வேம்பாறு பெயர் சிறப்பு

இவ்வூரின் பெயர் காரணத்தை மேலும் ஆராயும்போது பாண்டியனை வேம்பன், நிம்பன்
என்றும் அழைப்பர். வேம்பனின் ஊரே வேம்பார் ஆகும். இவ்வூருக்கு நிம்பநகர் என்ற
பெயரிலும் அழைக்கப்படுகிறது. நிம்பதாரோன் என்பதற்கு வேப்பமலர்களை மாலையாக
அணிந்தவன் எனப் பொருள்படும். பாண்டிய மன்னனுக்கு வேப்பமலர்மாலையினை அணிவித்து
மகிழ்ந்த இவ்வூருக்கு வேம்பாரம் என்றிடப்பட்ட பெயர்தான் வேம்பாறு என மாறியதாகக்
கூறுவர். வேம்பாற்றை சார்ந்த சித்திரக்கவி செ. முத்தையா ரொட்ரிகோ அவர்கள் தமது
பாடலில் “வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லுரே வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லுரே”
எனப் பாடியுள்ளர். இவை அனைத்தையும் பார்க்கும் போது பாண்டியனின் பெயரையே இவ்வூர்
தாங்கி நிற்பதை அறியலாம்.
வேம்பாற்றில் காணப்படும் 1602 ஆம் ஆண்டின் கல்லறைக் கல்வெட்டு ஒன்றில்
‘வேம்பாத்தில்’ என்றே எழுதப்பட்டுள்ளது. எனவே வேம்பார் என்பதை விட வேம்பாறு என
அழைக்கப்படுவதே மிகப் பொருத்தமாக இருக்கும். வேம்பாறு என்பது ஆங்கிலேயர்
உச்சரிப்பில் வேம்பார் என அழைக்கப்பட்டது. முத்துக்குளித்துறையின்
முதல் ஆயர் மிக. வந். திபூர்சியுஸ் ரோச் ஆண்டகை அவர்கள் கடற்கரை ஊர்களின் சிறப்பை
பற்றி பேசும் போது “பேரிலே சிறந்தது வேம்பாறு” என இவ்வூர் சிறப்பை பெருமை
படக்கூறுவார்.