வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 30 April 2020

தோணிப்பாலம்
'தோணிப்பாலம்' என்பது தூத்துக்குடியில் அமைந்துள்ள பழமை (Ancient) வாய்ந்த புராதனமான (Heritage) இடமாகும். முத்துநகர் என்னும் தற்போதைய தூத்துக்குடி மாநகரின் முதலாவது வாணிபத் துறைமுகம் ஆகும். #தோணிகள் கட்டப்படும் அல்லது கரையில் நிலைநிறுத்தப்படும் இடமாதலால் அவை தோணிப்பாலம் என்று பரதவர்களால் அழைக்கப்படலானது. ஆம், #பரதவர்கள் பெயரையும், புகழையும் பறைசாற்றும் இடம் தோணிப்பாலம். பல நூற்றாண்டுகளாக பரதவர்களின் வாணிபத்திற்கு தொன்று தொட்டு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த இடம், வரலாற்றில் தொன்மை வாய்ந்த பரதவர்களின் ஒரு வாணிப ஸ்தலமாகும். தூத்துக்குடியில் உள்ள மிக முக்கியமான இடங்களைப் பட்டியலிட்டால் முதல் ஐந்து இடங்களுக்குள் இந்தத் தோணிப்பாலம் வரும்.

தூத்துக்குடியிலிருந்து தோணிகள் கொழும்புவிற்கும், மாலத்தீவிற்கும், கேரளா, குஜராத்திற்கும் சரக்குப் பொருட்களை ஏற்றிச் செல்லும். அதை பரதவ மக்கள் கொழும்பு நடையென்றும், மாலே நடையென்றும், மலையாள நடையென்றும் அழைப்பார்கள். தூத்துக்குடியிலிருந்து அரிசி, கோதுமை, பருப்பு, வத்தல், வெங்காயம், உருளைக்கிழங்கு, சீனி, உப்பு, முட்டை மற்றும் கல், மண் போன்ற எண்ணற்றப் பொருட்கள் தூத்துக்குடியிலிருந்து கொழும்பு, மாலத்தீவு போன்ற வெளிநாடுகளுக்கும், கண்ணூர், கோழிக்கோடு போன்ற கேரளாவில் உள்ள பிற ஊர்களுக்கும் ஏற்றுமதியாகும்.

கப்பலுக்கு ஒரு #மாலுமி போல தோணிக்கு ஒரு #தண்டல். தண்டல் தான் தோணியின் கேப்டன். தோணியில் அவர் வைத்தது தான் சட்டம். சரக்குப் பரிவர்த்தனைகளில் ஆரம்பித்து சரக்குப் பொருட்களை தோணிக்குள் (வாணிபப் பொருட்களை Store செய்யும் இடத்திற்கு '#கிட்டங்கி' என்று பெயர் வரும்) லாவகமாக அடுக்கி வைப்பது முதல் அதைப் பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பது வரையிலான பொறுப்புக்கள் அத்தனையும் அவருக்குத்தான்.

இன்றைய காலகட்டங்களில் பரதவ இளைஞர்கள் விருப்பமுடன் பாஸ்போர்ட்டும், சிடிசியும் எடுத்துக்கொண்டு கப்பலுக்கு செல்வதை குறிக்கோளாய் வைத்திருப்பதற்கு மூலகாரணமும், விதையும் போட்டது இத் தோணித்தொழில் வாணிபம் தான் முழுமுதற்காரணம் என்று சொன்னால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

தூத்துக்குடியிலிருந்து கொழும்பு அல்லது மாலே செல்லும் தோணியில் பயணிப்பவர்கள் (தண்டல் உட்பட வேலையாட்கள்) அனைவருக்கும் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) கிடையாது. அதற்குப் பதிலாக அரசாங்கம் அவர்களுக்கு வழங்கும் சீட்டுக்குப் (Pass) பெயர் '#நல்லி' என்பதாகும். பெரும்பாலான பரதவ இளைஞர்கள் இந்த நல்லி என்பதை எடுத்துக்கொண்டு தோணியில் கொழும்பு நடை போவதை குலத்தொழில் கௌரவமாக நினைத்தனர்.

அப்பொழுதெல்லாம் பாய்மரங்களைப் பயன்படுத்தி தான் தோணிகளை எம் முன்னோர்கள் இயக்கினர். எப்படியும் மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு கொழும்பு நடை இருக்கும். வாணிபமும் செழிப்பாக நடைபெற்றக் காலகட்டம் அது. இப்பொழுது துபாய், சிங்கப்பூர் போன்ற அயல்நாடுகளில் வேலை பார்க்கும் மக்கள் தாய்நாடு திரும்பி வரும்போது வாங்கி வரும் வெளிநாட்டு சாதனங்களைப் போல் அப்பொழுதே எம் மக்கள் கொழும்பிலிருந்து நடை இறங்கும் போது வகை வகையாகப் பொருட்களை வாங்கிக் குவிப்பர். வெளிநாட்டு இனிப்பு வகைகள், லக்ஸ், ராணி சோப்புக்கள், கொழும்பு தேங்காய் எண்ணெய், ப்னாட்டு, லம்ப்டான் பழம், நெஸ்லே பால்மாவு, கொழும்பு சாரம், அக்குபஞ்சர் செருப்பு, வேஃபர் பிஸ்கட்டு எல்லாம் அப்போது ரொம்ப பேமஸ். அந்தக் காலங்கள் பரதவர்களின் வாழ்க்கையில் வசந்த காலங்கள்.

