மீன் கூண்டு
பாலக் ஜலசந்தியில் உள்ள கடல் பெண்கடல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக அலைகளற்ற அமைதியான கடலை இவ்வாறு அழைப்பது மீனவர் வழக்கம். ஆனால் இந்த அமைதியியில் தான் பெரும் ஆபத்துகளும் உண்டு, அது பெண்ணாக இருந்தாலும் சரி கடலாக இருந்தாலும் சரி. அமைதியை நாம் தவறாக புரிந்துகொண்டிருப்பதே இதற்கு காரணம்.

நவீன இயந்திரப் படகுகள் வரத் துவங்கியதும் படிப்படியாக கூடு வைத்து மீன் பிடிக்கும் வழக்கத்தை மாற்றி வழக்கொழிந்து போனது. தற்போது மீண்டும் கூண்டு வைத்து மீன் பிடிக்கும் முறை தலைத் தூக்கத் துவங்கியுள்ளது. படகுகளில் ஆழ் கடல் சென்று எரிபொருளுக்கு கூட கட்டுப்படியாகாமல் திரும்பிய நாட்களும், இலங்கை கடற்படையினரால் உயிருக்கு உத்திரவாதம் இல்லாமலும் தொழில் மீதான தொரு பயத்தை இவர்களிடம் உருவாக்கியிருப்பதை இந்த பண்டைய மீன் பிடித் தொழில் யுக்தியின் மீட்சி சொல்லாமல் சொல்கிறது.
சங்கு குளிப்பதிலும், கடல் மூழ்கி எழுவதிலும் தேர்ச்சி பெற்ற இப் பகுதி மீனவர்கள் மாலை நேரங்களில் கரையோரங்களில் மீன்கள் அதிகம் உள்ள பகுதியில் இருபது அடி அழத்திற்கு முக கவசத்துடன் கடலுக்குள் சென்று கூண்டு வைக்கின்றனர். அதில் மீனுக்கான இரையையும் வைத்து விட்டு வந்து விடுகின்றனர்.ஒரு நாள் இடைவெளிக்கு பின் கடலில் உள்ள கூண்டை எடுத்து, உள்ளே சிக்கியுள்ள மீன்களை சந்தைக்கு எடுத்துச் செல்கின்றனர்.
பனை நாரால் பின்னப் பட்ட இந்த நார்ப்பெட்டி உட் புறம் வலை அமைப்பை கொண்டிருக்கிறது. இரை வைக்கப்பட்டுள்ள அறைப் பகுதிக்கு இந்த மீன்கள் சென்றவுடன் அவை மீளவும் வெளியே வர முடியாத படி அந்த கூன்டுகளின் பின்னல் அமைப்பு உள்ளதால், இந்த ஒரு வழி கூன்டுக்குள் இரை தேடிச் செல்லும் மீன்கள் சிறைப்பட்டு போகின்றன.
இந்த பழமையான் மீன் பிடி முறையினால் கடல்வளம் எந்த விதத்திலும் பாதிக்கப்படுவதில்லை. இவ்வகை மீன் பிடித்தலுக்கு அதிகமான முதலீடு தேவையில்லை. இதில் பிடிக்கப்படும் மீன்கள் உயிருடன் இருப்பதால் இவற்றின் சுவை சற்றும் குறையாமல் இயற்கையாகவும் தனித்தன்மை உடையதாகவும் விளங்குகிறது. எனவே இவ்வகை மீன்களுக்கு சந்தையில் தனி மதிப்பு ஏற்பட்டுள்ளது.
- அன்றோ ரூபன்