போர்சுகீசியர்க்கு உதவிய பரதவர்
கி.பி. 1658ல் டச்சுக்காரர்க்கு எதிராக போர்சுகீசியர்க்கு
படையுதவி செய்த பரதவர்கள்.
இன்று அமெரிக்காவை போல் அன்று போர்சுகல் உலக வல்லரசு நாடாக திகழ்ந்தது. கி.பி. 1532 - 1658 வரை பரதவர் நாடு போர்சுகல் மன்னருடன் கூட்டணியில் இருந்தது. இதே போல் சில சிங்களவர் அரசுகளும் போர்ச்சுகல் மன்னருடன் கூட்டணியில் இருந்தது. தென்னகத்தில் கால்பதித்த போர்ச்சுகீசியர் சிறிய படையே வைத்திருந்தனர். தங்களுடைய போர்களில் பரதவர், சிங்களவர் கூட்டணி படைகளையே பெரும்பாலும் ஈடுபடுத்தினர்.
கி.பி. 1560 - 1658 வரை மன்னார் தீவு போர்சுகல் மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்தது. கி.பி. 1619 - 1658 வரை யாழ்ப்பாணம் போர்சுகல் மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த இரண்டு நாடுகளையும் கைப்பற்ற புதிய கடலாதிக்க சக்தியாக உருவெடுத்து கொண்டிருந்த டச்சு குடியரசு திட்டமிட்டிருந்தது. போர்சுகீசியர் மன்னார், யாழ்ப்பாண கோட்டைகளை டச்சுக்காரரின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க தங்களுடன் கூட்டணியில் இருந்த பரதவர், சிங்களவரிடமிருந்து படைத் துணை கேட்டு பெற்று கொண்டனர்.
கி.பி. 1657 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், டச்சு கிழக்கிந்திய கம்பெனி தங்களது கணக்கெழுத்தாளர் "அட்ரியன் வான் டெர் மார்க்ட்" என்பவருக்கு மன்னார், யாழ்ப்பாணத்தில் போர்ச்சுகீசியரின் படை பலத்தை குறித்த தகவல்களை சேகரித்துவர உத்தரவிட்டது. "அட்ரியன் வான் டெர் மார்க்ட்" டச்சு தலைமையகத்துக்கு அளித்த தகவலின்படி....
"போர்சுகிசியரின் மன்னார், யாழ்ப்பாண கோட்டைகளில் பரதவர், சிங்களவர் படைகளும் இடம்பெற்றிருந்தன" என்று குறிப்பிடுகிறார். மேலும் "அட்ரியன் வான் டெர் மார்க்ட்" கூறுகையில்..
"மன்னார் கோட்டையில் போர்ச்சுகீசியர் சார்பில் மொத்தம் 800 வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளர் என்றும், யாழ்ப்பாண கோட்டையில் இன்னும் அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளர்" என்று குறிப்பிடுகிறார்.
கி.பி. 1658ல் டச்சுக்காரர்கள் போர்ச்சுகல் வசமிருந்த மன்னார், யாழ்ப்பாணத்தை கைப்பற்ற அங்கு படையெடுத்து வந்தனர். டச்சுக்காரரின் இப்படையெடுப்பை பற்றிய முழு விவரமும் அதே கி.பி. 1658 ஆம் ஆண்டை சேர்ந்த கோவா போர்சுகீசியரின் ஆவணங்களில் பதிவாகியுள்ளது.
டச்சுக்காரர்கள் பெரும்படையுடன் வந்து கொண்டிருந்ததை கேள்வியுற்ற சிங்களவர் படைகள் போர்சுகீசியரை விட்டு விலகி சென்றன. ஆனால் பரதவர் படைகளோ போர்சுகிசியர்க்கு ஆதரவாக போரில் களமிறங்கினர். டச்சுக்காரர்கள் முதலில் மன்னார் கோட்டையை தாக்கினர். போர்ச்சுகீசியர் பரதவர் படைகளின் துணைக் கொண்டு டச்சுக்காரர்களின் தாக்குதல்களை முறியடித்து அவர்களை பின்வாங்க செய்தனர்.
அங்கிருந்து பின்வாங்கிய டச்சுக்காரர்கள் மீண்டும் பெரும்படை திரட்டி நான்கு பெரிய போர் கப்பல், எட்டு சிறிய போர் கப்பல்களுடன் மன்னாரில் வந்திறங்கினர். இதன்பிறகு நடைபெற்ற போரில் மன்னார் கோட்டை டச்சுக்காரர்களிடம் வீழ்ந்தது. போர்சுகீசியர் மன்னாரில் இருந்து பரதவர் படைகளுடன் யாழ்ப்பாண கோட்டைக்கு பின்வாங்கினர்.
டச்சுக்காரர்கள் மன்னார் தீவை கைப்பற்றிய பிறகு மேலும் முன்னேறி சென்று யாழ்ப்பாண கோட்டையை பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று தாக்கினர். இங்கு போர்ச்சுகீசிய பரதவர் படைக்கும் - டச்சுக்காரர்க்கு இடையே கடுமையான யுத்தம் தொடங்கியது. நான்கு மாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த யுத்தத்தின் முடிவில் யாழ்ப்பாண கோட்டை ஜூன் 24 ஆம் தேதி அன்று டச்சுக்காரர்களிடம் வீழ்ந்தது.
வெற்றியோ தோல்வியோ தங்களை நம்பி வந்தவர்களுக்காக கடைசிவரை போர் புரிந்து மடிந்தனர் பரதவர்கள்.
----------------------------------------
ஆதாரம்:-
1. Encounters on the Opposite Coast by Markus Vink. Pg 355
2. Historical Archives of Goa. A. Manuscripts. HAG, MDR, Codice 35, Livro 26A, (1658)
- UNI