வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Friday 5 November 2021

அலைகளின் மைந்தர்கள் - 29

தூத்துக்குடி பாண்டியாபதியின் ஆலோசனையின் பேரில் ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுத போரை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். ஆகவே வேம்பாரிலிருந்து புரட்சியணி கொண்டுவரும் ஆயுதங்களையும், வெடி பொருட்களையும்.. அவர்களிடமிருந்து பத்திரமாக வாங்கி எங்கள் படையணியிடம் கொடுத்தனுப்புங்கள் என்று கட்டபொம்மன் ஏற்கனவே மேல்மாந்தை ஜமினுக்கு தகவல் அனுப்பியிருந்ததால் நேரடியாக கோட்டையின் வாசலில் நின்று புரட்சியணியை வரவேற்று மாளிகைக்கு கூட்டி சென்றார் மேல்மாந்தை ஜமீன்..

துப்பாக்கி போன்ற அதிநவீன ஆயுதங்களை கட்டபொம்மனின் படையணிக்கு கையாள தெரியாததால் ஏற்கனவே ஆயுதங்களை கையாள்வது சம்மந்தமாக இலங்கைக்கு சென்று ஆங்கிலேயருக்கு எதிராக டச்சு படையினரிடம் பயிற்சி பெற்று வந்த பாண்டியன் அவர்களுக்கு எவ்வாறு கையாள்வது என்று சொல்லி கொடுத்தான்.. அவன் ஆயுதங்களை கையாளும் வேகத்தை பார்த்து மிரண்டுபோனது கட்டபொம்மனின் அரசபடை..

கட்டபொம்மன் கொடுத்து அனுப்பிய வெகுமதியை அவர்களிடம் வாங்க மறுத்தும்.. உணவு சாப்பிட்டுவிட்டு செல்லுங்கள் என்று மேல்மாந்தை ஜமீன் எவ்வளவோ வற்புறுத்தி சொல்லியும் அவர்களிடமிருந்து பச்சதண்ணீர் கூட வாங்கி குடிக்கவில்லை.. இது பாண்டியாபதி அவர்களின் பாதுகாப்பிற்காக புரட்சியணிக்கு இட்ட உத்தரவு ..

பாண்டியாபதியின் உத்தரவை நல்லபடியாக தாங்கள் நிறைவேற்றிவிட்டதற்கு நன்றி சொல்லும் விதமாக வேம்பார் வந்ததும் பரிசுத்த ஆவி ஆலயத்திற்கு சென்று வணங்கிவிட்டு கோவிலை விட்டு வெளியே வரும்போது.. இவர்களை வரவேற்க கோவிலுக்கு வெளியே காத்திருந்த வேம்பார் அடப்பனார் பாண்டியனையும், மற்றவர்களையும் வரவேற்று எல்லோரும் பசியா இருப்பீங்க.. வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டு போங்க என்றார்...

நெல்லு சோறும், சுடசுட மீன் குழம்பும் புரட்சியணிக்கு பறிமாறிக்கொண்டிருந்த அடப்பனாரின் தங்கை மகள் ராஜகன்னி.. சற்று தள்ளி அமர்ந்திருந்த பாண்டியனிடம் குனிந்து பறிமாறிக்கொண்டே தலைநிமிராமல்.. என்னையும் புரட்சியணியில் சேர்த்துகிருங்களேன் என்றாள்..

பெண்களுக்கு எங்கள் அணியில் இடமில்லை..

நான் போராடுறதுக்கு கேட்கல.. உங்க அணியில் நானும் இருந்தால் உங்கள எப்பவுமே பக்கத்துல இருந்து பார்த்துகிட்டு இருப்பன்ல..

அவளுக்கு திரும்ப பதிலேதும் சொல்லாமல் குனிந்தவாறு சாப்பிட தொடங்கினான் பாண்டியன்..

ஒரு மறைவான இடத்தில் நின்று தன் முகத்தை மறைத்து துணியால் கட்டிக்கொண்டிருந்த பாண்டியன் அருகில் வந்த ராஜகன்னி..

நான் உங்கள்ட்ட கேட்டதுக்கு பதில் சொல்லாம போறிய..என்றாள்

நான் யார்னு தெரியுமா..?

தெரியும்.. புரட்சியணியை வழிநடத்துபவர்..

என்னோட இறப்பை இன்னொருத்தன் தீர்மானிப்பான். நாளைக்கு நான் உயிரோடு இருப்பனான்னு எனக்கு தெரியாது. என்று பாண்டியன் சொல்ல..

அப்ப கடலுக்கு போற நம்ம ஆட்களும் போர்க்களத்துக்கு செல்றது மாதிரிதான போறாங்க.. நம்ம இனத்துக்கு நம்பிக்கை மட்டும் தான வாழ்க்கையாயிருக்கு.. விரும்புனவனோடு ஒருநாள் வாழ்ந்துட்டு செத்தாலும் இந்த பொறப்பு திருப்திதானே..