காலச்சக்கரம் வேகமாகச் சுழன்றது. 1990 களில் பாய்மரங்கள் கொண்டு பயணித்த தோணிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக இயந்திர (Mechanised Vessel) மயமாக மாற்றப்பட்டன. மாதத்திற்கு இரண்டு நடை போகும் தோணிகள் இனி இயந்திரங்களினால் இயக்குவதால் நான்கு அல்லது ஐந்து நடைப் போகலாம் என்றொரு சூழ்நிலை நிலவியதும் இக்காலக் கட்டங்களில் தான்.ஆனால், அதன்பிறகே ஒவ்வொரு பிரச்னையாக முளைக்க ஆரம்பித்தது....

இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருந்த உள்நாட்டுப் பிரச்னை, விடுதலைப்புலிகளால் அச்சுறுத்தல் போன்ற பாதுகாப்புக் காரணங்களால் இலங்கை அரசாங்கத்தின் கிடுக்கிப்பிடி, இந்திய கடற்படையின் அதீத தொந்தரவு, அதனால் இலங்கை அரசு தோணிகளின் நடையை ஏகப்பட்டக் கட்டுப்பாடுகளுடன் குறைத்தது, அதன் தொடர்ச்சியாக முழுமையான தடையும் விதித்தது.

அந்தக் காலக்கட்டங்களில் உலகமயமாக்கலின் பலனாக தூத்துக்குடியில் புதிய துறைமுகத்தின் அசுர வளர்ச்சி, பெரிய பெரிய கப்பல்களின் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகமும் சூடு பிடித்த நேரம் பரதவர்களின் தோணித்தொழிலுக்கு வில்லனாக வந்து அமைந்தது. தோணிகளின் மூலமான இறக்குமதிக்குப் பதில் இலங்கையும் கப்பல் போக்குவரத்து மூலம் தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டது. அதற்குத் தோதாக இலங்கையும் வெளிநாட்டு உதவியுடன் கொழும்பில் மிகப்பெரிய துறைமுகத்தை உருவாக்கிக் கொண்டது. இதன்மூலம் கொழும்பிற்கும் தூத்துக்குடி பரதவர்களுக்குமான ஒரு பழமை வாய்ந்த நட்புறவு வாணிப உறவிற்கு முடிவுரை எழுதப்பட்டது. ஆம், உலகமயமாக்கலில் நசிந்து போன முக்கியத் தொழியில் இந்த தோணித் தொழிலும் அடங்கும்.

தற்போது தூத்துக்குடியிலிருந்து மாலத்தீவிற்கும், கேரளா மற்றும் குஜராத்திற்கு மாத்திரமே தோணிகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் வாணிபம் முன்பு போல் சிறப்புடன் இல்லை. பரதவர்களின் பாரம்பரியத் தொழில் படுக்கையில் உள்ளதை நினைக்கும் பொழுது நம்மையறியாமல் நம் நெஞ்சம் குமுறுகிறது. ஆனாலும் காலத்தின் போக்கில் அதற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்ட பரதவ இளைஞர்கள் இன்று மிகப்பெரிய கப்பல்களில் மாலுமிகளாகவும் மற்றும் பெரிய, பெரிய பொறுப்புகளிலும் உள்ளார்கள் என்பதை நினைக்கும் போது புண்பட்ட மனம் பூரிப்படைந்து பேறுவகை கொள்கிறது.

இந்த தோணிப்பாலம் தூத்துக்குடி சப் (உதவி) கலெக்டர் ஆபீசுக்கு நேரெதிரே அமைந்துள்ளது. முன்பெல்லாம் நாங்கள் சொந்த தாய்மாமன் வீட்டுக்குள் போய் வருவது போல் மிகவும் உரிமையுடன் எளிதாக இந்த தோணிப்பாலத்திற்குள் போய் வருவோம். ஆனால் இப்பொழுது அப்படியல்ல, எங்கள் உறவினர் காவற்காத்த அதன் வாயிலை தற்போது தமிழே தெரியாத சிப்பாய்கள் காவல் காக்கின்றனர். அவர்களுக்கு எப்படித் தெரியும் எங்களுக்கும் அந்த தோணிப்பாலத்திற்குமான தொடர்பை, உறவை... ஆதலால் சொந்த வீட்டிற்குள் நுழைய முடியாத அவ்வீட்டின் தலைவன் போல் தவிக்கிறோம்.

- சேவியர் ஹெர்மன்
Thanks: Timesofindia
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com