கவர் எழுப்பமும், கவர் அடக்கமும்
கடல் என்ற நீலநிற மேடையில் நாள்தோறும் அரங்கேறும் ஒரு நாடகம்தான் கவர் எழுப்பமும், கவர் அடக்கமும்.
அவையடக்கம் என்றால் தெரியும். கவர் அடக்கம் என்றால் என்ன என்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.

வெறும் கண்களால் காண முடியாத இந்த நுண்பாசிகளே கடலின் நிறமாற்றங்களுக்கு காரணம். உலகம் முழுவதும் இந்த நுண்பாசிப் படலம் எங்கே அதிகம் இருக்கிறதோ அங்கே மீன்வளம் அதிகம் இருக்கும். இவை பூத்துக்குலுங்கினால் மீன்வளம் பெருகும். Diatom என்ற நுண்பாசி, அது சார்ந்த தாவரங்களுக்கு பைட்டோபிளாங்டன் என்ற பெயரும் உண்டு. பிளாங்டன் (Plankton) என்றால் அலைந்துதிரிபவை என்று பொருள் கொள்ளலாம்.
Diatom அதனுடன் Flagella என்ற இன்னொரு வகை நுண்பாசி போன்றவை மளமளவென பிளந்து கோடிகோடியாகப் பெருகக் கூடியவை. ஒரு மணி நேரத்தில் 300 முதல் 400 பில்லியன் Diatom, நுண்பாசி உருவாகக் கூடும். (ஒரு பில்லியன் என்பது 100 கோடி)
அலை, காற்று, நீரோட்டத்தின்படி அங்குமிங்கும் மிதந்தலையும் இந்த நுண்பாசிகள், உணவு உற்பத்திக்காக பச்சையம் தயாரிக்க சூரியஒளி தேவை. அதனால், இவை கடல் மேற்பரப்பில் மிதக்கின்றன. முடிஇறகு, ஒரு துளி எண்ணெய் இந்த ஏதோ ஒன்றைப் பயன்படுத்தி இவை மிதக்கின்றன.
பைட்டோபிளாங்டன் என்ற வகைப்பாட்டில் Diatom, Flagella மட்டுமின்றி பல ஆயிரம்வகை நுண்பாசிகள் அடக்கம். அதில் குட்டியான Dino Flagella என்ற உயிரி, சாட்டை போன்ற ஓர் உறுப்பின் உதவியுடன் நீந்தக்கூடச் செய்யும். நாள் ஒன்றுக்கு இது 65 அடி தொலைவு சென்றால் அதிசயம். ஆனாலும் அது ஒரு நுண்பாசிதான். இதைச் சுற்றி ஒளிஊடுருவக் கூடிய விதத்தில் கண்ணாடி போன்ற கூடு உண்டு. Dino Flagella நீந்தாதபோது நீரில் மூழ்கிவிடும்.

தரையில் வளரும் தாவரத்துக்கு எப்படி சூரிய ஒளியும், உரமும் தேவையோ, அதுபோல மிதந்தலையும் நுண்பாசிகளுக்கு சூரிய ஒளியுடன், இதர ஊட்டச் சத்துகளும் தேவை. இந்த ஊட்டச்சத்துகள் இறந்த மீன்கள் மூலம் கடலின் அடியில் கிடைக்கக்கூடும்.
எனவே, சூரிய ஒளிக்காக கடலின் மேற்பரப்புக்கும், ஊட்டச்சத்துக்காக கடலின் கீழ்ப்பரப்புக்கும் நாள்தோறும் சென்றுவர வேண்டிய தேவை இந்த நுண்பாசிகளுக்கு உண்டு.
தமிழில் கவுர் என்று அழைக்கப்படும் இந்த நுண்பாசிகள், கடலின் மேலே ஒளிவீசியபடி வந்து சேர்ந்தால் அது கவர் எழுப்பம். கடல் அடியில் மீண்டும் அடங்கினால் அது கவர் அடக்கம்.
- மோகன ரூபன்