பண்டைய இலங்கையில் பரதவரின் எச்சங்கள்
இலங்கையில் கிடைத்த கி.மு. 1--ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட கல்வெட்டுக்கள் பெளத்த சங்கத்திற்கு சமூகத்தின் உயர்நிலைகளில் இருந்த பலதரப்பட்ட பிரிவினர் அளித்த குளம், கால்வாய், குகை, கற்படுக்கை, நாணயங்கள், உணவு, தானியம் என்பன பற்றிக் கூறுகின்றன.

இதுவரைக்கும் இலங்கை நாட்டின் பல பகுதிகளிலிருந்து கிடைத்த கல்வெட்டுக்களில் 155-க்கும் மேற்பட்டவற்றில் 'பத' என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 'பரத' என்ற சொல்லின் இன்னொரு வடிவமாகக் கருதப்படுகிறது. இதன் பெண்பாற் சொல்லாக 'பதி' என்ற பெயர் காணப்படுகிறது. இவ்விரு பெயர்களும் கல்வெட்டுக்களில் ராஜா, பருமக போன்று ஒரு பட்டப் பெயருக்குரிய நிலையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. (புஷ்பரத்தினம்--தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு)
தோலமி சோழ நாட்டிற்கும் பாண்டிய நாட்டிற்கும் இடைப்பட்ட கடல் சார்ந்த பகுதியில் வாழ்ந்த மக்களை 'பதை எனக் கூறுகிறார். இது பரதவரைக் குறிக்கலாம். (டி.கே.வேலுப்பிள்ளை, 1980, புஷ்பரத்தினம், பக்கம்:62)
திராவிட சொல்லகராதியில் 'பரத' என்ற சொல்லுக்குச் சமமாகப் பரதவர், பரதர், பரவர் என்ற சொல் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மலோனி என்ற அறிஞர் தென் தமிழ் நாட்டிலும் வடமேற்கு இலங்கையிலும் தற்காலத்தில் வாழ்ந்து வரும் பரதவ சமூகத்தின் தோற்றத்தைச் சங்க இலக்கியங்களில் வரும் பரவர், பரதவர் சமூகத்துடன் தொடர்பு படுத்தி இரு பெயர்களும் ஒன்றென்கிறார். (புஷ்பரத்தினம், 1999:61). இலங்கைத் தமிழகப் பண்பாட்டுத் தொடர்பின் பின்னணியில் நோக்கும்போது இது பொருத்தமுடையதாகத் தெரிகிறது.
மேலும் பாண்டி நாட்டுச் செல்வமாக இருந்த நெய்தல் நிலத்து முத்து பற்றிச் சங்க இலக்கியங்களிலும் வடமொழி இலக்கியங்களிலும் பல குறிப்புகள் உள்ளன. பாண்டியர்களின் செல்வச் செழிப்பிற்குக் காரணமாகக் கடல்படு திரவியங்களே கூறப்படுவதும் இங்கு சிந்திக்கத் தக்கது. முத்து, பாண்டியரின் சொத்தாகவும், மீன் பாண்டியரின் பிரதான உணவாகவும் விளங்கியது. சங்க இலக்கியத்தில் மீன் என்ற சொல் பெருமளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வர்த்தகத்தில் குதிரை வெளிநாட்டு வர்த்தகப் பொருளாகவும், உப்பு உள்நாட்டு வர்த்தகப் பொருளாகவும் திகழ்ந்தன. பட்டினப்பாலையும் மதுரைக் காஞ்சியும் மேலைநாட்டுக் குதிரைகள் தென்பாண்டித் துறைமுகங்களுக்குக் கொண்டுவரப் பட்டதைக் கூறுகின்றன. பாண்டி நாடு நெடுகிலும் கடற்கரையை ஒட்டிய நெய்தல் நிலத்தில் குதிரை வர்த்தகம் நடந்ததாகத் தெரிகிறது. பாலி நூல்கள் தமிழ்நாட்டு பரதவ வணிகர்கள் குதிரை வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறுகின்றன.
இவ்வாறு பலதரப்பட்டப் பொருளாதார நடவடிக்கையில் நெய்தல் நில மக்கள் ஈடுபட்டதனால் செல்வம் குவிந்தது. இவர்களின் மாளிகைகள் கப்பல்கள், அலங்கார வண்டிகள், வாகனங்கள் பற்றி வரும் குறிப்புகள் இவர்களின் செல்வ நிலையைக் காட்டுகின்றன. பாண்டிய நெடுஞ்செழியனைக் 'கொற்றவன் காவலன்,' "பரதவத் தலைவன்", எனக் கூறுவது அரசியலிலும், சமூகத்திலும் பாண்டிய மன்னர்களுக்கும் நெய்தல் நில மக்களுக்கும் இடையேயான மிக நெருங்கிய தொடர்பைக் காட்டுகிறது.
