வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 14 March 2020

பஃறுளியாறு ஆறு
“பஃறுளியாரும் .........கொள்ள”, தொடரின் முதல் சொல், பஃறுளியாறு; முதலில் அதைப் பார்ப்போம்.

பல துளி ஆறுதான் பஃறுளியாறு. இது ஒரு பொதுச் சொல், எந்த ஒரு தனி ஆற்றினையும் குறிக்கவில்லை என்று சிலரும், அன்று.. அன்று, குமரியாற்றின் தெற்கே ஈராயிரம் கல் தொலைவில் ஓடிய பெரிய ஆறு என பாவாணரும், குமரியாற்றின் தெற்கே ஓடிய ஆறு என உ.வே. சா. அவர்களும் கருதுகிறார்கள். குமரிக்கு தெற்கே எனின் அது எப்படி தமிழ் எல்லையில் சேரும் என ஐயம் எழுப்பும் நாவலர் சோமசுந்தர பாரதியார் குமரி ஆற்றிற்கு வடக்கே ஓடிய ஒரு ஆறு பஃறுளியாறு என்கிறார்.

இலக்கியத்தில் பல இடங்களில் கிடைக்கும் எனத் தேடினால், இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே தென்படுகிறது பஃறுளியாறு (தவறு எனில் திருத்துங்கள்) முதலாவதாக, புறநானூற்றில் ஒன்பதாவது பாடலில், பாண்டியமன்னன் பல்யாகசால முதுகுடுமிப் பெருவழுதியை வாழ்த்த வந்த நெட்டிமையார்,

“முந்நீர் விழாவின் நெடியோன்
நன்னீர் பஃறுளியாறு மணலினும் பலவே.”என்கிறார்.

அடுத்து இங்கே சிலப்பதிகாரத்தில் இந்த ஆற்றைக் காண்கிறோம். புறநானூற்றில் பல இடங்களில் பாய்கிறது காவிரி; ஆனால் பஃறுளியாறு ஒரே ஒரு இடத்தில் மட்டுமே, விட்டால் சிலம்பில் ஓர் இடம்.

இராவண காவியத்தில் தமிழகக் காண்டம், தமிழகப் படலத்தில்

“தென் எல்லை, தென்கடல் நிலமாய் இருந்ததால் இன்றுள்ள குமரி முனைக்கு தெற்கே ஆயிரம் கல் தொலைவுக்கு மேல் நீண்டிருந்தது, கிழக்கில் வங்கக் கடலும், சாவகத் தீவுகளும் ஒரே நிலப் பரப்பாயிருந்தது. அத் தென்னிலத்தில் குமரி மலையும், பனி மலையும் ஓங்கி உயர்ந்திருந்தது. குமரி மலையில் குமரியாறும், பனி மலையில் பஃறுளியாறும் ஓடி அந்நிலப் பகுதியை வளமாக்கியிருந்தன.

குமரியாறுக்கும், பஃறுளியாறுக்கும் இடைப்பட்ட பகுதி பெருவள நாடு எனப்பட்டது. செழித்து இருந்தது. பெருவள நாடானது 1000 கல் தொலைவு அளவு பரப்புடையதாய் பெயருக்கேற்றார் போல பிற நாடுகள் செல்வம் கடன் கேட்கும் அளவிற்கு செல்வ வளம் தாங்கிய குமரி மலையைக் கொண்டிருந்தது. விண் முகிலில் மோதும் அளவு உயந்திருந்த அக்குமரி மலையிலிருந்து தோன்றிய குமரியாறு குமரி முனையிலிருந்து 200 கல் தொலைவுக்கு பாய்ந்து வளம் செய்து கொண்டிருந்ததது. குமரியாற்றிலிருந்து தெற்கே 500 கல் தொலைவில் மழை வளம் பெற்று பஃறுளி என்ற ஆறு ஓடிக்கொண்டிருந்தது.” ஆக, தமிழ்நாடு , பெருவளநாடு, தென்பாலிநாடு இவை மூன்றும் சேந்ததே லெமுரியா என்கிறார் புலவர் குழந்தை.

கடந்த 20.05.2014 அன்று தி இந்து நாளிதழில் வெளியான கட்டுரையில்,
“மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் உருவாகிக் கன்னியாகுமரி மாவட்டத்தின் குறுக்காக ஒழுகினசேரி, சுசீந்தரம் வழியாக ஓடி மணக்குடி கடற்கரைக் கிராமத்தை ஒட்டி அரபிக் கடலில் கலக்கிறது ‘பழையாறு’. இந்தப் பழையாறுதான் சங்க இலக்கியத்தில் ‘பஃறுளியாறு’ என்று அழைக்கப்பட்டது. ‘பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள’ என்ற சங்க இலக்கிய வரிகளே இதற்குச் சான்று. மணக்குடி அவ்வளவு பழமையான ஊர்” என திரு சுந்தரராஜன் எனும் ஆய்வாளர் குறிப்பிடுகிறார். இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கும் போது குமரிமலை பற்றி மட்டுமல்ல, பஃறுளியாறு பற்றியும் குமரி கண்ட ஆதரவாளர்களிடையே எந்த அளவிற்குக் குழப்பம் நிலவுகிறது என்பது தெளிவாகிறது. ஆதலின் பஃறுளியாறு பாவாணர் சொல்வது போல் பெரிய ஆறு அல்ல. மாறாக, குமரி அருகே ஓடிய ஓர் சிற்றாறு .

ஹோலோசீன் கடல்மட்ட உயவின் போது, தமிழ் நாட்டின் பிற பகுதிகளில் நடந்தது போன்றே, குமரி முனையிலும், கடல் நீர் நிலப் பகுதிக்குள் நுழைந்திருக்கக் கூடும், அப்போது, பஃறுளியாற்றின் ஒரு பகுதி, கடல் நீரில் அமிழ்ந்திருக்கும். இதையே, இளங்கோ பாடியிருக்கிறார் எனக் கொளல், தகும்.
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com