வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Monday 28 November 2016

எகிப்தில் கோலோச்சிய தமிழ் பரதவர் - 1
தொல் பழங்குடிகளின் நாகரீகங்களில் சிந்து சமவெளி நாகரீகம் சிறப்பிடம் பெற்றுள்ளது. இங்கு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பது நிருபிக்கப்பட்ட உண்மை எனினும், சிந்து சமவெளியில் ஆய்வு மேற்கொண்ட ஹிராஸ் பாதிரியார் தென் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் தற்போது வாழும் பரதவ இனத்தவரே இப்பகுதியில் வாழ்ந்தவர் என்பதை உறுதிபடக் கூறியுள்ளார். 

சிந்து சமவெளி நாகரீகத்தின் சமகாலத்திய நாகரீகமே எகிப்து நாகரீகம் ஆகும். இவ்விரு நாகரீகத்திற்கும் குறிப்பிடத்தகுந்த பல்வேறு ஒற்றுமைகளும், இணைப்புகளும் காணப்படுகின்றன. இதன் காரணமாக தமிழர்கள் இங்கிருந்து எகிப்து சென்றனர் என்றும், எகிப்தியர் அங்கிருந்து இங்கு வந்தனர் என்றும் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. இது குறித்து அறிஞர் பலரும் பல்வேறு நூல்களை எழுதியுள்ளனர். 

இன்றும் எகிப்துக்கும் சிந்து சமவெளிக்கும் இடையேயுள்ள பலுசிஸ்தானில் பேசப்படும் பிராகி என்னும் மொழி தமிழ் மொழி என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மாவீரன் அலெக்ஸ்சாண்டரின் இந்தியப் படையெடுப்பின் போது அவரை எதிர்த்த போரஸ் என்னும் மாமன்னன் பரவனே என புராதன இந்தியா என்னும் நூலில் கிருஷ்ணமூர்த்தி ஐயங்காரும், பாரத நாட்டு சரித்திரம் என்னும் நூலில் திருநாராயண ஐயங்காரும் தெளிவுபட உரைத்துள்ளனர்.

இதே கருத்தினையே பண்டைய தமிழரும் ஆரியரும் என்ற நூலில் சுவாமி வேதாச்சலமும் வலியுறுத்திக் கூறுகிறார். பரவன் என்ற இந்த மன்னனின் பெயர்தான் புரூரவன், புரூரவஸ், பரவாஸ், போரஸ், புருசோத்தமன் எனப்பல பெயர்களில் பல்வேறு மொழிகளில் வழங்கப்படுகிறது எனலாம்.

காலம் கி.மு 4500 ஆம் காலக்கட்டத்தில் செழிப்புற்று இருந்த சிந்துகரையில் உள்ள "மினு"நாட்டை ஆண்ட தமிழ் நெய்தல் நில மக்களாகிய பரதவர் இவர்கள் ஆப்பிரிக்காவின் வடபகுதியில் நீல ஆறுபாயும் "வளமுடைய வெளி" என்னும் எகிப்து நாட்டையும் ஆண்டனர் இந்த பரதவர். எகிப்து குருவாகிய "மனேதா" என்பவர் எகிப்தை அரசுபுரிந்த பரதவர் முதலிய 330 அரசரின் புராதன வரலாற்றை எழுதி வைத்துள்ளார்.

தமிழர் எகிப்திலிருந்தே வந்தனர் எனப் பல ஐரோப்பிய அறிஞர்கள் கூறுகின்றனர். இதையே தமிழுணர்ச்சி என்னும் நூலில் சச்சிதானந்த பாரதியாரும் கூறுகிறார். இது தொடர்பாக ஷில்பர்ட் ஷிலேட்டேர் என்னும் வரலாற்று அறிஞர் இக்கருத்தினை வலியுறுத்துவதுடன் எகிப்தினை ஆண்ட பாரவோன் என்னும் மன்னன் பரவனே எனவும் கூறுகிறார். 