பாண்டிய நாட்டிலுள்ள தாமிரபரணியாற்றங்கரை பரதவர் வாழும் இடமாக அடையாளம் காணப்படுகிறது. இதே பெயர் முழு இலங்கையையும் குறிக்கும் பெயராக மாறியது. இச்சமூகத்தினரின் வர்த்தக அரசியல் பண்பாட்டுத் தொடர்பைக் காட்டுகிறது.
"பரதர்" பற்றி வரும் கல்வெட்டுக்களில், பொல நறுவை மாவட்டத்தில் உள்ள தூவகெல என்ற இடத்தில் உள்ள கல்வெட்டில், 'பரதஸஹகிதஸ" என்பவன் கொடுத்த குகை பற்றிக் குறிக்கப்பட்டுள்ளது.
இதில் 'பரத' என்ற பெயருக்கு முன்னால் கப்பலின் உருவம் வரையப்பட்டுள்ளது. இது 'பரத' என்பவனைக் கப்பல் தலைவனாகவோ அல்லது வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டவனாகவோ கருத இடமளிக்கிறது.
குரு நாகல் மாவட்டத்தில் உள்ள கல்வெட்டில் தலைவன் என்ற பட்டயத்துக்கு உரிய 'பரத' என்பவன் அரச தூதுவனாகக் கடமையாற்றியமை கூறப்பட்டுள்ளது.
கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உதிரன், தசபிடன், மகாசாத்தன், கபதி கடலன் என்ற பெயர் பொறிக்கப்பட்ட நாணயங்களோடு 'பரத திஸ" என்ற பெயர் பொறித்த நாணயமும் கிடைத்துள்ளன. இதன் சிறப்பு என்னவெனில் பின்புறத்தில் "பரத திஸ" என்றும் முன்புறத்தில் இரு மீன் கோட்டுருவமும் இடம் பெற்றிருப்பதாகும். இதைப் பாண்டியர்களின் தொடக்கமாகக் கருத இடமுண்டு. இதில் பரத என்ற பெயர் "பரதவ" சமூகத்தையும் 'திஸ' என்ற சொல்லானது 'திரையர்' என்ற பொருளையும் தரும். திரை என்ற சொல்லுக்குக் கடல், கடலலை, குளம் என்ற பல பொருள்கள் உள்ளன.
கி.மு. 2 ஆம் நூற்றாண்டிற்குரிய நாணயம் ஒன்று மீன் அமைப்பில் வடிவமைக்கப்பட்டது. அதன் மத்தியில் 'திஸஹ' என்ற பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. இதை 'திஸ' அல்லது 'திரையன்' என்பானின் வணிக முத்திரை எனலாம். முதலில் பெரும் பரதவ வணிகர்கள் தஙக்ள் வியாபார அடையாளமாகப் பயன்படுத்திய சின்னம் பின்பு படிப்படியாகப் பாண்டியர்களின் கொடியாகவும், அரசச் சின்னமாகவும் உருமாறியிருக்கக் கூடும்.
கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் இலங்கையில், ஆட்சி புரிந்த முதல் தமிழ் மன்னர்களான 'சேன, குத்தக' என்போரின் பெற்றோர் வெளி நாட்டிலிருந்து குதிரைகளைக் கொண்டு வந்து இலங்கையில் விற்பனை செய்த குதிரை வணிகனின் பிள்ளைகள் என மகாவம்சம் கூறுகிறது. குதிரை வியாபாரத்தில் தென்பாண்டி நாட்டு பரதவ வணிகர்கள் ஈடுபட்டனர் எனப் பாலி நூல்கள் கூறுவதன் அடிப்படையில் இலங்கையிலும் தமிழகத்திலும் ஏற்பட்ட குறுநில மன்னர்களின் ஆட்சியையும் தொடர்பு படுத்திப் பார்க்கலாம். மெல்ல மெல்ல வலிமை வாய்ந்த நெய்தல் நிலத் தலைவர்கள் குறுநில மன்னர்களாகவும், முடியுடைய வேந்தர்களாகவும் உருமாற்றம் அடைந்துள்ளதைப் பார்க்கும்போது நெய்தல் நில மக்களுக்கும், பாண்டியர்களுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு தெளிவாக விளங்குகிறது. அதாவது இருவரும் ஒருவரே அல்லது ஒரே குலத்தைச் சேர்ந்தவர்களே என்ற முடிவுக்கு நம்மை இட்டுச் செல்கின்றது.
