வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 15 November 2016

வேம்பாற்றில் சங். ரெமிஜியுஸ் மிஸ்ஸியர் சுவாமிகள்
திருமந்திர நகராம் தூத்துக்குடியில் உதித்து, 17.12.1922 குருவாக 1927 ஆம் ஆண்டு முதல் 1933 ஆம் ஆண்டு வரை வேம்பாற்றின் பங்கு சுவாமியாகப் பணியாற்றி வேம்பாற்று மக்களை ஆன்மீக வாழ்வில் வழிநடத்திச் சென்றதுடன் வேம்பாற்று மக்களின் பேரன்பிற்கு பாத்திரமானவரே சங். ரெமிஜியுஸ் மிஸ்ஸியர் சுவாமிகள் ஆகும். இவரது பணிக்காலம் வேம்பாற்று பரிசுத்த ஆலய பங்கு வரலாற்றில் பொற்காலம் என்றால் அது மிகையாகாது. 

இவரது பணிக்காலத்தில் தான் வேம்பாற்றில் வதியும் பெண்குழந்தைகள் கல்வியறிவு பெற வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு பரிசுத்த ஆலய பங்கு அர்ச். மார்கரீத் மரியன்னை கன்னியர் மடத்தில் இயங்கி வந்த அர்ச். மார்கரீத் மரியன்னை ஆரம்ப பாடசாலைக்கென புதிய விசாலமான கட்டடம் கட்டுவிக்கப்பட்டு கன்னியர் மடத்தினூடே இணைக்கப்பட்டது. (1964 ஆம் ஆண்டு அர்ச். மார்கரீத் மரியன்னை ஆரம்ப பாடசாலை அர்ச். செபஸ்தியார் பாடசாலையுடன் இணைக்கப்பட்டு அர்ச். மார்கரீத் மரியன்னை ஆரம்ப பாடசாலை செயல்பட்ட கட்டடம் அர்ச். சூசை சிறுவர் கருணை இல்லமாக மாறியது.) 

வேம்பாற்று பரிசுத்த ஆலய பங்கு சுவாமிகள் வசிக்கும் மாளிகையின் மேல்மாடம் 1929 ஆம் ஆண்டு இவராலே கட்டுவிட்டப்பட்டு புனித சூசையப்பருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. சுவாமிகள் கோவில் உரிமைகளை நிலைநாட்ட எடுத்துக் கொண்ட அனைத்து முயற்சிகளும் இன்றும் புத்துணர்ச்சி அளிப்பதாக உள்ளது என்றால் அது மிகையாகாது.

மேல்மாந்தை ஜமீன் வகையறாகளாலும், பிற இனத்தவராலும் ஏற்பட்ட பல்வேறு இடைஞ்சல்களை தமது ஊக்கத்தாலும், அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்போடும் வென்றெடுத்தார்கள். குறிப்பாக பழைய அர்ச். செபஸ்தியார் குருசடியினை சீரமைப்பதில் ஏற்பட்ட பலவித கலகங்களின் மத்தியில்  அப்போதைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் கவனத்திற்கு கொண்டு சென்று அவரை கடல் மார்க்கமாக வேம்பாற்றுக்கு வரவழைத்து உண்மை நிலையை அறிய செய்து  அவரது உத்தரவின் பேரில் சீரமைத்து அதனை அசைக்க முடியாதவாறு கற்களால் இருத்தியதும்,   ஆலய மரக்கொடிமரத்தை (இதற்கு முந்தையது) அசைக்க முடியாதவாறு இருத்தியதும் இவரது அளப்பெரும் சாதனைகளே ஆகும்.

இவர் காலத்திலே தான் ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரன் பேரில் பக்தி முயற்சிகள் வேம்பாற்றுவாசிகளிடம் அதிகரித்தன. நிம்பவாசிகள் ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரன் பேரில் கொண்ட ஆழ்ந்த பற்றுதலைக் கண்ட சங். ரெமிஜியுஸ் மிஸ்ஸியர் சுவாமிகள், தானும் அப்புனிதர் பேரில் ஆழ்ந்த பற்றுதல் கொண்டு முத்துக்குளித்துறையின் முதல் மேற்றாணியார் வந். திபூர்சியுஸ் ரோச் ஆண்டகையிடம் பரிந்து பேசி உரோமையிலிருந்து ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் கால் மூட்டு எலும்புகளின் சிறு பகுதியை அருளிக்கமாக பெற்றுத் தந்து வேம்பாற்றின் பாதுகாவலரின் உடனிருப்பினை வேம்பாற்றில் நிலைத்திருக்கச் செய்தார்.

(எதிர்பாராத விதமாக 19.06.2006 அன்று வேம்பாறு பரிசுத்த ஆவியானவர் ஆலயத்தில் நடைபெற்ற களவு சம்பவத்தில் ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் கால் மூட்டு எலும்புகளின் சிறு பகுதி அருளிக்கம் வேம்பாற்றுவாசிகளிடமிருந்து பறிபோனது. எனினும் அப்போதைய பங்குத்தந்தையாக இருந்து ரஞ்சித்குமார் கர்டோஸா அவர்களின் பெரும் முயற்சியால்  முத்துக்குளித்துறையின் ஆறாம் மேற்றாணியார் வந். இவோன் அம்புரோயிஸ் அவர்களிடம் பரிந்து பேசி  07.01.2007 அன்று வேம்பாற்றுவாசிகளுக்கு ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் திருத்தலை முடியின் சிலவற்றை அருளிக்கமாக பெற்றுத் தந்து வேம்பாற்றின் பாதுகாவலரின் உடனிருப்பினை வேம்பாற்றில் மீண்டும் உறுதி செய்தார் என்பதை இங்கு குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானது.)

இவ்வாறு பல்வேறு பணிகளை வேம்பாற்றில் செய்த சங். ரெமிஜியுஸ் மிஸ்ஸியர் சுவாமிகளை அன்று நிம்பவாசிகள்.....

நல்வரவு  காரியங்கள் 
நலமுடனே மலர் தொழிப்போம் 
நற்குணசாலியாம் எங்கள் நல்ல தந்தை 
நானில மீதினில் நன்கு  வாழ்ந்திடவே ....

திருமந்திர நகர்தனில் திருவருளால் உதித்த சீலன் 
அரும் கல்வி சாஸ்திரங்களை அன்புடன் பயின்ற நூலன் 
பேறு மகிழ் கொண்டுமே உலகாசை ஒன்றையும் நீக்கிய யோகன் 
உறுங்க வினை பொழித்து பரன் திருவழி நடக்கும் ஞானன் 
ரெமிஜியுஸ் மிஸியர் என்னும் நாமம் பூண்ட 
ரெத்தினவரைப் போற்றிப் புகழ்ந்திட ...............

எனப் பாடி மகிழ்ந்தனர். 

அன்று வேம்பாற்றுவாசிகளுக்காக பணி செய்து வாழ்ந்து இன்றைய நாளில் ( 15.11.1979)  இறைவன் பதம் சேர்ந்த பாசமிகு வேம்பாற்றின் பங்குத்தந்தை சங். ரெமிஜியுஸ் மிஸ்ஸியர் சுவாமிகள் அவர்களை இந்நாளில் நினைவு கூறுவோம்.

- நி. தேவ் ஆனந்த் 


Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com