வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 16 April 2020

நாசுவன் கத்தி பாறை
இடிந்தகரை கடலின் கிழக்கு வாயில்

இடிந்தகரையின் கிழக்கு பகுதியில் , கடல் அரம் விழுந்து, அமைதியாக இருக்கும் போது கரையிலிருந்து சுமார் ஒரு கடல் மைல் தொலைவில் கடலுக்குள் கம்பீரமான பாறை ஒன்றை காணலாம்."நாசுவத்தி பார் " என்று பேச்சு வழக்கில் சொல்லப்படும் இந்த பாறை மட்டுமே இடிந்தகரை கடலுக்குள் இருக்கும் பாறைகளில் கரையிலிருந்து கண்ணுக்கு தென்படும் ஒரே பாறை .பாறையின் தென்பகுதி உயரமாகவும், வடபகுதி தாழ்வாகவும் சரிந்த தோற்றம் கொண்டது.கூட்டப்புளி வரை நீளும் "வெலங்கு ஆழி" பாறைத்தொடர் கிட்டத்தட்ட இந்த பாறையை ஒட்டித்தான் ஆரம்பிக்கிறது, இந்த பாறையை சுற்றிய கடற்பகுதி மிகுந்த மீன் வளம் கொண்டது.

நாவிதர்கள் பயன்படுத்தும் சவரக்கத்தியைப் போன்று தோற்றமுடைய "நாசுவன் கத்தி " மீன்கள் இந்த பாறையை சுற்றி அதிகம் வாழ்வதால் "நாசுவன் கத்தி பாறை" என்ற காரணப்பெயர் வந்திருக்கலாம்.இதன் உயரம் சுமார் 10-15 மீட்டர் .சுற்றளவு சுமார் 60 மீட்டர் இருக்கலாம்.இந்த பாறையைச் சுற்றி ஏராளமான பெரிய பாறைகள் உள்ளன .நாசுவன் கத்தி பாறைக்கு தென் புறம் இருக்கும் பாறை கப்பல் போன்ற தோற்றமுடையது.எனவே "கப்பல் பாறை" எனப்படுகிறது.இவ்விரு பாறைகளுக்கு இடைப்பட்ட பகுதி பெரிய தொட்டி போன்ற அமைப்பில் இருப்பதால் "தொட்டியம்" எனப்படுகிறது.தொட்டியத்தில் ஏராளமான "கல் இறால்" மீன்கள் வசிக்கின்றன.

நாசுவன் கத்தி பாறைக்கு மேற்கே இருக்கும் பாறை" கல்லிக்காய் பாறை" எனப்படுகிறது.இதை அடுத்து இருக்கும் பாறை "கரை திருவலடி" என்றும் அதிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள பாறை "வெலங்கு திருவலடி" என்றும் அழைக்கப்படுகிறது. கரை திருவலடி பாறையிலிருந்து கரை நோக்கி துவங்கும் பகுதி "கன்னா மடை" என்று அழைக்கப்படுகிறது.இங்கு ஏராளமான சிறுமீன்கள் வசிக்கின்றன.இவற்றை பிடித்து உண்ண நண்டு பொறுக்கி சுறா,கடல் பன்றி,ஓங்கல் மீன்கள் உலா வருவதை கடற்கரையிலிருந்தே பார்க்கலாம்.ஏராளமான கிளி மீன்களும், மூச்சா, கடல் மீன்களிலேயே சுவையான மதனம்,குருவலை,கட்டா போன்ற பாறைப் பகுதி மீன்களும் இப்பாறையை சுற்றி வசிக்கின்றன.

மீன்களை தவிர பல்வேறு வகையான பாசிகள்,சிப்பிகள் ,ஆக்கு எனப்படும் கல்லிக்காய்,சங்கு முட்டை ,கடல் வெள்ளரி, பல்வேறு வகையான நண்டுகள் என பல்வேறு கடலுயிரிகள் வாழும் இடிந்தகரை கடலின் உயிர்க் கோளமாக நாசுவன்கத்தி பாறை திகழ்கிறது என்றால் அது மிகை இல்லை.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com