குமரி முனையில் அரசனாகவிருந்த வில்லவராயன் என்பான் பகவதி அம்மன் ஆலயத்திற்குத் திருப்பணி செய்ததாக ஆலயத்தின் ஒரு கல்வெட்டுச் சான்று பகருகிறது. இதைத் திருவிதாங்கூர் மக்கள் தொகை ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றது. பாண்டிய மன்னர்கள் 'குமரிச் சேர்ப்பன்' என்று குறிக்கப்படுவது இங்கு நமக்கு புதிய வரலாற்றுச் சிந்தனையைத் தோற்றுவிக்கிறது.
மேலும் இலங்கையை ஆண்ட பராக்கிரம பாகுவுக்கும் 91153--1186) குலசேகர பாண்டியனுக்கும் நடந்த போரில் வில்லவராயன் கொல்லப்பட்டான் என்று அத்தியாயம் 76 பாடல் வரி 163 சூள வம்சம் என்ற பாலி மொழி நூலில் கூறப்பட்டுள்ளது. இருவரும் ஒருவரா அல்லது ஒரே குலத்தில் உதித்தவர்களா என்பது ஆய்வுக்குரியது.
இதே போன்று ஐவர் ராஜாக்கள் கதையில் குலசேகர பாண்டியனுக்காகக் கன்னடியனுடன் வில்லவராயனும், வில்லவராயக் கூட்டங்களும் போரிட்டு மாண்டதையும், மற்றொரு மந்திரி காலிங்கராயன் பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பாகக் கடற்துறைக்கு அழைத்துச் சென்று பாதுகாத்ததையும் மிக விரிவாகச் சொல்கிறது.
செண்பகராமன் பள்ளுவின் தலைவன், காலிங்கராயன் என அழைக்கப்படுவதும் நமக்கு நெய்தல் நில பரதவர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இருந்த உறவினைக் காட்டுகிறது. இவையனைத்தும் பரதவ குலத்தினரிடம் வழங்கப்பட்ட பட்டங்களாகும். இவர்களில் சிறந்தோரே குறுநில மன்னர்களாகவும், தளபதிகளாகவும் விளங்கினர் என்பது மேற்கூறியவற்றால் புலனாகும்.
"ஒன்று மொழி" பரதவர் என்ற மதுரைக் காஞ்சியின் வரிகளுக்கேற்ப இவர்களுக்குள் நிலவிய அசாதாரணமான ஒற்றுமை ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பாண்டியர்களின் வலிமையான ஆட்சிக்கு அடிகோலியது. இவர்களே முதன்மையான பாண்டியர்களின் தளபதிகளாகவும், மந்திரிகளாகவும் கடற்துறைகளிலும் போர் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் இருந்து ஆட்சி செய்தனர். இடைக்காலங்களில் முதன்மைப் பாண்டிய மன்னனுக்காக போரில் உயிர் துறந்ததையும் வரலாற்றின் மூலமாகவும், நாட்டார் இலக்கியங்கள் வாயிலாகவும் அறிகிறோம். சிலப்பதிகாரத்தில் பாண்டிய மன்னன் இறந்த பிறகு கோநகர் கொற்கையிலிருந்த வெற்றி வேல் செழியன் மன்னரானது, காலம் காலமாக நடந்து வந்த பரம்பரைப் பழக்கம் என்பதற்கு வலிமையான சான்றாகும்.
மேற்கூறிய செய்திகளிலிருந்து பாண்டியர்களுக்கும் நெய்தல் நில மக்களுக்குமான தொடர்பு அவர்கள் இருவரும் வெவ்வேறானவர்களாக இருக்க முடியாது என்பதையும் அவர்களுக்கு இடையிலான மிக நெருங்கிய தொடர்பு இருந்தது என்பதையும் இருவரும் ஒருவரே என்பதையும் பாண்டியர்கள் நெய்தல் நிலத் தலை மக்கள் தாம் என்ற புதிய முடிவுக்கு நம்மை இட்டுச் செல்வதையும் உணரலாம்.