கண்களை உயர்த்தி ராஜகன்னியை பார்த்த பாண்டியன் மேலும் அவளிடம் விவாதிக்க விரும்பாமல் அந்த இடத்தை விட்டு அகன்றான்.. மூக்கையூருக்கு திரும்பி போவதும் மீண்டும் வேம்பார் வந்து மேல்மாந்தைக்கு வெடிபொருட்களை கொண்டு போவதுமாக கிட்டத்தட்ட இரண்டு மாதத்தில் பத்துக்கு மேற்பட்ட முறை சென்றிருப்பார்கள்.

தன் வீட்டில் அணியினரோடு சாப்பிட்டு கொண்டிருந்த பாண்டியனிடம் நாளை காடல்குடியில் நடக்கப்போகும் இரகசிய கூட்டத்திற்கு இராமநாதபுரம் மயிலப்பன் வருகிறார் என்று அடப்பனார் சொல்ல..

எதற்கு ..? அவரை யார் அனுப்புறாங்க திருப்பி கேட்டான் பாண்டியன்..

ஆங்கிலேயரிடம் பிடிபட்ட கமுதி கோட்டையை மீட்பதற்கு டச்சு ஏஜண்ட் ஐசக் ஆராச்சி மூலம் இலங்கையிலிருந்து ஆயுதம் வாங்க பாண்டியாபதியிடம் இராமநாதபுரம் சேதுபதி அனுப்புகிறார்..

உடனே.. நான் காடல்குடி கூட்டத்திற்கு வரவில்லை என்ற பாண்டியனிடம்...

நீ எதுக்கு வரலைன்னு சொல்றது எனக்கு தெரியும்..

1713 ஆம் ஆண்டு நாயக்க மன்னரின் உத்தரவின் பேரில் சேதுபதி அரச படைகள்தான் மூக்கையூர் சந்தியாகப்பர் கோவிலை தீயிட்டு கொழுத்தி வீடுகளை சூறையாடி முத்துக்களை கொள்ளையடித்து சென்றவர்கள்.. இதுதானே உன் கோபம்..

ஆம் என்றான் பாண்டியன்... 

சாயல்குடி ஜமீன் மூலமும் ஆப்பநாட்டு தலைவர் மூலமும் நாம் யார் என்று அறிந்து உடனே கோவிலை கட்ட அனுமதித்தார்கள்.. எது எப்படியோ மயிலப்பன் கலந்து கொள்ளும் காடல்குடி கூட்டத்தில் நாம் பாண்டியாபதியோடு கலந்துகொள்ள வேண்டியது அரச உத்தரவு என்றார் அடப்பனார்..

சரி என்று தலையாட்டினான் பாண்டியன்..

தன் இரண்டு கைகளையும் விரித்து பாண்டியனை வெளியே விடாமல் வாசலை மறித்து கண்கள் கலங்கியபடி நின்ற ராஜகன்னி.. சட்டென அவன் இரண்டு கரங்ளையும் பிடித்தபடி... என் உசுர உங்கள்ட்டதான் ஒப்படச்சிறுக்கேன். நீங்க என்னை தூக்கி சுமந்தாலும் சரி... இல்ல உங்க கால்கள்ல போட்டு மிதிச்சாலும் சரி.. சொல்லிக்கொண்டே அவள் ஏங்கி ஏங்கி அழுக ..

பாண்டியன் அந்த இடத்தை விட்டு அகலாமல் கொஞ்ச நேரம் அப்படியே நின்றான்...

சில நாட்கள் கழித்து.. ஆங்கிலேயர்கள்களின் அதி நவீன ஆயுதங்களுக்கு தாக்குபிடிக்காமல் பாஞ்சாலங்குறிச்சி ஆங்கிலேயர்களிடம் வீழ்ந்தது என்றும் கட்டபொம்மனும் அவரின் தம்பி ஊமைத்துரையும் சிறைபிடிக்க பட்டார்கள் என்றும் வேம்பாருக்கு தகவல் வந்தது..

1799 ஆம் ஆண்டு... எங்களை எதிர்ப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்.. தங்களை எதிர்க்கும் மற்ற பாளையக்காரர்களை அச்சுறுத்துவதற்க்காக கயத்தாறில் பொதுமக்கள் முன்னிலையில் புளியமரத்தில் தூக்கிலடப்பட்டு ஆங்கிலேயர்களால் கொல்லபட்டார் கட்டபொம்மன்... ஊமைத்துரையை சிறையிலிருந்து மீட்க புரட்சியணி தயாரானது...
........ தொடரும் ......
- சாம்ஸன் பர்னாந்து 
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com