம் கால்ரூபாயாம். 1890 முதல் 1915 வரை தொண்டிக்கும் கொழும்புக்கும் நீராவிக் கப்பல் போக்குவரத்து இருந்ததாம்.

காலாதிகாலமாக இங்கு வந்து சென்று கொண்டிருந்த அரபுக்கள் இஸ்லாத்தின் வருகைக்குப் பின் – முஸ்லிம்களான பின் தொண்டித் துறைமுகத்தை வசிப்பிடமாகவும் கொண்டனர். இதை உறுதிப்படுத்துவது போல் அலைவாய்க்கரையை அடுத்து ஓடாவித் தெரு, சோனகர் தெரு, மரைக்காயர் தெரு, லெப்பைத் தெரு என தெருக்கள் பெயர் பெற்றுள்ளன. 2500 ஆண்டுகளுக்கு மேலாக வெளிநாட்டினரின் விருப்பமுள்ள நகராக விளங்கிய தொண்டி மாநகரில் கால் வைத்துத்தான் பலரும் மதுரையை அடைந்துள்ளனர்.

பூர்வீகக் குடிகளின் கணக்கோடு இங்குள்ள மீனவப் படையாட்சிகளும் உள்ளனர். பனிரெண்டாவது நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கு சோழ நாட்டுப் படைக்கும் சிங்களப் படைக்கும் போர் நடந்தனத ஆர்ப்பாக்கத்தில் காணப்படும் கல்வெட்டு ஒன்றால் அறியக்கிடைக்கிறது. போர் நடந்த போது சிங்களர் வந்து பாளையம் இறங்கிய இடமே பிற்காலத்தில் ‘புதுப்பட்டினம்’ ஆனது.

போராளிகளாய் படைகளில் ஆட்சி செய்த படையாட்சிகளே பிற்காலத்தில் போரில்லா காலத்தில் மீன்பிடித் தொழிலில் இறங்கியுள்ளனர். வாள் பிடித்த கைகள் வாள் போன்ற வாளை மீன் பிடித்துள்ளன. ஆதிக்குடிகளோடு கடந்த 200 ஆண்டுகளுக்கு முன் இங்கு குடியேறியவர்களை அவர்களின் வீட்டுப் பெயர்கள் அடையாளம் காட்டுகின்றன. எக்க குடியார் வீடு, தெக்கத்தியார் வீடு, சேர் வாய்க்கால் வீடு, கண்ணங்குடியார் வீடு, அனுமந்தங்குடியார் வீடு, குணங்குடியார் வீடு என ஊர்ப் பெயர்களை அடையாளம் காட்டும் வீட்டுப் பெயர்கள்.

குணங்குடி மஸ்தான் எனப் பேசப்படும் ஞானியின் தந்தையின் ஊர் குணங்குடி; தாயாரின் ஊர் தொண்டி. இங்கு பிறந்து வளர்ந்து கீழைக்கரை அரூஸியா மதரசாவில் ஓதியவரே குணங்குடி மஸ்தான் எனும் சுல்தான் அப்துல் காதர். தொண்டித் துறைமுகத்தின் விரிவான வரலாறு பதிவாகாமல் இருந்தாலும் துணுக்குகளாக பல சங்கதிகள் கிடைக்கின்றன. இங்கு வந்து குடியேறிய அரபிகளில் மொரோக்காவிலிருந்து வந்து குடியேறிய சையிது லப்பை குடும்பத்தினரைப் பற்றி பன்னூலாசிரியர் தம் இஸ்லாமியக் கலை களஞ்சியத்தில் பதிவு செய்துள்ளார்.

பல்வேறு கால கட்டங்களில் அரபு முஸ்லிம்கள் தொண்டியில் வந்து குடியேறியிருந்தாலும் 13 – ஆம் நூற்றாண்டில் அரபகத்திலிருந்து கப்பல் கப்பல்களாக கிழக்குக் கடற்கரைப் பட்டினங்களில் வந்து குடும்பங்களோடு குடியேறினர். அவற்றில் தொண்டியும் ஒன்று. இவர்களின் அடையாளத்தை நாம் நன்கறிவோம். இவர்கள் தம் மாப்பிள்ளைகளை வீட்டோடு வைத்துக் கொள்வர். சொத்துக்கள் யாவையும் பெண்களுக்கு மட்டும் உரியவை. பழவேற்காட்டிலிருந்து காயல்பட்டினம் வரை பனிரெண்டு பட்டினங்களில் இன்றும் அவர்கள் தனித்த அடையாளத்துடன் வாழ்கின்றனர்.

வெளிநாட்டுத் தொடர்புகள் உள்ள ஊர்களில் பர்மாக்காரர் வீடு, சிங்கப்பூரார் வீடு, பினாங்கார் வீடு, கொழும்பார் வீடு என குடும்பங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும். இவற்றில் ‘சீயத்தார் வீடு’ என வீட்டுப் பெயர் இருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தொண்டியில் சீயத்தார் வீடு என ஒரு குடும்பத்தார் உண்டு. அதென்ன சீயத்தார். சயாம்தான் சீயமாக மாறியுள்ளது. சயாம் நாட்டில் வணிகம் செய்தவர்கள் சீயத்தார் என அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றனர். சயாமின் இன்றைய பெயர் தாய்லாந்து.

