வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 28 May 2016

நெய்தல் நிலத்து குறுந்தொழில்கள்
நெய்தல் நிலத்து கடல் தொழில்களான மீன்பிடித்தல், உப்பு விளைத்தல், உலர் மீன் தயாரித்தல், மீன் அல்லது உப்பு விற்பனை செய்தல், முத்தெடுத்தல் போன்றவற்றை நெய்தல் நிலத்து பெருந்தொழில்களாகச் சுட்டலாம்; கொல்லர் தொழில், தச்சுத்தொழில், பொற்கொல்லர் தொழில், கால்நடைவளர்ப்புத்தொழில், குடிசைகள் கட்டும் தொழில் மறறும் பணியாளர்த் தொழில் என்று பலவகையானக் குறுந்தொழிலிகள் நெய்தல் நிலம் சார்ந்தவையாக சங்க இலக்கியங்களின் வழி காணமுடிகிறது

கொல்லர் அல்லது தச்சர் தொழில்

ஐந்திணை மக்களின் தொழில்புரி கருவிகளிலும் கொலலர் மற்றும் தச்சர்களின் தொழில்கள் உள்ளன, குறிப்பாக நெய்தல் நிலத்தொழிலாளர்களின் மீன்பிடித்தொழிலுக்கும் அவர்களின் வாழ்வுக்கும் பயன்படும் மிகப்பெரும்பாலான பொருட்கள் கொல்லர் மற்றும் தச்சர்களின் தொழிலால் வடிவமைக்கப்பட்டுள்ளன.1

இரும்புப்பொருட்கள் இயற்றும் கொல்லர்களின் தொழிலை “கொல்வினை” (குறுந்தொகை – பா. 304) எனக் குறுந்தொகை சுட்டுகிறது. மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ள பரதவர் படகில் சென்று கொண்டிருக்கும் போதெ எதிர் கொள்ளும் முகத்தில் கொம்பு உள்ள சுறாமீன்களின் தலையை நோக்கி ஓர் உளியை எறிவர், அவ்வுளி உறுதியுடன் கூடிய கூர்மையாலும் மீன்பிடித்தொழிலாளரின் விசையுடன் கூடிய தாக்குதலாலும் மீனின் முகத்தில் ஆழமாக அழுந்திவிடும் பின் அம்மீனினை பெருங்கயிறுகளால் பிணித்து கரைக்கு கொண்டு வந்து சேர்ப்பார்கள். பேரொலியைக் கேட்டு கரையில் இருக்கும் அன்னப்பறவைகள் அஞ்சி ஓடும் என்பர். அவ்வாறு எறியப்படும் உளிக்கு “எறிஉளி” என்று பெயர். இதனை

“…………கூர்வாய் எறிஉளி
முகம்பட மருத்த மளிவெதிர் நோன்காழ்
தாங்கரு நீர் சுரந்து எறிந்து வாங்கு விசைக்
கொடுந்திமிற் பரதவர் கோட்டுமீன் எறிய
நெடுங்கரை இருந்த குறுங்கால் அன்னத்து
வெண் தோடு இரியும்……….” (குறுந்தொகை பா. – 304)
“எறிஉளி” (அகம். பா. எ. 114)
“எறிஉளி பொருத ஏமுறு பெருமீன்” (அகம். பா. எ. – 210)

உலர்ந்த உறுதியான துண்டு மூங்கிலின் நுனியில் மிக இறுக்கமாகக் கட்டப்பட்டிருக்கும் கூர்மையானத் தன்மைக் கொண்டது என்பதை அறியமுடிகிறது, இதன்வழி, மீன்பிடித் தொழிலாளர்கள் வலிமைமிக்க சுறா, திமிங்கிலம் போன்ற பெரிய மீன்ளை வீழ்த்துவதற்கு எறி உளியைப் பயன்படுத்துவர் என்பது தெரிகிறது.

கடல் தொழிலாளிகளின் தொழில்முதற்பொருளாக இருக்கும் படகு, தோணி, போன்றவற்றையும் உப்புவணிகர்களுக்கான வண்டிகளையும் தச்சுத்தொழிலாளர்கள் காணப்படுகின்றனர்.

“நெடுந்திமில்” (அகம். பா.
“கொடுந்திமில்” (அகம். பா. 70)
“நுடங்கும் நெடுங்கொடி தோன்று நாவாய்” (அகம். பா. 110)

என்பைப் போன்ற இடங்களில் அறியமுடிகிறது. மேலும், நெய்தல் நிலத் தலைவர்கள் பயணிக்கும் தேர்கள் மிகச்சிறப்பாக சுட்டப்படுகின்றன. இவற்றை,

“மாணிழை நெடுந்தேர்…” (அகம். பா. 50)
“திண்தேர்…” (அகம். பா. 60) “
 “கொடுஞ்சி நெடுந்தேர்…” (அகம். பா. 250)
 ரூ (குறுந்தொகை பா. 212)
“கடுந்தேர்…” (அகம். பா. 310)
“பொலம்படை பொலிந்த வெண்டேர்…” (குறுந்தொகை பா. 205)
“சிறு நா ஒண் மணி வினரி ஆர்ப்ப
கடுமா நெடுந்தேர்…” (குறுந்தொகை பா. 336)

