வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 18 April 2020

குமரி ஆறு
‘தொடியோள் பௌவம்’ பற்றி விளக்க வந்த அடியார்க்கு  நல்லார் “நெடியோன் குன்றமும் தொடியோள் நதியும் மென்னாது பௌவம் என்றது என்னையெனின்” என்று தன் உரையில் உரைப்பதின் மூலம் அங்கே “குமரி ஆறு” முதன் முதலாகத் தோன்றுகிறது. சரி, அடியார்க்கு நல்லாருக்கு இந்த “குமரி ஆறு” பற்றிய கருத்து எங்கேயிருந்து வந்தது. பஃறுளி ஆறு பற்றி விரிவாகப் பேசிய நாம் குமரியாறு பற்றி இதுவரை எதுவும் பேசாததற்குக் காரணம், அது பற்றிய குறிப்பு சிலம்பிலோ அல்லது அதற்கு முந்தைய இலக்கியங்களிலோ இல்லை என்பது தான்.

கோப்பெருஞ்சோழனைப் பாடும் பிசிராந்தையார் (புற நானூறு-67), அன்ன சேவலைப் பார்த்து,

“குமரி அம்பெருந்துறை அயிரை மாந்தி வடமலை பெயர்குவை ஆயின்.....”

எனப் பேசும் தொடரில் அயிரை மீன் வருவதால், குமரித்துறை என்பதனை குமரியாற்றுத்துறை என்று அடியார்க்குநல்லார் எண்ணிவிட்டார் போலும். உ.வே.சா. அவர்களும் அவரைத் தொடர்ந்து ஔவை சு. துரைசாமி பிள்ளை அவர்களும் குமரியாறு என்றே உரை எழுதியுள்ளனர். புறநாநூற்றிற்கு உரை எழுதியர்களில் சிலர்,‘ துறை’ என்பதற்கு ஆற்றுத் துறை எனவும், சிலர் கடற்கரைத் துறை எனவும் பொருள் கொள்கின்றனர்.

மற்றொரு "புறநானூற்றுப் பாடல் (55) இல் உள்ள ஈற்றடிகளைப் பாருங்கள்,

"வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்
நெடு வேள் நிலைஇய காமர் வியன் துறை,
கடு வளி தொகுப்ப ஈண்டிய
வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே!"

இதில் செந்தில் துறை மணல் என்பது, திருச்செந்தூர் கடற்கரை மணலைத் தானே குறிப்பிடுகிறது. இன்றைக்கும், சென்னை பெசன்ட் நகர் கடற்கரையருகே உள்ள ஒரு பகுதி வண்ணான் துறை என்றே வழங்கப் படுகிறது. அயிரை மீன் ஆற்று மீன் மட்டுமல்ல, மாறாக கடற்கரைப் பகுதிகளிலும் அதனை ஒட்டியுள்ள கழிகளிலும் அவை கிடைக்கும் என்பதனை ஐங்குறுநூறு (164) நமக்குக் காட்டுகிறது.

“பெருங்கடற்கரையது சிறு வெண் காக்கை
இருங்கழி மருங்கின் அயிரை ஆரும்”

அடுத்து நற்றிணையில் பார்க்கலாம். (பாடல் 272..........)

“கடலங் காக்கை செவ்வாய்ச் சேவல்
கடுஞ்சூல் வதிந்த காமர் பேடைக்கு
இருஞ்சேற்று அயிரை தேரிய தெண்கழிப்
பூவுடைக் குட்டந் துழவுந் துறைவன் “

ஆக நற்றிணையும் ஐங்குறுநூறும் அயிரை மீன் கடற்கரையை ஒட்டியுள்ள சேற்றில் வாழக் கூடியவை என்பதைக் காட்டுகின்றன. தொடர்ந்து குறுந்தொகைக்குள் போவோம். (பாடல் – 128 & பாடல் 166)

“குணகடல் திரையது பறை தபு நாரை
திண் தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை
அயிரை ஆர் இரைக்கு அணவந்தா அங்கு ”

குறுந்தொகை பாடல் 166

“தண்படு கடல் திரை பெயர்தலின்,
வெண்பறை நாரை நிறை பெயர்த்து அயிரை ஆரும்”

மேற்சொன்ன இரு குறுந்தொகைப் பாடல்களும் அயிரை மீன் கடலோரம் வாழக் கூடியவை என்பதை தெளிவு படுத்துகின்றன அன்றோ. எனினும் குறுந்தொகை பாடல் 178 லும் மற்றும் பதிற்றுப் பத்து பாடல் 29 லும் அயிரை மீன் பொய்கைகளில் வாழும் குறிப்பும் தென்படுகிறது.

மேற்சொன்ன எடுத்துக்காட்டுகளிலிருந்து அயிரை மீன்கள் கடற்கரையிலுள்ள சேற்றையும் கடற்கழிகளையும் தங்கள் உறைவிடமாகக் கொண்டவை என்பது தெளிவு.

ஆதலின், ‘குமரியம்பெரும்துறை அயிரை’யில், குமரியம்பெரும்துறை என்பது குமரி ஆற்றுத்துறையை குறிக்கவில்லை மாறாக குமரி கடற்றுறையையே குறிக்கிறது. குமரி ஆறு என்று ஒன்று இல்லை என்பதும், “தொடியோள் பௌவம்” என்பதற்கு குமரிக் கடல் என நேரடிப் பொருள் கொள்ளுதலே தகும் என்பதும் நினைவிற் கொள்ளத்தக்கவை.’

Singanenjam Sambandam
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com