தொண்டித் துறைமுகத்திலிருந்து சென்று இலங்கை திருக்கோணமலை துறைமுகத்தில் தொழில் செய்த அலித் தம்பி மரைக்காயரின் மகன் சுல்தான் அபூபக்கர் அங்கு இரண்டு பள்ளிவாசல்களைன் நிர்மாணித்து வக்பு செய்துள்ளார். கி.பி.1770 – இல் இவர் கட்டிய பெரிய திருக்கோணமலை சோனகத் தெருவில் உள்ளது. 1781 – இல் கட்டிய சிறிய பள்ளி மரைக்காயர் பள்ளி எனும் பெயரில் என்.சி.சாலையில் உள்ளது. இரு பள்ளிகளுக்கும் வருவாய் பெற சில கடைகளையும் தோட்டங்களையும் வக்பு செய்துள்ளார். இவரின் மகன் சீனித் தம்பி மரைக்காயரும் மைத்துனர் முகம்மது அலீ மரைக்காயரும் பல நல்லறங்கள் செய்துள்ளனர். பல்வேறு பகுதி மக்கள் தொண்டியில் வந்து வாழ வழி வகுத்துள்ளனர்.

தொண்டியின் சகோதர ஊரான நம்புதாழையைச் சேர்ந்த கிதுர் முகம்மது எனும் நல்லத் தம்பிப் பாவலர் தொண்டி அரசும் பொது மருத்துவமனைக்கு எதிரில் பேரும் புகழோடு வாழ்ந்தார். இலங்கை கண்டியை அடுத்த கம்பளையில் பெரும் வணிகராகத் திகழ்ந்த பாவலர் ‘இசைத்தேன்’ எனும் இசைப்பாடல் நூலை வெளியிட்டுள்ளார். ‘இசைமுரசு’ நாகூர் அனிபா தன் முதலடிகளை இவர் மூலம்தான் வைத்துள்ளார். கம்பளை, மதுரை, தொண்டி, சென்னை என பாவலரின் வாரிசுகள் வாழ்கின்றனர். பாவலரின் புதல்வர்களில் இருவர் சென்னையில் டாக்டர்களாக உள்ளனர். அவர்கள் டாக்டர் காதர் மஸ்தான், டாக்டர் அக்பர் அலீ. பாவலரின் பேரர் லியாக்கத்தலி ‘பாவலர்’ என்ற பெயருடனேயே தொண்டியில் வாழ்கின்றார்.\

இன்றுள்ள மதுரை துணிக்கடைகளில் கணிசமானவை தொண்டிக்காரர்களுடையவை. தொண்டியின் ஊராட்சித் தலைவராக விளங்கிய ‘பாம்பாட்டி வீட்டு’ செய்யது அகமதுவின் புதல்வர்கள் துணி வணிகத்தில் பெரும் புள்ளிகள்.

குணங்குடி மஸ்தான் சாகிபின் மாமா கட்டை ஷைகின் கோரி இங்குள்ள வாழைத் தோப்பில் உள்ளது. இவர்களின் வழியில் தோன்றிய முகம்மது அப்துல் காதர் மதுரை ‘காஜியுல் குலாத்’ ஆக அரசால் நியமிக்கப்பட்டு அங்கேயே மறைந்தார். இவரின் மகன் முகம்மது இபுறாஹீம் சாகிபு தொண்டியில் காஜியாக இருந்தார். அடுத்தும் தொண்டிக்கு காஜியாக வந்தவர் முந்தைய காஜியின் புதல்வரான முகம்மது இஸ்மாயில் சாகிபே. இவர் மாபெரும் மார்க்க மேதையுமாவார்.

நாகூரை புலவர் கோட்டை என்பர். தொண்டி புலவர் பேட்டை. இங்கு பல்வேறு எழுத்தாளுமைகள் வாழ்ந்துள்ளனர்.உலக மாந்தர்கள் தம் பெயருக்கு முன் தந்தையின் பெயரிலுள்ள முதல் எழுத்தை விலாசமாக பதிவிடுகின்றனர். பிரான்ஸ் போன்ற சில நாடுகளில் தாயின் பெயரிலுள்ள முதல் எழுத்தைப் பதிவிடுகின்றனர். பெரும்பாலோர் ஓரெழுத்தையே பதிவிட நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் ஈரெழுத்தையும் சிலர் சித.கண.பழ. என மூன்று தலைமுறையையும் பதிவிடுகின்றனர். இவற்றைப் பின்னுக்கு கொண்டு போன ஒரு விலாசத்தை அண்மையில் நான் கண்டேன்

-சமூக நீதி முரசு
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com