என்பன பொன்ற பாடல் அடிகளால் அறிய முடிகிறது, இதில் “மாணிழை” என்பது மிகச்சிறப்பான இழைப்புத் தொழிலால் செய்யப்பட்ட நீண்ட தேர் என்பதும், உறுதியான நிலையிலும், தச்சர்களால் உருவாக்கப்பட்டது என்பதை உணர்த்துகின்றன, மேலும் “வெண்தேர்” என்பது யானையின் தந்தங்களால் செய்யப்பட்டதாகவும், பொலம்படை, என்பது பொன்னால் செய்து படுத்து வைக்கப்பட்ட தேர்த்தட்டைக் கொண்டதாகவும் இருக்கும் இதில், “கொடுஞ்சி” என்பது தேரில் பயணம் செய்கின்றவர் உறுதியானத்ன்மையோடு அமர்வதற்கு பிடித்துக் கொள்ளும் கைப்படியாகும.; இது தாமரை வடிவத்தில் செய்யப்பட்டிருக்கும் என்பதும் சிறப்புடையாரின் தேர்களில் இது காணப்படும் என்பதும் பாடல்களின் வழி அறியமுடிகிறது.

பொற்கொல்லர் தொழில்

இரும்பு, மரம் போன்ற பொருள்களில் கடலவாழ் மக்களுக்கும் அவர்களின் தொழிலுக்கும் உதவும் கருவிகளை செய்து தருகின்றவர்கள் போல பொன்னால் மனிதர்களுக்கும், குதிரைகளுக்குமான அணிகலன்களையும் தேர்களுக்கான அலங்காரப் பொன்னணிகளையும் செய்து தரக்கூடியவர்களாய இருந்துள்ளனர். இதனை,

“வாலிழை மகளிர் விழவணி கூட்டும்…” (குறுந்தொகை பா. 386)
“விழவணி மகளிர்…” (அகம். பா 70)
“மின்னிழை மகளிர்…” (குறுந்தொகை பா. 246)
“தொடியோள்…” (குறுந்தொகை பா. 296)
“செல்லா நல்லிசை பொலம்பூண் திரையன்…” (அகம் பா. 340)

என்பனப் போன்ற பாடல் அடிகள் வெளிப்படுத்துகின்றன. மேலும், பொன்னால் மட்டுமன்றி நெய்தல் நிலத்தில் கிடைக்கும் முத்து, சங்கு போன்ற பொருள்களிலும் அணிகலன்கள் செய்யக்கூடியவர்களாக நெய்தல் நிலத்தில் வாழ்ந்த பொற்கொல்லர்கள் திறன் படைத்து இருந்தனர். இதனை,

“சின்னிரை வால் வளைப் பொலிந்த…” (அகம். பா. 390)
என்ற அகநானூற்றுப் பாடல் அடி உணர்த்துகின்றது.

மணிகள் பதிக்கப்பட்ட “நீல உத்தி” (அகம். பா. 400) 

எனப்படும் அணிகலன் மற்றும் கழுத்தில் மாட்டுவதற்கான மணிகள் பூட்டப்பட்டதும் ஓவியங்கள் வரையப்பட்டதுமான கழுத்துப்பட்டைகளும் (அகம். பா. 400), மற்றும் (குறுந்தொகை 345) செய்யப்பட்டிருக்கும் செய்திகளையும் குறிப்பிடுகிறது.

பொன், இரும்பு போன்றவற்றில் பணிபுரியும் கொல்லர்கள் நெய்தல் நில சமுதாயத்தில் எல்லா இடங்களிலும் குடியமைத்து வாழவில்லை, இவர்கள் பணிபுரியும் ஊதுலைப்பட்டறைகள் ஏழு ஊர்களுக்கு ஓரிடம் என்கின்ற நிலையில் பொது தொழிலகங்களாக அமைக்கப்பட்டிருந்தன என்பதை,

“ஏழ் ஊர்ப் பொதுவினைக்கு ஓரூர் யாத்த
உலைவாங்கு மிதி தோல்” (குறுந்தொகை பா. 172)

என்கின்ற பாடலடிகள் வலியுறுத்துகின்றன. நிலம் சார்ந்த உழவுத்தொழில், மீன்தொழில் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்குமான உபகரணக் கருவிகளைத் தயாரிக்கும் இன்றியமையாத நிலைப் பெற்றவர்களாக இருந்தும் இவர்களுக்கான சமூக மதிப்பு குறைவுபட்ட நிலையில் இருந்திருப்பதை உணரமுடிகிறது.