பெயர் வினையிடந்து னளரய ஈற்றயல் ஆஓ வாதலும் செய்யுளில் உரித்தே என்னும் நன்னூல் விதிப்படி கிழவன் எனும் சொல் கிழவோன் என வருவது போல பரவன் என்னும் சொல்லே பாரவோன் என வருவதாக தமிழறிஞர்கள் கூறுகிறார்கள். பாரவோனை எகிப்தில் பாரோ என்று அழைகிறார்கள். 

பர் என்ற சொல்லுக்கு வீடு என்றும் ரா என்ற சொல்லுக்கு பெரிய என்றும் பொருள் படும். எனவே பாரோன் என்றால் பெரிய வீட்டுக்காரன் எனப் பொருள் கொள்ளப்படுகிறது. இதனால் தான் எகிப்தினை நிலைநாட்டி ஆண்ட இனத்தவர் பரதரே என தமிழர் பெருமை என்னும் நூலில் பண்டித டி. சவேரியார் பிள்ளை எனும் அறிஞர் குறிப்பிடுகிறார்.

Menes
வரலாற்று ஆசிரியர் "ஷீரன்" என்பவர் எகிப்தியர் மண்டையோடும் தமிழர் மண்டையோடும்... ஒத்திருக்கிறதென்று எடுத்துரைக்கிறார். எகிப்தின் ஆதித்தமிழரசன் ஆகிய இப்பரதவ மீனன் என்ற அரசன் தனது மீன் கொடியை அங்கே பறக்கவிட்டான். இவ்வரசன் மரபினராகிய பரதவர் 250 ஆண்டு எகிப்தை ஆட்சி புரிந்துள்ளனர். இந்த குலத்தில் தோன்றிய மன்னரான "அகன்" என்பவனின் உடலும், கலன்களும், ஆயுதங்களும், பொன்ஆபரனங்களும், "நாகதம்" என்ற ஈமக்காட்டில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன...

"சுடுவோர் இடுவோர் தொடுகுழிப் படுப்போர்,
தாழ்வையின் அடைப்போர் தாழியிற் கவிழ்ப்போர்".
- மணிமேகலை

மாந்தரின் இறுதி சடங்குகளில் ஒன்றாகிய "தாழ்வையின் அடைத்தல் " என்ற சமாதி கட்டி அடக்கம் செய்யும் தமிழர் முறையே இந்த எகிப்து தமிழ் பரதவரின் வரக்கமாய் இருந்தது. மாண்டோர் மீண்டும் உயிர்பெற்று எழும்புவோர் என்ற நம்பிக்கையை இந்த எகிப்து தமிழ் பரதவர் கொண்டிருந்தனர். அவ்வுடம்புகளே "மம்மி " என்று அழைக்கப்படுகிறது...

இறந்தவர்களை புதைப்பது தமிழர் மரபு. எரிக்கும் இடம் சுடுகாடு, புதைக்கும் (இடும்) இடம் இடுகாடு. எளிய மனிதர்கள் இறந்தால் சிறுகுழி வெட்டி அதில் இட்டு புதைப்பர். அதற்கு சிற்றிடு (சிறு +இடு) என்று பெயர். அரசன் போன்ற உயர்நிலை மக்கள் இறக்கும்போது, பெரும் அளவில் கட்டடம் எழுப்பி அதில் இடுவர். பெரிய அளவில் இடப்படுவதால் (அடக்கம் செய்யப்படுவதால்) அது பெரும்+இடு = ”பெருமிடு” என்று அழைக்கப்பட்டது. அதுவே ‘பிரமிடு’ என்று ஆனது.

ஆக, பிரமிடு என்பது தூய தமிழ்ச்சொல். தூயத் தமிழ்ச் சொல் ஆளப்பட்ட இடம் தமிழர்கள் வாழ்ந்த இடமாகும் அங்குக் கட்டப்பட்டதும் அவர்கள் கட்டியவை என்பது உறுதியாகிறது.இதன் மூலம்  கி.மு.4000 ஆண்டில் மீனன் என்ற தமிழ் பரதவ மன்னன் எகிப்து அரசனாக விளங்கினான் என்பதை அறிய முடிகிறது.

...............(தொடரும்).............
- நி. தேவ் ஆனந்த்  
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com