தேர்ப்பணியாளர்கள்

தேரை உருவாக்கும் கொல்லர், தச்சர்களைப் போன்று தேரைச் செலுத்துகின்ற “பாகர்” தொழில் செய்கின்றவர்களும் இருந்துள்ளனர் என்பதை நெய்தல் நிலப்பாடல்கள் வழி அறியமுடிகின்றது. தேரை செலுத்துகின்ற பாகன் “பாகுநூலறிவு” பெற்றவனாக இருப்பின் வன்மை, மென்மை உணர்ந்தவனாக செயல் படுவான் இதாவது மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கி பாயும் நீரைப் போலவும் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போலவும் தேரை செலுத்துவான் (அகம். பா. 160, 400) என்றும் மேலும் கடலில் படகு செல்வது போல நெய்தல் நிலத்தில் தேரை செலுத்துவான் என்றும் (அகநானூறு பா, 340) சுட்டுகிறது மெதுவாக நடந்து செல்லும்படியாக செலுத்துகின்றபோது தாளம் தவறாதபடி அடியிட்டு செல்லக்கூடியதாக தேர்ப்பாகன் அதற்கு பயிற்சி அளித்திருப்பான். இதனை,

“பாணி பிழையா” மாண் வினைக் கலிமா” (அகம். பா. 330)

என்கிறது அகநாறுனூறு. நெய்தல் நிலத் தலைவன் தேரில் வரும்பொழுது அவனுடன் வருவதற்கும் அவனுக்கான சிறுசிறு உதவிகளை செய்வதற்கும் குறு ஏவல் தொழிலாளர்கள் இனையர்கள் என்ற நிலையில் உடன் வருகின்றவர் கூறுவர் இதனை (அகநானூறு பா. 250,300,310) போன்ற பாடல்களால் அறியமுடிகிறது.

பிற தொழில்கள்

நெய்தல் நிலத்து உமணர்கள் உப்பு வண்டியை ஓட்டி செல்வதற்கு எருமை, கழுதை போன்றவற்றை பயன்படுத்தி உள்ளனர். அவற்றை விளர்பதும் மேய்ப்பதுமானத் தொழில்களும் நிகழ்கின்றன. மாடுகள் வளர்ப்பமை,

“வைகுறு விடியல் போகிய எருமை
நெய்தலம் புதுமலர் மாந்தும்…” (அகம். பா. 100)

“அண்டர் கயிறு அரி எருத்தில் கதுறும் துறைவன்” (குறுந்தொகை பா. 177)

என்ற பாடல் அடிகளாலும்,

கடலோர கழிமுகங்களில் வண்புயினை இழுக்கக் கழுதைகளைப் பயன்படுத்தி உள்ளனர் இதனை,

“கழிச்சுறா எறிந்த புண் தாள் அத்திரி நெடுநீர் இருங்கழி…” (அகம். பா. 120)
என்கிறது அகநானூறு. அத்திரி என்பதற்க கழுதை என்று பொருள்.

முடிவுகள்

  1. கடல் தொழிலில் மீன்பிடத்தல், உலர் மீன் தயார்ப்பு, பசுமீன் அல்லது உலர்மீன் விற்றல், உப்பு தாயாரித்தல் மற்றும் விற்றல் போன்றவைப் பெருந் தொழில்களாக நிகழ்ந்துள்ளன.
  2. மீன் பிடித்தொழிலில் கடல பாதைகளை வரையறுத்து வைத்திருந்தனர்.
  3. பகல் நேரங்களைவிட இரவு நேரங்களில் செல்லும் மீன் தொழிலாளர்கள் சிறப்பு பயிற்சி பெற்றவராக இருந்துள்ளனர்.
  4. இரவு நேர மீன்பிடிப்படகுகளில் விளக்குகள் பயன்படுத்தி உள்ளனர்.
  5. மீன்தொழிலாளர்கள், வலைகள், கருவிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி உள்ளனர்.
  6. பலவகை தோணிகள், வலைகள், கருவிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி உள்ளனர்.
  7. மீன்தொழிலில் வல்லமை பெற்ற ஆண்களுக்குத் தங்கள் பெண்களைத் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
  8. உலர் மீன் தொழிலைப் பெண்கள் செய்துள்ளனர்.
  9. மீன், உப்பு, முத்து போன்றவற்றை விற்று நெல், அரிசி, பருப்பு போன்ற பொருள்களைப் பண்டமாற்றாக பெற்றுள்ளனர்.
  10. உப்பு விற்பனை செய்த உமணர்கள் அதை வண்டிகளில் ஏற்றிக்கொண்டு வியாபாரம் முடியும்வரை நாடோடி வாழ்க்கை நடத்தி உள்ளனர்
  11. கடல் தொழிலில் கிடைத்த மீன், முத்து போன்ற பொருள்களை இரவலர்கள், தொழிலில் ஈடுபட முடியாதபடி நோய்வாய்ப்பட்ட சக தொழிலாளர்கள் தன் இனமக்கள் போன்றோர்க்கு கூறு போட்டு வழங்கி உள்ளனர்.

முனைவர் ந.பாஸ்கரன், 
பேராசிரியர், தமிழ்த்துறை, 
பெரியார் கலைக்கல்லூரி, கடலூர்-1

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com